பிள்ளை பெறாத பெண்களை மலடி என்று ஏசும் இந்தச் சமுதாயம்தான், குழந்தைகள் பெற்ற பெண்களை ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று ஒதுக்கியும் வைக்கிறது. சற்றே முரண்பாடாகத் தோன்றினாலும், இதுதான் நிஜம்.
கேரள மாநிலத்தில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் நடைபெற்ற எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்ற பெண்களில் சிலர் கர்ப்பமாக இருந்தனர். இதைக் காரணம் காட்டி இப்பெண்களுக்கு வேலைக்கான உத்தரவு வழங்கப்படவில்லை.
இந்த விஷயம் மாநில அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. எஸ்பிஐயின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரளத்தில் மகளிர் சங்கங்கள் போராட்டம் நடத்தின.
இந்த உத்தரவை பிரதமர் தலையிட்டு நீக்க உத்தரவிட வேண்டும் என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் கர்ப்பிணிப் பெண்களின் நியமனத்துக்கு இதுவரை விதிக்கப்பட்டிருந்த தடையை எஸ்பிஐ தற்போது நீக்கிக் கொண்டிருக்கிறது.
30 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை, இப்போது விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதாக வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாட்டின் பிரதான வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் வங்கியில் இத்தனை ஆண்டுகளாக இதுபோன்றதொரு நடைமுறை இருந்து வந்திருப்பது வேதனைக்குரியது.
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் தாய்மை, கர்ப்ப காலம் என்பது மிகவும் குறுகிய ஒரு காலகட்டமே. மக்கள்தொகை குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் இப்போதெல்லாம் யாரும் பிள்ளை பெற்றுக் கொள்வதில்லை.
எல்லாவிதமான உடல் அசெüகரியங்களுக்கும் உடனுக்குடன் நிவாரணம் பெறத்தக்க வகையில் வீதிகள்தோறும் மருத்துவ வசதிகள் பெருகிவிட்டன.
நவீன மருத்துவ வசதிகளால் தாய்மையை ஒரு சுமையாகவோ, பாரமாகவோ இன்றைய பெண்கள் கருதுவதில்லை.
ஒரு சில அசாதாரண நிலைகளில் கர்ப்ப காலம் முழுவதும் படுக்கையிலேயே ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் பெண்களுக்கு வேண்டுமானால் வாய்ப்புகள் மறுக்கப்படலாம். அப்படிப்பட்ட பெண்கள், வெளியிடங்களில் வேலைக்காக விண்ணப்பிக்க மாட்டார்கள் என்பதும் நடைமுறையில் நாம் காணும் உண்மை.
பொதுவாக, தாய்மைப் பேறு, கர்ப்பம் என்பதற்காக மட்டுமே ஒரு பெண்ணின் திறமைகளுக்கு அங்கீகாரம் அளிக்க மறுப்பது எந்தவிதத்திலும் நியாயமல்ல.
சாதனைக்குத் தாய்மை எப்போதும் ஒரு தடையல்ல என்பதை நிஜ வாழ்க்கையில் நிரூபித்து வரும் பெண்கள் ஏராளம். குழந்தைகள் பெற்ற பின்பும் புதிய உத்வேகத்துடன் களம் இறங்கி சாதனை படைத்து வரும் மகளிர் எண்ணற்றோர்.
ஒரு குழந்தை பெற்ற பின்புதான் 1980-ல் விம்பிள்டன் பட்டம் வென்றார் ஈவான் கூலகாங். அவரைத் தொடர்ந்து தற்போது 2009-ம் ஆண்டுக்கான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிருக்கான பட்டத்தை வென்றிருக்கும் பெல்ஜியத்தின் கிம் க்லிஜ்ஸ்டெர்ஸ், இரண்டு வயதுக் குழந்தைக்குத் தாய் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை பிறந்து 18 மாதங்களுக்குப் பிறகு முழு உத்வேகத்துடன் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு தற்போது "கிராண்ட் ஸ்லாம்' பட்டத்தை தட்டி வந்திருக்கிறார் கிம்.
வெளிநாட்டுப் பெண்களை விடுங்கள். நம் நாட்டின் மேரி காம், 2008-ம் ஆண்டு உலகக் குத்துச்சண்டைப் போட்டிகளில் தங்கம் வென்று நான்காவது தடவையாக உலகச் சாம்பியன் பட்டம் வென்றார்.
இவரது சாதனைக்கு இந்திய அரசு கொடுத்த பரிசுதான், 2009-ம் ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது.
அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருதுகளுக்குச் சொந்தக்காரரான மணிப்பூரின் மேரி காம், இரண்டு குழந்தைகளுக்குத் தாயானபிறகுதான் மேற்கூறிய சாதனையைப் படைத்தார்.
விளையாட்டு வீராங்கனைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், சாதனை படைத்த பெண்களில் பெரும்பாலானோர், திருமணத்துக்குப் பிறகோ அல்லது குழந்தை பெற்ற பிறகோதான் வெற்றிச் சிகரத்தை தொட்டிருக்கிறார்கள் என்பது புரியும்.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற பிரபல பத்திரிகையாளர் அனிதா பிரதாப், கர்ப்பிணியாக இருந்தபோதுதான் புலனாய்வுக் கட்டுரைகள் பலவற்றை எழுதி உலகின் பார்வையைத் தன் பக்கம் திருப்பினார். இதுபற்றி அவரே தன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
1990 அக்டோபரில் பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எல்.வசந்தகுமாரி காலமானார்.
அந்த ஆண்டு டிசம்பர் சீசன். சென்னை மியூசிக் அகாதெமியில் கூட்டம் நிறைந்து வழிந்தது. 8 மாதக் கர்ப்பிணியான இன்றைய பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன் அப்போது நிகழ்த்திய அந்த இசைக் கச்சேரியைக் கேட்டவர்கள், சிலிர்த்துப் போனார்கள்.
எனவே, இதுபோன்ற பழமையான கட்டுப்பாடுகளை எல்லா நிறுவனங்களும் உடனடியாகத் தளர்த்திக் கொள்ள முன்வருவது அவசியம்.
கட்டுரையாளர் : ஜி. மீனாட்சி
நன்றி : தினமணி
Saturday, October 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment