Saturday, October 24, 2009

எல்லைக்கு அப்பால்...

புதுதில்லியிலிருந்து இஸ்லாமாபாதுக்கு விமானத்தில் செல்வதைவிட வாகாவில் இந்திய-பாகிஸ்தான் எல்லையைக் கடந்து செல்வது புதுமையான அனுபவமாகும். கடந்த வாரம் லாகூரில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் சார்க் நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேலான பெண் பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து நான் உள்பட 30-க்கும் மேலான பெண் பத்திரிகையாளர்களும் இதில் கலந்துகொண்டோம். நாங்கள் வாகா சென்று இந்திய-பாகிஸ்தான் எல்லைக் கோட்டை நடந்து சென்று கடந்தோம். பின்னர் அங்கிருந்து கார் மூலம் லாகூர் சென்றோம்.

எல்லைக்கோட்டுப் பகுதியில் இந்தியக் குடியுரிமை அலுவலகத்திலிருந்து எங்களது சாமான்களை சீக்கிய போர்ட்டர்கள் தூக்கி வந்து பாகிஸ்தான் எல்லை ஆரம்பத்தைக் குறிக்கும் வெள்ளைக் கோட்டில் வைத்தனர். பின்னர் அங்கிருந்து பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த போர்ட்டர்கள் அதைச் சுமந்து சென்றனர். இரு நாட்டு போர்ட்டர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டபோதிலும் ஒருவார்த்தைகூட பேசிக்கொள்ளவில்லை. தினமும் இப்படித்தான் என்று பலரும் கூறினர்.

எனினும், எப்போதாவது இந்த வழியாகச் செல்லும் பிரமுகர்கள் "டிப்ஸ்' கொடுத்தால் வாங்கிக் கொண்டு அதை அவர்களுக்கும் தெரிவிப்பார்களாம். நான்கு நாள்களுக்குப் பிறகு நாங்கள் திரும்பிவந்த போது பாகிஸ்தான் சுங்க அதிகாரிகள் இந்திய தரப்பினருக்கு "தீபாவளி' அன்பளிப்பு கொடுத்தது தெரியவந்தது.

பாகிஸ்தான் பிரிவினையின்போது அந்தப் பகுதியிலிருந்து இந்தியாவில் குடியேறிய எங்களுக்கு இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கோட்டைக் கடந்து செல்லும்போதெல்லாம் மனத்தில் ஒருவித கிளர்ச்சி ஏற்படும். மற்றவர்களுக்கு இரு நாடுகளும் முன்னேற்றம் காண வேண்டும்; தடைகள் நீக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.

2005-ம் ஆண்டு கோடைக்காலத்தில் நான் லாகூர் சென்றதற்கும் இப்போது சென்றுவந்ததற்கும் உள்ள வித்தியாசத்தை என்னால் நன்கு உணர முடிகிறது. லாகூரில் இப்போது அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இன்னும் சொல்லப்போனால் அங்கு இப்போது உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்தபோது நாங்கள் அங்குதான் இருந்தோம்.

நாங்கள் சென்ற தினத்தில் பெஷாவரில் குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. அதற்கு அடுத்த நாள் காலையில் ராவல் பிண்டியில் உள்ள ராணுவத் தலைமையகம் மீது மிகப்பெரிய தாக்குதல் நடந்தது. இச் சம்பவம் ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பிரதமர் யூசுப் ரஸô கிலானி எங்கள் கருத்தரங்கில் பங்கேற்க முடியாமல் போய்விட்டது. பஞ்சாப் மாகாண முதல்வர் ஷாபாஸ் ஷெரீப் எங்களுக்கு இரவு விருந்து அளிக்க ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், அவராலும் அதில் பங்கேற்க முடியவில்லை. நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பெண் பத்திரிகையாளர்கள் என்பதால் நாங்கள் எங்கு சென்றாலும் உடன் பாதுகாப்புக்காக போலீஸôர் கூடவே வந்தனர்.

பாகிஸ்தான் ராணுவத் தலைமையகம் மீது நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு யார் காரணம் என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாயின. சிலர் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தேரிக்-இ-தாலிபான் என்ற அமைப்புதான் காரணம். தாலிபான்கள் அதிகம் உள்ள தெற்கு வாஜிரிஸ்தான் பகுதியில் ராணுவம் நடவடிக்கை எடுத்துவிடக்கூடாது என்று எச்சரிப்பதற்காகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று கூறினர். தாலிபான்களை ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தபோதிலும் அது விஷயத்தில் ராணுவத்துக்கு மாறுபட்ட கருத்து இருந்தது வெளிப்படை. இப்போது ராணுவத்தின் கையைக் கட்டிவிட்டு குளிர்காலத்தில் தாலிபான்கள், அல்-காய்தா தீவிரவாதிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சியே இது என்றும் சிலர் கூறினர்.

பாகிஸ்தான் அரசுக்கும், ராணுவத்துக்கும் கருத்து மோதல்கள் இருந்து வந்துள்ள நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. கெர்ரி லூகர் மசோதாவை பாகிஸ்தான் அதிபர் ஆஸிப் அலி ஜர்தாரி ஆதரித்தாலும் நாட்டின் இறையாண்மையில் அத்துமீறி தலையிடுவதாகும் இது என்று பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் அஷ்பாக் பர்வேஸ் கயானி விமர்சித்திருந்தார். இந்த மசோதாவில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் பாகிஸ்தானுக்கு 7.5 பில்லியன் டாலர் நிதியுதவி கிடைக்கும். இதற்கு விதிக்கப்பட்ட ஒரே நிபந்தனை, நீதித்துறையிலும், நிர்வாகத்துறையிலும் பாகிஸ்தான் ராணுவம் தலையிடக்கூடாது என்பதுதான்.

பாகிஸ்தான் நாட்டின் எதிர்காலம் குறித்து பலரும் பலவிதமாகப் பேசி வருகின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ராணுவம் அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொள்ளக்கூடும் என்றும், விரைவிலேயே பாகிஸ்தானில் இடைத்தேர்தல் நடைபெறக்கூடும் என்றும் வதந்திகள் உலவுகின்றன. சில நாள்களுக்கு முன்பு ஷாபாஸ் ஷெரீப், ராணுவத் தலைமைத் தளபதி கயானியைச் சந்தித்துப் பேசினார். தற்போதுள்ள அரசைக் கவிழ்ப்பதற்கு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் ஷெரீப்) கட்சி ரகசிய பேரம் நடத்தி வருவதாகவும் விரைவில் தேர்தல் வரலாம் என்று பேசப்பட்டன.

2005-ம் ஆண்டைய நிலைக்கும் இப்போதைய காலத்துக்கும் இடையே மற்றொரு மாற்றம் தெரிகிறது. அது இந்தியா மீது பாகிஸ்தானின் மனோநிலை பற்றியது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பர்வேஸ் முஷாரப் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது இரு நாடுகளுக்கும் இடையே உறவில் ஒரு நெகிழ்வு இருந்து வந்தது. இங்கிருந்து எம்.பி.க்கள் பாகிஸ்தான் சென்று வந்தனர்.

பாகிஸ்தானிலிருந்து ஒருவர் இங்கு வந்து சாதாரண பால்காரராக இருந்து மெல்ல மெல்ல உயர்ந்து பிகாரின் முதல்வரான லாலு பிரசாத்தை நேரில் சந்தித்துப் பேச முடிந்தது.

ஆனால், இன்று பாகிஸ்தானில் மக்களாட்சி நடக்கின்ற போதிலும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண இருநாடுகளும் பேச்சுவார்த்தையைத் தொடர வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருந்து வருகிறது.

"இந்தியா மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்தான் எங்கள் நாட்டிலும் தாக்குதல் நடத்தியுள்ளனர். தீவிரவாதத்தை நாங்கள் ஆதரிப்பதாகக் கூறுவதை இந்தியா சிந்தித்துப் பார்க்க வேண்டும். நீதித்துறை விவகாரங்களில் நாங்கள் தலையிடுவதில்லை. ஹபீஸ் சய்யீத்தை விடுவித்தது நீதிமன்றம்தான். சய்யீத்துக்கு எதிராக மேலும் சாட்சியங்களை அளிக்க இந்தியா தயாராக இருந்தால் மேல் நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயில் மீதான தாக்குதலுக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க இந்தியாவால் முடியவில்லை என்று பாகிஸ்தான் தரப்பில் வாதிடப்படுகிறது.

இந்தியாவுடன் பேச்சுவார்த்தையைத் தொடர பாகிஸ்தான் விரும்பியபோது மக்களிடம் ஓர் எச்சரிக்கை உணர்வு இருந்தது. சீனாதான், பாகிஸ்தானின் நெருங்கிய நண்பன் என்று பலரும் பேசிவந்தனர்.

நான் நண்பர்களுக்காக ஒரு கடையின் வாசலில் காத்திருந்தபோது, கடையின் உள்ளே இருந்தவர்கள் உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருந்தனர். என்னைப் பார்த்ததும் நான் இந்தியப் பிரஜை என்று தெரிந்துகொண்டு அமைதியாகிவிட்டனர்.

பலவிதங்களில் மும்பைத் தாக்குதல் சம்பவம் இந்தியா, பாகிஸ்தான் இடையே விரிசலை ஏற்படுத்திவிட்டது தெரியவரும். இச் சம்பவம் பாகிஸ்தான் பற்றி இந்திய மக்களின் மனதில் வெறுப்பை ஏற்படுத்திவிட்டது எனலாம். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையைத் தொடர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்பியபோதிலும், எகிப்தில் பாகிஸ்தான் பிரதமர் விடுத்த அறிக்கை மன்மோகன் சிங்கை பின்வாங்கவைத்துவிட்டது.

பாகிஸ்தான் ராணுவத் தலைமையகம் மீது நடந்த தாக்குதலின் பின்னணியில் இந்தியா இருப்பதாக அந்த நாட்டு பத்திரிகைகளில் வெளியான செய்தி, இப்படியும் இருக்கலாமோ என்ற எண்ணத்தை பாகிஸ்தான் மக்கள் மனதில் ஏற்படுத்தி விட்டது.

தாக்குதலுக்கு இந்திய பின்னணி இருப்பதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் முதலில் கூறினாலும் பின்னர் அவர் தனது நிலையை மாற்றிக் கொண்டுவிட்டார். இதற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது நடந்த தாக்குதலுக்குக்கூட இந்தியாதான் காரணம் என சொல்லப்பட்டது நினைவிருக்கலாம். கெர்ரி-லூகர் மசோதா கொண்டுவரப்பட்டதற்குக்கூட இந்தியாதான் காரணம் என்ற எண்ணமும் பாகிஸ்தானிடம் உள்ளது.

கடந்த காலங்களிலும் சரி.. இப்போதும் சரி.. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் விரிசல் நீடிக்கிறது என்பதுதான் உண்மை.

கட்டுரையாளர் : நீரஜா சௌத்ரி

நன்றி : தினமணிNo comments: