Monday, August 24, 2009

அவலை நினைத்து...

குடிசைப் பகுதிகளே இல்லாத இந்திய நகரங்கள் என்கிற கனவு இன்று நேற்று எழுந்ததல்ல. சுதந்திரம் அடைந்த நாள் முதல், ஆட்சியில் அமர்ந்த அத்தனை மத்திய, மாநில அரசுகளும் தங்களது லட்சியமாகத் தொடர்ந்து அறிவித்து வரும் விஷயம்தான் இது.

குறிப்பாக, 1991-ல் பொருளாதாரச் சீர்திருத்தம், தாராளமயம் என்றெல்லாம் மத்திய அரசு முனைப்புடன் செயல்படத் தொடங்கிய பிறகு குடிசைப் பகுதிகள் அசுர வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கினவே தவிர குறையவில்லை. தெருவோரம் பலர் பட்டினியில் மடியும்போது, உணவுக் கிடங்குகள் நிரம்பி வழிவதால் உணவுத் தன்னிறைவு பெற்றிருக்கிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் போலித்தனம் போன்றதுதான், குடிசைப்பகுதிகள் நிறைந்த ஒரு நாடு உலக வல்லரசு என்று அறிவித்துக் கொள்வதும்.

சமீபத்திய நிதிநிலை அறிக்கையில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் குடிசைப் பகுதிகளே இல்லாத இந்தியாவை உருவாக்க ரூ. 3,973 கோடியை ஒதுக்கி இருப்பது என்பது இல்லாத ஊருக்குப் போகாத வழியைத் தேடும் முயற்சி என்று அவருக்கே தெரியும். பண ஒதுக்கீடு மட்டுமே இந்தப் பிரச்னைக்கு தீர்வாக அமையாது என்பதும் அவருக்குத் தெரியாததல்ல.

குடிசைமாற்றுத் திட்டங்கள் மத்திய அரசால் 1956 முதலே அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு இந்த விஷயத்தில் இந்தியாவுக்கே முன்மாதிரியாகத் திகழ்ந்து 1970-ல் இராம. அரங்கண்ணலைத் தலைவராகக் கொண்டு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தை உருவாக்கிக் குடிசையில் வாழ்ந்தவர்களை அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழ வழி செய்தது. தமிழக அரசின் முயற்சி நிவாரணமாக அமைந்ததே தவிர இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.

2007-ல் வெளியிடப்பட்ட ஒரு புள்ளிவிவரப்படி, சுமார் இரண்டரைக் கோடி குடும்பங்கள் குடிசைகளில் வாழ்கின்றன. குடும்பத்துக்கு நான்கு பேர் என்று எடுத்துக் கொண்டாலும் குடிசையில் வாழ்வோரின் எண்ணிக்கை குறைந்தது 10 கோடிக்கும் அதிகம். ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் தனது அறிக்கையில், பெரு நகரங்களிலும், மாநிலத் தலைநகரங்களிலும் குடிசைப் பகுதிகளில் வாழ்பவர்களின் எண்ணிக்கை மட்டுமே 12 கோடி என்று கூறுகிறது. கிராமப்புறங்களில், குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர், இப்போதும் அதிக அளவில் குடிசைகளில்தான் வாழ்கிறார்கள்.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறையின் அமைச்சர் குமாரி ஷெல்ஜா, ராஜீவ் ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ், நகர்ப்புறக் குடிசைப் பகுதி வாழ் மக்களுக்கு அவர்கள் தற்போது வசிக்கும் இடத்தில் சொத்துரிமை அளிக்கப்பட்டு, அவர்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் தரப்பட்டு அங்கே வீடு கட்டிக்கொள்ள வழிகோலப்போவதாக அறிவித்திருக்கிறார். இந்த விஷயத்தில், மாநகராட்சி, மாநில அரசு, தனியார் வீட்டு வசதி நிறுவனங்கள் இணைந்து செயல்பட முயற்சிக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்கள் அந்தப் பகுதியின் தாதாக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் தனி உரிமையாக உள்ள இடங்களில் குடியிருக்கிறார்கள் என்ற உண்மை, பாவம் அமைச்சருக்குத் தெரியாது. சென்னை மாநகரத்தில் மட்டும் குடிசைப் பகுதிகளில் வசிப்போரின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகம். நகரத்தின் மையப் பகுதிகளான நுங்கம்பாக்கம், தியாகராய நகர், கலைஞர் நகர் பகுதிகளில் குடிசைகளின் வாடகை சுமார் ரூ. 1,000 முதல் ரூ. 2,000 வரை என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

மாநில அரசு, குடிசைப் பகுதிகளில் வாழ்வோருக்கு அவர்கள் வாழும் இடத்திற்கு சொத்துரிமை தருவதாக இருந்தால் மத்திய அரசு அதற்கு உதவி செய்யும் என்றும் சிறுபிள்ளைத்தனமாகக் கூறி இருக்கிறார் அமைச்சர். அப்படி ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டால் குடிசைப் பகுதிகள் அரசியல் தலைவர்களின் பினாமிகளாகச் செயல்படும் தாதாக்களின் தனிச்சொத்தாகித் தனியார் ரியல் எஸ்டேட்காரர்களிடம் விலைபேசப்படும். அங்கே குடியிருக்கும் அப்பாவி தினக்கூலிகள் வேறு இடத்தில் குடிசை போடவோ, தெருவோரம் குடும்பம் நடத்தவோ நேரிடும்.

நகர்ப்புறக் குடிசைப் பகுதிகளின் பெருக்கத்துக்கு அடிப்படைக் காரணம், கிராமப்புற வேலையின்மைதான். கிராமப்புறங்களில் விவசாயம் செழிப்பாக இருந்து, மக்கள் வாழ வழி கிடைத்தபோது நகர்ப்புறங்களில் குடிசைப் பகுதிகள் குறைவாகத்தான் இருந்தன. மேலும், நகர்ப்புற வீட்டு வாடகை குறைந்தது ரூ. 3,000, ரூ. 4,000 என்று உயரும்போது, ரூ. 5,000 வருமானம் உள்ள கீழ் மத்தியதரக் குடும்பங்களேகூடக் குடிசைகளுக்கு மாற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிடுகிறது.

11-வது ஐந்தாண்டுத் திட்டத்தின்படி, 2012-க்குள் இந்தியாவில் இப்போதிருக்கும் குடிசைகளை "கச்சா' வீடுகளாக மாற்ற வேண்டுமானால் அதற்கே ரூ. 3,60,000 கோடி வேண்டும் என்று அரசுக் குறிப்பு கூறுகிறது. வீட்டு வாடகை கட்டுப்படுத்தப்பட்டு, விலைவாசி நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பத்தினரின் சக்திக்கு உள்பட்டு இருந்தால் மட்டுமே நகர்ப்புறங்களில் குடிசைப் பகுதிகள் பரவலாக உருவாவது தடுக்கப்படும். கிராமப்புற முன்னேற்றத்துக்கும், விவசாயத்துக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டால் மட்டுமே நகர்ப்புறம் நோக்கி மக்கள் குடிபெயர்வது தடுக்கப்படும்.

"குடிசைப் பகுதிகள் இல்லாத இந்தியா' என்று கோஷத்தை எழுப்பி விட்டுப் பணத்தை வாரி இறைப்பதால் பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட்டுவிடாது. பிரச்னையின் கௌரவமும், ஆபத்தும் தெரியாமல் நுனிப்புல் மேய்கிறோம் என்பதை அமைச்சர் குமாரி ஷெல்ஜா உணர வேண்டும்!

நன்றி : தினமணி

பழைய கார்கள் விற்பனையில் ஜெனரல் மோட்டார்ஸ் ஆர்வம்

பழைய கார்கள் விற்பனையில் ஜெனரல் மோட்டார்ஸ் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளது. தனது நிறுவனத்தின் கார்களின் செகண்ட் ஹேண்ட் சேஸ்சை 15 ம‌டங்கு அதிகரிக்க முடிவு செய்துள்ளது ஜெனரல் மோட்டார்ஸ் . நாடு முழுவதும் செகண்ட் ஹேண்ட் கார்கள் விற்பனைக்காக 17 அவட்‌லெட்கள் திறந்துள்ளது ஜெனரல் மோட்டார்ஸ். இந்த ஆண்டு முடிவுக்குள் இந்த‌ எண்ணிக்கையை 50ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இது குறித்த பேட்டியளித்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கார்ல் ஸ்லிம் : செகண்‌ட் ஹேண்ட் கார் விற்பனை மார்ச் மாதம் துவக்கப்பட்டது. இதுவரை 100 கார்கள் விற்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் தற்பேததைய நிலவரப்படி 203 டீலர்கள் இருக்கின்றனர். டீலர்கள் எண்ணிக்கையை 2009ம் ஆண்டுக்குள் 260ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
நன்றி : தினமலர்


துபாயில் வீட்டு வாடகை 30 சதவீதம் குறைவு

துபாயில் வீட்டு வாடகை இந்த மாதம் 30 சதவீதம் குறைந்துள்ளது. துபாயில் பரவலாக பல பகுதிகளில் வீட்டு வாடகை கணிசமாக குறைந்துள்ளது. இருப்பினும் சில பகுதிகளில் வீட்டு வாடகை உயர்ந்து வருவதாகவும் ரியல் எஸ்டேட் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஐந்து மாதங்களாக வீட்டு வாடகை சிங்கிள் பெட் ரூம் உள்ள வீடுகளுக்கு 11 சதவீதமும், ஒரு பெட் ரூம் வீடுகளுக்கு 6 சதவீதமும் உயர்ந்திருந்தது என ‌அவர்கள் தெரிவித்தனர். ஜூன், ஜூலை மாதங்களில் சொத்துகள் வாங்கும் திறன் சற்று அதிகமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
நன்றி : தினமலர்


சேமிப்பு கணக்குகள் குறித்த ரகசியங்களை வெளியிட முடியாது : ஸ்விஸ் வங்கி திட்டவட்டம்

சேமிப்பு கணக்குகள் குறித்த ரகசியங்களை வெளியிடமுடியாது என இந்தியாவுக்கு ஸ்விஸ் வங்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஸ்விஸ் வங்கியில் ஏராளமாக கருப்ப பணத்தை இந்தயிவை சேர்ந்த பெரும் புள்ளிகள் பதுக்கி வைத்திருப்பதாக இந்திய அரசியல் கட்சிகள் குறிப்பாக பா.ஜ., சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் ஆரம்பத்தில் ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறித்த விபரங்களையும், கணக்கு விபரங்களையும் வெளியிட தயாராக இருப்பதாக ஸ்விஸ் வங்கி பரபரப்பு தகவல் வெளியிட்டிருந்தது. ஆனால் தற்போது கணக்குகளை வெளியிட முடியாது என அந்தர் பல்டி அடித்துவிட்டது. ஸ்விஸ் நாட்டு சட்டத்தின் படி இப்படி வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறித்த விபரங்களை வெளியிடுவது அத்துமீறல் என தெரிவித்துள்ளது அந்நாடு. மேலும் இந்தியா சர்வ சாதாரணமாக அவர்கள் நாட்டில் உள்ள சில பிரபல‌ங்களின் பட்டியலை கொடுத்து இவர்களில் யாருக்கெல்லாம் ஸ்விஸ் வங்கியில் அக்கவுண்ட் இரு‌க்கிறது என கேட்டால் அதற்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் வங்கிக்கு இல்லை. அண்மையில் பார்லிமென்ட்டில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ‌உரையாற்றுகையில் : ஸ்விஸ் வங்கியில் முடங்கி கிடக்கும் கருப்பு பணத்தை வெளியில் கொண்டு வரப்படும் என்று உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கு திட்டவட்ட மறுப்பு தெரிவித்துள்ள ஸ்விஸ் வங்கி அமெரிக்காவுக்கு இதே விவகாரத்தில் சலுகை அளித்துள்ளது. அமெரிக்காவும் - ஸ்விஸ் வங்கி - யு.பி.எஸ்., ஏ.ஜி., யுடன் ஏற்பட்டுள்ள உடன்பாட்டின் படி அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 4,450 பேரது அக்கவுண்ட் டீடெய்லகளை அளித்துள்ளது.
நன்றி : தினமலர்


கோலா, பெப்சி மீது சீனா குற்றச்சாட்டு

சீன தலைநகரம் பீஜிங்கில் தண்ணீர் மாசுபட, கோக - கோலா மற்றும் பெப்சி நிறுவனங்கள் முக்கிய காரணமாக விளங்குகின்றன என அந்நாடு குற்றம் சாட்டியுள்ளது. மாசுபடுதல் மற்றும் மின்சார பயன்பாடு ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்த சீன அரசு கடும் முயற்சி செய்து வருகிறது. இதற்காக 2006லிருந்து, 2010க்குள் 20 சதவிகிதம் வரை மின் பயன்பாட்டை குறைக்கவும் அந்நாடு திட்டமிட்டுள்ளது. எனினும், இதில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இதற்காக பல்வேறு ஆய்வுகளை அந்நாடு மேற்கொண்டு வருகிறது.
இதேபோல், சுகாதார மாசுபாடு தொடர்பாக, பீஜிங்கில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், தண்ணீரை அதிகமாக மாசுபடுத்தும் முதல் 12 நிறுவனங்களில் கோக -கோலா மற்றும் பெப்சி நிறுவனங்கள் இடம் பிடித்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகளை பீஜிங் வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் வெளியிட்டுள்ளது. மின்சார பயன்பாடு மற்றும் மாசுபடுதல் ஆகியவைகளை கட்டுப்படுத்த 27 நிறுவனங்களை தீவிரமாக கண்காணிக்க அந்த ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான அந்நிறுவனங்கள் புதிய திட்டங்களை தயாரிக்க வேண்டும் என்றும் அது தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்


Sunday, August 23, 2009

அட்டவணை வாழ்க்கை...!

விஞ்ஞானம் முன்னேறிவிட்ட இன்றைய காலத்தில் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பது யாருக்குமே போதவில்லை. குறிப்பாக, இக்கால பள்ளிக் குழந்தைகளுக்கு நேரம் இறக்கை கட்டிக்கொண்டு பறக்கத்தான் செய்கிறது.

பள்ளிக்கூடம், பாடப் புத்தகம், தொலைக்காட்சி, தூக்கம் இவற்றோடே நாள் முழுவதும் முடிந்துவிடுகிறது. இவற்றைக் கடந்து சிந்திக்க நினைத்தாலும் பிள்ளைகளுக்கு நேரம் இருப்பதில்லை.

"பொருள் தேடி' ஓடும் பெரியவர்களுக்கு இணையாக குழந்தைகளும் நாள் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கின்றனர்.

குழந்தைகளுக்கான நேரத்தை பெற்றோர் அட்டவணை போட்டுத் திட்டமிடுகின்றனர். நகரம், கிராமம் என்ற வித்தியாசத்தையெல்லாம் கடந்து இக் கால குழந்தைகளின் மீது பெற்றோர் திணிக்கும் சுமைகள் அதிகம்.

காலையில் கராத்தே வகுப்பு, நீச்சல், நடனம், பள்ளி முடிந்து வந்தபின்னர் டியூசன், கம்ப்யூட்டர் பயிற்சி, ஹிந்தி, ஸ்போக்கன் இங்கிலீஷ் என வரிசைவைத்து பிள்ளைகளை அனுப்புகின்றனர்.

இந்த தனிப்பயிற்சிகளால் நிறைய பலன் கிடைக்கும் என்றாலும், அவர்களுக்கே தெரியாமல் ஒரு பெரும் இழப்பையும் மாணவர்கள் சந்திக்கின்றனர். ஆம்... புத்தக வாசிப்பு எனும் அருமையான பழக்கத்தை மாணவர்கள் இழந்துவிடுகின்றனர்.

இப்போது முப்பது-முப்பந்தைந்துகளில் இருக்கும் இளைஞர்கள் சிறுவர்களாக இருந்தபோது ஏறத்தாழ அனைவருக்குமே வாசிப்புப் பழக்கம் அறிமுகமாவது ஆகியிருக்கும். அறிவுத்தேடலின் விளைவாக கதை, இலக்கியம், நாடகம், சிறுவர் இதழ்கள் என தேடித் தேடிப் படித்தவர்கள் ஏராளம். நூலகத்தில் காத்திருந்து நல்ல நல்ல நூல்களில் மூழ்கிப் போனவர்கள் பலர்.

ஆனால், இக் கால மாணவர்கள் பெரும்பாலானோருக்கு வாசிப்புப் பழக்கம் இல்லை. அதை அவர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கக் கூட பெற்றோருக்கு மனமில்லை.

பிள்ளைகளை மருத்துவராக, பொறியாளராக ஆக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தவறே இல்லை. ஆனால், பிள்ளைகள் மீது இந்த எண்ணத் திணிப்பு இருக்கக் கூடாது.

அரிதிலும் அரிதாக வாசிப்புப் பழக்கம் உள்ள மாணவர்களையும் கண்டித்து, பாடப்புத்தகத்தை மட்டும் படிக்கச் சொல்வது தவறான முன்னுதாரணம்.

சிறு வயதிலேயே குழந்தைகளை நல்ல நூல்களை வாசிக்கச் செய்வதில் பெற்றோருக்குப் பெரும் பொறுப்பு உள்ளது.

ஒவ்வொரு வீட்டிலும் மாதாந்திர பட்ஜெட்டில் மஞ்சளில் ஆரம்பித்து மாங்காய் தொக்கு வரை இடம்பெறுகிறது. ஆனால், எத்தனை வீடுகளில் புத்தகங்கள் வாங்குவதற்கு என தனியாக பணம் ஒதுக்குகின்றனர்? இத்தனை எதற்கு... செய்தித்தாள் வாங்காத பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர் தெரியுமா?

வெறும் பாடப் புத்தகங்களை மட்டும் படித்தால் இன்றைய போட்டி உலகத்தை மாணவர்களால் எதிர்கொள்ள முடியாது. "ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது'.

இண்டர்நெட் மையங்களுக்கு "சாட்டிங்' செய்ய நாள் தவறாமல் செல்லும் இளைஞர்கள், நூலகத்தின் பக்கம் எட்டிப்பார்ப்பதே இல்லை.

இப்போதெல்லாம் நூலகங்களில் புதிதாக உறுப்பினராகச் சேர்பவர்களில் மாணவர்கள் எண்ணிக்கை வெகு சொற்பம். அரசுப் பள்ளிகள் பெரும்பாலானவற்றிலும் நூலகங்கள் இருந்தும் செயல்படாத நிலையிலேயே உள்ளன.

இதனால், சிறந்த இலக்கிய நூல்கள், கதைகள், சரித்திர நூல்களின் அறிமுகம்கூட தற்போதைய மாணவர்களுக்குக் கிடைக்காமல் போய்விடுகிறது. வாய்ப்புக் கிடைக்காதது ஒருபுறம் இருந்தாலும் பெரும்பாலான மாணவர்கள் மத்தியில் இவற்றைப் படிப்பதற்கு விருப்பமும் இருப்பதாகத் தெரியவில்லை.

கிடைக்கும் சிறிது நேரத்தையும் தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், சினிமா என பிற பொழுதுபோக்கு அம்சங்கள் விழுங்கிவிடுகின்றன.

இந்தச் சூழ்நிலையில், சென்னை, ஈரோடு, மதுரை போன்ற நகரங்களில் நடைபெறும் புத்தகக் காட்சிகள் சற்று ஆறுதலைத் தருகிறது.

விழாக்களில் பரிசுப் பொருள்களுக்குப் பதிலாக புத்தகங்களைக் கொடுக்கலாம் என்பது சிறந்த யோசனை. இதைச் செயல்படுத்த ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.

பிள்ளைகள் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே அவர்களை நூலகத்தில் உறுப்பினராக பெற்றோர் சேர்த்துவிட்டால், அவர்களுக்கு வாசிப்பின் மீது நிச்சயம் ஆர்வம் பிறக்கும். புத்தகங்களைப் படிக்கப் படிக்க, எழுத்தாற்றலும் கைகூடும். வாசிப்பு என்பது பொழுதுபோக்குவதற்கான பழக்கம் அல்ல; அக, புற வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவும், உலகைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

கட்டுரையாளர் : எஸ். ராஜாராம்
நன்றி : தினமணி

கண்ணி வெடி

1993-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பர்கூர் மலைப்பகுதியில் கொடூரன் வீரப்பனின் அட்டகாசம் உச்சகட்டத்தில் இருந்த நேரம். மேட்டூரிலிருந்து மாதேஸ்வரன் மலைக்குச் செல்லும் பாதை கொளத்தூரைத் தாண்டிப் பரந்து விரியும் கவின்மிகு காவிரி மற்றும் பசுமையான மலைப்பகுதியைப் படம்பிடித்துக் காட்டும் பாலாறு செக்போஸ்ட், கர்நாடக மாநிலம் எல்லைத் துவக்கத்தில் அமைந்துள்ளது. அதைத்தாண்டி வனப்பகுதிக்குச் செல்லும் பாதையில் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள், வனத்துறை அலுவலர்களைத் தாங்கிய வண்டி பாலாறு படுகையில் சொரக்காய்மடுவு என்ற இடத்தில் கண்ணி வெடித் தாக்குதலில் சிக்கி 22 உயிர்களைப் பலிகொண்டது. வீரப்பன் அந்த காட்டுப்பாதையில் 14 இடங்களில் வரிசையாக கண்ணிவெடி வைத்திருந்தான். அவ்வளவும் வெடித்தன. திட்டமிட்டு பட்டப்பகலில் தனது வெறிச்செயலை நிறைவேற்றினான்.

