நன்றி : தினமலர்
Friday, April 3, 2009
உலக பொருளாதாரத்தை சரிசெய்ய 1.1 லட்சம் கோடி டாலர் நிதி உதவி : ஜி20 மாநாட்டில் முடிவு
1930 க்குப்பின் மோசமான நிலையில் இருக்கும் உலக பொருளாதாரத்தை சரிசெய்ய 1.1 லட்சம் கோடி டாலர் ( 750 பில்லியன் பவுண்ட் ) பணம் நிதி உதவி செய்ய லண்டனில் நடந்த ஜி20 மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. லண்டனில் இரண்டு நாட்கள் நடந்த ஜி20 மாநாட்டின் முக்கிய பிரச்னையாக விவாதிக்கப்பட்டது, உலக பொருளாதாரத்தை எப்படி சரி செய்வது என்பதைப்பற்றியதாகத்தான் இருந்தது. அப்போது பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் தான் 1.1 லட்சம் கோடி டாலர் நிதி உதவி திட்டத்தை முன்மொழிந்தார். அதாவது 750 பில்லியன் பவுண்ட்டை ( 1.1 லட்சம் கோடி டாலர் - சுமார் 55 லட்சம் கோடி ரூபாய் ) பணக்கார நாடுகள், ஐ.எம்.எஃப்.,( இன்டர்நேஷனல் மானிட்டரி ஃபண்ட் ) இடம் கொடுக்க வேண்டும். அந்த பணத்தில் இருந்து, பொருளாதாரத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பண உதவி செய்ய வேண்டும் என்பதே அந்த திட்டம். இந்த ஒரு லட்சம் கோடி டாலரில், 50 ஆயிரம் கோடி டாலர் பணத்தை ஐ.எம்.எஃப்., ன் நிதி ஆதாரத்தை மூன்று மடங்காக பெருக்கிக்கொள்ள வைத்துக்கொள்ள வேண்டும். 25 ஆயிரம் கோடி டாலர் பணத்தை, உலக அளவிலான வர்த்தகத்தை சரி செய்வதற்காக பயன்படுத்த வேண்டும், மீதி 25 ஆயிரம் கோடி டாலர் பணத்தை, ஐ.எம்.எஃப்.,ல் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகள்,பொருளாதாரத்தை சரி செய்ய உதவியாக பெற்றுக்கொள்ளலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தை எல்லா நாடுகளும் ஏற்றுக்கொண்டன. இதனை வெகுவாக பாராட்டிய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, இது ஒரு திருப்புமுனை என்றார். விரைவில் பிரிட்டனின் பொருளாதாரம் வீழ்ந்து விடும் நிலையில் இருந்தாலும், இந்த திட்டத்தை கொண்டு வந்த பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன், இந்த நிதியில் இருந்து நிதி எதையும் கேட்கவில்லை. மேலும் வங்கிகளில் கள்ளத்தனமாக பணம் சேமிக்கும் வழக்கத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் மாநாட்டில் பேசப்பட்டது. வங்கிகளின் சேமிப்பு குறித்த விபரம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும் வங்கிகள் இந்த விஷயத்தில் ரகசியத்தை காக்கும் போக்கு ஒழிக்கப்பட வேண்டும் என்றும். பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் தலைவர்களால் கடுமையாக வலியுறுத்தப்பட்டது.
Labels:
பொருளாதாரம்,
மாநாடு,
வங்கி,
ஜி20
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment