ஹரியாணா மாநிலத்தில் 14 வயது பள்ளி மாணவியும், டென்னிஸ் வீராங்கனையுமான ருசிகாவை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக முன்னாள் டி.ஜி.பி. ரத்தோருக்கு சம்பவம் நடந்து 19 ஆண்டுகளுக்குப் பிறகு 6 மாதக் கடுங்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சமீபத்தில் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வெளியான இந்தச் செய்தி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் வேலியே பயிரை மேய்ந்ததுதான்.
ஒரு மூத்த போலீஸ் அதிகாரி, அதுவும் மக்களின் காவலனாக இருக்க வேண்டியவர், ஏதும் அறியாத மாணவியை தனது வக்கிர எண்ணங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நடந்தது 1990}ம் ஆண்டு. அப்போது ரத்தோர், இன்ஸ்பெக்டர் ஜெனரல் என்ற உயர்ந்த பதவியில் இருந்துள்ளார். விஷயம் வெளியில் தெரிந்தவுடன் அதை மூடிமறைக்க ரத்தோர் கையாண்ட வழி என்ன தெரியுமா? ருசிகாவின் குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததுதான். ருசிகாவின் சகோதரர் அஷுவின் கைகளைக் கட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீஸôர் துன்புறுத்தியுள்ளனர். வழக்கை வாபஸ் வாங்காவிட்டால் கொலை செய்துவிடுவதாகவும், குடும்பத்தையே அழித்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
"மழை விட்டும் தூவானம் விடவில்லை' என்பதைப்போல குடும்பத்தாரை மிரட்டி, துன்புறுத்தியது கண்டு மனம் வெறுத்த ருசிகா, சம்பவம் நடந்து 3 ஆண்டுகளுக்குப் பின் 1993}ம் ஆண்டு டிச. 28}ம் தேதி விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான போலீஸ் உயர் அதிகாரியை மாநில அரசு என்ன செய்திருக்க வேண்டும்? வழக்கு முடியும் வரை அவரை சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும்.
குற்றச்சாட்டு உண்மை என்பது தெரியவந்தால் அவரைப் பதவி நீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக ரத்தோருக்கு கூடுதல் டி.ஜி.பி., மாநில டி.ஜி.பி. என பதவி உயர்வு கொடுத்துக் கௌரவித்துள்ளது.
பள்ளி நிர்வாகம் வெளியேற்றிவிட்ட நிலையில் சமுதாயத்தில் இனி நிம்மதியாக வாழ முடியாது என்ற சூழலில், அந்தச் சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ளார். மகள் இறந்துவிட்டாலும், அதற்குக் காரணமான குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என நினைத்த ருசிகாவின் பெற்றோர், பல்வேறு இடையூறுகளுக்கு இடையே வழக்கைத் துணிச்சலுடன் நடத்தி வந்துள்ளனர்.
நீதிமன்றத் தலையீட்டின் பேரிலேயே ரத்தோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும் சம்பவம் நடந்து 9 ஆண்டுகளுக்குப் பின்.
இந்த வழக்கில் இப்போது, அதாவது 19 ஆண்டுகள் கழித்துத் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு 6 மாதம் கடுங்காவல்; ஆயிரம் ரூபாய் அபராதம். சட்டத்தின் பாதுகாவலன் செய்த படுபாதகச் செயலுக்கு வழங்கப்பட்ட இந்தத் தண்டனை வெறும் கண்துடைப்புதான்.
ஏற்கெனவே பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு ஓய்வுபெற்றும் ராஜவாழ்க்கை வாழ்ந்து வரும் ரத்தோருக்கு இந்தத் தண்டனை ஒன்றும் பெரிதல்ல. இது கீழ் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புத்தானே! உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் இருக்கவே இருக்கிறது. ஜாமீன் பெற்றுவிட்டால் சிறைவாசத்தைக் கழிக்காமலே காலத்தை கழித்துவிடலாம் என்ற மனப்பாங்கில்தான் அவர் இருப்பார்.
இப்போது நம்முள் எழும் கேள்வி இதுதான். பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு ஆளான ஓர் அதிகாரி, பதவி உயர்வு பெற்றதுடன் எந்தப் பிரச்னையுமின்றி ஓய்வுபெற்றது எப்படி என்பதுதான்.
கிரிமினல் குற்றவாளிகளுக்கும் போலீஸôருக்கும் தொடர்பு இருப்பதுபோலவே, கிரிமினல் எண்ணம் கொண்ட போலீஸôருக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதுதான் இதுபோன்ற செயல்களுக்குக் காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. மற்றொருபுறம் சட்டத்தில் உள்ள ஓட்டைகளே இதற்குக் காரணமாக இருக்கலாம்.
சட்டத்தின் காவலனே குற்றவாளிக் கூண்டில் நின்றால் தண்டனை கடுமையாகத்தானே இருக்க வேண்டும். ஆனால், அதிகார வர்க்கத்தினருக்கு அரசியல்வாதிகளே கேடயமாக இருந்து காப்பாற்றி வருகின்றனர் என்பதுதான் ஜீரணிக்க முடியாத உண்மையாகும்.
குற்றச்சாட்டுக்கு ஆளான ரத்தோர் மீது துறை ரீதியில் விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்ததாகவும், ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஓய்வுபெற்ற மற்றொரு போலீஸ் உயர் அதிகாரியான ஆர்.ஆர்.சிங் கூறியுள்ளார். அவரைக் காப்பாற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று கூறிவரும் அரசியல் தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் பழிசுமத்தி வருகின்றனர். இதனால் எந்தப் பயனுமில்லை.
ருசிகா வழக்கில் நீதிமன்றம் மூலம் நியாயம் கிடைக்க 19 ஆண்டுகள் காலதாமதம் ஆகியுள்ளதைக் காணும்போது அவருக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும்.
போலீஸ் அதிகாரி ரத்தோர், ருசிகாவிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு மட்டும் ஆளாகவில்லை. அவர் தற்கொலை செய்துகொள்ளவும் தூண்டியிருக்கிறார்.
எனவே இந்த வழக்கைப் புதிதாகக் கையிலெடுத்து விசாரித்து அவருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.
சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தால் எந்தவிதமான குற்றச்செயல்களில் ஈடுபட்டாலும், அரசியல் செல்வாக்கு இருந்தால் தண்டனையின்றித் தப்பிவிடலாம் என்ற நிலை இருக்குமானால், குற்றங்கள் அதிகரிக்குமே தவிர குறைந்துவிடாது.
இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க வேண்டுமானால், சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்ற நிலை உருவாக வேண்டும். இதற்கு சட்டங்களையும் நீதிமன்ற நடைமுறையிலும் தேவையான மாற்றங்களைக் கொண்டுவருவதுதான் ஒரே வழி.
கட்டுரையாளர் : ஜெ.ராகவன்
நன்றி : தினமணி
Tuesday, December 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment