Friday, April 3, 2009

படுத்துகிறது பணவீக்கம்: அபாயம் நீங்கிவிட்டதா?

கடந்த இரு மாதங்களாக தொடர் சரிவை சந்தித்த பணவீக்கம், சிறிது அதிகரித்திருக்கிறது. ஆனாலும், தொடர்ந்து சரியுமே தவிர தற்போதைக்கு பணவீக்கம் அதிகரிக்காது என்று பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவித்தனர். மார்ச் 21ம் தேதியுடன் முடிந்த வாரத்திற்கு பணவீக்கம் 0.31 சதவீதம் என்று சற்று அதிகரித்திருக்கிறது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு பணவீக்கம் 7.8 சதவீதம். பணவீக்கம் குறித்து கருத்து தெரிவித்த, 'கிரிசில்' பொருளாதார நிபுணர் டி.கே.ஜோஷி , 'பணவீக்க குறியீடு பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு உயராது. குறைந்து வந்தது சற்று அதிகரித்ததும் மாற்றம் ஏற்படும் என்ற கருத்து தேவையில்லை. மாறாக பூஜ்யத்திற்கும் கீழாக குறைந்து விடும். அதனால் வட்டி குறைப்பு பற்றி ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும்' என்றார்.
ஆனால், பணவீக்கம் பெரிய அளவில் குறைந்தாலும் விலைவாசி உயர்வு தொடர்கிறது. உற்பத்தி குறைந்திருக்கிறது. இது குறித்து பா.ஜ.,வின் பொருளாதார பிரிவு கன்வீனர் ஜகதீஷ் ஷெட்டிகார் கூறியதாவது: கடந்த 30 ஆண்டுகளாக இல்லாத வகையில் 0.2 சதவீதமாக பணவீக்கம் குறைந்திருக்கிறது. இது கவலை தரும் அம்சம். இரட்டை இலக்கமாக இருந்த பணவீக்கத்தை தேர்தல் கருதி மத்திய அரசு குறைக்க கருதி எடுத்த அவசர நடவடிக்கைகள் சரி அல்ல. அதன் விளைவாக பணப்புழக்கம் குறைந்து மேன்யுபேக்ட்சரிங் துறை நசிந்துவிட்டது.
பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை குறைவு என்பது வேறு விஷயம். சர்வதேச விலை வீழ்ச்சியும் அதில் சம்பந்தப்பட்டிருக்கிறது. உணவுப் பொருட்கள், காய்கறி, பழங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலை இரட்டை இலக்கத்தில் உயர்ந்திருக்கிறது. நல்ல பொருளாதார சூழ்நிலை என்றால் 4 சதவீதம் வரை பணவீக்கம் இருக்கலாம். தற்போதுள்ள பணச்சுருக்கம் (டிப்ளேஷன்) மக்கள் வாங்கும் சக்தியைக் குறைத்து வேலை வாய்ப்பைக் குறைக்கும். இந்த அபாயத்தைத் தடுக்க நகர்ப்புறம் மற்றும் கிராமப்பகுதிகளில், அதிகளவில் அரசுப்பணம் செலவழிக்கும் திட்டங்கள் தேவை. நதிநீர் இணைப்புத் திட்டம், அதிகளவில் வேலை வாய்ப்பை மேன்யுபேக்ட்சரிங் துறையில் ஏற்படுத்தும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் தேவை. பொதுவாக இன்றைய நிலை கவலை தருகிறது. இவ்வாறு ஷெட்டிகார் கூறினார்.
நன்றி : தினமலர்


No comments: