Saturday, October 31, 2009

வினை விதைத்தவன்...

பயங்கரவாதம் மதமறியாது என்பது மட்டுமல்ல, மனிதாபிமானமும் அறியாது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது புதன்கிழமையன்று பெஷாவரில் அரங்கேற்றப்பட்டிருக்கும் குண்டுவெடிப்பு. இதுவரை பாகிஸ்தான் கண்டறியாத மிகவும் கொடூரமான இந்தத் தாக்குதலில் நூறுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் தலைநகரான பெஷாவர் ஒரு புராதன நகரம். பெஷாவர் நகரில் கடைத்தெரு என்பது "பர்தா' அணிந்த மத்தியதர மற்றும் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள மகளிர் அதிக அளவில் செல்லுகின்ற இடம். பெஷாவரின் மையப்பகுதியில் அமைந்த கிஷாகுவானி பஜார் எனும் நாற்சந்தியில் அமைந்த கடைத்தெரு மத்தியான வேளைகளில் குழந்தைகளுடன் பெண்கள் அதிக அளவில் காணப்படும் இடம். அந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்து அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகளின் உயிர்களைப் பலி வாங்கியிருக்கிறார்கள் பயங்கரவாதிகள்.

இந்தத் தாக்குதலும் சரி, அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளின்டனின் பாகிஸ்தான் விஜயத்தன்று நடைபெற்றிருப்பது என்பது திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை உறுதி செய்கிறது. அமெரிக்காவின் உதவியுடன் பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதத்துக்கு எதிராக நடத்தும் போருக்கு எதிரான சவாலாக இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்று கருதினால் தவறில்லை.

இதுபோன்ற தாக்குதல்களால் நிலைகுலைந்து போயிருக்கும் ஒரு நிர்வாகத்தின் தலைமையில் இயங்கும் ராணுவம் தீவிரவாதிகளையும் பயங்கரவாதிகளையும் கட்டுப்படுத்தும் மனத்துணிவை இழந்துவிடும் என்று இந்தக் குண்டுவெடிப்புக்குக் காரணமானவர்கள் நினைத்திருக்கலாம். அதன் மூலம் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொய்வு ஏற்படும் என்றுகூட அவர்கள் நம்பக்கூடும்.

கடந்த ஒருமாதமாகவே இதுபோன்ற தாக்குதல்கள் பாகிஸ்தானில் நடந்தேறியவண்ணம் இருக்கின்றன. சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம் உள்பட பல இடங்களில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்தேறியிருக்கின்றன. தீவிரவாதிகளின் எதிர்பார்ப்புகளுக்கு நேர்மாறாக பாகிஸ்தானிய மக்களின் எண்ண ஓட்டம் அவர்களுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது என்பதுதான் உண்மை. தங்களது மானசீக ஆதரவால் வளர்ந்த தலிபான்கள் } மாணவர்கள், பெண்கள், குழந்தைகள் என்று வித்தியாசம் பாராமல், தங்கள் மீதே தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தானியப் பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

தலிபான்களுக்கு ஆரம்பத்தில் பாகிஸ்தானிய பொதுமக்கள் மத்தியில் இருந்த ஆதரவு இப்போது கடுமையான எதிர்ப்பாகவும், வெறுப்பாகவும் மாறியிருக்கிறது. ராணுவத்தைவிடத் தீவிரமாக தலிபான்களையும் பயங்கரவாதக் குழுக்களையும் எதிர்க்க மக்கள் துணிந்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை பாகிஸ்தான் அரசும் ராணுவமும் முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

பயங்கரவாதிகள் யாராக இருந்தாலும் அவர்களை வேரறுக்க இதைவிட நல்ல வாய்ப்பு பாகிஸ்தான் ராணுவத்துக்குக் கிடைக்காது என்கிற நிலைமை. மக்களின் முழுமனதான ஆதரவு அப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்கு இருக்கும் நேரம். ஆனால், பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை முடுக்குவதற்குப் பதிலாக, பயங்கரவாதக் குழுக்களை பாகிஸ்தானுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் என்றும், இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட்டு நமக்கு உதவக்கூடியவர்கள் என்றும் பிரித்துப் பார்த்து நடவடிக்கை எடுக்க முற்படுகிறது என்பதுதான் வேடிக்கை.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, ஒரு விபரீதமான கற்பனையை முன்வைக்க முற்பட்டிருக்கிறார் ஒரு மூத்த பாகிஸ்தானிய அதிகாரி. தலிபான்களுக்குப் பணஉதவி அளித்து அவர்களை வளர்ப்பதே இந்தியாதான் என்று திருவாய் மலர்ந்திருக்கும் அந்தப் பாகிஸ்தானிய அதிகாரி ஒரு விஷயத்தை மறந்துவிட்டார். ஒரு வருடத்திற்கு முன்னால் இதே தலிபான்களை தேசபக்தர்கள் என்றும் தங்களது ராணுவத்துடன் தோளோடு தோள் சேர்ந்து நின்று இந்தியாவுக்கு எதிராகப் போராடும் சகோதரர்கள் என்றும் இதே பாகிஸ்தானிய ராணுவம் வர்ணித்ததை அவர் இப்போது சற்று நினைவூகூர்ந்தால் நல்லது.

பாகிஸ்தானிய மக்களிடையே இந்தியாவுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டிவிட்டு குளிர்காய்ந்து கொண்டிருந்த காலம் கடந்துவிட்டது. பாம்புக்குப் பால்வார்த்ததன் விளைவை பாகிஸ்தான் சந்தித்துக் கொண்டிருக்கும் நேரம் இது. இனியும் கற்பனைப் பூச்சாண்டிகள் பயன்படாது என்பதையும் தீவிரவாதக் குழுக்களின் சகவாசத்தால் எந்தவித நன்மையும் ஏற்படாது என்பதையும் பாகிஸ்தானிய ராணுவமும் அரசும் உணர வேண்டிய தருணம் இது.

போதும், அப்பாவி மக்களை ரத்தம் சிந்த வைக்கும் கொடூரம். அரசியல் ஆதாயம் தேட வேண்டிய நேரம் அல்ல இது. தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டிய நேரம்.
நன்றி : தினமணி

Thursday, October 29, 2009

எல்.ஐ.சி., சட்ட திருத்தம் : ஏஜன்டுகள் கடும் அதிருப்தி

எல்.ஐ.சி., சட்டம் 1938 பிரிவு 44ல், திருத்தம் செய்வதற்காக சமீபத்தில், பார்லிமென்டில் மசோதா சமர்பிக்கப்பட்டது குறித்து, நாடு முழுவதும் உள்ள எல்.ஐ.சி., ஏஜன்ட்கள் குறை கூறி உள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில், இந்திய எல்.ஐ.சி., ஏஜன்ட்கள் கூட்டமைப்பு நேற்று முன் தினம், எல்.ஐ.சி., ஏஜன்ட்கள் நல்வாழ்வு தொடர் பான கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில், எல்.ஐ.சி., சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதால், ஏற்படும் விளைவுகள் குறித்து மண்டல செயலர் டி.சத்யநாராயணா, பேசினார். அப்போது அவர் கூறியதாவது: எல்.ஐ.சி., ஏஜன்ட்கள் பலர், பாலிசிகள் மூலம் கிடைக்கும் கமிஷன்களை வைத்தே வாழ்கின்றனர். இவ்வாறு வழங்கப்படும் கமிஷன்களே அவர்களை சிறப்பாக மேலும் செயலாற்றத் தூண்டுகிறது. இந்த சட்டப்பிரிவு, ஏஜன்ட்கள், உடல்ரீதியாக பாதிக்கப்படும் போது, அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் வழி வகை செய்கிறது. இத்தகைய சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது, எல்.ஐ.சி., ஏஜன்ட்களின் பணியில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, அரசுக்கும் பெரியளவில் நஷ்டம் ஏற்படும்.

பாலிசிதாரர்கள் வீட்டிற்கு அடிக்கடி சென்று தான் இன்சூரன்ஸ் ஏஜன்ட்கள் பாலிசி எடுக்கின்றனர். அதன் பின், பாலிசிதாரர் முறையாக பாலிசித் தொகையை செலுத்துகிறாரா என்பதை ஏஜன்ட் கள் உறுதிப்படுத்துகின்றனர். ஆனால், இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதால், நாட்டின் இன்சூரன்ஸ் செயல்பாடுகளில் பெரிய பின்னடைவு ஏற்படும்.

நன்றி : தினமலர்

Wednesday, October 28, 2009

மூன்று வாரங்கள் இல்லாத அளவு ரூபாயின் மதிப்பு சரிவு

மும்பை வங்கிகளுக்கு இடையிலான வர்த்தகத்தில் அமெரிக்க டலாருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, மூன்று வாரங்கள் இல்லாத அளவு குறைந்துள்ளது. இன்று காலை 9.03 மணியளவில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு 47.09/11 ஆக இருந்தது. இது கடைசியாக 46.88/90ஆக இருந்தது. டாலரின் மதிப்பு மீண்டு வருவதால் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய வர்த்தகத்தில், ஆசிய கரன்சிகளில் பெரும்பாலானவையை விட டாலரின் மதிப்பு அதிகரித்தே .
நன்றி : தினமலர்


Tuesday, October 27, 2009

எதிர்பார்த்ததை விட அதிகரித்தது விப்ரோ நிகர லாபம்

விப்ரோ லிமிடெட்டின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 21 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதி துறையில் மூன்றாம் இடத்தில் இருந்து வரும் நிறுவனம் விப்ரோ. தற்போது, முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் இந்நிறுவனம், இந்த இரண்டாம் காலாண்டில் எதிர்பார்த்த நிகர லாபத்தை விட அதிகளவு நிகர லாபத்தை அடைந்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், நிறுவனத்தின் நிகர லாபம் 11.71 பில்லியன் ரூபாயாக(252 மில்லியன் டாலர்) 21 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில், 10.41 பில்லியன் ரூபாய் நிகர லாபம் கிடைக்கும் என்றே விப்ரோ நிறுவனம் கணிப்பு தெரிவித்து இருந்தது. இந்நிலையில், நிறுவனத்தின் நிகர லாபம் எதிர்பார்த்தை விட அதிகயளவு அதிகரித்துள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக பங்குச்சந்தையில் விப்ரோ நிறுவனத்தின் பங்கு விலை உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
நன்றி : தினமலர்


Sunday, October 25, 2009

செலவை குறைக்க ஏர் – இந்தியா அதிரடி : கேன்டீனில் இனி அசைவம் இல்லை

செலவை குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஏர் – இந்தியா விமான நிறுவன கேன்டீனில் இனிமேல் முழுக்க, முழுக்க சைவ உணவுகளை மட்டுமே தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சர்வதேச பொருளாதார மந்த நிலை, ஏர் – இந்தியா விமான நிறுவனத்தையும் விட்டு வைக்கவில்லை. கடும் நஷ்டத்தில் அந்த நிறுவனம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. ஏர் – இந்தியா ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட முடியாத நிலை, கடந்த சில மாதங்களுக்கு முன் ஏற்பட்டது. இதன்காரணமாக, செலவுகளை குறைக்கும் வகையில், பல்வேறு அதிரடி சிக்கன நடவடிக்கைகளை ஏர் இந்தியா நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, விமான நிறுவன ஊழியர்களின் கேன்டீன்களிலும் சில சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. டில்லி விமான நிலையத்தில் செயல்படும் கேன்டீனில் மட்டும், தினமும் 700 முதல் 1,100 ஊழியர்கள் வரை சாப்பிடுகின்றனர். ஊழியர்களுக்காக உணவுகள் குறைந்த விலையில் கேன்டீனில் விற் பனை செய்யப்படுகிறது. ஒரு வெஜிடேரியன் 'தாளி'யின் விலை ரூ.2.50க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக மாதம் தோறும் 20 லட்ச ரூபாயை ஏர் – இந்தியா செலவிடுகிறது. ஆனால், மிக குறைந்த அளவு தான் வருவாய் கிடைக்கிறது. குறிப்பாக, அதிக விலை கொடுத்து சிக்கன் வாங்கி, அவற்றை சமைத்து விற்பனை செய்வதற்கு அதிகமாக செலவாகிறது. அவற்றை மானிய விலையில் விற்பனை செய்வதால், வருவாய் அந்த அளவுக்கு கிடைப் பது இல்லை. இதுபோன்ற அதிகப்படியான செலவுகளை குறைக்கும் வகையில், கேன்டீனில் இனிமேல் அசைவ உணவுகள் தயாரிப்பதை கைவிடுவது என, ஏர் இந்தியா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், மாதத் துக்கு மூன்று லட்ச ரூபாய் வரை சேமிக்க முடியும் என, ஏர் இந்தியா நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

நன்றி : தினமலர்


Saturday, October 24, 2009

சந்திரயானின் மாபெரும் கண்டுபிடிப்பு

சந்திரனில் தண்ணீர் உள்ளது என்று இந்தியா அனுப்பிய சந்திரயான் விண்கலம் கண்டுபிடித்துக் கூறியுள்ளது. இது மனித குல வரலாற்றில் மாபெரும் கண்டுபிடிப்பாகும்.

இத்தாலிய விஞ்ஞானி கலிலியோ 400 ஆண்டுகளுக்கு முன்னர் சந்திரனை நோக்கி முதன்முதலாகத் தொலைநோக்கியைத் திருப்பிய காலத்திலிருந்து எண்ணற்ற விஞ்ஞானிகள் சந்திரனை தொலைநோக்கி மூலம் ஆராய்ந்தனர்.

பின்னர் நவீன காலத்தில் 1958-ல் தொடங்கி அமெரிக்காவும் அப்போதைய சோவியத் யூனியனும் போட்டி போட்டுக் கொண்டு மொத்தம் 50-க்கும் மேற்பட்ட விண்கலங்களை அனுப்பி சந்திரனை ஆராய்ந்தன. அமெரிக்கா 1969-ல் தொடங்கி 1972 வரை ஆறு தடவை சந்திரனுக்கு 12 விண்வெளி வீரர்களை அனுப்பியது. அவர்கள் சந்திரனிலிருந்து கிலோ கணக்கில் அள்ளி வந்த கற்களும் மண்ணும் விரிவாக ஆராயப்பட்டன. சோவியத் யூனியனின் தானியங்கி விண்கலம் சந்திரனிலிருந்து சேகரித்து வந்த கற்களும் ஆராயப்பட்டன.

கடந்த சில ஆண்டுகளில் ஜப்பான் 6 ஆளில்லா விண்கலங்களை அனுப்பியது. சீனா கடந்த ஆண்டில் ஆளில்லா விண்கலம் ஒன்றை அனுப்பியது. சந்திரனுக்கு அனுப்பப்பட்ட விண்கலங்களால் - விண்வெளி வீரர்களால் அவர்கள் கொண்டு வந்த கற்களை ஆராய்ந்த விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்காமல் போன ஒரு விஷயத்தை சந்திரயான் கண்டுபிடித்துக் கூறியுள்ளது.

சந்திரனில் தண்ணீர் உள்ளதை இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியாமல் போனதேன்? சந்திரனில் உள்ள தண்ணீர் அப்படி என்ன மர்மமாக மறைந்து இருந்து வந்துள்ளதா?

இக் கேள்விகளுக்கு விடை அளிக்கும் முன்னர் நாம் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். சந்திரனில் பூமியில் உள்ளதைப்போல ஏரி, குளம், ஆறு, கடல் என எதுவும் கிடையாது. சந்திரனில் காற்று மண்டலம் இல்லை. மேகங்கள் இல்லை, மழை இல்லை. ஆனாலும் கலிலியோவைத் தொடர்ந்து, சந்திரனை தொலைநோக்கி மூலம் ஆராய்ந்த விஞ்ஞானிகள் சந்திரனில் காணப்படும் கருமையான பகுதிகளைக் கடல்களாகக் கருதி அவற்றுக்குக் கடல்கள் என்று பெயரிட்டனர். நீல் ஆம்ஸ்ட்ராங் 1969-ல் சந்திரனில் போய் இறங்கிய இடத்தின் பெயர் அமைதிக்கடல் என்பதாகும். பெயர்தான் கடலே தவிர அது வெறும் கட்டாந்தரை.

சந்திரன் பூமியிலிருந்து அதிகபட்சம் சுமார் 4 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பூமியும் சந்திரனும் சூரியனிலிருந்து கிட்டத்தட்ட ஒரே தூரத்தில் இருந்தாலும் சந்திரன் மட்டும் பூமியிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக உள்ளது.

பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் எண்ணற்ற வால் நட்சத்திரங்கள் பூமியில் வந்து மோதின. சந்திரன் மீதும் மோதின. வால் நட்சத்திரங்கள் அடிப்படையில் பிரம்மாண்டமான பனிக்கட்டி உருண்டைகள். பூமியில் கடல்கள் ஏற்பட்டதற்கு வால் நடசத்திரங்கள் பெரும் பங்களித்திருக்கலாம் என்ற கொள்கை உள்ளது. சந்திரனில் மோதிய வால் நட்சத்திரங்களால் சந்திரனில் ஏன் கடல்கள் ஏற்படவில்லை?

பூமியானது சந்திரனைவிட வடிவில் பெரியது. ஆகவே, பூமிக்கு ஈர்ப்பு சக்தி அதிகம். இதன் பலனாக பூமியால் தனது காற்று மண்டலத்தைக் கெட்டியாகப் பிடித்துவைத்துக் கொள்ள முடிந்துள்ளது. பூமியின் காற்று மண்டலம் தகுந்த அழுத்தத்தில் உள்ளது. ஆகவேதான் பூமியில் நாம் நீரைப் பெற்றிருக்கிறோம். பூமி மட்டும் வடிவில் சிறியதாகவும் அத்துடன் பூமியின் காற்றழுத்தம் குறைவாகவும் இருந்திருக்குமானால் பூமியில் தண்ணீர் இருந்திருக்காது. பூமியும் சந்திரன் போல ஆகியிருக்கும்.

பூமியுடன் ஒப்பிட்டால் சந்திரன் வடிவில் மிகவும் சிறியது. சந்திரனின் ஈர்ப்பு சக்தி பூமிக்கு உள்ளதில் ஆறில் ஒரு பங்கு தான். ஆகவே, சந்திரனில் ஒரு காலத்தில் காற்று மண்டலம் இருந்திருக்குமானால் அது எப்போதோ போய்விட்டது. அத்துடன் சந்திரனில் இருந்த தண்ணீரும் மறைந்துவிட்டது. எல்லாம் சரி, இப்போது சந்திரனில் தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எப்படி?

இதில் சூரியனுக்குப் பங்கு இருக்கிறது. சூரியனிலிருந்து ஒளிக்கதிர் உள்பட பல வகையான கதிர்கள் வெளிப்படுகின்றன. அத்துடன் ஆற்றல்மிக்க ஹைட்ரஜன் துகள்களும் வெளிப்படுகின்றன. இந்த ஹைட்ரஜன் துகள்களுக்கு (இவை காற்று அல்ல என்றாலும்) "சூரியக் காற்று' என்ற பெயரும் உண்டு.

இந்த ஹைட்ரஜன் துகள்கள் பகல் நேரங்களில் சந்திரனின் நிலப்பரப்பின் மீது மோதுகின்றன. சந்திரனின் நிலப்பரப்பில் ஆக்ஸிஜன் அடங்கிய கனிமங்கள் பல உள்ளன. இவற்றின் மீது ஹைட்ரஜன் துகள்கள் மோதும்போது கனிமங்களில் அடங்கிய ஆக்ஸிஜன் தனியே பிரிகிறது. பின்னர் இந்த இரண்டும் வேதியியல் ரீதியில் பிணைந்து நீர் மூலக்கூறுகள் தோன்றுகின்றன. (நீர் என்பதே இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் ஒரு ஆக்ஸிஜன் அணுவும் பிணைந்த பொருளாகும்).

இந்த முறையில் சந்திரனின் நிலப்பரப்பு முழுவதிலும் மிகமிக நுண்ணிய அளவில் நீர் தோற்றுவிக்கப்படுகிறது. இந்த நீரைத் தான் சந்திரயான் கண்டுபிடித்துள்ளது. ஆனால், சந்திரனில் காற்று மண்டலம் இல்லை என்பதால் இந்த நீர் மூலக்கூறுகள் தொடர்ந்து அந்த நிலையில் நீடிப்பதில்லை. விரைவிலேயே அவை ஆக்ஸிஜன் வாயுவாகவும் ஹைட்ரஜன் வாயுவாகவும் பிரிந்து சந்திரனின் வான் வழியே மேலே சென்றுவிடுகின்றன. சந்திரனில் தண்ணீர் உள்ளதைக் கடந்த காலத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போனதற்கு இது ஒரு முக்கிய காரணமாகும்.

இது ஒருபுறம் இருக்க, சந்திரனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தண்ணீரைத் தகுந்த வழிகள் மூலம் சேமித்துவைக்க இயலும் என்று கருதப்படுகிறது. புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சந்திரனில் நீர் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யவும் இயலும். இதற்கு வழி கண்டுபிடிக்கப்படும்போது, சந்திரனில் விண்வெளி வீரர்கள் நீண்ட நாள்கள் தங்கியிருக்கலாம். சந்திரனில் சேகரிக்கின்ற அதே தண்ணீரை ஆக்ஸிஜன் வாயு, ஹைட்ரஜன் வாயு என்று தனித்தனியே பிரித்து அவற்றைக் குளிர்வித்து ராக்கெட்டுகளுக்கான எரிபொருளாகப் பயன்படுத்த இயலும்.

எதிர்காலத்தில் சந்திரனில் நிலத்துக்கு அடியில் பாதாளக் குடியிருப்புகளை நிறுவ முடியலாம். பயிர் விளைச்சலும் சாத்தியமாகலாம். பல பொருள்களை உற்பத்தி செய்வதற்கான ஆலைகளை அமைக்க முடியலாம். தண்ணீர் இல்லை என்பதுதான் இதுவரை ஒரு தடையாக இருந்தது.

சந்திரனில் தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டுவிட்ட நிலையில் சந்திரனில் தண்ணீர் தேடும் படலம் முடிந்து விட்டதா? அதுதான் இல்லை. சந்திரனில் தண்ணீர் உள்ளதா என்று தேடுவது சந்திரயான் 1 விண்கலத்தின் முக்கியப் பணிகளில் ஒன்றாக இருந்தது. அமெரிக்கா கடந்த ஜூன் மாதம் சந்திரனுக்கு அனுப்பிய எல்ஆர்ஓ எனப்படும் அமெரிக்க விண்கலமும் தண்ணீரைத் தேடுவதில் ஈடுபட்டது. தண்ணீரைத் தேடுவதில் அமெரிக்க விண்கலத்தின் இலக்கு முற்றிலும் வேறானது.

சந்திரனின் தென்துருவப் பகுதியில் ஒருபோதும் வெயில் படாத மிக ஆழமான பள்ளம் ஒன்றில் ஐஸ்கட்டி வடிவில் தண்ணீர் இருக்கலாம் என்று கடந்த பல ஆண்டுகளாக ஒரு கருத்து உள்ளது. இங்கு பனிக்கட்டி வடிவில் 10 கோடி முதல் 30 கோடி மெட்ரிக் டன் அளவுக்குத் தண்ணீர் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. குறிப்பாகத் தென் துருவப் பகுதியில் இருப்பது, தண்ணீர் உறைந்ததால் ஏற்பட்ட பனிக்கட்டியா அல்லது வேறு வாயு இவ்விதம் உறைந்த நிலையில் உள்ளதா என்று கண்டறிவதில் அமெரிக்க விண்கலம் ஈடுபட்டது. அமெரிக்க விண்கலத்தைச் சுமந்து சென்ற ராக்கெட்டின் ஒரு பகுதி அக்டோபர் 9-ம் தேதியன்று தென்துருவப் பகுதியில் உள்ள பள்ளத்தில் போய் பயங்கர வேகத்தில் மோதும்படி செய்யப்பட்டது. இது சந்திரன் மீது குண்டு வீசுவதற்கு ஒப்பாகும்.

இத் தாக்குதலின் விளைவாக சிதறல்களும் தூசும் புகை மண்டலம் போல உயரே கிளம்பும் (பூமியிலிருந்து தொலைநோக்கி மூலம் பார்த்தால் தெரியுமாம்). அமெரிக்க விண்கலத்துடன் அனுப்பப்பட்ட ஒரு சிறிய விண்கலம் தனியே பிரிந்து இப்புகை மண்டலத்தின் ஊடே பறந்து ஆராய்ந்தது. இதன்மூலம் கிடைத்த தகவல்கள் ஆராயப்படுகின்றன. தென் துருவப் பள்ளத்தில் இருப்பது தண்ணீரால் ஆன பனிக்கட்டிதானா என்று தெரிவதற்கு இன்னும் சில நாள்கள் ஆகலாம். அங்கு தண்ணீர் தான் பனிக்கட்டியாக உள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டால் அவ்வளவுதான் சந்திரன் மீது பெரும் படையெடுப்புத் தொடங்கிவிடும்.

ஆனால் ஒன்று, சந்திரனில் தண்ணீர் உள்ளது என்பதை முதலில் கண்டுபிடித்த பெருமை இந்தியாவின் சந்திரயானுக்கே உரியது. சந்திரனை ஆராயும் முயற்சியில் கடும் வெப்பம் தாக்கி தனது உயிரை மாய்த்துக் கொண்ட சந்திரயான் இறவாப் புகழ் பெற்றுவிட்டது.

கட்டுரையாளர் : என். ராமதுரை

நன்றி : தினமணி

தாய்மை ஒரு தடையல்ல...

பிள்ளை பெறாத பெண்களை மலடி என்று ஏசும் இந்தச் சமுதாயம்தான், குழந்தைகள் பெற்ற பெண்களை ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று ஒதுக்கியும் வைக்கிறது. சற்றே முரண்பாடாகத் தோன்றினாலும், இதுதான் நிஜம்.
கேரள மாநிலத்தில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் நடைபெற்ற எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்ற பெண்களில் சிலர் கர்ப்பமாக இருந்தனர். இதைக் காரணம் காட்டி இப்பெண்களுக்கு வேலைக்கான உத்தரவு வழங்கப்படவில்லை.

இந்த விஷயம் மாநில அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. எஸ்பிஐயின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரளத்தில் மகளிர் சங்கங்கள் போராட்டம் நடத்தின.

இந்த உத்தரவை பிரதமர் தலையிட்டு நீக்க உத்தரவிட வேண்டும் என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் கர்ப்பிணிப் பெண்களின் நியமனத்துக்கு இதுவரை விதிக்கப்பட்டிருந்த தடையை எஸ்பிஐ தற்போது நீக்கிக் கொண்டிருக்கிறது.

30 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை, இப்போது விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதாக வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாட்டின் பிரதான வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் வங்கியில் இத்தனை ஆண்டுகளாக இதுபோன்றதொரு நடைமுறை இருந்து வந்திருப்பது வேதனைக்குரியது.

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் தாய்மை, கர்ப்ப காலம் என்பது மிகவும் குறுகிய ஒரு காலகட்டமே. மக்கள்தொகை குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் இப்போதெல்லாம் யாரும் பிள்ளை பெற்றுக் கொள்வதில்லை.

எல்லாவிதமான உடல் அசெüகரியங்களுக்கும் உடனுக்குடன் நிவாரணம் பெறத்தக்க வகையில் வீதிகள்தோறும் மருத்துவ வசதிகள் பெருகிவிட்டன.

நவீன மருத்துவ வசதிகளால் தாய்மையை ஒரு சுமையாகவோ, பாரமாகவோ இன்றைய பெண்கள் கருதுவதில்லை.

ஒரு சில அசாதாரண நிலைகளில் கர்ப்ப காலம் முழுவதும் படுக்கையிலேயே ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் பெண்களுக்கு வேண்டுமானால் வாய்ப்புகள் மறுக்கப்படலாம். அப்படிப்பட்ட பெண்கள், வெளியிடங்களில் வேலைக்காக விண்ணப்பிக்க மாட்டார்கள் என்பதும் நடைமுறையில் நாம் காணும் உண்மை.

பொதுவாக, தாய்மைப் பேறு, கர்ப்பம் என்பதற்காக மட்டுமே ஒரு பெண்ணின் திறமைகளுக்கு அங்கீகாரம் அளிக்க மறுப்பது எந்தவிதத்திலும் நியாயமல்ல.

சாதனைக்குத் தாய்மை எப்போதும் ஒரு தடையல்ல என்பதை நிஜ வாழ்க்கையில் நிரூபித்து வரும் பெண்கள் ஏராளம். குழந்தைகள் பெற்ற பின்பும் புதிய உத்வேகத்துடன் களம் இறங்கி சாதனை படைத்து வரும் மகளிர் எண்ணற்றோர்.

ஒரு குழந்தை பெற்ற பின்புதான் 1980-ல் விம்பிள்டன் பட்டம் வென்றார் ஈவான் கூலகாங். அவரைத் தொடர்ந்து தற்போது 2009-ம் ஆண்டுக்கான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிருக்கான பட்டத்தை வென்றிருக்கும் பெல்ஜியத்தின் கிம் க்லிஜ்ஸ்டெர்ஸ், இரண்டு வயதுக் குழந்தைக்குத் தாய் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை பிறந்து 18 மாதங்களுக்குப் பிறகு முழு உத்வேகத்துடன் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு தற்போது "கிராண்ட் ஸ்லாம்' பட்டத்தை தட்டி வந்திருக்கிறார் கிம்.

வெளிநாட்டுப் பெண்களை விடுங்கள். நம் நாட்டின் மேரி காம், 2008-ம் ஆண்டு உலகக் குத்துச்சண்டைப் போட்டிகளில் தங்கம் வென்று நான்காவது தடவையாக உலகச் சாம்பியன் பட்டம் வென்றார்.

இவரது சாதனைக்கு இந்திய அரசு கொடுத்த பரிசுதான், 2009-ம் ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது.

அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருதுகளுக்குச் சொந்தக்காரரான மணிப்பூரின் மேரி காம், இரண்டு குழந்தைகளுக்குத் தாயானபிறகுதான் மேற்கூறிய சாதனையைப் படைத்தார்.

விளையாட்டு வீராங்கனைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், சாதனை படைத்த பெண்களில் பெரும்பாலானோர், திருமணத்துக்குப் பிறகோ அல்லது குழந்தை பெற்ற பிறகோதான் வெற்றிச் சிகரத்தை தொட்டிருக்கிறார்கள் என்பது புரியும்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற பிரபல பத்திரிகையாளர் அனிதா பிரதாப், கர்ப்பிணியாக இருந்தபோதுதான் புலனாய்வுக் கட்டுரைகள் பலவற்றை எழுதி உலகின் பார்வையைத் தன் பக்கம் திருப்பினார். இதுபற்றி அவரே தன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

1990 அக்டோபரில் பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எல்.வசந்தகுமாரி காலமானார்.

அந்த ஆண்டு டிசம்பர் சீசன். சென்னை மியூசிக் அகாதெமியில் கூட்டம் நிறைந்து வழிந்தது. 8 மாதக் கர்ப்பிணியான இன்றைய பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன் அப்போது நிகழ்த்திய அந்த இசைக் கச்சேரியைக் கேட்டவர்கள், சிலிர்த்துப் போனார்கள்.

எனவே, இதுபோன்ற பழமையான கட்டுப்பாடுகளை எல்லா நிறுவனங்களும் உடனடியாகத் தளர்த்திக் கொள்ள முன்வருவது அவசியம்.
கட்டுரையாளர் : ஜி. மீனாட்சி
நன்றி : தினமணி

ரகசிய குறியீடு இல்லாத செல்போன் இறக்குமதிக்கு தடை!

ரகசிய குறியீடு இல்லாமல் ஏற்றுமதியாகி வரும் சீன, கொரிய, தைவான் மற்றும் தாய்லாந்து செல்போன்களுக்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது. இதனை மத்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் அறிவித்துள்ளார். கொரியா, சீனா, தாய்லாந்து மற்றும் தைவான் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன்கள் இந்தியாவில் குறைந்த விலைக்கு விற்கப்பட்டு வந்தன. இந்த மாதிரி போன்கள் கிட்டத்தட்ட 10 கோடிக்கும் மேல் புழக்கத்தில் உள்ளதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. மாதந்தோறும் புதிதாக 58 லட்சம் பேர், இந்த போன்களை வாங்கி பயன்படுத்தி வருவதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த வகை செல்போன்களில்,'எலக்ட்ரானிக் சீரியல் நம்பர்'கள் (இ.எஸ்.என்) மற்றும் 'மொபைல் எக்விப்மெண்ட் ஐடெண்டிபைர்' (எம்.இ.ஐ.டி) என்று அழைக்கப்படும் ரகசிய குறியீட்டு எண்கள் பெரும்பாலும் இருப்பதில்லை. இத்தகைய போன்களை ட்ரேஸ் செய்வதும் கடினம். இதனால் இவற்றை தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையோர் அதிகம் பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும். ஆகவே இந்த போன்களுக்கு இந்தியாவில் அடியோடு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்து சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டது. தற்போது இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்திருப்பதாக மத்திய வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் உறுதிப்படுத்தியுள்ளார்.

நன்றி : தினமலர்



பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர்கிறது

பெட்ரோல் விற்பனையாளர்களுக்கு அளிக்கப்படும் கமிஷன் தொகையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதுவரை பெட்ரோலுக்கு, ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.1028 கமிஷன் வழங்கப்படுகிறது. இனி அது ரூ.1098 ஆக உயர்த்தப்பட உள்ளது. இதேபோல் டீசலுக்கு தற்போது, ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.630 வழங்கப்படுகிறது. இனி அது ரூ.670 ஆக உயர்த்தப்பட உள்ளது. இதனால் பெட்ரோல் லிட்டருக்கு 7 காசும், டீசல் லிட்டருக்கு 4 காசும் அதிகரிக்கும். இந்த விலை உயர்வு நாடு முழுவதும் நுகர்வோரிடம் வசூலிக்கப்படும். இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்


எல்லைக்கு அப்பால்...

புதுதில்லியிலிருந்து இஸ்லாமாபாதுக்கு விமானத்தில் செல்வதைவிட வாகாவில் இந்திய-பாகிஸ்தான் எல்லையைக் கடந்து செல்வது புதுமையான அனுபவமாகும். கடந்த வாரம் லாகூரில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் சார்க் நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேலான பெண் பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து நான் உள்பட 30-க்கும் மேலான பெண் பத்திரிகையாளர்களும் இதில் கலந்துகொண்டோம். நாங்கள் வாகா சென்று இந்திய-பாகிஸ்தான் எல்லைக் கோட்டை நடந்து சென்று கடந்தோம். பின்னர் அங்கிருந்து கார் மூலம் லாகூர் சென்றோம்.

எல்லைக்கோட்டுப் பகுதியில் இந்தியக் குடியுரிமை அலுவலகத்திலிருந்து எங்களது சாமான்களை சீக்கிய போர்ட்டர்கள் தூக்கி வந்து பாகிஸ்தான் எல்லை ஆரம்பத்தைக் குறிக்கும் வெள்ளைக் கோட்டில் வைத்தனர். பின்னர் அங்கிருந்து பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த போர்ட்டர்கள் அதைச் சுமந்து சென்றனர். இரு நாட்டு போர்ட்டர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டபோதிலும் ஒருவார்த்தைகூட பேசிக்கொள்ளவில்லை. தினமும் இப்படித்தான் என்று பலரும் கூறினர்.

எனினும், எப்போதாவது இந்த வழியாகச் செல்லும் பிரமுகர்கள் "டிப்ஸ்' கொடுத்தால் வாங்கிக் கொண்டு அதை அவர்களுக்கும் தெரிவிப்பார்களாம். நான்கு நாள்களுக்குப் பிறகு நாங்கள் திரும்பிவந்த போது பாகிஸ்தான் சுங்க அதிகாரிகள் இந்திய தரப்பினருக்கு "தீபாவளி' அன்பளிப்பு கொடுத்தது தெரியவந்தது.

பாகிஸ்தான் பிரிவினையின்போது அந்தப் பகுதியிலிருந்து இந்தியாவில் குடியேறிய எங்களுக்கு இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கோட்டைக் கடந்து செல்லும்போதெல்லாம் மனத்தில் ஒருவித கிளர்ச்சி ஏற்படும். மற்றவர்களுக்கு இரு நாடுகளும் முன்னேற்றம் காண வேண்டும்; தடைகள் நீக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.

2005-ம் ஆண்டு கோடைக்காலத்தில் நான் லாகூர் சென்றதற்கும் இப்போது சென்றுவந்ததற்கும் உள்ள வித்தியாசத்தை என்னால் நன்கு உணர முடிகிறது. லாகூரில் இப்போது அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இன்னும் சொல்லப்போனால் அங்கு இப்போது உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்தபோது நாங்கள் அங்குதான் இருந்தோம்.

