Wednesday, December 30, 2009

ஏன் இன்னும் பாராமுகம்...?

படிப்பனுபவம் வேறெந்த சுகானுபவத்தையும் விடச்சிறந்தது என்பது உய்த்துணர்ந்தவர்களுக்குப் புரியும்.

இசை,​​ நடனம்,​​ நாடகம்,​​ திரைப்படம்,​​ ஓவியம் போன்ற நுண்கலைகளைப் போலவே எழுத்தும் படிப்பும் ஓர் உயரனுபவம் என்பதோடு நில்லாது சிந்தனைக்குச் சாவி கொடுத்துச் செயலாக்கத்துக்கு அடித்தளம் அமைக்கும் அரும்பணி புரிகிறது.​ இந்தியச் சிந்தனை மரபு,​​ பல மொழிகளில் பல வடிவங்களில் வெளிப்பட்டு வந்தது-வருகிறது.

இன்று யந்திர கதியில் கோடுகளிடை ஓடும் சாரமற்ற வாழ்க்கையாக மாறிவரும் பரபரப்புச் சூழலில்,​​ நமது கலாசாரமும் கலைகளும் அருமருந்தாக உள்ளன.​ மக்கள் தொகைப் பெருக்கத்தாலும்,​​ சுய-புறக் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தால் தகுதியற்ற போட்டிகளாலும் மாயமான் வேட்டையாகி வருகிற வாழ்க்கையில் வேரோடிய நமது நேற்றைய சிந்தனைகளும்,​​ சரித்திரமும்,​​ இலக்கியமும் இன்றைக்குப் புறந்தள்ளப்பட்டு விடுகிற அபாயம் தொடர்கிறது.​ இது நாளைய இந்தியாவுக்கு அபாயச் சங்கு ஊதும் தருணமாகி விட்டது.

வெறும் "மதிப்பெண்'தான் இன்றைய கல்வி.​ வெறும் வியாபாரமாகிவிட்ட கல்விச் சந்தையில் அறிவுதரும் கல்வியா கிடைக்கிறது?

"கல்வி அறிவு' என்பது பாமரர்க்கும்,எளியோர்க்கும் வழங்கப்பட வேண்டியது அவசியம்.​ ஆனால் கல்விதான் வழங்கப்படுகிறது இன்றிங்கே.​ அறிவு புகட்டப்படுவதில்லை.​ ​ ​ நிதியமைச்சர் அன்பழகன் அடிக்கடி கூறுவதுபோல,''படித்தவரெல்லாம் படிப்பவரல்ல''!

ஆம்.

​ ​ சற்று எளிதாகக் கூற முற்படின் வடிவேலு நகைச்சுவை போல்,​​

''தெரியும்;​ ஆனால் தெரியாது'' என்பது போல்தான் இது!

வெறும் "பாடத்திட்டக் கல்வி' மட்டுமே முட்ட முட்டப் புகட்டப்படுகிறது.​ பொது அறிவும்,​​ பல்துறை தாகம் ஏற்படுத்தும் படைப்பாளுமைத் திறன் வளர் கல்வியறிவும் அறவே ஒதுக்கப்பட்டு நசுக்கப்படுகிறது கல்விக்கூடங்களில்.

அரசு மற்றும் பெரும்பாலான தனியார் கல்விக் கூடங்களில் நூலகமோ,​​ நூல்களோ காணக்கிடைக்காதவையே!​ ஆகவே நூலகரும் கிடையாது.

பள்ளிப் பாடத் திட்டத்தில் "நூலக வகுப்'பை மீண்டும் கொண்டு வந்து அதை முழு ஆர்வத்துடன் செயல்படுத்தக் கோரி தமிழக அரசிடம் பலமுறை வேண்டுகோள் வைத்தோம்.​ ஆட்சி மாறுகிறது.​ ஆட்சியாளர்கள் மாறுகிறார்கள்.​ ஆனால் எக்காரணம் கருதியோ இக்கோரிக்கை உரிய கவனம் பெறுவதே இல்லை.

முன்பு தமிழகக் கல்லூரிகளில் நல்லொழுக்கக் கல்வியும்,​​ உயர்நிலைப் பள்ளிகளில் வாரமொரு வகுப்பு-​ 45 நிமிடம் நூலக வகுப்பு,​​ கைத்தொழில் ஆகியவையும் பாடத்திட்டத்திலேயே நடைமுறையில் இருந்தன.

இதன்மூலம் பள்ளிப் பருவத்திலேயே பாடநூலைத் தாண்டி பொது அறிவுத் தேடல் மாணவரிடம் விதைக்கப்படுகிறது.​ வாழ்நாள் முழுவதும் இந்தப் படிப்பனுபவ சுகம் அவருக்கு ஒளிகாட்டுகிறது.

இதேபோல் கைத்தொழில் வகுப்பில் ஒரு வாரம் தச்சு வேலை,​​ ஒரு வாரம் தையல்,​​ ஒரு வாரம் தோட்ட வேலை,​​ ஒரு வாரம் சுற்றுச்சூழல் தூய்மை,​​ ஒரு வாரம் சாலை விதிகளைக் கடைப்பிடிக்கக் கற்றுத் தருதல் போன்ற அடிப்படை விஷயங்கள் மூலம் வாழ்க்கையின் அன்றாடத் தேவைகளைச் சொந்த உழைப்பின் மூலம் பூர்த்தி செய்து கொள்ளத் தூண்டும் மனவலிவும் உழைப்பின் உயர்வும் ஊட்டப்பட்டு விடுகிறது.

இவையெல்லாம் நான் படித்த பள்ளி நாள்களில் எனக்குக் கிட்டிய அருமையான அஸ்திவாரங்கள்.

ஆனால் இன்று இவை பாடத்திட்டத்தில் இருந்து எங்கே விரட்டப்பட்டன?​ ஏன் விரட்டப்பட்டன?

இன்று பல பள்ளிகளில் விளையாட்டு உடற்பயிற்சி கூட,​​ மாணவர்களின் கவனத்திலிருந்து மறைந்து வருகிறதே என ஓர் ஆசிரியர் கவலையுடன் கூறினார்.

நமது அண்டை மாநிலங்களில் இன்றும் நூலக வகுப்பு சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அரசு,​​ தனியார் பள்ளிகளில் நூலகம்,​​ நூல்கள்,​​ நூலகர்,​​ நூலக வகுப்பு எனச் சீராகச் செல்கிறது.​

மாநிலம் முழுவதிலிருந்தும் பதிப்பாளர்களிடம் மாதிரிப் புத்தகங்கள் பெறப்பட்டு வகுப்பு-வயது வாரியான புத்தகங்கள் தேர்வு செய்யப் பெற்று பட்டியலிடப்படுகின்றன.​ இந்நூல்கள்தான் பள்ளி நூலகங்களில் வாங்கி மாணவர்களுக்கு மத்திய வாங்குகைத் திட்டத்தின் மூலம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆந்திரத்தில் இன்றும் கடைப்பிடிக்கப்பெறும் இம்முறையை ​(தமிழகத்தில் முன்னர் நிகழ்த்தப் பெற்றது)​ நாமும் மீண்டும் தொடர வேண்டும்.

வளரும் இளம் பருவத்திலேயே படிப்பனுபவம் விதைக்கப்பட்டால்தான் அடுத்த தலைமுறையில் மனவளம் நிறைந்த ஆரோக்கியமான தமிழகத்தை வளர்த்தெடுக்க முடியும்.​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​

தமிழகம் முழுவதும் மாநகராட்சி,​​ நகராட்சி அமைப்புகள் மூலம் மக்களின் சொத்துவரி விதிப்பில் 10 சதவீதம் ​(முன்பு 5 சதவீதம்)​ நூலக வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.​ ஆனால் ஆண்டுதோறும் விரட்டி விரட்டி வசூலிக்கப்படும் இவ் வரித் தொகை உடனுக்குடன் நிதித்துறை வழியாக நூல்கள் வாங்குவதற்கு வந்து சேருவதில்லை.

நூலகத் துறைச் சம்பளம்,​​ வாடகை,​​ நிர்வாகச் செலவுகள் அரசிடமிருந்து நேரடியாகப் பட்டுவாடா செய்யப்படுகிறது.​ ஆனால்,​​ மூலாதாரமான புத்தகங்கள் வாங்கும் தொகை இவற்றுடன் ஒப்பிட்டால் -​ எத்தனை சதவீதம் என்று கணக்கிட்டால் -​ ​ வேதனைதான் மிஞ்சும்.

நமது தமிழ்நாடு பொது நூலகத் துறையில் நூல்கள் வாங்குவதும்,​​ வாங்காமல் தவிர்க்கப்படுவதும் ஒரு "பெரிய புராணம்'.

அதற்கு மேல் விலை நிர்ணயம் என்பதும் விலை நிர்ணய உத்தரவைச் செயல்படுத்தும் விதமும் மிக மிக விநோதமானது;​ விசித்திரமானது.

நாளுக்கு நாள் உற்பத்திச் செலவு அதிகரித்து வந்தாலும் பொதுவாக இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை விலை உயர்வு நிர்ணயம் செய்யப்படவேண்டிய நிலை கடைப்பிடிக்கப்படுவதில்லை.​ சுமார் நான்கு,​​ ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.​ விலை நிர்ணயம் செய்த பின்பும் அதைச் செயல்படுத்தத் தாராளமாக ஆண்டுகளைத் தள்ளிப்போடும் நிர்வாக யந்திரம் தங்களது சம்பளம்,​​ படிகளை எல்லாம் முன்தேதியிட்டுப் பெற்றுக் கொள்கிறது உயர்த்தப்படும்போது.

பதிப்பாளர்களுக்குப் பாராமுகமே காட்டப்படுகிறது.​ "கட்டாத விலை' ​ என்பதால் சமர்ப்பிக்கப்படுவதும் இல்லாமல்,​​ பெறப்பட்ட ஆணைக்கு நூல்கள் வழங்கப்படாமலும் தவிர்க்கப்படுகிறது.

இது இப்படியிருக்க,​​ ''எமது நூல்களுக்கு ஆணை வழங்கப்படவில்லையே?'' என முறையிடச் சென்றால் "ஆணை பற்றிப் பேசக்கூடாது' என்பதுபோல் நோட்டீஸ் ஒட்டிய கதவடைப்பு!

"இவ்வருட அலொக்கேஷன்-​ ஒதுக்கீடு அவ்வளவுதான்.​ நீங்கள் எத்தனை புத்தகங்கள் சமர்ப்பித்தீர்கள்-​ எத்தனை நூலுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்று சதவீதம்தான் அளவுகோல்.

என்ன புத்தகம் வாங்கப்பட்டுள்ளது,​​ என்ன புத்தகம் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது கருத்தில் கொள்ளப்படுவதில்லை.

"நூல் தேர்வு' என்பது மர்மக்குகை இருட்டு ரகசியம்!

நூலகத் துறையால் புறக்கணிக்கப்படும் புத்தகங்கள் மக்களின் நேரடி கவனத்தில் ஈர்க்கப்பட்டு தொடர் பதிப்புகள் காண்கின்றன.​ ஆனால்,​​ பொது நூலகக் கிளை நூலகங்களை நாடும் வாசகருக்கு இக்கருத்துகள்-​ நூல்கள் சென்றடைய வேண்டுமென்கிற எழுத்தாளரின் சார்பில் பதிப்பாளர் முயல்கையில் இந்த சாரமற்ற பதில்களே கிடைக்கின்றன.

இவையெல்லாம் களையப்பட தமிழ்ப் பதிப்பாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான பொது நூலகத் துறை மூலம் தமிழ் நூல்கள் வாங்குவதற்கென்றே-​ குறிப்பிடப்பட்ட 5 சதவீதம் மட்டுமாவது கல்வி நிதி ஒதுக்கீட்டில் வருடாந்திர நிதியாக வழங்கப்பட வேண்டும்.

நூல் தேர்வில் உரிய கவனம் செலுத்தப்படல் வேண்டும்-தவிர்க்கப்பட்ட -​ ஆணை வழங்கப்படாத நூல்களை -​ முதலில் உரிய அமைச்சரும் அதிகாரியும் ஆண்டுதோறும் கண்காணிக்க வேண்டும்.​ அப்படிப்பட்ட நூல்கள் தகுதியுடையவை என அறியப்பட்டால் அவற்றுக்கு ஆணை வழங்கப்பட வேண்டும்-மாவட்ட வாரியாக உடனுக்குடன் பதிப்பாளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும்.​

​ மழை,​​ வெயில் இயற்கைப் பாதிப்பிலிருந்து பாதுகாப்பாகப் புத்தகக் காட்சி நடத்த ஊருக்குள் கண்காட்சி வளாகம் அமைத்துத்தர வேண்டும்.

தில்லியில் "பிரகதிமைதான்' போல் மாநகராட்சி,​​ நகராட்சிகளில் இக் "கண்காட்சி வளாகம்' கட்டப்பட்டு ஆண்டுதோறும் இருமுறை தலா பதினைந்து நாள்களுக்குப் புத்தகக் காட்சி நடத்த குறைந்த வாடகையில் இடம் தர வேண்டும்.​ மற்ற நாள்களில் ஆண்டு முழுவதும் வகைவகையான கண்காட்சிகள் நடத்தலாம் அங்கே.

மேலே குறிப்பிட்ட,​​ மூன்று கோரிக்கைகளையும் தொலைநோக்குப் பார்வையோடு அணுகி தமிழ்ச் சமூகம் மீண்டும் தமது பாரம்பரியம் மிக்க பண்பாட்டுப் பாதையில் பீடு நடையிட்டுப் பயணிக்க தமிழக அரசு கடைக்கண் பார்வையைப் பதிக்க வேண்டும்.​ 33-வது புத்தகக் கண்காட்சி நடைபெறும் வேளையில்,​​ எழுத்தாளர்கள் சார்பிலும்,​​ பதிப்பகங்கள் சார்பிலும்,​​ புத்தகம் படிக்கும் தமிழ் ஆர்வலர்கள் சார்பிலும் தமிழக அரசுக்கு விடுக்கப்படும் வேண்டுகோள் இது.​ புத்தாண்டு நல்ல ஆண்டாகப் புலரும் என்கிற நம்பிக்கையுடன்...
கட்டுரையாளர் :அகிலன் கண்ணன்
நன்றி : தினமணி

தனித்திரு,​​ விழித்திரு...

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரன்,​​ ஜார்க்கண்ட் மாநிலத்தின் 6-வது முதலமைச்சராகப் பதவியேற்கவிருக்கிறார்.​ பார​​திய ஜனதா கட்சி ஆத​ரவு தெரி​வித்​துள்​ளது.​

மாநிலத்தின் வளத்துக்கு நிலையான ஆட்சி அவசியம் என்பதாலும்,​​ மக்கள் நலன் கருதியும் ​ இந்த முடிவை எடுத்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.​ கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும்போது இதைத்தானே எல்லா கட்சிகளும் சொல்லி வருகின்றன.​ அதனால் இதிலொன்றும் ஆச்சரியமில்லை.​ ​

சிபுசோரனுக்கும் முதலமைச்சர் பதவிக்கும் ராசியே கிடையாது.​ 2005-ல் முதல்வராகப் பதவியேற்றார்.​ ஆனால் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பத்து நாளில் பதவியை இழக்க வேண்டியதாயிற்று.​ இரண்டாவது முறையாக 2009-ல் முதலமைச்சரானார்.​ ஆனால் அவரால் இடைத்தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை.​ இப்போது 3-வது முறையாக முதலமைச்சராகிறார்.​ அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை,​​ நிரந்தர எதிரியும் இல்லை என்பது தெரிந்திருந்தாலும்,​​ சிபு சோரன் கூடுதலாக தெரிந்துவைத்திருக்க வேண்டிய,​​ சொந்த அனுபவத்தில் தெரிந்துவைத்திருக்கும் தகவல்-​ முதல்வர் பதவியும் நிரந்தரமில்லை.

2004-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நிலக்கரித் துறை அமைச்சராக சிபுசோரன் பதவி வகித்தபோது,​​ அவர் மீதான கொலை வழக்கு காரணமாக,​​ அவரை அமைச்சர் பதவியிலிருந்து ​ நீக்க வேண்டும் என்று பாஜக நாடாளுமன்றத்தில் நடத்திய அமளி,​​ கூச்சல் அத்தனையும் இப்போதும் கண்முன் நிற்கிறது.​ இப்போது சிபுசோரன் தன் மீது தொடுக்கப்பட்ட இரண்டு கொலை வழக்குகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுவிட்டார்.​ ஆகையால் அவருக்கு தங்கள் ஆதரவுக் கரத்தை நீட்டுவதாக பாஜக சொல்லிக்கொள்ள முடியும்.

ஜார்க்கண்ட் மாநிலம் அமைக்கப்பட்ட நாள் முதலாக மூன்று முறை பாஜகதான் ஆட்சி அமைத்துள்ளது.​ இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் பாஜக,​​ தற்போது வேறு வழியின்றி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய நிலை உள்ளது.​ இதனை சிபுசோரன் நன்கு அறிவார்.​ பாஜகவின் இந்த பலவீனத்தை அவர் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம்.

பாஜக மட்டுமன்றி அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் அமைப்பு உள்பட நான்கு அமைப்புகளின் ஆதரவில்தான் சிபுசோரன் ஆட்சி அமையவிருக்கிறது.​ அரசியல் சட்டப்படி இத்தகைய கூட்டணி ஆட்சி சாத்தியமாக இருந்தாலும்,​​ ஜார்க்கண்ட் போன்ற ஒரு மாநிலத்தில் இது எத்தகைய கேடுகளை ​ ஏற்கெனவே விளைவித்திருக்கிறது என்பதற்கு முந்தைய முதலமைச்சர் மது கோடா ஒரு சாட்சி.​ அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் அமைப்பிலிருந்து உருவான மது கோடா,​​ காங்கிரஸ்,​​ ஜேஎம்எம் முரண்களைப் பயன்படுத்திக்கொண்டு முதலமைச்சராகி,​​ ரூ.4000 கோடி பணம் சேர்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு,​​ இப்போது சிறையில் இருக்கிறார் என்பதே போதும் இந்த மாநிலத்தின் வளத்தையும் ஊழல் வாய்ப்புகளையும் அறிந்துகொள்வதற்கு.

ஜார்க்கண்ட் கனிம வளம் நிறைந்த மாநிலம்.​ சுமார் 2 கோடி மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள்.​ இன்னமும்கூட இந்த மக்கள் மிகவும் மோசமான வறுமையில் வாழ்க்கை நடத்தும் நிலைமை மாறவில்லை.​ ​ சிபுசோரன் தன் வாழ்க்கையில் முதன்முதலாக கொலைக் குற்றச்சாட்டுக்கு ஆளானதே,​​ பழங்குடியல்லாத வெளியாட்களே வெளியேபோ என்ற போராட்டத்தின்போது சிருடி என்ற கிராமத்தில் 16 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில்தான்.​ ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சின்னமே,​​ பழங்குடியினரைக் குறிக்கும் வில்லும் அம்பும்தான்.​ பழங்குடியினருக்கான போராட்டத்தில் உதித்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்,​​ பழங்குடியினர் முன்னேறவில்லை.

இந்த மாநிலத்தில் உள்ள 32,620 கிராமங்களில் 45 சதவீத கிராமங்கள்தான் மின்இணைப்பு பெற்றுள்ளன.​ இன்னும் பாதிக்கும் மேற்பட்ட கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் இருண்டுதான் கிடக்கின்றன.​ வெறும் 8,484 ​ கிராமங்களுக்கு மட்டுமே அணுகுசாலை இருக்கிறது.​ இந்த நிலையில் அந்த மக்களின் வாழ்க்கை,​​ கல்வி,​​ வேலைவாய்ப்பு குறித்து அதிகமாக புள்ளிவிவரங்களை அடுக்க வேண்டியதில்லை.​ சொல்லாமலே புரியும்.

கனிம வளத்தைக் கொள்ளையடிக்க வரும் பெரும் நிறுவனங்கள் ஆட்சியாளர்களை தன்வயப்படுத்தத் தவறுவதில்லை.​ ஆட்சியாளர்கள் மக்களிடமிருந்து விலகி ​ விலகிப் போய்,​​ அடுத்த தேர்தலுக்கு மட்டுமே இறங்கி வருகிறார்கள் என்பதுதான் இம்மாநில அரசியல் நிலவரம்.​ ​

நிலைமை இப்படி இருக்கையில்,​​ இந்த மாநிலத்தில் இத்தனை கட்சிகள் ஆதரவுடன் ஒரு கட்சி தனியாக ஆட்சி அமைத்தாலோ அல்லது கூட்டணி ஆட்சி அமைத்தாலோ பல்வேறு சமரசங்களுக்கு ஆளாவது தவிர்க்க முடியாதது.​ சமரசங்கள் என்றால்,​​ அரசியல் அகராதியில் ஊழல் என்பதைத் தவிர வேறு என்ன?​ ​

தேசியக் கட்சியான பாஜகவுக்கு உண்மையாகவே மாநிலத்தில் நிலையான ஆட்சி மக்கள் நலன் ஆகியவைதான் முக்கியம் என்றால்,​​ ஆட்சியில் பங்கு கொள்ளாமல் அதே நேரத்தில் ஒரு கண்காணிப்பாளரைப் போல செயல்பட வேண்டும்.​ தவறு நேரும் எந்த நிமிடத்திலும் ஆதரவை விலக்கிக் கொண்டுவிடத் தயாராக இருக்க வேண்டும்.​ தான் ஆதரவை விலக்கிக் கொண்டால் காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துவிடுவார்களே என்ற எண்ணத்தில் தவறுகளைச் சகித்துக் கொள்ளுமேயானால்,​​ அந்த மாநிலத்தில் பல "மது கோடா'-க்கள் வளம் பெறுவார்கள்.​ மக்கள் வளம் பெற மாட்டார்கள்.
நன்றி : தினமணி

புதிய கட்டண குறைப்பு: ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் நிறுவனம் புதிய கட்டண குறைப்பினை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில், அந்நிறுவனத்தின் சி.டி.எம்.ஏ., மற்றும் ஜி.எஸ்.எம்., வாடிக்கையாளர்கள் எவருடனும் தொடர்பு கொண்டு பேசுவதற்கு 60 வினாடிக்கு​ 20 காசு கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.​ உள்ளூர் அழைப்புகளுக்கு மாத கட்டணமாக ரூ.​ 27 செலுத்தி நிமிஷத்துக்கு 20 காசு கட்டண வசதியைப் பெறலாம் என்றும் எஸ்டிடி அழைப்பு செய்வோர் ரூ.​ 77 கட்டணத்தை செலுத்தி இந்த வசதியைப் பெறலாம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும், ​ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் அதை 30 நாள்கள் வரை பயன்படுத்தலாம்.​ பிற நிறுவன மொபைலுடன் தொடர்பு கொண்டு பேசினால் வாடிக்கையாளர் தேர்வு செய்துள்ள திட்ட அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


Tuesday, December 29, 2009

வேலியே பயிரை மேய்ந்தால்...

ஹரியாணா மாநிலத்தில் 14 வயது பள்ளி மாணவியும், டென்னிஸ் வீராங்கனையுமான ருசிகாவை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக முன்னாள் டி.ஜி.பி. ரத்தோருக்கு சம்பவம் நடந்து 19 ஆண்டுகளுக்குப் பிறகு 6 மாதக் கடுங்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சமீபத்தில் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வெளியான இந்தச் செய்தி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் வேலியே பயிரை மேய்ந்ததுதான்.

ஒரு மூத்த போலீஸ் அதிகாரி, அதுவும் மக்களின் காவலனாக இருக்க வேண்டியவர், ஏதும் அறியாத மாணவியை தனது வக்கிர எண்ணங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நடந்தது 1990}ம் ஆண்டு. அப்போது ரத்தோர், இன்ஸ்பெக்டர் ஜெனரல் என்ற உயர்ந்த பதவியில் இருந்துள்ளார். விஷயம் வெளியில் தெரிந்தவுடன் அதை மூடிமறைக்க ரத்தோர் கையாண்ட வழி என்ன தெரியுமா? ருசிகாவின் குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததுதான். ருசிகாவின் சகோதரர் அஷுவின் கைகளைக் கட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீஸôர் துன்புறுத்தியுள்ளனர். வழக்கை வாபஸ் வாங்காவிட்டால் கொலை செய்துவிடுவதாகவும், குடும்பத்தையே அழித்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

"மழை விட்டும் தூவானம் விடவில்லை' என்பதைப்போல குடும்பத்தாரை மிரட்டி, துன்புறுத்தியது கண்டு மனம் வெறுத்த ருசிகா, சம்பவம் நடந்து 3 ஆண்டுகளுக்குப் பின் 1993}ம் ஆண்டு டிச. 28}ம் தேதி விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான போலீஸ் உயர் அதிகாரியை மாநில அரசு என்ன செய்திருக்க வேண்டும்? வழக்கு முடியும் வரை அவரை சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும்.

குற்றச்சாட்டு உண்மை என்பது தெரியவந்தால் அவரைப் பதவி நீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக ரத்தோருக்கு கூடுதல் டி.ஜி.பி., மாநில டி.ஜி.பி. என பதவி உயர்வு கொடுத்துக் கௌரவித்துள்ளது.

பள்ளி நிர்வாகம் வெளியேற்றிவிட்ட நிலையில் சமுதாயத்தில் இனி நிம்மதியாக வாழ முடியாது என்ற சூழலில், அந்தச் சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ளார். மகள் இறந்துவிட்டாலும், அதற்குக் காரணமான குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என நினைத்த ருசிகாவின் பெற்றோர், பல்வேறு இடையூறுகளுக்கு இடையே வழக்கைத் துணிச்சலுடன் நடத்தி வந்துள்ளனர்.

நீதிமன்றத் தலையீட்டின் பேரிலேயே ரத்தோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும் சம்பவம் நடந்து 9 ஆண்டுகளுக்குப் பின்.

இந்த வழக்கில் இப்போது, அதாவது 19 ஆண்டுகள் கழித்துத் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு 6 மாதம் கடுங்காவல்; ஆயிரம் ரூபாய் அபராதம். சட்டத்தின் பாதுகாவலன் செய்த படுபாதகச் செயலுக்கு வழங்கப்பட்ட இந்தத் தண்டனை வெறும் கண்துடைப்புதான்.

ஏற்கெனவே பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு ஓய்வுபெற்றும் ராஜவாழ்க்கை வாழ்ந்து வரும் ரத்தோருக்கு இந்தத் தண்டனை ஒன்றும் பெரிதல்ல. இது கீழ் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புத்தானே! உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் இருக்கவே இருக்கிறது. ஜாமீன் பெற்றுவிட்டால் சிறைவாசத்தைக் கழிக்காமலே காலத்தை கழித்துவிடலாம் என்ற மனப்பாங்கில்தான் அவர் இருப்பார்.

இப்போது நம்முள் எழும் கேள்வி இதுதான். பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு ஆளான ஓர் அதிகாரி, பதவி உயர்வு பெற்றதுடன் எந்தப் பிரச்னையுமின்றி ஓய்வுபெற்றது எப்படி என்பதுதான்.

கிரிமினல் குற்றவாளிகளுக்கும் போலீஸôருக்கும் தொடர்பு இருப்பதுபோலவே, கிரிமினல் எண்ணம் கொண்ட போலீஸôருக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதுதான் இதுபோன்ற செயல்களுக்குக் காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. மற்றொருபுறம் சட்டத்தில் உள்ள ஓட்டைகளே இதற்குக் காரணமாக இருக்கலாம்.

சட்டத்தின் காவலனே குற்றவாளிக் கூண்டில் நின்றால் தண்டனை கடுமையாகத்தானே இருக்க வேண்டும். ஆனால், அதிகார வர்க்கத்தினருக்கு அரசியல்வாதிகளே கேடயமாக இருந்து காப்பாற்றி வருகின்றனர் என்பதுதான் ஜீரணிக்க முடியாத உண்மையாகும்.

குற்றச்சாட்டுக்கு ஆளான ரத்தோர் மீது துறை ரீதியில் விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்ததாகவும், ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஓய்வுபெற்ற மற்றொரு போலீஸ் உயர் அதிகாரியான ஆர்.ஆர்.சிங் கூறியுள்ளார். அவரைக் காப்பாற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று கூறிவரும் அரசியல் தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் பழிசுமத்தி வருகின்றனர். இதனால் எந்தப் பயனுமில்லை.

ருசிகா வழக்கில் நீதிமன்றம் மூலம் நியாயம் கிடைக்க 19 ஆண்டுகள் காலதாமதம் ஆகியுள்ளதைக் காணும்போது அவருக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

போலீஸ் அதிகாரி ரத்தோர், ருசிகாவிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு மட்டும் ஆளாகவில்லை. அவர் தற்கொலை செய்துகொள்ளவும் தூண்டியிருக்கிறார்.

எனவே இந்த வழக்கைப் புதிதாகக் கையிலெடுத்து விசாரித்து அவருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தால் எந்தவிதமான குற்றச்செயல்களில் ஈடுபட்டாலும், அரசியல் செல்வாக்கு இருந்தால் தண்டனையின்றித் தப்பிவிடலாம் என்ற நிலை இருக்குமானால், குற்றங்கள் அதிகரிக்குமே தவிர குறைந்துவிடாது.

இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க வேண்டுமானால், சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்ற நிலை உருவாக வேண்டும். இதற்கு சட்டங்களையும் நீதிமன்ற நடைமுறையிலும் தேவையான மாற்றங்களைக் கொண்டுவருவதுதான் ஒரே வழி.
கட்டுரையாளர் : ஜெ.ராகவன்
நன்றி : தினமணி

வரவேற்கத்தக்க முடிவு

பென்னாகரம் இடைத்தேர்தலைத் தள்ளிவைப்பதும் என்றும், தேர்தலுக்கான மறுதேதி பிறகு அறிவிக்கப்படும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகத்தின் அரசியல் கட்சிகள் பலவற்றின் கோரிக்கையும் பொங்கல் பண்டிகைக் காலத்தில் இத்தேர்தல் நடத்தப்படக்கூடாது என்பதுதான்.

மாநிலத் தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில், 'இடைத்தேர்தல் தேதியை மாற்றி அமைத்தால், அதுவே தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்' என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ.தங்கபாலு தெரிவித்த கருத்துக்கு திமுக சார்பில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்முடி ஆதரவு தெரிவித்துள்ளார்.

தீபாவளிப் பண்டிகையின்போது வாழ்த்துத் தெரிவிக்காமல், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு மட்டுமே வாழ்த்துத் தெரிவிப்பவர் முதல்வர் கருணாநிதி. அதிலும் குறிப்பாக தை முதல் தேதிதான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்தவர். அப்படியிருக்க, தேதியை மாற்ற வேண்டாம் என்று திமுக சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்து ஆச்சரியம்தான். இருப்பினும், பென்னாகரம் தொகுதியில் பாமகவுக்குக் கணிசமான செல்வாக்கு இருப்பதையும், அவர்கள் ஏற்கனவே இத்தொகுதியில் இறங்கிப் பணியாற்றத் தொடங்கிவிட்டனர் என்பதையும் பார்க்கும்போது, இத்தேர்தலைத் தள்ளிவைக்காமல் சீக்கிரம் முடித்துவிட திமுகவின் அரசியல் தந்திரம் தெரிகிறது.

இந்தக்கூட்டம் நடத்தப்படும் முன்பாகவே, தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்த கட்சிகள் தெரிவ்த்த சில காரணங்களில் ஒன்று இது- வாக்குகளை விலைக்கு வாங்கும் கட்சியினர் பணப்பட்டுவாடாவை பொங்கள் இனாமாக விநியோகிக்கும்போது இதைப்போலீசார் தடுப்பதோ அல்லது பணத்தைப் பறிமுதல் செய்வதோ இயலாத காரியமாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், பணம் கொடுக்கும் கட்சிகளை யாரும் தடுத்துவிட முடியாது என்பதைக் கடந்தகால இடைத்தேர்தல்களில் பார்த்தாகிவிட்டதாலும் தேர்தல் இனாம் அல்லது பொங்கல் இநாம் கேட்டும் வாங்கும் அளவுக்கு வாக்காளர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு தொடங்கிவிட்டது என்பதாலும் இது ஒரு முக்கிய காரணமாகச் சொல்லும்படியாக இல்லாமல் போனது.

ஜனவரி 6-ம் தேதி தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அறிவிக்கப்படவுள்ள நலத்திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இந்த இடைத்தேர்தலின் வெற்றியில் குரிப்பிடத்தக்க வேறுபாட்டை உருவாக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் வரதராஜன் குறிப்பிட்டுள்ள கருத்து அரசியல் ரீதியில் ஏற்புடையதே.

இந்த விவகாரங்கள் ஒருபக்கம் இருந்தாலும், தமிழகத்தின் மிக முக்கியமான பண்டிகை பொங்கள். அதுவும் மூன்று நாளைக்குக் கொண்டாடப்படுகின்ற திருவிழா. இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மக்கள் அனைவரும் வியாபாரம் மற்றும் பண்டிகைக்கான கொள்முதல்களில் பரபரப்பாக ஈடுபடுவது இந்த நேரத்தில்தான். எல்ல வியாபாரிகளும் தங்கள் நிறுவனங்களை இரவு 10 மணிக்கு மேலும் கூட திறந்து வைத்திருந்து வியாபாரம் பார்த்துவிட ஆர்வம் காட்டும் தருணம் இது. பொங்கல் பண்டிகைக் காலத்தில் இடைத்தேர்தல் நடத்தினால்,அத்தனை வியாபாரமும் பாதிக்கும்.

மேலும், தேர்தலுக்காகக் களப்பணி ஆற்ற வேண்டிய தொண்டர்கள் அனைவருமே உள்ளூர் மக்கள். இவர்கள் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள்.

இடைத்தேர்தலில் எல்லா கட்சித் தொண்டர்களும் தங்கள் தொழிலை ஒதுக்கிவிட்டு தேர்தல் கள்த்தில் குதிப்பது ழக்கம்தான் என்றாலும், மற்ற நாள்களைக் காட்டிலும், பண்டிகைக் காலத்தில் இவ்வாறு அனைவரும் தங்கள் தொழிலை ஒதுக்கிவிட்டு தேர்தல் கள்த்தில் குதிப்பது வழக்கம்தான் என்றாலும், மற்ற நாள்களைக் காட்டிலும், பண்டிகைக் காலத்தில் இவ்வாறு அனைவரும் தங்கள் தொழிலை விட்விட்டு அரசியல் களத்தில் குதிப்பதால் மக்களுக்குத்தான் அதிக பாதிப்பு. பென்னாகரம் போன்ற சிறிய ஊரில் அத்தனை தையலர்களும் அவரவர் கட்சிக்காகத் தேர்தல் களத்தில் இறங்கிவிட்டால், அப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளுக்கான புதுத்துணியைத் தைப்பது எங்கே? ஒருவேளை, போட்டியிடும் கட்சிகள் தங்கள் தொழிலாளர் அணியின் தையலர்கள் அனைவரையும் அழைத்துவந்து இலவசத் துணி, இலவசமாகத் தைத்துத் தரும் பணியைச் செய்தால் அதைத் தேர்தல் ஆணையம் எவ்வாறு தடுக்கும்? இதுபோன்றுதான் எல்லா வேலைகளிலும் தொழிலாளர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு, பண்டிகை கொண்டாடும் ஆர்வத்துக்குத் தடையாக அமையும். வீட்டுக்கு வெள்ளை அடிக்க ஆள் கிடைக்காது.

சென்ற ஆண்டு தமிழக அரசு சார்பில் பொங்கலுக்கு அரிசி, வெல்லம் எல்லாமும் இலவசமாகத் தரப்பட்து. இப்போது இடைத்தேர்தல் நடைபெறும் நேரத்தில் இந்தச் சலுகையை அவர்களுக்கு அளிக்க முடியாது. இதற்காகத் தேர்தல் முடிந்த பிறகு பொங்கல் அரிசி,. வெல்லம் கொடுத்து, தனியாக ஒருநாள் பொங்கலிட்டுக் கொண்டாட முடியமா?

இப்பிரச்சனையில் 'தேர்த்ல் தேதியை மாநில அரசுகளிடம் கலந்து ஆலோசிப்பதில்லை' என்று முதல்வர் கருûணாநித் கூறியிருக்கிறார். ஏன் இத்தகைய நடைமுறை இல்லாமல் போனது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

மாநிலத்தில் தேர்தல் ஆணைய அலுவலகம் மற்றும் அதற்கான அதிகாரிகள் இருக்கும்போது, ஒரு தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்துவதற்கான தேதியை மாநில அரசுடன் கலந்து ஆலோசிப்பதில் என்ன தவறு இருக்க முடியம்? தேதியை நிர்ணயிக்கும் உரிமையைத் தேர்தல் ஆணையம் விட்டுக் கொடுக்க வேண்டியதேயில்லை. ஆனால் இரண்டு மூன்று தேதிகளை மட்டும் தெரிவிக்கும்படி மாநில அரசைக் கேட்டாலும் போதுமே! தொகுதி இடம்பெற்றுள்ள ஒரு மாநில அரசு, இந்த அளவுக்குக்கூட கலந்தோசிக்க உரிமை பெற்றிருக்கவில்லை?

இத்தனை கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்த பின்னர் அனைத்துக் கட்சிகளையும் அழைத்துக் கருத்துக்களைக் கேட்டிருக்கும் மாநிலத் தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தாவின் நடவடிக்கையும், தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முடிவும் சரியானதே. இருப்பினும், இடைத்தேர்தல் தேதியைத் தீர்மானிக்கும்போது மாநில அரசின் கருத்துக்களைக் கேடடறிவதை இனியாகிலும் தேர்தல் ஆணையம் வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். இது புதிய நடைமுறையே என்றாலும், இதை மேற்கொள்வதால் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு எந்த கௌரவக் குறைச்சலும் ஏற்பட்டுவிட்டது.
நன்றி : தினமணி

மொபைல் போனை அறிமுகப்படுத்துகிறது கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனம் 2010ஆம் ஆண்டில் மொபைல் விற்பனையில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆண்ட்ராய்ட் என்ற மொபைல் போனுக்கான இயங்குதள மென்பொருளுடன் வெளியாகவிருக்கும் இந்த மொபைல் போன்களுக்கு நெக்சஸ் ஒன் என்று பெயரிடப் பட்டுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன. கூகுள் நிறுவனத்துக்காக மொபைல் போனை தாய்வான் நாட்டை சேர்ந்த எச்.டி.சி., மொபைல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வெளியிடவிருக்கிறது என தொழில்நுட்பம் சம்பந்தப்பட் டெக் கிரன்ச் என்ற பிளாக் தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்


Monday, December 28, 2009

சுமக்கிறவனுக்குத்தான் வலி

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விலைவாசி பிரச்னைக்காக அவைத் தலைவரின் உள்வட்டத்திற்குள் நுழைந்து கூச்சல் போட்டதற்குக் காரணம்,​​ தேர்ந்தெடுத்த மக்கள் தங்களைப் பார்த்து சங்கடமான கேள்விகளைக் கேட்டுவிடக்கூடாதே என்ற எண்ணத்தினால்தான்.​ பத்திரிகைகளும் ஊடகங்களும் விலைவாசி உயர்வில் இவர்கள் காட்டிய அதீத அக்கறையைக் கண்டு,​​ நல்லெண்ணம் கொண்டுவிடுவார்கள் என்பதால்தான்.​ ​

ஆனாலும்,​​ மத்திய அரசு இதைத் தவறாகப் புரிந்துகொண்டதாலோ அல்லது மிகச் சரியாகவே புரிந்துகொண்டதாலோ என்னவோ, நாடாளுமன்ற உணவுக்கூடத்தில் சப்பாத்தி ஒரு ரூபாய்,​​ டீ ஒரு ரூபாய்,​​ சாப்பாடு ரூ.12.50,​ பிரியாணி ரூ.22 என்று - பாவம் வறுமையில் பரிதவிக்கும் மக்களவை உறுப்பினர்களுக்காக குறைந்த விலையை நிர்ணயம் செய்தது.​ பொதுச் சந்தையில் எந்தவொரு பொருளின் விலையும் ஒரு பைசாகூட குறையவில்லை.

இது போதாதென்று,​​ மாநில அரசுகள் விலைவாசியைக் கட்டுப்படுத்தப் பாடுபட வேண்டும் என்று மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் சொல்ல,​​ மத்திய அரசின் தவறான கொள்கையால்தான் விலையேற்றம்; இதை மாநில அரசின் மீது தள்ளிவிடக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பிரகாஷ் காரத் பதிலடி கொடுக்க,​​ ஒரு சொற்போர் நடந்துகொண்டிருக்கிறது.​ இதனால் எந்தப் பொருளின் விலையும் ஒரு ரூபாய் கூட குறையப் போவதில்லை.

ஒரு பக்கம் 9 சதவீத வளர்ச்சி என்கிறது மத்திய அரசு.​ விலைவாசி கட்டுக்குள் இருக்கிறது என்றும் கூறுகிறது.​ ஆனால் பொருள்களின் விலையோ தாறுமாறாக உயர்ந்துகொண்டே போகிறது.​ இந்திய அரசு விலைவாசி உயர்வை மொத்தவிற்பனை விலைப் பட்டியல் ​(ஹோல்சேல் பிரைஸ் இன்டக்ஸ்)​ மூலம் கணக்கிடுகிறது.​ மொத்தவிற்பனை விலைப் பட்டியல் வாரம் தோறும் கணக்கிடப்பட்டாலும்கூட,​​ இதன் மூலம் கிடைக்கும் விலைஉயர்வு சராசரியாக 0.3 சதவீதமாகவே இருக்கிறது. ஏனென்றால்,​​ மொத்தக் கொள்முதல் செய்து அதைப் ​ பதுக்கி,​​ அல்லது சில்லறை வணிகமாக மாற்றப்படும்போதுதான் ஒரு பொருளின் விலை குறைந்தபட்சம் 100 சதவீதத்திலிருந்து 400 சதவீதம் வரை உயர்கிறது.

அரசு வெளியிடும் நுகர்வோர் விலைப் பட்டியலைப் பார்த்தாலே இந்த உண்மை தெளிவாகத் தெரியும்.​ ஒவ்வொரு மாதமும் வெளியாகும் இந்தப் பட்டியலில் விலைஉயர்வு என்பது 9 முதல் 13 சதவீதம் வரை உள்ளது.

விலைவாசி உயர்வைக் கணக்கிடும்போது குறைந்தபட்சம் 435 வகைப் ​ பொருள்களின் விலையைக் கணக்கிடுகின்றனர்.​ இதில் அதிக முக்கியத்துவம் தரும் பொருள்ககளான-​ மின்சாரம்,​​ பெட்ரோலியப் பொருள் போன்றவைகளின் விலை மாற்றமின்றி இருக்கின்றன.​ ஆனால் கணக்கிடுவதில் குறைந்த முக்கியத்துவம் பெறும் காய்கறிகள்,​​ இறைச்சி போன்ற உணவுப் பொருள்களின் விலை சந்தையில் தாறுமாறாக உயர்ந்து கிடக்கிறது.​ இதனால்தான் விலைவாசி கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று அரசு சொன்னாலும்,​​ நடுத்தரக் குடும்பத் தலைவனின் கையைக் கடிக்கிறது.

சாதாரணமாக இந்தியர்கள் உணவுக்காகத் தங்கள் வருவாயில் 42 சதவீதத்தைச் ​ செலவழிக்கின்றனர்.​ போக்குவரத்துக்கு 9 சதவீதமும்,​​ பொழுதுபோக்குக்கு 8 சதவீதமும் செலவிடுகின்றனர்.​ மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துகொண்டே வருகிறது.​ இதில் உணவுப் பொருள்களின் விலை கூடிக்கொண்டே வந்தால்,​​ அவர்கள் தங்கள் சம்பளத்தில் பெரும்பகுதியை உணவுக்கே கொடுத்துவிட்டால்,​​ மற்ற செலவுகளுக்கு என்ன செய்வார்கள்.​ இவர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்கும்,​​ தங்கள் மருத்துவச் செலவுக்கும்,​​ சேமிப்புக்கும் என்ன செய்வார்கள்?

தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகளில் விற்கப்படும் கிலோ ஒரு ரூபாய் அரிசியை அனைத்துக் குடும்பங்களுமே வாங்கி,​​ அதைத்தான் பயன்படுத்துகிறார்கள் என்பதை நிஜம் என்றே வைத்துக்கொண்டாலும்,​​ எண்ணெய்,​​ பருப்பு,​​ மிளகாய்,​​ மிளகு,​​ பூண்டு,​​ வெங்காயம் இவற்றின் விலைஉயர்வு சாதாரண குடும்பத்துக்குத் தாளமுடியாத சுமையாக இருக்கிறது.​ தமிழ்நாட்டில் அனைவரும் ஒரு ரூபாய் அரிசிதான் வாங்குகிறார்கள் என்றால்,​​ பொன்னி அரிசியின் விலை வாங்குவார் இல்லாததால் குறைந்திருக்க வேண்டுமல்லவா,​​ 25 கிலோ சிப்பம் விலை ரூ.1000-த்தை நெருங்குகிறதே ஏன்?​ ​

கடந்த ஆறு மாதங்களில் சமையல் எண்ணெய்,​​ பருப்புவகை,​​ அரிசி,​​ கோதுமை,​​ காய்கறிகள் விலை 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.​ விலை உயர்வு என்பது,​​ தேவை -​ உற்பத்தி இரண்டுக்கும் இடைவெளி பெருகினால்தான் உண்டாகும் என்ற பொருளாதார வாய்ப்பாடுகள் எல்லாமும் பொய்யாகும் வகையில் இந்த விலை உயர்வு நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் விந்தையிலும் விந்தை.

2008-09 சாகுபடி ஆண்டுக்கான விளைச்சல் பட்டியலில் 233 மில்லியன் "ரெக்கார்டு' உற்பத்தி என்று அரசு சொல்கிறது.​ அதாவது அரிசி 99 மில்லியன் டன்,​​ கோதுமை 80 மில்லியன் டன்,​​ 39 டன் தானிய வகைகள்,​​ 15 டன் பருப்பு வகைகள் என்று புள்ளிவிவரம் தரப்படுகிறது.​ இதில் பருப்பு வகைகள் மட்டும் தேவையைவிட 4 மில்லியன் டன் பற்றாக்குறை நிலவுவதாக வர்த்தகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும்,​​ மற்றவர்கள் யாரும் பற்றாக்குறை இருப்பதாகச் ​ சொல்லவில்லை.​ அப்படியானால் ஏன் விலை உயர்கிறது.​ அல்லது யார் விலையை உயர்த்துகிறார்கள்?

ஓட்டல்கள் தங்கள் உணவுப் பொருள்களின் விலையை உயர்த்திவிட்டன.​ டீக் கடைகளில் ஒரு கோப்பை தேநீர் விலை கிராமப்புறங்களில் ரூ.4 ஆகவும் நகரங்களில் ரூ.5 ஆகவும் உயர்ந்துவிட்டது.​ மற்ற உணவுப் பண்டங்களின் விலையைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.​ அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு செய்தி வந்தவுடன் முதலில் உயர்ந்தது வீட்டு வாடகை என்பது,​​ வாடகைக்குக் குடியிருப்போருக்குத் தெரியும்.

இதிலும் ராஜதந்திரிகளாகச் செயல்படும் பெரும் நிறுவனங்கள் தங்கள் நொறுக்குத்தீனி பாக்கெட்டுகளின் ​ விலையை உயர்த்தாமல் அதில் உள்ள எடையை மட்டும்,​​ 100 கிராம் என்பதை 80 கிராமாகக் குறைத்து மாயாஜாலம் காட்டுகின்றன.​ முன்பெல்லாம் 250 கிராம் இருந்த பாக்கெட்டுகள் எல்லாமும் இப்போது 200 கிராம் பாக்கெட்டுகளாக மாறி ரொம்ப காலமாகிறது.​ நுகர்வோர்தான் பாவம்,​​ அரை கிலோ பாக்கெட் விலையில் பாதிதான் கால்கிலோ பாக்கெட் விலையும் என்று நினைத்து ஏமாறும் நுகர்வோர் அதில் அச்சிட்டுள்ள எடையைப் பார்த்தால் தெரியும்,​​ ஏமாந்துகொண்டிருப்பது.

​ மாதம் ஒரு இடைத்தேர்தல் வந்தால் ஒழிய சராசரி இந்தியன் இன்றைய விலைவாசியில் வாழ வழியே இல்லை போலிருக்கிறதே!
நன்றி : தினமணி