நாங்கள் சென்ற தினத்தில் பெஷாவரில் குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. அதற்கு அடுத்த நாள் காலையில் ராவல் பிண்டியில் உள்ள ராணுவத் தலைமையகம் மீது மிகப்பெரிய தாக்குதல் நடந்தது. இச் சம்பவம் ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பிரதமர் யூசுப் ரஸô கிலானி எங்கள் கருத்தரங்கில் பங்கேற்க முடியாமல் போய்விட்டது. பஞ்சாப் மாகாண முதல்வர் ஷாபாஸ் ஷெரீப் எங்களுக்கு இரவு விருந்து அளிக்க ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், அவராலும் அதில் பங்கேற்க முடியவில்லை. நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பெண் பத்திரிகையாளர்கள் என்பதால் நாங்கள் எங்கு சென்றாலும் உடன் பாதுகாப்புக்காக போலீஸôர் கூடவே வந்தனர்.

பாகிஸ்தான் ராணுவத் தலைமையகம் மீது நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு யார் காரணம் என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாயின. சிலர் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தேரிக்-இ-தாலிபான் என்ற அமைப்புதான் காரணம். தாலிபான்கள் அதிகம் உள்ள தெற்கு வாஜிரிஸ்தான் பகுதியில் ராணுவம் நடவடிக்கை எடுத்துவிடக்கூடாது என்று எச்சரிப்பதற்காகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று கூறினர். தாலிபான்களை ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தபோதிலும் அது விஷயத்தில் ராணுவத்துக்கு மாறுபட்ட கருத்து இருந்தது வெளிப்படை. இப்போது ராணுவத்தின் கையைக் கட்டிவிட்டு குளிர்காலத்தில் தாலிபான்கள், அல்-காய்தா தீவிரவாதிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சியே இது என்றும் சிலர் கூறினர்.

பாகிஸ்தான் அரசுக்கும், ராணுவத்துக்கும் கருத்து மோதல்கள் இருந்து வந்துள்ள நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. கெர்ரி லூகர் மசோதாவை பாகிஸ்தான் அதிபர் ஆஸிப் அலி ஜர்தாரி ஆதரித்தாலும் நாட்டின் இறையாண்மையில் அத்துமீறி தலையிடுவதாகும் இது என்று பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் அஷ்பாக் பர்வேஸ் கயானி விமர்சித்திருந்தார். இந்த மசோதாவில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் பாகிஸ்தானுக்கு 7.5 பில்லியன் டாலர் நிதியுதவி கிடைக்கும். இதற்கு விதிக்கப்பட்ட ஒரே நிபந்தனை, நீதித்துறையிலும், நிர்வாகத்துறையிலும் பாகிஸ்தான் ராணுவம் தலையிடக்கூடாது என்பதுதான்.

பாகிஸ்தான் நாட்டின் எதிர்காலம் குறித்து பலரும் பலவிதமாகப் பேசி வருகின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ராணுவம் அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொள்ளக்கூடும் என்றும், விரைவிலேயே பாகிஸ்தானில் இடைத்தேர்தல் நடைபெறக்கூடும் என்றும் வதந்திகள் உலவுகின்றன. சில நாள்களுக்கு முன்பு ஷாபாஸ் ஷெரீப், ராணுவத் தலைமைத் தளபதி கயானியைச் சந்தித்துப் பேசினார். தற்போதுள்ள அரசைக் கவிழ்ப்பதற்கு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் ஷெரீப்) கட்சி ரகசிய பேரம் நடத்தி வருவதாகவும் விரைவில் தேர்தல் வரலாம் என்று பேசப்பட்டன.

2005-ம் ஆண்டைய நிலைக்கும் இப்போதைய காலத்துக்கும் இடையே மற்றொரு மாற்றம் தெரிகிறது. அது இந்தியா மீது பாகிஸ்தானின் மனோநிலை பற்றியது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பர்வேஸ் முஷாரப் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது இரு நாடுகளுக்கும் இடையே உறவில் ஒரு நெகிழ்வு இருந்து வந்தது. இங்கிருந்து எம்.பி.க்கள் பாகிஸ்தான் சென்று வந்தனர்.

பாகிஸ்தானிலிருந்து ஒருவர் இங்கு வந்து சாதாரண பால்காரராக இருந்து மெல்ல மெல்ல உயர்ந்து பிகாரின் முதல்வரான லாலு பிரசாத்தை நேரில் சந்தித்துப் பேச முடிந்தது.

ஆனால், இன்று பாகிஸ்தானில் மக்களாட்சி நடக்கின்ற போதிலும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண இருநாடுகளும் பேச்சுவார்த்தையைத் தொடர வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருந்து வருகிறது.

"இந்தியா மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்தான் எங்கள் நாட்டிலும் தாக்குதல் நடத்தியுள்ளனர். தீவிரவாதத்தை நாங்கள் ஆதரிப்பதாகக் கூறுவதை இந்தியா சிந்தித்துப் பார்க்க வேண்டும். நீதித்துறை விவகாரங்களில் நாங்கள் தலையிடுவதில்லை. ஹபீஸ் சய்யீத்தை விடுவித்தது நீதிமன்றம்தான். சய்யீத்துக்கு எதிராக மேலும் சாட்சியங்களை அளிக்க இந்தியா தயாராக இருந்தால் மேல் நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயில் மீதான தாக்குதலுக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க இந்தியாவால் முடியவில்லை என்று பாகிஸ்தான் தரப்பில் வாதிடப்படுகிறது.

இந்தியாவுடன் பேச்சுவார்த்தையைத் தொடர பாகிஸ்தான் விரும்பியபோது மக்களிடம் ஓர் எச்சரிக்கை உணர்வு இருந்தது. சீனாதான், பாகிஸ்தானின் நெருங்கிய நண்பன் என்று பலரும் பேசிவந்தனர்.

நான் நண்பர்களுக்காக ஒரு கடையின் வாசலில் காத்திருந்தபோது, கடையின் உள்ளே இருந்தவர்கள் உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருந்தனர். என்னைப் பார்த்ததும் நான் இந்தியப் பிரஜை என்று தெரிந்துகொண்டு அமைதியாகிவிட்டனர்.

பலவிதங்களில் மும்பைத் தாக்குதல் சம்பவம் இந்தியா, பாகிஸ்தான் இடையே விரிசலை ஏற்படுத்திவிட்டது தெரியவரும். இச் சம்பவம் பாகிஸ்தான் பற்றி இந்திய மக்களின் மனதில் வெறுப்பை ஏற்படுத்திவிட்டது எனலாம். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையைத் தொடர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்பியபோதிலும், எகிப்தில் பாகிஸ்தான் பிரதமர் விடுத்த அறிக்கை மன்மோகன் சிங்கை பின்வாங்கவைத்துவிட்டது.

பாகிஸ்தான் ராணுவத் தலைமையகம் மீது நடந்த தாக்குதலின் பின்னணியில் இந்தியா இருப்பதாக அந்த நாட்டு பத்திரிகைகளில் வெளியான செய்தி, இப்படியும் இருக்கலாமோ என்ற எண்ணத்தை பாகிஸ்தான் மக்கள் மனதில் ஏற்படுத்தி விட்டது.

தாக்குதலுக்கு இந்திய பின்னணி இருப்பதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் முதலில் கூறினாலும் பின்னர் அவர் தனது நிலையை மாற்றிக் கொண்டுவிட்டார். இதற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது நடந்த தாக்குதலுக்குக்கூட இந்தியாதான் காரணம் என சொல்லப்பட்டது நினைவிருக்கலாம். கெர்ரி-லூகர் மசோதா கொண்டுவரப்பட்டதற்குக்கூட இந்தியாதான் காரணம் என்ற எண்ணமும் பாகிஸ்தானிடம் உள்ளது.

கடந்த காலங்களிலும் சரி.. இப்போதும் சரி.. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் விரிசல் நீடிக்கிறது என்பதுதான் உண்மை.

கட்டுரையாளர் : நீரஜா சௌத்ரி

நன்றி : தினமணி



ரிலையன்ஸ் புதிய திட்டம் அறிமுகம்

'சிம்ப்ளி ரிலையன்ஸ் பிளான்' என்ற பெயரில் புதிய மொபைல் திட்டத்தை, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அந்நிறுவன தமிழக தலைவர் அஜய் அவஸ்தி, மதுரை பொறுப்பாளர் ஆன்டனி ராஜ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளூர், எஸ்.டி.டி., ரோமிங் என அனைத்து அழைப்புகளுக்கும் ஆயுள் முழுமைக்கும் 50 காசு கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதே கட்டணத்தில் எந்த நெட்வொர்க்கிற்கும், எந்த நேரத்திலும் பேசலாம். பிரீ பெய்டு, போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள் இச்சலுகையைப் பெறலாம். நாடு முழுவதும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சி.டி.எம்.ஏ., ஜி.எஸ்.எம்., போன் பயன்படுத்துவோருக்கு இத்திட்டம் பொருந்தும். தற்போது வேறு திட்டத்தில் இருப்போரும் இத்திட்டத்திற்கு மாறலாம். ரிலையன்சில் இனிமேல் வேறு திட்டங்கள் இருக்காது. நாடு முழுவதும் 50 காசு கட்டணத்தில் 24 ஆயிரம் நகரங்கள், ஆறு லட்சம் கிராமங்களை இத்திட்டம் இணைத்துள்ளது
நன்றி : தினமலர்


Friday, October 23, 2009

புலனாய்வுத் துறை பற்றிய புலனாய்வு!

இந்தியாவின் எந்த மாநிலத்திலும் ஒரு குற்றம் நிகழ்ந்து ஆளும்கட்சியின் அதிகாரத்துக்கு உள்பட்ட மாநில போலீஸ் நடுநிலையுடன் விசாரணை நடத்தாது எனும் எண்ணம் பொதுமக்களுக்கும், பிற கட்சியினருக்கும் ஏற்பட்டால் சிபிஐ விசாரணை தேவை என்ற கோரிக்கை வலுக்கும். சில சமயங்களில் குறிப்பிட்ட வழக்கு விசாரணையை சிபிஐதான் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் உத்தரவிடுவதையும் காண்கிறோம்.

இந்த ஆண்டு ஜூலை மாதம் ஆக்ட்டீ (ஏஐசிடிஇ) எனப்படும் அகில இந்திய பொறியியல் கல்விக் கவுன்சிலின் இரண்டு உயர் அதிகாரிகளின் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டு தங்கள் வருமானத்துக்கும் அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளனர் என்னும் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக இந்நிறுவனத்தின் மீது கட்டுக்கடங்காத குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. பல தனியார் கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழக அந்தஸ்து பெறவும், புதிய பொறியியல் கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்கவும் இந்த ஆக்ட்டீ அனுமதி அளிக்க வேண்டும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணை அமைச்சராக இருந்த புரந்தேஸ்வரி கேபினட் அமைச்சர் அர்ஜுன் சிங்குக்கு ஆக்ட்டீயின் ஊழல் பற்றி எழுதி, இந்த இரண்டு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டிருந்தார். அதிகாரிகள் தனது ஊழல் கூட்டாளிகள் என்பதால் கேபினட் அமைச்சர் அர்ஜுன் சிங் அந்தக் கடிதம் சம்பந்தப்பட்ட கோப்பினைத் தனது மேஜையில் எந்த நடவடிக்கையுமின்றி கிடப்பில் போட்டு வைத்திருந்தார்.

இந்த ஆண்டு புதிய ஆட்சி அமைந்தபின், கபில் சிபல் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரானபின் சிபிஐ நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டதில் இரண்டு உயர் அதிகாரிகளும் கைதானார்கள்.
இதே ஜூலை மாதம் மத்திய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் தலைவர் பூட்டாசிங்கின் மகன் சரப்ஜித் சிங் தன் தந்தையின் ஆணையத்தின் ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரை அவ்வழக்கிலிருந்து தப்பிக்க வைக்கிறேன் எனக் கூறி ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதற்காக சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார்.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரûஸ எதிர்த்து பூட்டாசிங் போட்டியிட்டதாலும், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனது வாரிசுகளுக்கு டிக்கெட் கிடைக்காததால் காங்கிரûஸ எதிர்த்து அர்ஜுன் சிங் உள்ளடி வேலைகள் செய்ததாலும் இந்த இரண்டு வழக்குகளையும் சிபிஐ கையிலெடுத்து தடாலடி கைதுகள் நடந்தேறின என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.

ஆளும் கட்சியின் பலசாலிகள் நினைத்தால் சிபிஐ வழக்குகள் பாயும் அல்லது பாய்ந்த வழக்குகள் கிடப்பில் போடப்படும் எனும் பரிதாபமான நிலைமை நம் நாட்டில் உருவாகியுள்ளது. அரசியல் காற்று எத்திசையில் அடிக்கிறதோ அதன்படி கிடப்பில் போடப்படுவதும் முடுக்கிவிடப்படுவதும் நம் நாட்டின் குற்றவியல் நடைமுறையைக் கேலிக்கூத்து ஆக்கியுள்ளது.

மற்ற நாடுகளின் மத்திய உளவுத்துறை போலீஸ் தனித்தன்மையுடன் செயல்படும்போது நமது நாட்டின் சிபிஐ மட்டும் ஆளும் கட்சியின் அடிமையானது எப்படி? 1977-ம் ஆண்டு, அக்டோபர் 3-ம் தேதி அன்றைய இரும்புப் பெண்மணி இந்திரா காந்தியை பிரபல ஜீப் ஊழல் வழக்கில் சிபிஐ கைது செய்தது. அடுத்த தேர்தலில் இந்திரா காந்தி வெற்றி பெற்ற பின் முதல் வேலையாக சிபிஐ நிர்வாகத்தை மத்திய உள்துறையிடமிருந்து மாற்றி பிரதமரின் நேரடி நிர்வாகத்தின்கீழ் கொண்டு வந்தார். தான் கைது செய்யப்பட்ட தனிப்பட்ட கோபத்தினால் எடுக்கப்பட்ட நடவடிக்கை இது என அப்போதே பலரும் முணுமுணுத்தனர்.

முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசுக்குச் சாதகமாக முடிவெடுத்த காலகட்டத்தில், சமாஜவாதி கட்சியின் அமர்சிங், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். முலாயம்சிங் மீதான வழக்கு முந்தைய தேசிய ஜனநாயக முன்னணி அரசின் பழி வாங்கும் செயல் எனவும் சிபிஐ சமர்ப்பித்த வழக்கின் அறிக்கையில் 288 தவறுகள் உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

அன்றைய மத்திய அரசின் சட்ட அமைச்சர் பரத்வாஜ் வெளிப்படையாக முலாயம்சிங் யாதவின் மீது தவறான ஒரு வழக்குத் திணிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இது அரசின் வழக்குக்குச் சாவு மணி அடிக்கும் வேலை என்பது எல்லோருக்கும் தெரியும். சட்ட அமைச்சர் ஒருவர் நடைபெற்று வரும் வழக்கைப் பற்றிய எதிர்கருத்தைக் கூறினால் அரசு எந்தவகையில் வழக்கை நடத்த முடியும் என்பது நடுநிலையாளர்களின் அன்றைய கேள்வி.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ 2007-ம் ஆண்டு பதிவு செய்தது. பின் இடதுசாரி கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியை விட்டு விலகிய சூழ்நிலையில் முலாயம்சிங்கின் சமாஜவாதி கட்சியின் ஆதரவு மத்திய ஆளும் கூட்டணிக்குத் தேவைப்பட்டது. எந்தச் சத்தமும் இல்லாமல் மத்திய சட்டத்துறை, முலாயம்சிங் வழக்கு சம்மந்தப்பட்ட கோப்பை அன்றைய சொலிசிட்டர் ஜெனரல் வாஹன்வதியிடம் அனுப்புமாறு சிபிஐக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கில் உண்மையில்லை எனவும், சிபிஐ தவறுதலாக முலாயம்சிங்கின் சொத்துகளுடன் அவரது மனைவி மற்றும் மருமகள் பெயரிலிருந்த சொத்துகளையும் சேர்த்துவிட்டது என மிக அறிவுப்பூர்வமான ஒரு சட்ட அறிவுரையையும் சொலிசிட்டர் ஜெனரல் வழங்கினார். 2008-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி, ""இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?'' என்று உச்ச நீதிமன்றம் பல கேள்விகளை எழுப்ப வழக்கு வாய்தா பெற்றது.

இதனிடையில் 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேரங்களில் சமாஜவாதி கட்சியும் காங்கிரஸýம் உடன்பாடு ஏற்படுத்திக் கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியது. சொலிசிட்டர் ஜெனரல் வாஹன்வதி, ""முலாயம்சிங் சொத்து பற்றி நான் அளித்த அறிக்கை சரியானதல்ல'' என ஒரு புதிய அறிக்கையை சிபிஐ மூலம் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து மேல் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

ஆனால் முலாயம்சிங் மிகவும் திறமையுடன் சிபிஐ அதிகாரிகளுடன் தனது கட்சித் தலைவர்கள் சட்டத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடத்திய பேரங்கள் பற்றிய 16 ஒலிப்பதிவு சி.டி.க்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அகில இந்தியாவின் நாகரிக மனிதர்களும் தலையைத் தொங்கப் போட்டுக்கொள்ளும் இந்நிகழ்வு நம் நாட்டின் நடுநிலை ஆட்சிமுறையை எள்ளி நகையாடச் செய்தது.

மாயாவதியின் மீதான சிபிஐ வழக்கு 2003-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. தாஜ் புராதன வழித்தடம் எனும் 175 கோடி ரூபாய் திட்டத்தில் ஊழல் நடந்ததாக வழக்கு. ஓராண்டு விசாரணைக்குப்பின் சரியான சாட்சியங்களுடன் இவ்வழக்கை நடத்த முனைந்த சிபிஐ, அன்றைய வாஜ்பாய் அரசின் தலையீட்டினால் தயக்கம் காட்டியது. பாஜக கூட்டணியுடன் மாயாவதி நட்புறவுடன் இருந்த காலம் அது.

பின்னர் மத்தியில் ஆட்சியமைத்த காங்கிரஸ் கூட்டணி மாயாவதியுடன் சேர்ந்து உத்தரப்பிரதேசத்தில் அரசியல் செய்ய முயற்சிகள் நடந்தன. அதேநேரத்தில் சிபிஐ தீவிரமான விசாரணை முடிவில் மாயாவதியின் மீதான தாஜ் வழித்தடத் திட்டத்தின் ஊழல் பற்றிய தகுந்த ஆதாரங்களைத் திரட்டி வைத்திருந்தது. ஆனால் காங்கிரஸ் அரசியல் காரணங்களுக்காக அன்றைய அட்டர்னி ஜெனரல் மிலின்ட் பானர்ஜி மிகவும் நகைச்சுவையான ஒரு காரணத்தைக் காட்டி மாயாவதிக்கு எதிராகத் தகுந்த ஆதாரம் இல்லை எனக் கூறினார்.

அதாவது ஊழல் நடவடிக்கைகளுக்கான ஆரம்பமாக காண்ட்ராக்டர்களுக்கு வழங்கப்பட்ட உத்தரவுகளில் மாயாவதி கையெழுத்திடாமல் அவரது செயலர் கையெழுத்திட்டுள்ளாராம். அரசாங்கக் கோப்புகளில் குறிப்பாணையில் முதல்வரும் உத்தரவுகளில் அதிகாரிகளும் கையெழுத்திடும் நடைமுறை பாவம் படித்த மேதை அட்டர்னி ஜெனரலுக்குத் தெரிந்திருக்கவில்லை.
ஆனால், உச்ச நீதிமன்றம் இதை ஏற்றுக்கொள்ளாமல் விசாரணையைத் தொடரும்படி தேசிய ஊழல் கண்காணிப்பு ஆணையரான சிவிசிக்கு மாயாவதியின் வழக்கை மாற்றியது.

சிவிசி சம்பந்தப்பட்ட எல்லா ஆவணங்களையும் பார்வையிட்டபின், மாயாவதியின்மீது சரியான அத்தாட்சிகள் உள்ளன எனக் கூறி வழக்கைத் தீவிரப்படுத்த சிபிஐக்கு உத்தரவிட்டது. அதேவேளையில் மாயாவதிக்கு காங்கிரஸýடன் மோதல் வலுக்க வழக்குத் தீவிரமடைந்துள்ளது.

இவை எல்லாவற்றிற்கும் சிகரம் போஃபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு என்பதை அகில உலகத்துக்கும் பறைசாற்றி, சிபிஐ மத்திய அரசின் கைப்பாவை என உறுதி செய்துள்ளது. 1980-களில் பல நடவடிக்கைகளைக் கையாண்டு, 2006-ம் ஆண்டு லண்டனில் முடக்கப்பட்ட குவாத்ரோச்சியின் வங்கிக் கணக்கை உயிரூட்டி அவர் இருபத்தொரு கோடி ரூபாயைத் தனது கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ள வழிவகை செய்த சிபிஐ, காங்கிரஸ் கட்சியின் ஓர் அங்கமா அல்லது மத்திய அரசின் தலையாய உளவுத்துறையா எனும் சந்தேகத்தை நடுநிலை இந்தியர்கள் மனதில் எழுப்பியுள்ளது.

மத்தியப் புலனாய்வுத் துறை, மத்திய தேர்தல் ஆணையம், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், நீதித்துறை போன்றவை ஆட்சியாளர்களின் தலையீடுக்கு இடம்கொடுக்காமல் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்று நமது அரசியல் சட்டம் வலியுறுத்துகிறது.

சுதந்திரமாகச் செயல்படுவதற்கான அதிகாரத்தை அரசியல் சட்டம் வழங்கி இருக்கிறது. ஆனால், எந்த ஓர் அமைப்பும் முறையாகவும், துணிவாகவும் இயங்குவது என்பது அந்தத் துறையின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களைப் பொறுத்துத்தான் அமையும்.

டி.என். சேஷனின் தலைமையில் மத்தியத் தேர்தல் ஆணையமும், வி.என். விட்டலின் தலைமையில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையமும் சுதந்திரமாகச் செயல்பட்டது மட்டுமல்ல, அந்த ஆணையங்களின் அதிகாரம் எத்தகையது என்பதையும் தங்களது செயல்பாட்டின் மூலம் தெளிவுபடுத்தினார். பதவியின் கண்ணியத்தையும், கௌரவத்தையும் நிலைநாட்டுவதைவிட ஆட்சியாளர்களுக்குச் சாதகமாக நடந்து, தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை நிலைநிறுத்திக் கொள்பவர்கள் தலைமைப் பொறுப்பில் அமர்த்தப்படும்போது, மத்தியப் புலனாய்வுத் துறை மட்டுமல்ல, எல்லா துறைகளுமே செயலிழந்து விடுகின்றன என்பதுதான் உண்மை.
கட்டுரையாளர் : என். முருகன்
நன்றி : தினமணி

ஏற்றத்துடன் முடிந்தது இந்திய பங்குச் சந்தை

இன்றைய இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் முடிந்தது. ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட ஏற்றமே இந்திய பங்கு சந்தையிலும் எதிரெலித்ததாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய போது, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 217.03 புள்ளிகள் அதிகரித்து, அதாவது 1.29 சதவீதம் அதிகரித்து 17006.77 புள்ளிகளோடு தொடங்கியது. தேசிய பங்குச் சந்தை நிப்டி 66.35 புள்ளிகள், அதாவது 1.33 சதவீதம் அதிகரித்து 5054.95 புள்ளிகளோடு தொடங்கியது.
அதன் பின், நண்பகலில் இந்திய பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. முடிவில் ஏற்றத்துடன் முடிவடைந்தது. இறுதியாக பங்குவர்த்தகம் முடியும் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 21.07 புள்ளிகள் அதிகரித்து 16810.81 புள்ளிகளோடு நிலைப்பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 8.45 புள்ளிகள் அதிகரித்து 4997.05 புள்ளிகளோடு நிலைபெற்றது.
அதிகம் லாபம் அடைந்த நிறுவனங்கள்: ஸ்டர்லைட் இன்டஸ்டிரி 834.05 ரூபாயாக 2.27 சதவீதமும், டாடா ஸ்டீல் 552.60 ரூபாயாக 1.77 சதவீதமும், செயில் 185.75 ரூபாயாக 1.67 சதவீதமும் லாபத்தை கண்டன.
ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் 2140.70 ரூபாயாக 0.34 சதவீதமும், இன்போசிஸ் டெக்னாலஜி 2,224 ரூபாயாக 0.57 சதவீதமும், விப்ரோ 584.95 ரூபாயாக 1.40 சதவீதமும், டி.எல்.எப் லிமிடெட் 462.80 ரூபாயாக 3.13 சதவீதமும் லாபத்தை கண்டன.
நன்றி : தினமலர்


மாறுமா அரசுப் போக்குவரத்துக் கழகம்

தீபாவளியையொட்டி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் இயக்கிய சிறப்புப் பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதுதொடர்பாகப் பயணிகள் நடத்துநர்களிடம் கேட்டபோது, "முன்பதிவு மற்றும் எக்ஸ்பிரஸ் கட்டணம், சிறப்புப் பேருந்து என்பதற்காகக் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது' என்றனர்.

தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு வந்தவர்களும், கொண்டாடி முடிந்து பணிக்குப் புறப்பட்டுச் சென்றவர்களும் பேருந்து நடத்துநர்களிடம் வாக்குவாதம் செய்து, வேறு வழியில்லாமல் பயணச்சீட்டு பெற்றுப் பயணித்தனர்.

இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் தரப்பில் அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. ஏற்கெனவே மக்களவைத் தேர்தல் நேரத்தின்போது, சென்னை மாநகரப் பேருந்துகளின் கட்டணத்தை இரவோடு இரவாகக் குறைத்து அறிவித்ததும், பின்னர் கட்டணமே குறைக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டதும் அறிந்ததே. "முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்தவர்கள், இதை மறைக்காமல் இருப்பார்களா?'

வருவாய் ஈட்ட பண்டிகை நாள்களிலும், திருவிழாக்காலங்களின்போதும் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியமில்லை. மாறாக, நஷ்டம் அடையச் செய்துவரும், சாதாரண மக்களும் அறிந்த சிலவற்றை போக்குவரத்துக் கழகம் சீரமைத்தாலே போதும். ஆண்டுதோறும் பல நூறு கோடி ரூபாய் போக்குவரத்துக் கழகத்துக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கும்.

ஒரே துறையில் அரசும், தனியாரும் ஈடுபடும்போது, தனியாருக்குச் சலுகைகளை வழங்க அரசியல் பிரமுகர்களும், அதிகாரிகளும் முற்படுகின்றனர். தனிப்பட்ட முறையில் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவதால், இதற்கு அவர்களும் உடன்படுகின்றனர்.

தனியார் பேருந்துகளுக்கு லாபகரமான "ரூட்'களை வழங்குவதிலும், "பீக் ஹவர்ஸ்' நேரங்களில் தனியார் பஸ்களை இயக்க அனுமதிப்பதும் உண்டு. இது தனியார் பேருந்து முதலாளிகள், அரசியல் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் செய்துகொள்ளப்படும் ஒப்பந்தம். பேருந்து நிலையங்களில் தனியார் பேருந்து மற்றும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் நேரத்துக்கும் இடையே "டைமிங்' தொடர்பாகப் பிரச்னைகள் ஏற்படும். அரசுப் பேருந்துகளை ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு முன்கூட்டியே எடுக்குமாறும், நேரம் கடந்தும் தனியார் பேருந்துகளை எடுக்க மறுக்கும் செயல்களும் நடைபெறும்.

இதற்காக தனியார் பேருந்துகளுக்கு ஆதரவாக பல வகைகளில் "செல்வாக்கு' உடைய உள்ளூர் பிரமுகர்கள் இருப்பார்கள். சில நேரங்களில் அரசுப் பேருந்து ஊழியர்களைத் தாக்க முயலும் சம்பவங்களும் நடைபெறும்.

பேருந்து நிலையங்களில் நடைபெறும் இச்சம்பவங்களைத் தவிர்க்க, தனியாருக்குச் சாதகமாக அரசுப் பேருந்து ஊழியர்கள் நடந்துகொள்வதும் உண்டு. இதற்காக ஊழியர்கள் மட்டத்தில் "கவனிப்பு'ம் உண்டு.

இதனால், தனியார் பேருந்தில் ஏராளமான பயணிகள் நின்றுகொண்டு பயணிப்பதையும், அரசுப் பேருந்துகள் காலியாகச் செல்வதையும் காணமுடியும்.

அரசுப் பேருந்துகளில் ஏற்படும் சிறு பழுதுகளை உடனடியாகச் சரி செய்வது இல்லை. அந்தப் பழுதுகளுடனே பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கும். சில மாதங்கள் கழித்து பெரும் பழுது ஏற்படும்போதுதான், அதை நிறுத்தி சரிசெய்வது உண்டு. நூற்றுக்கணக்கில் செலவழிக்க வேண்டிய செலவு அப்போதே செய்யாமல் நாள்கணக்கில் இழுத்தடித்து, பல்லாயிரக்கணக்கில் செலவு செய்கின்றன போக்குவரத்துக் கழகங்கள்.

தொலைதூரப் பயணத்தின்போது, பயணிகள் உணவு, தேநீர் அருந்தவும், இயற்கை உபாதைகளுக்காகவும் சில இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்படுவது உண்டு. பேருந்துகள் நிற்கும் இடம் பெரும்பாலும் நகர்ப் பகுதியாக இருக்காது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக நெடுஞ்சாலைகளின் ஓரம் பேருந்து பயணிகளுக்காகவே அமைக்கப்படும் சிறு வணிக வளாகமாகவே அது காணப்படும். இங்கு அரசியல் செல்வாக்கு பெற்றவர்கள் கடைகளை அமைத்திருப்பர். இங்கு விற்பனை செய்யப்படும் பொருள்களின் விலை, அப்பொருளின் உண்மையான விலையைவிட சில மடங்கு அதிகமாக இருக்கும்.

இவ்விடங்களில் பேருந்துகள் நின்று செல்வதற்காக, அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை "கவனிப்பு' நடைபெறுகிறது.

இவ்வாறாக அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை தனியாருக்குச் சாதகமாக நடந்துகொண்டு, அவர்களின் மூலம் சலுகைகளைப் பெற்றுக் கொண்டு வருகின்றனர்.

இவற்றையெல்லாம் அரசுப் போக்குவரத்துத் துறை நிர்வாகம் கண்டறிந்து களைந்தால், அரசுப் போக்குவரத்துக் கழகம் தனது ஆண்டு வருவாயில் மேலும் சில நூறு கோடி ரூபாய்கள் கிடைக்கும்.

இவ்வாறு பயணிகள் அனைவரும் அறிந்த சில தவறுகளைக் களைந்து, வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் முயலவில்லை. மாறாக, பண்டிகை நாள்களில் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தொடங்கிவிட்டது.

பண்டிகை நாள்களில் உள்ளூர் வணிகக் கடைகளில் சிலர் "இனாம்' கேட்பதுபோல், பயணிகளிடமும் அரசுப் போக்குவரத்துக் கழகம் கேட்கத் தொடங்கிவிட்டதா? என்று நினைக்கத் தோன்றுகிறது.

கட்டுரையாளர் : தி. நந்தகுமார்
நன்றி : தினமணி

ஏழையின் துன்பம்

உலகத்தில் உள்ள பெரும் பணக்காரர்களைப் பட்டியிலிட அமைப்புகள் இருக்கின்றன. அப்படிப் பணக்காரர்களை அடையாளம் காண்பதும் பட்டியலிடுவதும் மிகவும் சுலபமும்கூட. ஆனால் ஓர் ஏழை யார் என்று தீர்மானிப்பதுதான் மிகவும் கடினமான விஷயமாக இருக்கிறது. அதைத் தீர்மானிப்பவர்களும் ஏழையைப் பற்றி அதிகம் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.

வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்கள் (ஆடக) யார் என்பதற்கான கணக்கெடுப்பை நடத்தும்போது யாரை வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவராகக் கருதலாம், யாரை நீக்கிவிடலாம் என்பதற்கான சில வரையறைகளை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் அண்மையில் அறிவித்துள்ளது.

இந்த வரையறைகள் பெரும்பாலும் ஒரு குடும்பத்தில் உள்ள வசதிகள் (டிவி. சமையல் இணைப்பு, மின்வசதி உள்பட), வருமானம், படித்தவர் எண்ணிக்கை, குடும்ப அங்கத்தினர் எண்ணிக்கை எனப் பலவாறாக நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கு மதிப்பெண் கொடுக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட வகுப்பினரா, மிகவும் பிற்படுத்தப்பட்டவரா, நிலமற்ற விவசாயக் கூலியா, சாதாரணத் தொழிலாளியா, சுயதொழில் செய்பவரா, வீட்டில் 5-வது வகுப்பு வரை படித்தவர்கள் எத்தனை பேர், யாருக்காவது டிபி, எய்ட்ஸ், ஊனம் உள்ளதா, குடும்பத்தலைவர் 60 வயதுக்கு மேற்பட்டவரா என்பது போன்ற கேள்விகளுக்கு மொத்தம் 20 மதிப்பெண் வழங்கி, 17 மதிப்பெண் கிடைத்தால் அவர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர் என்று தீர்மானிப்பார்களாம். இந்த மதிப்பெண் முறை தவறானது என்று பொருளாதார நிபுணர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்கட்டும். வறுமைக் கோட்டிற்குக் கீழ் வராதவர் என்று நீக்கிவிடுவதற்கு ஐந்து வரையறைகள் தந்துள்ளனர். அவை: குடும்பத்தின் மாதச் சம்பளம் ரூ. 5,000-க்கு அதிகம், இரண்டு சக்கர வாகனம் வைத்திருத்தல், பண்ணை இயந்திரங்கள் வைத்திருத்தல், நிரந்தர வசிப்பிடம் இருத்தல், அந்த மாவட்ட விவசாயிகளுக்கான சராசரி நிலம் உடையவர் என இந்த ஐந்து வரையறையில் ஏதாவது ஒன்று இருந்தாலும் அவரை வறுமைக் கோட்டிற்குக் கீழ் சேர்க்கத் தேவையில்லை.

இதில் சிக்கலானதும், அனைவருடைய ஆட்சேபத்துக்குரியதுமான விவகாரம் ஒரு குடும்பத்தின் மாத வருவாய் ரூ. 5,000 என்று வரையறுக்கப்பட்டிருப்பதுதான். ஒரு கட்டடத் தொழிலாளிக்கு நாள்கூலி ரூ. 200 கிடைக்கிறது என்பதற்காக அவரது மாத வருவாயை ரூ. 6,000 என்று கணக்கிட்டு, அவரை ஏழைகள் பட்டியலிலிருந்து நீக்கிவிடுவது என்பது பேதைமையிலும் பேதைமை.

தற்போது தமிழக அரசின் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆண்டுவருவாய் ரூ. 72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற கணக்கீடும் இந்த அடிப்படையில்தான் என்பதைப் பார்க்கும்போது, வேதனையாக இருக்கிறது.

ஒருவர் நிரந்தரமான வேலையில் இருக்கிறாரா, தாற்காலிக வேலையில் ஈடுபடுகிறாரா, அவரது தொழில் பருவகாலத்தைச் சார்ந்ததா அல்லது தினமும் செய்யக் கூடியதா, அவருக்கு வேலை கிடைக்காத நாள்கள் எத்தனை என்பதையெல்லாம் நிதானமாகக் கணக்கிட்டு, அந்தக் குடும்பத்தின் வருவாயைத் தீர்மானிக்கும் பொறுமை, அங்கே கணக்கெடுக்க வருபவருக்கு இருக்குமா என்பது சந்தேகம்தான். அவர்களாகத் தோராயமாக வருமானத்தை எழுதிக்கொள்வதுதான் நடைமுறையாக இருக்கிறது. கணவன் மனைவி இருவரும் சித்தாள் வேலைக்குப் போவதாகச் சொன்னால், உடனே அந்தக் குடும்பம் வறுமைக்கோட்டிற்கு மேலே போய்விடும்!

ஓர் ஏழையை "வறுமைக் கோட்டிற்குக் கீழ்' தள்ளிய பெருமை அமெரிக்கக் கலாசாரத்துக்குச் சொந்தமானது. நான்கு பேர் உள்ள ஒரு குடும்பம் ஆடம்பரமில்லாத, குறிப்பிட்ட கலோரி உணவுக்காக மாதம் எத்தனை ரூபாய் செலவிடுமோ அந்தத் தொகையின் மூன்று மடங்கு தொகையை வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவருக்கான வருமானமாகத் தீர்மானிப்பது அமெரிக்கப் பொருளாதாரம். அவர்களைப் பொருத்தவரை உணவு, மருத்துவம், கல்வி ஆகிய மூன்றும்தான் வாழ்க்கைச் செலவு. அதற்காக வருவாயை மூன்று சமபங்குகளாகப் பிரித்துக் கணக்கிடப்படுகிறது.

இந்திய வாழ்க்கை முறை வேறானது. இங்கே கொடுக்கப்படும் முன்னுரிமைகளும் வேறானவை. இங்கே ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தவுடனே சேமிக்கத் தொடங்கினால்தான் கல்யாணம் செய்துதர முடியும். அரசுப் பள்ளிகளில் கல்வி இலவசமாக இருக்கலாம். ஆனாலும் குழந்தை ஈட்டும் வருமானம் குடும்பத்துக்கே அவமானம் என்று ஏற்று, ஒரு சிறு வருமானத்தை இழந்தால்தான் ஒரு குழந்தைக்குக் கல்வி வாய்ப்பே கிடைக்கும். ஏறக்குறைய எல்லா வீடுகளிலும் அரசு வழங்கிய இலவச டிவி இருக்கிறது. இந்த டிவிகளில் சீரியல் பார்க்க வேண்டுமானால் கேபிள் கட்டணங்கள் கட்ட வேண்டும். அதற்கு மின்கட்டணம் செலுத்த வேண்டும். தொழில் செய்வதற்காக ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வதற்கு ஆகும் போக்குவரத்துச் செலவுகள் எல்லாம் தனிச்செலவுகள். ஏழைகளின் நல்வாழ்வுக்காகத் திறக்கப்பட்டுள்ள அதிக லாபத்தில் விற்கப்படும் மதுபான-மருந்து?-கடைகள் வேறு! ஓர் ஏழை எப்போதும் ஏழையாக இருப்பதற்கான எல்லாச் சூழலையும் ஏற்படுத்திவிட்ட பின்னர், எதற்காக இந்த வருமான வரம்புகள்?

வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே அரசின் சலுகைகள் வழங்கப்படுகிறது என்பதால்தான் இவ்வளவு கறாராக வருமானத்தைத் தீர்மானிக்கிறார்கள். இன்றைய விலைவாசியில் குடும்பத்தின் ஆண்டு வருவாய் ரூ. 1 லட்சம் என்றாலும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்கள்தான் என்பதை ஏன் அரசு நினைக்க மறுக்கிறது.
அமைச்சகம் தந்துள்ள இன்னொரு சலுகை: யார் ஏழை என்பதைத் தீர்மானிப்பதில் அந்தந்தப் பஞ்சாயத்து அல்லது கிராமசபை தீர்மானிக்கலாம் என்பதுதான். இந்த வரத்தை அனைத்துப் பஞ்சாயத்துகளும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் - விழிப்புணர்வை ஏற்படுத்தினால், ஏழைகளுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் தொடர்ந்து கிடைக்கும்.
நன்றி : தினமணி

பெல் நிறுவனத்தின் 2ம் காலாண்டு நிகர லாபம் அதிகரிப்பு

பெல் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் அதிகரித்துள்ளது. பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்(பெல்) நிறுவனத்தின் செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிந்த இரண்டாம் காலாண்டு நிகர லாபம் அறிவிக்கப் பட்டுள்ளது. இதில், அந்நிறுவன நிகர லாபம் 39 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 30ம் தேதியுடன் முடிந்த இரண்டாம் காலாண்டு கணக்கெடுப்பில் நிறுவனத்தின் நிகர லாபம் 615.77 கோடி ரூபாயாக இருந்தது. இது இந்தாண்டு 857.88 கோடி ரூபாயாக உள்ளது. செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிந்து இரண்டாம் காலாண்டு கணக்கெடுப்பில் மொத்த வருமானம் 6,923.02 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு 5649.84 கோடி ரூபாயாக இருந்தது.
நன்றி : தினமலர்


மீண்டும் எழுச்சி பெறுகிறது ரியல் எஸ்டேட் துறை

கடந்த மூன்று மாதங்களாக 30 லட்சத்திற்கும் மேல் குறைவான விலை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை சிற்ப்பான அளவில் அதிகரித்து வருகிறது. இதனால், ரியல் எஸ்டேட் துறை மீண்டும் எழுச்சி பெற்றுவதுடன், அதிக வருமானத்தையும் ஈட்ட தொடங்கி உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு உலக அளவில் ஏற்பட்ட கடும்‌ பொருளாதார நெருக்கடி காரணமாக, அனைத்து தொழில் துறைகளும் கடும் விழுச்சியை சந்தித்தன. இதில் ரியல் எஸ்டேட் துறையும் தப்பவில்லை. அந்த நேரத்தில், ரியல் எஸ்டேட் துறை கடும் வீழ்ச்சியை சந்தித்தது.
இந்நிலையில், தற்போது மீண்டும் ரியல் எஸ்டேட் துறை எழுச்சி பெற்று வருகிறது. சென்ற செப்டம்பர் மாதம் வரையிலான ஆறு மாத காலத்தில், நாட்டில் 7 கோடி சதுர அடி பரப்பளவு அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனையாகி உள்ளன. இவற்றில் 75 சதவீதம் 30 லட்சத்திற்கும் குறைவானதாகும்.
நடப்பு 2009-10-ஆம் நிதி ஆண்டில் விற்பனையாகும் வீடுகளின் பரப்பளவு 19 கோடி சதுரஅடியைத் தாண்டிவிடும் என முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

நன்றி : தினமலர்


Thursday, October 22, 2009

பெங்களூரூ, கோவை, கொச்சிக்கு பைப் மூலம் சமையல் காஸ்

2010ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் பெங்களூரூ, கோவை, கொச்சி ஆகிய நகரங்களுக்கு பைப் மூலம் சமையல் காஸ் வழங்கப்படும் என கொச்சின் போர்ட் டிரஸ்ட் சேர்மன் எம். ராமசந்திரன் தெரிவித்துள்ளார். பெங்களூரு, கொச்சின், கோவை ஆகிய நகரங்களுக்கு பைப் மூலம் சமையல் காஸ் வழங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொச்சின் துறைமுகத்தில் இருக்கும் எல்.என்.ஜி., டெர்மினலில் இருந்து (பி.என்.ஜி., - பைபட் நேச்சுரல் காஸ் ) விநியோகிக்கபடும் என அவர் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


6500 பேர் நீக்கம்: மகிந்திரா சத்யம் திடீர் அறிவிப்பு

6500 பேரை திடீரென நீக்கியுள்ளது மகிந்திரா சத்யம் நிறுவனம். சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜு செய்த மோசடி காரணமாக தவித்து வந்த அந்நிறுவன ஊழியர்கள், சத்யம் நிறுவனத்தை மகிந்திரா நிறுவனம் நடத்த இருப்பதாக வந்த செய்தியை கேட்டு சந்தோஷம் அடைந்தனர். ஆனால், சத்யம் நிறுவனம் மகிந்திரா நிறுவனத்திற்கு கைமாறிய சில தினங்களில் 8 ஆயிரம் பேரை கட்டாய விடுப்பில் அனுப்பியது மகிந்திரா நிறுவனம். அதன் பின் 1500 பேரை மட்டும் மீண்டும் அழைந்து கொண்ட நிர்வாகம், தற்போது மீதாமுள்ள 6500 பேருக்கு இமெயிலில் நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதாகவும், அவர்களின் கணக்குகளை முடிந்து கொள்ளுமாறும் தெரிவிக்கப் பட்டு இருந்தது. இதுகுறித்த அந்நிறுவனம் தெரிவிக்கும் போது, ஊழியர்களை தற்காலிகமாகவே வேலையில் இருந்து நீக்கி உள்ளோம் என்று கூறியுள்ளது.
நன்றி : தினமலர்


கோடிகளைக் குவிக்கும் குவாத்ரோச்சி!

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மத்தியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த குடும்பத்தினரைச் சுற்றிச்சுற்றி வந்த போஃபர்ஸ் ஊழல் வழக்கு தொடர்பான உண்மைகளைக் குழிதோண்டிப் புதைப்பதற்காக உச்ச நீதிமன்றத்தின் சிக்னலுக்காகக் காத்திருக்கிறது மத்திய அரசு.

போஃபர்ஸ் ஊழல் விவகாரத்தில் இத்தாலிய வர்த்தகரான குவாத்ரோச்சி மீதான வழக்கை விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளதாக கடந்த செப்டம்பர் 29-ம் தேதி மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டிவிட்டால் போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் மூலம் இந்தியப் பணத்தை கொள்ளையடித்த ஒரு கும்பலின் கதை எளிதில் முடிந்துவிடும்.

அரசுத் தரப்பினரே குற்றவாளிகளுடன் சேர்ந்துகொண்டு இந்த ஊழல் விவகாரத்தை மூடி மறைக்க நினைக்கும்போது உச்ச நீதிமன்றம் உள்பட எந்த நீதிமன்றம்தான் நீதியை நிலைநாட்ட முடியும்?

உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுவிட்டால் ஊழல் பேர்வழிகள் உச்ச நீதிமன்றமே எங்களுக்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது; இது எங்களுக்குக் கிடைத்த வெற்றி; பொய் வழக்குப் போட்டு அரசியல் ரீதியில் எங்களைப் பழிவாங்க நினைத்தவர்கள் தோல்வி அடைந்துவிட்டார்கள் என்று பேசக்கூடும்.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது போஃபர்ஸ் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை வெளிப்படையாகவே பாதுகாத்து வந்தார். ஆனால், 1991-ம் ஆண்டு பிரதமராக வந்த பி.வி. நரசிம்மராவ், ஒருபுறம் குவாத்ரோச்சியைப் பிடிக்க வேண்டும் என்ற சிபிஐயின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்ததுடன் மறுபுறம் குற்றவாளிகள் நாட்டை விட்டு தப்பியோடவும் உதவினார்.

பின்னர் 1999-ல் குவாத்ரோச்சிக்கு நெருக்கமானவரான சோனியா காந்தி அரசியலில் நுழைந்தார். தனது நாட்டைச் சேர்ந்தவரான குவாத்ரோச்சி நேர்மையானவர் என்று சான்றிதழ் அளித்தார். பின்னர் பத்திரிகையாளர்கள் சோனியா காந்தியைச் சந்தித்தபோது, போஃபர்ஸ் ஊழல் வழக்கில் குவாத்ரோச்சியின் பெயர் அடிபடுகிறதே என்று கேட்டதற்கு, "அவரைச் சந்தேகத்துக்குரிய நபராகத்தான் சிபிஐ கருதுகிறதே தவிர, அவருக்கு இதில் நேரடித் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை' என்று கூறினார்.

மேலும் குவாத்ரோச்சி குற்றவாளி என்பதற்கான ஆதாரங்களை ஆளுங்கட்சியினர்தான் (தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு) அளிக்க வேண்டும் என்றார் சோனியா. போஃபர்ஸ் விவகாரத்தில் குவாத்ரோச்சி பணம் பெற்ற விவகாரம் ஆதாரங்களுடன் இருந்தபோதிலும் வழக்கு பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டது.

இனி போஃபர்ஸ் பீரங்கி பேரத்தில் குவாத்ரோச்சி பணம் பெற்றது, அதற்கான ஆதாரங்கள் உள்ளிட்ட தகவல்களைச் சற்று நினைவுபடுத்திப் பார்ப்போம்.

1985-ல் ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு, பிரிட்டன், ஆஸ்திரியா, ஸ்வீடன் ஆகிய மூன்றில் எந்த நாட்டு பீரங்கிகளை வாங்குவது என்பது தெரியாமல் குழப்பத்தில் இருந்தது. இந்நிலையில் சுவீடனைச் சேர்ந்த போஃபர்ஸ் நிறுவனம் இரண்டு தரகர்கள் மூலம் பேரத்தை முடிக்கத் திட்டமிட்டது. ஆனால், அதன் முயற்சி உடனடியாகப் பலிக்கவில்லை. ஆனால், அந்த ஆண்டின் பிற்பகுதியில் லண்டனைச் சேர்ந்த ஏஇ சர்வீசஸ் (ஏஇஎஸ்) என்ற நிறுவனம் போஃபர்ஸ் நிறுவனத்தை அணுகி ஆயுதப் பேரத்தைச் சுமுகமாக முடித்துத் தருவதாக உறுதியளித்தது.

அதாவது, 1986-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் ஆயுத பேரத்தை முடித்துக் கொடுத்தால் 3 சதவிகித கமிஷன் தர வேண்டும் என்றும் அப்படியில்லை எனில் எதுவும் தர வேண்டாம் என்று, ஏஇஎஸ் நிறுவனம் கூறியது. இதை போஃபர்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டது. இது தொடர்பாக இரு நிறுவனத்துக்கும் இடையே 1985-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி உடன்பாடு ஏற்பட்டது.

ஏஇஎஸ் நிறுவனத்தின் பின்னணியில் ஓர் ஆணோ அல்லது பெண்ணோ செயல்படுகிறார்கள். அவர்களால் ராஜீவ் காந்தி அரசிடமிருந்து ஆயுத விற்பனைக்கான கான்ட்ராக்டைப் பெற்றுத் தர முடியும் என்பது உறுதியாகத் தெரிந்ததால்தான் போஃபர்ஸ் நிறுவனம் அதனுடன் உடன்பாடு செய்துகொண்டது.

சொல்லிவைத்தபடியே ஏஇஎஸ் நிறுவனம் கெடு தேதிக்கு 7 நாள்கள் முன்னதாக, அதாவது மார்ச் 22-ம் தேதி ஆயுத விற்பனை தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்துப் பெற்றுவிட்டது. அடுத்த 6 மாதத்துக்குள் அந்த நிறுவனம் முதல்கட்டமாக 7.3 மில்லியன் டாலரைக் கமிஷனாகப் பெற்றது. இந்தப் பேரத்துக்காக அந்த நிறுவனத்துக்குக் கிடைக்க வேண்டிய தொகை 36.5 மில்லியன் டாலர். கமிஷன் பணம் இத்தாலிய வர்த்தகரான குவாத்ரோச்சிக்குச் சென்றதும், பேரத்தின் பின்னணியில் அவர் செயல்பட்டதும் பின்னர் தெரியவந்தது.

போஃபர்ஸ் நிறுவனம் 1986-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி, ஜூரிச்சிலுள்ள நார்டுபினான்ஸ் வங்கியில், ஏஇஎஸ் நிறுவனக் கணக்கில் (வங்கிக் கணக்கு எண்: 18051-53) 7.3 மில்லியன் டாலரைச் செலுத்தியது.

இதற்கு இரண்டு வாரங்கள் கழித்து, அதாவது செப்டம்பர் 16-ம் தேதி ஏஇஎஸ் நிறுவனம் அதிலிருந்து 7 மில்லியன் டாலரை எடுத்து குவாத்ரோச்சி மற்றும் மரியா இருவரின் கட்டுப்பாட்டில் உள்ள கால்பர் இன்வெஸ்ட்மென்ட்ஸ் கணக்கில் சேர்த்தது.

1988-ல் போஃபர்ஸ் ஊழல் விவகாரம் விசுவரூபம் எடுத்ததும் குவாத்ரோச்சியும், மரியாவும் அந்தப் பணத்தை வட்டியுடன் எடுத்து வேறு இடங்களில் மறைத்து வைத்தனர். 1988-ம் ஆண்டு ஜூலை 25-ல் 7.9 மில்லியன் டாலரை கால்பர் நிறுவனத்திலிருந்து எடுத்து ஜெனீவாவில் உள்ள வெடல்ஸன் ஓவர்சீஸ் எஸ்ஏ என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தனர். 1990 மே 21-ம் தேதி 9.2 மில்லியன் டாலரை அங்கிருந்து எடுத்து சானல் தீவுகளில் உள்ள ஐஐடிசிஎல் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தனர். பின்னர் அதே ஆண்டு ஜூன் 5-ம் தேதி 2.4 மில்லியன் டாலரை ஸ்விஸ் வங்கிக் கணக்கிலிருந்து எடுத்து கார்ஃபின்கோ என்ற வங்கியில் ரோபஸ்டா என்ற ரகசியக் கணக்கில் போட்டனர். ஜூன் 12-ம் தேதி 5.3 மில்லியன் டாலர் ஆஸ்திரியாவில் உள்ள வங்கியில் "அராபிகா', "ரொபஸ்டா', "லக்ஸர்' என்ற ரகசிய கணக்கில் போடப்பட்டது.

பின்னர் 2003 ஜூனில் இன்டர்போல் அமைப்பு குவாத்ரோச்சி, மரியா இருவருக்கும் லண்டனில் உள்ள ஸ்விஸ் வங்கிக் கிளையில் இரண்டு கணக்குகள் 5அ5151516க, 5அ5151516ங மூலம் முறையே 3 மில்லியன் டாலர், 1 மில்லியன் டாலர் இருப்பதைக் கண்டுபிடித்தது. சிபிஐ வேண்டுகோளின் பெயரில் இவ்விரு கணக்குகளும் முடக்கி வைக்கப்பட்டன.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முதன்முறையாகப் பதவியேற்றதும் செய்த முதல்வேலை முடக்கி வைக்கப்பட்ட இந்த வங்கிக் கணக்கை விடுவித்ததுதான். அடுத்த கட்டமாக ஆர்ஜென்டினாவில் பிடித்து வைக்கப்பட்ட குவாத்ரோச்சி தப்பிக்க வழிசெய்தது.

இப்போது இரண்டாவது முறையாகப் பதவியேற்றுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு போஃபர்ஸ் ஊழல் வழக்கை முழுமையாகக் குழிதோண்டிப் புதைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதுவும் உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன். குவாத்ரோச்சியைப் பாதுகாக்க வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கம் அல்ல; இந்த விவகாரத்தின் மூலம் சோனியாவுக்கு எந்தத் தொந்தரவும் வந்துவிடக்கூடாது என்கிற எண்ணம்தான் முக்கிய காரணம்.

1993-ல் குவாத்ரோச்சியின் வீட்டில் சிபிஐ நடத்திய சோதனையின்போது சோனியா, மரியா, குவாத்ரோச்சி ஆகிய மூவரும் நெருங்கிய குடும்ப நண்பர்கள் எனத் தெரியவந்தது. அவர்கள் அனைவரும் விடுமுறையை ஒன்றாகக் கழித்ததும், ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிட்டதும், ஒன்றாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டதும், ஒருவரின் குழந்தைகள் மற்றொருவர் அரவணைப்பில் இருந்து வந்ததும் தெரியவந்தது.

இந்த விவகாரம் வெளியில் தெரிந்தால் மேலும் சிக்கல் ஏற்படுமே என்பது தெரிந்துதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்த வழக்கைக் கைவிட முடிவு செய்தது.

சுவீடனில் போஃபர்ஸ் வழக்கை விசாரித்த சுவீடன் நாட்டுப் புலனாய்வு அதிகாரியான ஸ்டென் லிண்ட்ஸ்ட்ராம், இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக சோனியா காந்தியிடம் விசாரிக்க வேண்டும், அவருக்கும் குவாத்ரோச்சிக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று ஏற்கெனவே இந்திய அரசிடம் தெரிவித்திருந்தார். ஆனால், அதுகுறித்து மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இந்த வழக்கை மூடிமறைப்பதிலேயே ஆர்வம் காட்டி வருகிறது.

இப்போது உள்ள இளந்தலைமுறையினர் போஃபர்ஸ் ஊழல் விவகாரம் வெளியானபோது குழந்தைகளாக இருந்திருப்பார்கள். எனவே அவர்களுக்கு போஃபர்ஸ் ஊழல் 320 மில்லியன் டாலர் தொடர்புடையது என்பது தெரியாது. ஏஇஎஸ் நிறுவனத்துக்கான கமிஷன் 36.5 மில்லியன் டாலர் தொகையும் இதில் அடங்கும். இந்த ஊழல் விவகாரம் வெளியானபோது 20 சதவிகிதத் தொகையே அதாவது 64 மில்லியன் டாலரே வழங்கப்பட்டிருந்தது. ஆயுத ஒப்பந்தத்துக்கான மொத்தத் தொகையில் அப்போது இந்திய அரசு 20 சதவிகிதம் மட்டுமே கொடுத்திருந்ததால் அப்போது வழங்கப்பட்ட கமிஷன் தொகையும் 20 சதவிகிதம்தான். இந்த ஊழல் விவகாரம் வெளியானதால் இந்திய அரசு பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டது. இதையடுத்து கமிஷன் பணமும் கொடுக்கப்படவில்லை.

இப்போது குவாத்ரோச்சி மீதான வழக்கை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளதால் போஃபர்ஸ் நிறுவனத்துக்குச் சேரவேண்டிய 227 மில்லியன் டாலரும், குவாத்ரோச்சிக்கு கமிஷன் பாக்கி 29 மில்லியன் டாலரும் கிடைக்க வழியேற்பட்டுள்ளது.

அதாவது குவாத்ரோச்சிக்கு 29 மில்லியன் டாலர் கமிஷனாகக் கிடைக்கும் என்றால் இந்திய ரூபாயில் அவருக்குக் கிடைக்க இருப்பது ரூ. 140 கோடி. இந்த ஊழல் விவகாரத்தில் கிடைக்கும் மொத்த லஞ்சப் பணத்தை ரூபாயில் கணக்கிட்டால் அது ரூ.600 கோடியைத் தாண்டிவிடும். இதற்காக 20 ஆண்டுகள் காத்திருந்ததில் நஷ்டம் ஒன்றும் இல்லையே?
கட்டுரையாளர் : எஸ். குருமூர்த்தி
நன்றி : தினமணி

மந்திரிக்கு அழகு...

மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல் என்பது மூதுரை. ஆனால் மத்திய அரசில் இடம் பெற்றுள்ள கபில் சிபல், ஜெய்ராம் ரமேஷ் ஆகிய இரு பெரும் அமைச்சர்களின் சமீபத்திய பேச்சுகள், இந்தப் பதவிக்குப் பொருத்தமானவர்களாக இவர்கள் நடக்கவில்லையே என்கிற வேதனையைத்தான் வெளிப்படுத்துகின்றன.

மத்திய அரசில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் மெத்தப்படித்தவர். சிறந்த வழக்கறிஞர். விவாதங்களில் தன்னுடைய கருத்துகளை நயமாக எடுத்துரைப்பவர். ஆனால் இரு சந்தர்ப்பங்களில் அவருடைய பேச்சை அவரே மறுக்கும் அளவுக்கு நேர்ந்திருப்பது என்பது ஒரு தேர்ந்த வழக்கறிஞருக்கும் அழகல்ல; பொறுப்பான அமைச்சருக்கும் அழகல்ல.

சில மாதங்களுக்கு முன்னால், பத்தாவது வகுப்பு மாணவர்களுக்கு இனி பொதுத் தேர்வு தேவையில்லை, அவர்கள் அப்படியே பதினோராவது வகுப்புக்குச் சென்றுவிடலாம் என்று பேசினார். உடனே நாடு முழுக்க அதற்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பியது.

கல்லூரிப் படிப்புக்கு விண்ணப்பித்தாலும் வேலைக்குச் சேர விரும்பினாலும் மாணவனுக்குப் படிப்பில் ஆர்வம் இருந்ததா என்பதை அறிய முதலில் பத்தாவது வகுப்பில் அவன் வாங்கிய மதிப்பெண்ணைப் பார்ப்பதும், மேல் படிப்பு படித்திருந்தால் அந்த ஆர்வம் அப்படியே தொடர்ந்திருக்கிறதா என்று ஆராய்வதும் இதுவரை வழக்கமாக இருந்து வருவதை அனைவரும் சுட்டிக்காட்டினர்.

இதையடுத்து தன்னுடைய கருத்தைத் திரும்பப் பெற்ற அமைச்சர் கபில் சிபல், ""வேண்டாம் என்றால் விட்டுவிடலாம் என்றுதான் சொன்னேன்; இனி தேவையே இல்லை என்று சொல்லிவிடவில்லை; நான் பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது'' என்று பதில் அளித்து அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

நாட்டில் உள்ள ஐ.ஐ.டி. எனப்படும் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் இடம்பெற்றுள்ள கவுன்சில் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சர் கபில் சிபல், அந்தக் கூட்டம் முடிந்த பிறகு நிருபர்களைச் சந்தித்தார்.

பன்னிரெண்டாவது வகுப்பு பொதுத் தேர்வில் 60 சதவீதத்துக்கும் மேல் எடுத்தவர்கள்தான் ஐ.ஐ.டி. பொது நுழைவுத் தேர்வு எழுத முடியும் என்று இப்போது நிபந்தனை விதிக்கப்படுகிறது. இனி 80 சதவீத மதிப்பெண்கள் இருந்தால்தான் தேர்வு எழுத முடியும் என்று 2011 முதல் விதியைக் கடுமையாக்கப் போகிறோம். இதனால் நல்ல தரமுள்ள மாணவர்களால் மட்டுமே நுழைவுத் தேர்வையே எழுத முடியும், ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்குப் பயிற்சி தருகிறோம் என்று ஏராளமான பயிற்சி மையங்கள் வணிக ரீதியில் செயல்படுவதும் முடிவுக்கு வரும் என்று அறிவித்தார். இதற்கும் வழக்கம்போலவே கடுமையான எதிர்ப்பு எழுந்தது.

மாணவர்களின் அறிவுத்திறன் என்பது மதிப்பெண்ணில்தான் இருக்கிறது என்ற பழமையான மனோபாவம் இன்னமும் தங்களைவிட்டுப் போகவில்லை என்பதை கபில் சிபல் உள்ளிட்ட படித்தவர்கள் அடிக்கடி இப்படி நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். கணிதமேதை ராமானுஜம், அவர் வாழ்ந்த காலத்தில் கணிதத்தில் புலியாக இருந்தாலும் பிற பாடங்களில் அதிக மதிப்பெண்களைப் பெற முடியாமல் தவித்ததை அவருடைய வரலாற்றிலிருந்து அறிகிறோம்.

புத்தகத்தில் உள்ளதை மனப்பாடம் செய்தும், கணக்காக இருந்தால் அடிக்கடி போட்டுப் பார்த்து அசுரப் பயிற்சி செய்தும் மதிப்பெண் வாங்குவது சாத்தியம்தான். இயல்பான அறிவுக்கூர்மையும் ஆராய்ச்சி மனப்பான்மையும் இத்தகைய தேர்வு முறைகளால் வெளிப்படாது என்பது அனுபவம் காட்டும் உண்மை. அறிவியல் ஆராய்ச்சியாளர்களில் ஏராளமானோர் பள்ளி, கல்லூரிப் படிப்பை முறையாகப் படித்தவர்களே அல்லர் என்பது வரலாறு. எனவே மதிப்பெண்ணைக் கட்டிக்கொண்டு அழாமல் வேறு வகையில் மனித ஆற்றலை வளர்க்கவும் எடை போடவும் அமைச்சர் முயல வேண்டும் என்று பல தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்தது.

எதிர்ப்பு அதிகமானதும் வழக்கம்போலவே அமைச்சர் பின்வாங்கியிருக்கிறார். நுழைவுத்தேர்வுக்கான தகுதியை நிர்ணயம் செய்வது ஐ.ஐ.டி. கவுன்சிலின் வேலை; என்னுடைய வேலை அல்ல என்று இப்போது கூறுகிறார்.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான சமூகப் பின்னணி, கலாசார சூழல், படிப்பதற்கான வசதி வாய்ப்புகள் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. மேற்கு வங்க மாநிலம்தான் கல்வியில் சிறந்த மாநிலமாக ஒரு காலத்தில் இருந்தது. இப்போது மூர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஏழைக் குழந்தைகளுக்காக 16 வயது மாணவர் பாபர் அலி நடத்தும் பகுதிநேரப் பள்ளிக்கூடத்தில் 600 பேர் படிக்கின்றனர் என்று லண்டனைச் சேர்ந்த பி.பி.சி. தொலைக்காட்சி நிறுவனமே பாராட்டியிருக்கிறது. கல்வி வசதி எந்த அளவுக்கு இன்னமும் உரிய வகையில் போய்ச் சேரவில்லை என்பதற்கும் இது நல்ல உதாரணம். மூர்ஷிதாபாத் போன்ற பகுதிகளுக்கு தரமான கல்வியை எடுத்துச் செல்ல என்ன வழி என்று சிந்தித்துச் செயல்படுவதே கபில் சிபல் போன்றவர்களுக்கு அழகு.

மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சரான ஜெய்ராம் ரமேஷ், உலக வர்த்தகப் பேச்சு வார்த்தைகளில் இந்தியா தன்னுடைய தேவைகளுக்காக மட்டும் பேச வேண்டும்; வளரும் பிற நாடுகளுக்கு வக்கீலாக இருக்கக்கூடாது என்று பிரதமருக்கே கடிதம் எழுதியதாக வெளியான தகவல் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. அவரும் தான் அப்படிச் சொல்லவில்லை என்று கூறி மறுத்துவிட்டார். நேரம் குறைவு, அறுவடையோ மிகுதி என்ற தேவ வசனத்தை மத்திய அமைச்சர்கள் நினைவுபடுத்திக் கொள்வது நல்லது. அமைச்சர் பதவியில் உள்ள பொன்னான மணித்துளிகளை வெற்று சர்ச்சைகளில் விரயமாக்காமல் முடிந்த அளவுக்கு ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுங்கள் என்றே கூற விரும்புகிறோம்.
நன்றி : தினமணி

இந்தியாவில் 2 ஆயிரம் பேரை வேலையில் அமர்த்துகிறது டோயட்டா

உலகின் மிகப் பெரிய கார் நிறுவனமான டோயட்டா மோட்டார் கார்ப்ரேஷன், இந்தியாவில் உள்ள அதன் நிறுவனத்தில் மேலும் இரண்டு ஆயிரம் பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. ‌பெங்களூரில் டோயட்டா கிர்லோஸ்கர் மோட்டார்சுடன் இணைந்து டோயட்டா மோட்டார் நிறுவனம், ரூபாய் 3 ஆயிரத்து 200 கோடி முதலீட்டில் தனது கார் நிறுவன கிளை ஒன்றை நிறுவியுள்ளது. இதுகுறித்து, டோயட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் மேலாண்மை இயக்குனர் ஹிரோஷி கூறும்போது, இந்தியாவில் சிறிய கார் தயாரிப்பிற்கு அதிகமான மனித உழைப்பு தேவைப் படுகிறது. இதற்காக 2 ஆயிரம் பேரை மேலும் பணியில் அ‌‌மர்த்த உள்ளோம். வேலையாட்களை பணியமைத்துவதற்கான வேலைகளை ஆரம்பிதது விட்டோம். புதிய சிறிய வகை கார் அறிமுக திட்டம் வரும் 2011க்குள் முடிவடையும் என்று தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


பங்குச்சந்தையில் ரூ. 13,957 கோடி முதலீடு: மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முடிவு

பங்குச் சந்தையில் 13 ஆயிரத்து 957 கோடி ரூபாயை முதலீடு செய்ய மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதுகுறித்து, பங்குச் சந்தை ஆய்வு நிறுவனமான ஷேர்கான் ஆய்வு நிறுவனத்தின் மியூச்சுவல் பண்ட் பிரிவு ஆய்வாளர் ஷப்னா ஜவார் கூறும் ‌போது, மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களிடம் ரொக்கமாக ரூபாய் 13 ஆயிரத்து 957 கோடி இருப்பதாகவும், இதை பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான தக்க தருணத்திற்காக காத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மொத்தம் உள்ள 13 ஆயிரத்து 957 கோடியில், ஏற்கனவே திரட்டிய தொகை ரூ. 13 ஆயிரத்து 045 கோடி ஆகும். புதிய யூனிட்டுகள் வெளியீட்டு மூலம் ரூ. 912 கோடி திரட்டப் பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


அம்பானி சகோதரர்கள் பிரச்னையால் பங்குச் சந்தையில் தள்ளாட்டம்

பங்குச் சந்தையில் கடந்த சனியன்று தீபாவளி வர்த்தகம் துவங்கியது. அன்றைய தினம் நடந்த வர்த்தகத்தில் சந்தை லாபமும் இல்லாமல் நஷ்டமும் இல்லாமல் முடிந்தது. திங்களன்று சந்தைக்கு விடுமுறை. ஆனால் நேற்று முன்தினம், அம்பானி சகோதரர்களின் பிரச்னைக்கு கோர்ட் என்ன தீர்ப்பு வழங்கப் போகிறதோ என்ற பயத்திலேயே சந்தை சரிந்தது.
நேற்றும் சந்தை ஒரு பெரிய சரிவை சந்தித்தது. நேற்று சந்தை ஏன் சரிந்தது? உலகளவிலும், ஆசிய அளவிலும் சந்தைகள் கீழேயே இருந்ததால், இந்தியாவிலும் அதன் எதிரொலி இருந்தது. இது தவிர ரிலையன்ஸ் பிரச்னையும் ஒரு காரணம். மேலும், வங்கிகள் கடன் களுக்கு வாங்கும் வட்டி விகிதங்களில், ரிசர்வ் வங்கி மாற்றம் கொண்டு வரும் என்ற செய்தி சந்தைக்கு வந்ததால், அது வங்கிகளிடையே போட்டியை ஏற்படுத்தும், ஆதலால் வங்கிகளின் லாபம் வருங்காலங்களில் குறையலாம் என்ற எதிர்பார்ப்புகள் சந்தையில் வங்கிப் பங்குகளை சரித்தன. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 213 புள்ளிகள் குறைந்து, 17,009 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 50 புள்ளிகள் குறைந்து, 5,063 புள்ளிகளுடனும் முடிந்தது.
சாப்ட்வேர் பங்குகள்: அமெரிக்காவில் உள்ள சாப்ட்வேர் கம்பெனிகளின் லாபம் கூடிவருவதால், அதன் எதிரொலி இந்தியாவிலும் இருந்தது. இங்கும் சாப்ட்வேர் பங்குகளின் விலை கூடியது. ஏனெனில், இந்தியாவின் 50 முதல் 60 சதவீதம் வரை மொன்பொருள் ஏற்றுமதி அமெரிக்காவிற்குத் தான் நடக்கிறது. அங்கு பிரகாசம் என்றால் இங்கும் பிரகாசம் தான். டி.சி.எஸ்., கம்பெனியின் ஆர்டர் புக் நன்றாக இருப்பதாகவும் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தேவையான ஆர்டர் இருக்கிறது எனவும் கூறப்படுகிறது. ஆதலால், நீண்ட கால நோக்கில் அந்த கம்பெனியின் பங்குகளை உங்கள் போர்ட்போலியோவில் சேர்க்கலாம்.
கசக்கும் சர்க்கரை: சந்தையில் சர்க்கரை பங்குகள் கசந்தன என்றே சொல்லலாம். ஆமாம். இறக்குமதிக்கு அரசு கொடுத்திருந்த காலக்கெடுவை நீட்டியதால் சந்தையில் சர்க்கரை கம்பெனியின் பங்குகள் விலை குறைந்தன. டிசம்பர் வரை இது நீட்டிக்கப்பட்டுள்ளது.
காலாண்டு முடிவுகள்: யெஸ் பாங்க் நல்ல காலாண்டு முடிவுகளைத் தந்தாலும், அந்த வங்கியின் வராக்கடன்கள் கூடியிருந்ததால், சந்தையில் அந்தப் பங்குகளின் விலை குறைந்தது. இது தவிர என்.ஐ.ஐ.டி., - சக்தி சுகர்ஸ் கம்பெனிகளும் நல்ல காலாண்டு முடிவுகளைத் தந்துள்ளன. வந்துள்ள காலாண்டு முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது, பல கம்பெனிகளில் காலாண்டு லாபம் கூடியுள்ளது. ஆனால், காலாண்டு விற்பனை அந்த அளவு கூடவில்லை. இது ஒரு கவலையளிக்கக் கூடிய விஷயம்.
வழுக்கும் கச்சா எண்ணெய்: தினமும் என்னை கவனி என்று மறுபடி சொல்ல வைத்து விடும் போலிருக்கிறது கச்சா எண்ணெய். பேரலுக்கு 80 டாலர் அளவிற்கு வந்து நிற்கிறது. இது கடந்த 12 மாதத்தில் அதிகபட்ச உயர்வு. இதனால், மத்திய அரசு எண் ணெய் கம்பெனிகளின் பங்குகள் களையிழந்து காணப்படுகின்றன. அதே சமயம், எண் ணெய் உற்பத்தி செய்யும் கம்பெனிகளின் பங்குகள் உயர்ந்து செல்கின்றன. வரிசையில் காத்திருக்கும் அரசு வெளியீடுகள்: என்.எச்.பி.சி., மற்றும் ஆயில் இந்தியா ஆகிய வெளியீடுகளைத் தொடர்ந்து, பல அரசு வெளியீடுகள் வரத்தயாராகி வருகின்றன. என்.டி.பி.சி., சட்லெஜ் ஜல வித்யூத், செயில் ஆகியவை அரசால் அனுமதி அளிக்கப் பட்டுள்ளன. விரைவில் எதிர்பார்க்கலாம். அப்படி வரும் பட்சத்தில் சிறிய முதலீட்டாளர்களுக்கு 5 சதவீதம் விலையில் கிடைக்கும் என்றும் செய்திகள் வருகின்றன.
ஜொலிக்கும் தங்க ஆபரண ஏற்றுமதி: உலகளவில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால், தங்க ஆபரண ஏற்றுமதியும் கூடியுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20 சதவீதம் கூடுதலாக ஆர்டர்கள் கிடைத்துள்ளன.
வரும் நாட்கள் எப்படி இருக்கும்? சந்தை குறுகிய காலத்தில் அதிகம் ஏறியுள்ளது போல வல்லுனர்கள் நினைக்கின்றனர். ஆதலால், ஏதாவது மாற்றம் வருமா என்று யோசிக்கத் தோன்றுகிறது.
- சேதுராமன் சாத்தப்பன் -
நன்றி : தினமலர்

Wednesday, October 21, 2009

கனவு கானல்நீர் ஆனதுவோ...?

சமத்துவம் என்பது அரசியல், பொருளாதார, சமுதாய ரீதியாக அடையப்பட வேண்டிய லட்சியமாக சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் கருதினார்கள். வெள்ளையர்களிடமிருந்து நாம் பெற்ற சுதந்திரத்தின் முழுப்பயனையும் அனைவரும் பெற வேண்டும் என்பதற்காகவே பல்வேறு திட்டங்களையும் தீட்டினார்கள்.

பொருளாதார வல்லரசாக இந்தியா உயர வேண்டும் என்று விரும்பி ஐந்தாண்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் பிரதமர் ஜவாஹர்லால் நேரு. நம் நாட்டில் ஏழை, பணக்காரர்களிடையேயான வேற்றுமை மறைய வேண்டும், நாட்டின் பொருளாதார வளங்களின் பலன்களை அனைவரும் அடைய வேண்டும் என்று பாடுபட்டார் அவர்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனம், பாரத் மிகுமின் நிறுவனம் போன்ற அரசுத்துறை தொழில்நிறுவனங்கள்கூட தொழிலாளர் குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் வாயிலாக அனைவருக்கும் எல்லா வசதிகளும் கிடைப்பதை உறுதி செய்தன. பொதுக் கல்வி, பொதுக் குடியிருப்பு, பொதுச் சுகாதாரம், பொது வேலைவாய்ப்பு என்று சீராகச் சென்று கொண்டிருந்த நாட்டை கடந்த 20 ஆண்டுகளில் மடைமாற்றிவிட்டனர் இப்போதைய ஆட்சியாளர்கள். அதிலும் குறிப்பாக பொருளாதாரச் சீர்திருத்தம், தாராளமயம், உலகமயம் என்றெல்லாம் பேசி ஏழைகளை மேலும் சுரண்டவும், சாதாரண லட்சாதிபதிகளைக் கோடீஸ்வரர்களாக்கவும் வழிகோலுகின்றனர் என்பதுதான் வேதனை.

இப்போது நாட்டின் செல்வ வளம் வெகுசில குடும்பங்களுக்கே சொந்தம் என்ற அளவுக்குச் செல்வக்குவிப்பு தீவிரம் அடைந்து வருகிறது.

இந்த நிலையில் தேசிய அளவில் வேலைவாய்ப்பு, ஊதிய விகிதம் போன்றவற்றை ஆராய்ந்த ஓர் அமைப்பு, தனியார் துறையில் கம்பெனிகளின் உயர் அதிகாரிகளுக்குத் தரப்படும் ஊதியம், படிகள் ஆகியவற்றைச் சாமானியர்களின் ஊதியங்களுடன் ஒப்பிட்டால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாட்டைப் போல இருக்கிறது என்று சுட்டிக்காட்டியது.

உலகிலேயே இந்தியாவில்தான் இத்தனை வித்தியாசமுள்ள ஊதிய விகித முரண்பாடு இருக்கிறது என்றும் அது சுட்டிக்காட்டியது.

விவசாயத்துறையில் அனைவரையும் ஈடுபடுத்த நில உச்ச வரம்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நாளில் அதை மிக மிக முற்போக்கான சட்டமாகவே கருதினார்கள். உச்ச வரம்பு அளவு மாறுபட்டாலும் எல்லா மாநிலங்களிலும் அது அமல் செய்யப்பட்டது. அந்தச் சட்டத்தாலும் அடுத்து அறிமுகம் செய்யப்பட்ட பசுமைப் புரட்சியாலும் நம்முடைய விவசாயம் வளர்ந்ததா வீழ்ந்ததா என்பது மிகப்பெரிய கேள்வி. ஆனால் அப்படியொரு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அடுத்தபடியாக தொழிலாளர்களுக்கு போனஸ் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் சட்டம் இயற்றியபோதுகூட, ஆலை அதிபர்கள் அதிகம் சிரமப்பட்டுவிடக்கூடாதே என்று அந்த போனஸ் அளவுக்கும் உச்ச வரம்பு வைத்து சட்டம் இயற்றியது மத்திய அரசு. இன்றுவரை அந்தச் சட்டத்தை மறந்தும் திருத்துவதற்கு நமது ஆட்சியாளர்களுக்கு நேரமே கிடைக்கவில்லை. அந்த அளவுக்கு பரம ஏழைகளுக்காகவே உழைத்து ஓடாக உருகிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் தனியார் துறையில் உயர் பதவியில் இருப்பவர்களின், கண்களைக் கூசும்படியான அதிகபட்ச சம்பளத்தைக் கட்டுப்படுத்துங்கள் என்று அரசுக்குப் பரிந்துரை செய்தது தன்னார்வக் குழுவொன்று. அதைப் பரிசீலிப்போம் என்றுகூட கூற மனம் இல்லாமல், அப்படியொரு எண்ணமே இல்லை என்று கூறிவிட்டது அரசு.

சமத்துவம் என்ற லட்சியத்துக்கு நம்முடைய ஆட்சியாளர்கள் காட்டும் மரியாதை இதுதான். ஆனால் இதுவெறும் கோஷம் அல்ல;

""இறையாண்மைமிக்க, சமத்துவ, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு'' என்று நம்மைப்பற்றி பெருமையுடன் கூறிக் கொள்கிறோம். நமது அரசியல் சட்டத்திலேயே இதைக் குறிப்பிட்டுப் பெருமை தட்டிக் கொள்கிறோம். ஏழை பணக்கார இடைவெளியைக் குறைப்பதைப் பற்றி முன்பெல்லாம் உதட்டளவு ஆர்வம் காட்டிவந்ததுகூட இப்போது இல்லை என்கிற நிலைமை. அதைப் பற்றியே சிந்திக்காமல் லட்சாதிபதிகளைக் கோடீஸ்வரர்களாக்குவதைப் பற்றி மட்டுமே நமது ஆட்சியாளர்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டார்களோ என்றுகூடத் தோன்றுகிறது.

இந்தியாவில் வாழும் அத்தனை மக்களுக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, குடியிருக்க வீடு, அனைவருக்கும் கல்வி, நோயுற்றால் இலவசச் சிகிச்சை ஆகியவற்றை உறுதி செய்வது என்பதுதான் சுதந்திர இந்தியா எதிர்நோக்கும் சவால் என்றும், ஏழை பணக்கார இடைவெளி குறைக்கப்பட்டு, சமத்துவ, சமதர்ம, மதச்சார்பற்ற சுதந்திர நாடாக உலகில் தலைநிமிர்ந்து நிற்பதுதான் குறிக்கோள் என்றும் சுதந்திரம் பெற்ற அன்று நமது முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு ஆற்றிய உரையை தினமும் அதிகாலையில் நமது ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் படிக்கவோ, கேட்கவோ செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
நன்றி : தினமணி

இந்திய நிறுவனங்களில் ஆளெடுப்பு விகிதம் கிடுகிடு உயர்வு

இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் ஆளெடுப்பு நடவடிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆளெடுப்பு விகிதம் 4.1 சதவீதம் அதிகரித்துள்ளதாம். தகவல் தொழில்நுட்பத் துறை, பிபிஓ, ரியல் எஸ்டேட் ஆகிய பிரிவுகள் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சுறுசுறுப்படைந்துள்ளனவாம். இதுதொடர்பாக இணையதளம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில், அனைத்துப் பிரிவுகளிலுமே வேலைக்கான ஆளெடுப்பு சுறுசுறுப்படைந்துள்ளது. குறிப்பாக ஐ.டி, பிபிஓ பிரிவுகளில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ஆளெடுப்பு கணிசமாக உயர்ந்து காணப்படுகிறது. மேலும் என்ட்ரி மற்றும் ஜூனியர் லெவல் வேலைகளுக்கு அதிகம் பேர் சேர்க்கப்பட்டு வருகின்றனர் என்று அந்த கருத்து கணிப்பு கூறுகிறது.
நன்றி : தினமலர்


வெள்ளி விலை உயர்வால் கொலுசு உற்பத்தி பாதிப்பு

வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கொலுசு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் இயங்கும், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வெள்ளி பட்டறைகளில், வெள்ளிக் கொலுசு, அரைஞான் கொடி, மெட்டி ஆகியவற்றின் உற்பத்தியில், நேரடியாக 60 ஆயிரம் குடும்பத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு மாதமும், சராசரியாக 50 டன் அளவுக்கு கொலுசு உள்ளிட்ட வெள்ளிப் பொருட்கள் தயார் செய்யப்பட்டு, வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், வெள்ளி கிலோ 18 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று மார்க்கெட் நிலவரப்படி, கிலோ 28 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்கிறது. வெள்ளி விலை உயர்வால், கொலுசு உள்ளிட்ட வெள்ளி ஆபரணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தால், கலக்கத்தில் உள்ளனர்.
சேலம், வெள்ளி பட்டறை இயக்குனர் செல்வம் கூறியதாவது: சேலம் கொலுசுக்கு, வடமாநிலங்களில் நல்ல வரவேற்பு இருந்ததால், விலை உயர்வால் பாதிப்பு இல்லை. தீபாவளிக்கு பின் தங்கம், வெள்ளி விலையில் சரிவு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு உற்பத்தியாளர்கள் மத்தியில் நிலவியது, ஆனால், தொடர்ந்து வெள்ளியின் விலை அதிகரித்துக் கொண்டு தான் செல்கிறது. இதனால், வெள்ளி ஆபரணங்கள் ஆர்டர் கொடுக்கும் பணி முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாகி, உற்பத்தியாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளி விலை உயர்வால் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்ய, கொலுசு மீதான 4 சதவீத ஆபரண வரியை மத்திய அரசு நீக்க வேண்டும். இவ்வாறு செல்வம் கூறினார்.
நன்றி : தினமலர்


அடிவயிற்றை முறுக்கவில்லையா?

ஒரு தமிழ்ப் பெண் தன் தோளைத் தழுவச் சம்மதிக்காமல் தனித்தே வாழும் திருமாவளவன், ராஜபட்சவுக்குச் சால்வை போர்த்தித் தழுவியிருக்கிறாரே! தழுவும்போது கம்பளிப்பூச்சி ஊர்வது போல் உணரவில்லையா?

கட்சிகளெல்லாம் கிடக்கட்டும்! எழுபதாயிரம் ஈழத்தமிழர்கள் சாகவும், ஐந்து லட்சம் தமிழர்கள் புலம் பெயரவும், மூன்று லட்சம் தமிழர்கள் சிங்கள அரசின் முள்வேலிகளில் சிறைவைக்கப்படவும், இரண்டு லட்சம் தமிழர்கள் அகதிகளாய்த் தமிழ்நாட்டில் கதி கெட்டு அலையவும் காரணமான ராஜபட்ச வைத்த விருந்தை உண்ணவும், அவரோடு மனங்கொள்ளாமல் சிரித்துப்பேசி மகிழவும் டி.ஆர். பாலுவாலும், கனிமொழியாலும், திருமாவளவனாலும் எப்படி முடிந்தது?

""ஏன்டி... உன் புருசனைக் கொன்னவனோட உனக்கென்னடி சிரிப்பு வேண்டிக்கிடக்கு'' என்று தாய் மகளிடம் சினந்து கேட்டாளாம். ""போனவன் போயிட்டான்; நான் இருக்கேனே'' என்று மகள் புன்முறுவலோடு விடை இறுத்தாளாம்!

""கடைசி நேரத்தில் நீங்களும் பிரபாகரனுடன் இருந்திருந்தால் உங்கள் கதையையும் முடித்திருப்பேன்'' என்று இலங்கை அதிபர் ராஜபட்ச தமிழ்நாட்டில் இருந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவனிடம் நேருக்குநேர் நின்று சொல்லியிருக்கிறார்!

நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் ஏதோ வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி போல ராஜபட்சவுக்கு அவ்வளவு சாதாரணமாகத் தெரிகிறது. பஜ்ஜி மாவுக்குத் தனித்து எந்த மதிப்புமில்லை! அது வெங்காயத்தோடோ, வாழைக்காயோடோ சேரும்போதுதான் அதற்குப் பெயரும் கிடைக்கிறது; வடிவமும் கிடைக்கிறது!

இந்தப் பஜ்ஜி மாவுக்கெல்லாம் வடிவம் கொடுப்பவர் கருணாநிதி என்பது ராஜபட்சவின் எண்ணமாக இருக்கலாம்! அப்படிப்பட்ட கருணாநிதியின் உயிர்நாடியோ, சென்னைக் கோட்டையில் இருக்கிறது. சென்னைக் கோட்டையில் கருணாநிதி நீடிப்பதோ, சோனியாவின் தயவில் இருக்கிறது. சோனியாவோ சிங்களவர்களின் உற்ற நண்பர். ஆகவே, சோனியாவின் தோழமை இருக்கும்வரை இவர்களை எல்லாம் ஒரு பொருட்டாக நினைக்கத் தேவையில்லை என்பது ராஜபட்சவின் எண்ணம்!

ஆனாலும் விடுதலைப் புலிகளைப் பார்த்து விடுதலைச் சிறுத்தைகள் என்னும் அமைப்பைத் தோற்றுவித்துக் கொண்ட திருமாவளவன், ராஜபட்ச "உன் கதையையும் முடித்திருப்பேன்' என்று சொன்னதைக் கேட்டுத் திகைத்துப்போய்த் திரும்பி வந்திருக்கலாமா? திருப்பிக் கொடுத்திருக்க வேண்டாமா?

""ராஜபட்ச! உன் கதையை முடிப்பதற்குப் பதிலாகப் புத்திகெட்டுப்போய் இந்தியா ஈழத்தின் கதையை முடித்துவிட்ட காரணத்தால், உன்னால் இவ்வளவு எக்காளமாகப் பேச முடிகிறது. எந்த விடுதலை இயக்கத்துக்கும் பின்னடைவுகள் வருவது இயற்கை; ஆனால், ஒரு விடுதலை இயக்கம் என்றாவது ஒரு நாள் தன்னுடைய இலக்கை அடையாமல் முடிந்ததாக வரலாறு இல்லை''-என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வந்திருந்தால் திருமாவளவன் உலகத் தமிழினத்துக்கே தலைவராகி இருப்பாரே!

ராஜபட்சவின் நாட்டுக்கே போயும் ராஜபட்சவை நேருக்குநேர் நின்று உலுக்குகிற வாய்ப்பைத் தவற விட்டுவிட்டாரே! அதுவும் ராஜபட்ச, "ஈழத்துக்கு நீ வந்திருந்தால் உன்னையும் சுட்டிருப்பேன்' என்று சொல்லி அசிங்கப்படுத்திய பிறகும், அங்கு வாயை மூடிக் கொண்டிருந்துவிட்டு, இங்கே நம்முடைய மூலக்கடை முச்சந்தியில் நின்று கொண்டு, "இரத்தம் கொதிக்கிறது' என்று திருமாவளவன் முழங்குவதை, இனி யார் நம்புவார்கள்?

அப்படி நேருக்குநேர் கேட்டிருந்தால் என்ன செய்திருப்பார் ராஜபட்ச? கொழும்புச் சிறைக் கொட்டடியில் அடைத்திருப்பாரா? அடைத்திருந்தால் திருமாவளவனை விடுவிப்பது ஆறு கோடித் தமிழர்களின் கடமையாகி இருந்திருக்குமே!

இப்போது முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டு, தலையைக் கவிழ்ந்து கொண்டு, ராஜபட்ச அசிங்கப்படுத்தியதற்கு என்னென்னவோ அமைவுகளைத் திருமாவளவன் சொன்னாலும், யார் கேட்பதற்குத் தயாராக இருக்கிறார்கள்?

போன இடத்தில் அப்படியெல்லாம் பேசினால், "நன்றாக இருக்குமா?' என்று திருமாவளவனாகச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான்! தன்னுடைய நாட்டுக்கு வந்த விருந்தாளியிடம் அப்படிப் பேசியிருக்கலாமா என்று ராஜபட்ச கவலைப்படவில்லையே!

இகழ்பவனின் பின்னால் போய்ப் பெறப் போவதென்ன என்று நம்முடைய அப்பன் வள்ளுவன் கேட்பான்! ""என்மற்று இகழ்வார் பின்சென்று நிலை'' (966).

முன்பொருமுறை தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு உச்சத்திலிருந்தபோது மாநிலங்களின் அமைச்சர்களெல்லாம் பங்கேற்ற கூட்டத்தில், செல்வாக்குமிக்க மத்திய அமைச்சர் மொரார்ஜி தேசாய், "இந்தி இல்லாமல் இந்தியா இல்லை' என்று பேச, "இந்தி இருக்குமானால், இந்தியாவே இருக்காது' என்று அன்றைய தமிழக அமைச்சர் செ. மாதவன் பேசிவிட்டார் என்பதற்காக, ஊர்ஊராக நான்கு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் செ. மாதவனை உட்காரவைத்து ஊர்வலம் விட்டு, ஐந்து ஆண்டு அரசியலை இதைச் சொல்லியே ஓட்டினார்களே தி.மு.க.வினர்!

அன்று மாமன்னன் அசோகன் இலங்கைக்குத் தன் மகள் சங்கமித்திரையை அனுப்பிப் பௌத்தத்தை வளர்த்ததுபோல, இன்று தன் மகள் கனிமொழியை அனுப்பிச் சிங்களவர்களோடு நேசத்தை வளர்க்கும் கருணாநிதி, ராஜபட்சவை எதிர்த்துத் திருமாவளவன் பேசுவதை ரசிக்க மாட்டார் என்றாலும், கருணாநிதி ரசிக்காததை எல்லாம் செய்யாமலிருப்பதற்குத் திருமாவளவன் என்ன தி.மு.க.வின் ஆயிரம் விளக்குப் பகுதிச் செயலாளரா?

தமிழுக்கும், தமிழனுக்கும் கேடு என்றால் சீறிவரும் சிறுத்தையாக இருந்தவரை, நாடாளுமன்றப் பதவியைக் கொடுத்து அடங்கிப் போகும் நிலைக்கு ஆளாக்கிவிட்டாரே கருணாநிதி!

முள்வேலி முகாம்களைப் பார்வையிட, அவற்றின் உண்மை நிலையைக் கண்டறிய மனித உரிமைப் பாதுகாப்புக் கழகத்தினரையும், செய்தியாளர்களையும் அனுமதிக்காத ராஜபட்ச, காங்கிரûஸயும் தி.மு.க.வையும் மட்டும் அழைத்தாராம்! ஈழத்தைச் சுடுகாடாக்கிய ராஜபட்ச, சோனியா, கருணாநிதி என்னும் முக்கூட்டணி தங்களின் சிதைந்துபோன முகங்களைச் சீர்படுத்திக் கொள்ளும் முயற்சிதானே இது? பொத்துக்கிழிந்துபோன பெயரை இழுத்துவைத்துத் தைத்துக் கொள்ளும் முயற்சி அல்லாமல் வேறென்ன? முள்வேலி முகாம்களில் ஈழத் தமிழர்களை ஆடுமாடுகளைப் போல் அடைத்துவைத்துக் கொடுமைப்படுத்துவதை ஓர் அமெரிக்கப் பெண்மணி சத்தம்போட்டு உலகுக்குச் சொல்லிக் கொண்டிருப்பதைத் தமிழ்நாட்டுக்கும் வந்து சொல்ல விரும்பியபோது, அவருக்கு "விசா' வழங்கவிடாமல் தடுத்து நிறுத்தியவர்தானே இந்தக் கருணாநிதி! அந்தப் பெண்மணியின் வருகை தன்னுடைய சாயத்தை வெளுக்கச் செய்துவிடும் என்னும் அச்சம்தானே காரணம்!

இந்தப் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் "உல்லாசப் பயணத்தில்' இங்கிருந்தே இலங்கை அதிகாரிகள் உடன்வந்தார்களாம். கொழும்பில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதாம்; ஹெலிகாப்டர்களில் பறந்தார்களாம்; ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்கினார்களாம்; முப்பொழுதும் முப்பழங்களோடும் விருந்துகளாம்; வேதமே பாராட்டிய சோமபானங்களுக்கும் குறைவில்லையாம்! அரசியல் நெறியற்ற டக்ளஸ் தேவானந்தா கூட்டிவைத்த கூட்டத்தில் கலந்துரையாடினார்களாம்! இதற்குச் சிங்களவர்களோடேயே உரையாடியிருக்கலாமே!

ஈழத்துக்கான போர் சிங்களக்காடையர்களோடு மூன்றுமுறை நடந்தது; முப்பதாண்டுக் காலம் நடந்தது; அப்போதெல்லாம் இடையிடையே போர் நடக்கும்; சிங்களக்காடையர்கள் முண்டிப் பார்ப்பார்கள்; பின்பு பின்வாங்கி ஓடிப்போவார்கள்.

ஈழத்தில் வரிவசூல் நடந்தது; காவல் நிலையங்கள் இருந்தன; நீதிமன்றம் நடந்தது; பராமரிப்புப் பணிகளும், நிர்வாகப் பணிகளும் செவ்வனே நடந்தன. அந்தக் காலகட்டம் முழுவதும் அறிவிக்கப்படாத சுதந்திர நாடாகவே ஈழம் இயங்கியது!

நான்காம் ஈழப் போர் ஈழத்தைச் சுடுகாடாக்கியது. சிங்களக்காடையர்கள் ஒன்றும் ஓரிரவில் வீரர்களாய் மாறிவிடவில்லை. இந்தியப் பெருநாடு சிங்களவர்களை முன்னிறுத்தி அந்தப் போரை நடத்தி இந்தக் கொடுமையை அரங்கேற்றியது!

பாரதி சொன்னதுபோல எல்லாமே "பொய்யாய்க் கனவாய்ப் பழங்கதையாய்ப் போனதுவே!'

நேற்றுவரை சிங்களத்துக்கு நிகராகத் தமிழுக்கு ஆட்சிமொழி உரிமை வேண்டும்; அரசு வேலைகளில் உரிய பங்கு வேண்டும்; இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய ஈழத்துக்குச் சுயநிர்ணய உரிமை வேண்டும் என்றெல்லாம் போராடியவர்கள், இன்று முள்வேலிச் சிறைகளில் இருந்துகொண்டு குடிக்கவும், குளிக்கவும் தண்ணீர் வேண்டும் என்று கண்ணீர்விடும் நிலைக்கு ஆளாகி விட்டார்களே! பிள்ளைக்குப் பாலில்லை; முதியோருக்கு மருந்தில்லை; கர்ப்பிணிப் பெண்கள் பிள்ளை பெற வசதியில்லை.

ஈழத்துக்கு முற்றாக விடுதலை கேட்டவர்கள் இன்று முள்வேலிச் சிறை முகாம்களிலிருந்து வீட்டுக்குப் போக மட்டும் விடுதலை கொடுத்தால் போதும் என்று கேட்கிறார்கள்; இந்த நிலைக்கு இவர்களை ஆளாக்கிய சோனியா காந்தி, கருணாநிதி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜபட்சவைச் சந்தித்து,""நாட்டுக்கு விடுதலை கேட்கவில்லையே; வீட்டுக்குப் போகத்தானே விடுதலை கேட்கிறார்கள்; கொடுத்துவிட்டுப் போங்களேன்'' என்று எடுத்துச் சொல்லப் போய் இருக்கிறார்கள்! தமிழனின் தலைவிதியைப் பார்த்தீர்களா?

இவர்கள் போனதன் விளைவாக 50,000 தமிழர்கள் முள்வேலி முகாம்களிலிருந்து மறுநாளே விடுவிக்கப்படுவார்கள் என்னும் அறிவிப்பு இலங்கையில் வெளியாகவில்லை; கோபாலபுரத்தில் வெளியாகிறது; ராஜபட்சவும் கருணாநிதியும் வேறுவேறல்லவே; யார் வெளியிட்டால் என்ன? ஆனால், வெளிவிடப்பட்டவர்கள் ஐம்பதாயிரம் பேரா? ஐயாயிரம் பேரா? அல்லது வெறும் அறிவிப்போடு முடிந்துவிட்டதா என்பதெல்லாம் யாருக்குத் தெரியும்? யார் இதை அந்த அரக்கர் நாட்டில் சரிபார்க்க முடியும்?

இப்படிக் கருணாநிதி அறிவித்த மறுநாளே சிங்காரச் சென்னையில் சுவரொட்டிகள் மின்னின. ""நான்கே நாளில் ஈழத் தமிழர்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த கலைஞரை வணங்குகிறோம்.''

அண்ணா விடுதலை இயக்கமாகத் தோற்றுவித்த ஒரு கட்சியில் விடுதலை என்பதை எவ்வளவு கொச்சையாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இதிலுள்ள அவலம்; அதையும் ரசிக்கிறார் கருணாநிதி என்பதுதான் அதைவிடப் பேரவலம்!

உலகத் தமிழ் மாநாடு நடத்த முற்பட்டிருக்கிறார் முதலமைச்சர் கருணாநிதி. ஈழப் பேரழிவுகளுக்குப் பிறகு உலகத் தமிழர்கள் இந்த மாநாட்டைக் கருணாநிதி நடத்துவதை ஏற்கவில்லை! சில மாதங்களுக்கு இந்த மாநாட்டைத் தள்ளிவைத்து அவர்களை அமைதிப்படுத்தலாம் என்னும் கருணாநிதியின் எந்த முயற்சியும் எடுபடவில்லை. இப்போது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று பெயரை மாற்றி நடத்தப் போகிறார்கள். உலகத் தமிழர்களின் சினம் நியாயமானதுதானே!

உலகத் தமிழ் மாநாட்டை அண்ணா நடத்தினார்; எம்ஜிஆர் நடத்தினார்; ஜெயலலிதா நடத்தினார்; ஆனால், கருணாநிதியால் நடத்தவே முடியால் போய்விட்டதே!

தமிழைத் தாயாக உருவகிப்பது தமிழர்களின் வழக்கம். தாய் ஒருத்தி; பிள்ளைகள் இருவர்! இரண்டு பிள்ளைகளுக்கும் இரண்டு மார்பிலும் தமிழ்ப்பால் சுரந்தாள் அவள்! அவர்கள் இனத்தால், நிறத்தால், ரத்தத்தால், பழக்கவழக்கங்களால், பண்பாட்டால் அனைத்தாலும் ஒன்று; நிலத்தால் மட்டுமே வேறு, வேறு!

அண்மையில் அவளுடைய சிறிய பிள்ளைக்கு ஊறு நேர்ந்துவிட்டது; பொறுப்பாளா அவள்? அந்தப் பிள்ளைக்கு ஊறு விளைவித்த அரக்கன் அழிந்து, அந்தப் பிள்ளை தன்னுடைய மண்ணில் காலூன்றும் வரை உறக்கம் வருமா அவளுக்கு?

அந்தச் சிறிய பிள்ளையின் மண்ணைப்பிடுங்கிக் கொள்ள ஓர் அரக்கன் முயன்றான் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த அரக்கனுக்குத் துணைபுரிய தில்லிவாசிகள் விரும்பியதையும் புரிந்துகொள்ள முடிகிறது! ஆனால், மூத்த பிள்ளையின் மண்ணிலிருந்தே சிலர் தில்லியின் விருப்பத்தின்பேரில் அரக்கனுக்கு உதவியாக இருந்ததைத்தான் தாயால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை! கண்ணகி அழுததைப் போல் அரற்றி அழுகிறாள் தாய்! தன் இளைய மகனின் வம்சத்தில் எண்பதாயிரம் பேர் மண்ணைச் சிவப்பாக்கி விட்டு மாண்டுமடிந்ததை எண்ணி அழுகிறாள். இளைஞர்களெல்லாம் செத்து, இளம்பெண்களே விஞ்சி நிற்கும் கொடுமையை எண்ணி அழுகிறாள். அறத்தை "மடவோய்' என்று வாயாற வைகிறாள். நான் உயிர் பிழைத்திருப்பேனோ என்று அரற்றுகிறாள்!மறனோடு திரியும் கோல் ""மன்மோகன்'' தவறு இழைப்பஅறன் எனும் மடவோய் யான் அவலம் கொண்டு அழிவலோ?''(-சிலம்பு, துன்பமாலை 40).

இளைய பிள்ளையின் வம்சத்தை அழிக்க மூத்தபிள்ளையின் வழியினரில் சிலரே மாற்றானுக்கு உதவிவிட்டு, தன்னுடைய வெக்கை தணியத் தனக்கே விழா எடுக்க நினைக்கிறார்கள் என்பதை அறிந்து, அவர்களின் விழாவினைப் புறந்தள்ளி விட்டாள் தாய்! உலகத் தமிழ் மாநாட்டை அவள் ஏற்கவில்லை! தாயல்லளோ அவள்!

அது மட்டுமன்று; தமிழ் மாநாட்டில் அகதிகளாய் வாழும் ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் எனக் காஞ்சிபுரத்தில் தீர்மானம் போட்டிருக்கிறார் கருணாநிதி!

சென்ற மத்திய ஆட்சிக் காலகட்டத்தில் சோனியாவோடு சேர்ந்துகொண்டு ஈழத்தைச் சுடுகாடாக்கியதை இது போன்ற தீர்மானங்களால் ஈடுகட்டிவிட முடியும் என்று கருதுகிறார் கருணாநிதி!

""ஈழத் தமிழர்களுக்கு எந்தச் சலுகைகள், உரிமைகள் அளித்தாலும் எனக்கு உடன்பாடே! ஆனால், இங்கே ஈழத் தமிழர்கள் மட்டும் அகதிகளாய் இல்லை. திபெத்தியர்கள், பர்மியர்கள், வங்கதேசத்தினர் என்று ஏராளமானோர் அகதிகளாய் இருக்கிறார்கள். ஈழத் தமிழர்களை மட்டும் மத்திய அரசு தனித்துப் பிரித்துப் பார்க்குமாறு கருணாநிதியால் செய்ய முடியுமா?

ஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை என்றால் அவர்களுக்கு உயர்கல்வி, அரசு வேலைவாய்ப்புப் போன்ற எல்லாம் உண்டா? அப்போது தானே அது முற்றான குடியுரிமையாய் இருக்க முடியும்!'' என்றெல்லாம் அடுக்கி அடுக்கி எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா கேட்டாரே! ஒன்றுக்காவது விடை சொன்னாரா முதலமைச்சர் கருணாநிதி?

கருணாநிதி தான் அங்கம் வகிக்கும் மத்திய அரசை ஏற்கும்படி செய்ய வேண்டும்; அல்லது அரசை விட்டு வெளியே வந்து அதற்காகப் போராட வேண்டும்! அப்படியெல்லாம் இல்லாமல் ஏதோ ஒரு பேச்சுக்குப் போட்டு வைப்போம் என்று, தான் நம்பாததையே தீர்மானமாக்குவது முழு மோசடி இல்லையா?

ஈழத் தமிழர்களுக்கு மத்திய அரசிலிருந்து என்ன உரிமைகள் பெற்றுக் கொடுத்தாலும் அனைவருக்கும் இசைவே!

கருணாநிதியும், சோனியாவும் அந்த இனத்துக்குச் செய்த கொடுமைகளுக்கு ஈடுகட்டவும், பாவங்களுக்குக் கழுவாய் தேடவும், எந்தச் சலுகை வேண்டுமானாலும் அளிக்கட்டும்; அளிக்க வேண்டும்! வெறும் 500 கோடி ரூபாயை அளித்துக் கைகழுவி விடும் ஏமாற்று வேலை வேண்டாம்!

ஆனால் அவர்கள் பிறப்பால் ஈழத் தமிழர்கள்; ஈழம் அவர்களின் தாயகம்! அங்கே அவர்களுக்கு வீடு வாசல், நிலம் கரை அனைத்தும் உண்டு. அவர்களுக்குச் சொத்துகளும் அங்கேதான்; சொந்தங்களும் அங்கேதான்!

ராஜபட்ச, சோனியா, கருணாநிதி என்னும் முக்கூட்டணி அரசியலில் ஆக்கம் இழந்த பிறகு.... அது நடக்காதா என்ன? முன்பு தெருவிலிருந்தவர்கள் இப்போது திருவை அடைந்திருக்கிறார்கள்; மீண்டும் திருவை இழந்து தெருவுக்குப் போக எவ்வளவு நேரமாகும்?

அப்போது தாங்கள் விரும்பும்வண்ணம் தங்கள் தாயகத்தை ஈழத் தமிழர்கள் உருவாக்கிக் கொள்வார்கள்!

தமிழர்களுக்கு இரண்டு தாயகங்கள் உண்டு. ஒன்று தமிழ்நாடு; இன்னொன்று ஈழம்!

போர்த் தோல்வி காரணமாகச் சோர்வுற்றிருக்கும் தமிழர்களை விரட்டிவிட்டால், இலங்கை முற்றாகச் சிங்களவர்களின் நாடாகிவிடும் என்பது ராஜபட்சவின் எண்ணம்! கனடா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே, தமிழ்நாடு என்று போனபோன இடங்களில் ஏதாவதொரு உரிமை பெற்று அவர்கள் ஆங்காங்கே இருந்துவிட வேண்டும் என்பதுதான் ராஜபட்சவின் விருப்பம்! அவர்கள் ஈழத்துக்குத் திரும்பிவிடும் எண்ணத்தைக் கைவிடச் செய்வதற்காகத்தான் கொடுமைகள் மிகுந்த முள்வேலிச் சிறை முகாம்களின் காலத்தை நீட்டித்துக் கொண்டே போகிறார் ராஜபட்ச!

இறைமகன் ஏசுவை சிலுவையில் அறையக் காரணமான யூத மத போதகர்கள் யாரையாவது ஏசுவின் உண்மைச் சீடர்கள் பதினோரு பேரில் எவனாவது கட்டிப்பிடித்ததுண்டா?

யூத இனத்தையே கருவறுத்த மன நோயாளி ஹிட்லருக்கு எந்த யூதனாவது பட்டாடை போர்த்திப் பாராட்டியதுண்டா?

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில், முன் தோன்றிய மூத்த தமிழினத்தைக் கருவறுத்த ராஜபட்சவுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்துப் பேரும் சிரித்து மகிழ்வதையும் சிலர் கட்டித் தழுவிக் கொள்வதையும் நிழற்படங்களில் பாருங்கள்!

அடிவயிற்றை முறுக்கவில்லையா?

கட்டுரையாளர் : பழ . கருப்பையா
நன்றி : தினமணி

கார்களின் விற்பனை இந்தியாவில் அதிகரிப்பு

'இந்த நிதியாண்டில் இந்தியாவில் கார் விற்பனை, இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டும்' என, இந்திய ஆட்டோமொபைல்ஸ் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை இந்திய தொழில் துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்த துவங்கியது. கடந்த நிதி ஆண்டில் இந்தியாவில் கார் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதனால், இந்திய ஆட்டோமொபைல்ஸ் துறையினர் கவலை அடைந்தனர். ஆனால், இந்த நிதியாண்டில் கார்களின் விற்பனை கணிசமான அளவில் அதிகரித்துள்ளது.
கடந்தாண்டு செப்டம்பரில் இந்தியாவில் 1.7 லட்சம் கார்கள் விற்பனையாயின. இந்தாண்டின் இதே மாதத்தில் 1.29 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த நிதியாண்டில் கார் விற்பனை வளர்ச்சி 1.31 சதவீதமாக இருந்தது. இந்த நிதி ஆண்டில் வளர்ச்சி வீதம் இரட்டை இலக்கத்தை எட்டும், என இந்திய ஆட்டோமொபைல்ஸ் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை 7.67 சதவீதமும், மற்ற வாகனங்களின் விற்பனை 9.6 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.
ஆட்டோமொபைல் துறை வட்டாரங்கள் கூறியதாவது: பங்குச் சந்தை எழுச்சி, பருவமழை மீண்டும் துவங்கியது, பண்டிகை காலம் போன்ற பல சாதகமான அம்சங்கள் இருந்ததால் கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இதுதவிர, பண்டிகை கால தள்ளுபடி, வரி குறைப்பு, அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு போன்ற காரணங்களும் கார்களின் விற்பனையை அதிகரித்துள்ளன. இவ்வாறு ஆட்டோமொபைல்ஸ் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி : தினமலர்