இதேபோன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த ஆண்டு ஜூன் 26-ம் தேதி நெஞ்சை உலுக்கும் கொடூரம் நிகழ்ந்தது. காங்கர் மாவட்டம் ராஜநத்த கிராமப் பகுதிகளில் திட்டமிட்ட மாவோயிஸ்ட் தாக்குதலில் காவல் கண்காணிப்பாளர் வினோத்குமார் சௌபே உள்பட 30 கமாண்டோ படையினர் கண்ணி வெடிக்குப் பலியாயினர். கண்ணி வெடிக்குப் பாதுகாப்புப் படையினர் உயிர் பலியாவது புதிதல்ல. அதுவும் மாவோயிஸ்டுகள் தொடர்ந்து பல மாநிலங்களில் காவல்துறையினரையும், பாதுகாப்புப் படையினரையும் எதிர்கொண்டு நடத்திவரும் தாக்குதல் இந்திய இறையாண்மைக்கே ஒரு சவாலாகவும் பெரும் பிரச்னையாகவும் உருவெடுத்துள்ளது.

ராய்பூரை தலைநகராகக் கொண்ட சத்தீஸ்கர் மாநிலம் மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து 2000-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக இயங்கி வருகிறது. பஸ்டார் போன்ற மலைவாழ் மக்கள், பழங்குடியினர் அதிகமாக உள்ள பகுதிகளைக் கொண்டது. இத்தகைய பின்தங்கிய பகுதிகளில் முன்னேற்றத்தின் பலன் விரைவில் கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது. மக்களோடு தொடர்பு கொண்டு பணியாற்ற வேண்டிய அரசு ஊழியர்களின் மெத்தனப்போக்கும் ஊழலும் தான் சில பகுதிகளின் பின்தங்கிய நிலைக்குக் காரணம் என்பதை மறுக்க முடியாது. இத்தகைய சூழ்நிலையில் அவர்களது ஏழ்மையைப் பயன்படுத்தி நியாயமான தேவைகள் பூர்த்தி அடையாது என்றும், அபகரித்தல் தான் ஒரே வழி என்று நிர்வாகத்திற்கு எதிராகத் தூண்டுவதும் பயங்கரவாதிகளுக்கு எளிதாகிவிடுகிறது. சில்லறை ஆதாயத்துக்காக உள்ளூர் அரசியல்வாதிகள் இவர்களை ஆதரிப்பது பிரச்னையை மேலும் வளர்க்கிறது.

1971-ம் ஆண்டு நக்சல்பாரி என்ற மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி அருகில் அமைந்துள்ள கிராமத்தில் இருந்து சிவப்பு பயங்கரவாத பி.டபிள்யூ.ஜி. இயக்கம் நமது நாட்டின் பல மாநிலங்களில் ஊடுருவியது. கிராமப்புறங்களில் விவசாயத்தை நம்பி இருக்கும் மக்களுக்கு உரிய நேரத்தில் பண உதவி என்பது பெரிய பிரச்னை. இந்த நிலையை வைத்து மக்களைச் சுரண்டிப் பிழைப்பு நடத்தும் ஈட்டி வட்டிக்காரர்கள், மந்தமான நிர்வாகம், ஊழலில் தழைக்கும் அரசு ஊழியர்கள் இவை பயங்கரவாத காளான்களை வளர்க்கும் உரங்கள். இத்தகைய சூழலில் இளைஞர்களை தம்வசப்படுத்துவது பயங்கரவாதிகளுக்கு எளிதாகிறது. 1970, 80-களில் தலைதூக்கிப் பரவிய இந்த சிவப்பு ஆதிக்கம் பல மாநிலங்களில் முக்கியமாக மேற்கு வங்கம், பிகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஒரிசா, ஆந்திரம், மகாராஷ்டிரத்தின் சில இடங்களில் வேரூன்றியது. இந்த ஆண்டு முதல் ஐந்து மாதங்களில் பிகார், ஒரிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்த 162 பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் வடஆற்காடு, தர்மபுரி மாவட்டங்களில் பயங்கரவாதம் தலைதூக்கியபோது எடுத்த கடுமையான பல்முனை நடவடிக்கையால் நக்சலைட்டுகள் முறியடிக்கப்பட்டனர். தமிழகத்திலும் ஆந்திர மாநிலத்திலும் எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கை மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக வைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொடைக்கானலில் நவீன் என்ற பிரஷாந்த் மற்றும் இந்த ஆண்டு வெகுநாள்களாக தலைமறைவாக இருந்த சுந்தரமூர்த்தி, தமிழ்வாணன், நொண்டி பழனி போன்றவர்கள் தமிழகப் போலீஸின் "க்யூ' பிராஞ்ச் பிரிவினரின் தீர்க்கமான நடவடிக்கையால் பிடிபட்டனர். மக்களுடைய பிரச்னைகளை முன்வைத்து அவர்களுக்கு நியாயம் கிடைக்க போராட்டம் என்ற போர்வையில் தாக்குதலில் ஈடுபடும் இத்தகைய கொடுமைக்காரர்களை எதிர்கொள்வதில் பல பிரச்னைகள் உள்ளன. பெண்களையும், குழந்தைகளையும் பலிகடாக்களாக முன்வைத்து ஒளிந்து தாக்குதல் நடத்தும் கயவர்களை ஒடுக்கப் பாதுகாப்புப் படையினர் நடத்தும் எதிர்த்தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாக வாய்ப்புள்ளது. அதையே தமக்குச் சாதகமாக வைத்து மேலும் நிர்வாகத்தின் மீது பிரசாரம் செய்வதற்கு கணைத்துளிகள் கிடைத்துவிடுகின்றன. மனித உரிமைகள் பாதுகாப்பு என்று பறைசாற்றிக் கொண்டு அமைக்கப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக களத்தில் இறங்கிப் போராடுவது முடிவில் மறைமுகமாகப் பயங்கரவாதிகளுக்குச் சாதகமாக அமைவது கண்கூடு.

கண்ணி வெடி வைத்து மறைமுகமாகத் தாக்குதல் நடத்துவது கொரில்லா போர் முறையின் முக்கிய அம்சமாகும். போர் தொடுப்பதில் சில விதிமுறைகள் இருக்கின்றன. சம்பிரதாயத்திற்கும் போர் விதிகளுக்கும் கட்டுப்படாத முறையற்ற யுத்தம் கொரில்லா முறைப்போர் எனலாம். இத்தகைய தாக்குதலை முறியடிப்பதற்கு கொரில்லாவினர் தொடுக்கும் அதே முறையைப் பின்பற்றினால்தான் வெற்றியடைய முடியும். பயங்கரவாதிகள் தங்களது பல முயற்சிகளில் ஒருமுறை வெற்றி பெற்றாலும் காவல்துறைக்குப் பெரிய பின்னடைவு. காவல்துறை ஒவ்வொரு முறையும் தாக்குதலைத் தவிர்ப்பதில் வெற்றியடைய வேண்டும். இது சராசரிக் கணக்கை விஞ்சி சாதிக்க வேண்டிய குறியீடு.

எங்கு சம்பவம் நிகழ்ந்தாலும் உடனடியாகச் சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்தனர் என்றுதான் செய்திவரும். அதுதான் மக்களின் எதிர்பார்ப்பும்கூட. ஆனால் கொரில்லா முறையில் போர் தொடுக்கும் பயங்கரவாதிகளை எதிர்கொள்ள சாதாரண நடைமுறைகள் பயன்படாது. அதிலும், வனப்பகுதியிலும், மலைப்பகுதியிலும் ஒளிந்து தாக்குபவர்களைத் திட்டமிட்டு சமயோஜிதத்தோடு எதிர்த்தாக்குதல் நடத்த வேண்டும்.

வனப்பகுதியில் வீரப்பன் நடத்திய தாக்குதலுக்கும், சத்தீஸ்கர் காங்கர் மாவட்டத் தாக்குதலுக்கும் நிறைய ஒற்றுமை காண முடிகிறது. முதலில் பாதுகாப்புப் படையினரை உசுப்பும் விதத்தில் ஒரு சிறிய தாக்குதல் நடத்தி அவர்களை ஈர்ப்பதற்கு பயங்கரவாதிகள் தமது நடமாட்டத்தை ஒரு பகுதியில் வெளிப்படையாகக் காட்டிக் கொள்வார்கள். இவர்களது நடமாட்டம் பற்றிய தகவல், காவல்துறைக்கு வரும். அவர்களும் அரிய சந்தர்ப்பம் கிடைத்தது என்று எதிர்த்தாக்குதலுக்கு விரைந்து செல்வார்கள்.

காவல்துறையின் இந்த அணுகுமுறைக்கு இரண்டு காரணங்கள் உண்டு. கிடைத்த தகவலைச் செயலாக்க வேண்டும் என்ற ஆர்வம். உரிய நேரத்தில் செல்லவில்லை என்றால் ஏன் உடனடியாகச் செயல்படவில்லை என்ற கேள்வி எழும்.

வீரப்பன் பர்கூர் காட்டுப்பகுதியில் அதிரடிப்படை நுழைய முடியாத வகையிலும் பன்முனைத் தாக்குதலுக்கு உள்படுத்தவும் பல இடங்களில் வெடிபொருள்களைப் புதைத்து பேட்டரி மூலம் இயக்குவதற்குத் தயார் நிலையில் வைத்திருந்தான்.

1993-ம் ஆண்டு ஏப்ரல் மாதச் சம்பவத்தில் வீரப்பன் அதிரடிப்படையினரைக் கிளரும் வகையில் அவர்களைப்பற்றி தரக்குறைவாகச் செய்தியைப் பரப்பினான். அவனுக்குத் தெரியும் அதிரடிப்படைக்கு உளவு சொல்பவர்கள் மூலம் இச்செய்தி அவர்களுக்குச் சென்றடையும் என்று. அவன் எதிர்பார்த்ததுபோல் அதிரடிப்படை கண்காணிப்பாளர் தலைமையில் தேடுதல் வேட்டையில் இறங்கினர். வீரப்பன் விரித்த வலையில் சிக்கினர்.

ஜூன் 26-ம் தேதி சத்தீஸ்கரில் நடந்த மாவோயிஸ்ட் தாக்குதலும் இவ்வாறே நிகழ்ந்தது. அவர்களது கை ஓங்கி உள்ள இடம் தாண்டேவாடே என்ற பகுதி. சம்பவத்திற்கு இரண்டு நாள்களுக்கு முன் மதன்வாடா என்ற கிராமத்தில் பாதுகாப்புப் படையினர் புதிய கண்காணிப்பு செக்போஸ்ட் அமைத்திருந்தனர். அந்த செக்போஸ்டிலிருந்து காலைக்கடனுக்குச் சென்ற இரு காவலர்களைக் கடத்திச் சென்றனர். இது தொடர்பாக பாதுகாப்புப் படையினர் பெரிய அளவில் எதிர்த்தாக்குதல் நடத்துவார்கள் என்று மாவோயிஸ்ட்டுகள் காத்திருந்தனர். அவர்களது எதிர்பார்ப்பு வீணாகவில்லை. எஸ்.பி. தலைமையில் பாதுகாப்புப் படையினர் வனப்பகுதிக்கு விரைந்து சென்றனர். கண்ணி வெடித் தாக்குதலில் மாண்டனர்.

பயங்கரவாத எதிர்முனைத் தாக்குதல் மற்றும் வனப்பகுதியில் கொரில்லா தாக்குதல் ஆகியவற்றுக்குப் பயிற்சி அளிக்கும் ராணுவப்பள்ளியில் போதகராக இருக்கும் ஓய்வு பெற்ற ராணுவத் தளவாய் போன்வார் என்பவர் இந்தத் தாக்குதல் நிகழாமல் தடுத்திருக்கலாம் என்றும், காட்டுப்பகுதியில் எதிர்த்தாக்குதல் நடத்தும்பொழுது வாகனங்களை உபயோகப்படுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளார். மேலும் "வி' வடிவில் பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கையாக முன்னேற வேண்டும் என்ற அடிப்படை விதிகள் கடைப்பிடிக்காததைக் குறை கூறுகிறார். எவ்வாறு போக்குவரத்து விதிகள் அனுசரிக்கப்படாவிட்டால் விபத்து நிகழுமோ அவ்வாறு கொரில்லா போர்முறைகள் கடைப்பிடிக்காவிட்டால் இம்மாதிரி உயிரிழப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் இயங்கும் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள், எல்லை கடந்த பயங்கரவாத இயக்கமான லஷ்கர் - இ - தொய்பாவோடு தொடர்பு ஏற்படுத்தியுள்ளனர் என்பது கவலைக்குரிய விஷயம். பயங்கரவாதம் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் பிரச்னை வளர்ந்துவிடுகிறது. முதலில் நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம் காட்டுகிறது. பல உயிர்கள் பலியான பிறகுதான் விழித்துக்கொண்டு செயல்படுகிறது. மேற்கு வங்கம், மிதுனபுரி மாவட்டம் லால்கரில் பாதுகாப்புப் படையினர் எடுத்த வலிமையான நடவடிக்கை இதற்கு எடுத்துக்காட்டு. நிர்வாகத்தை உள்ளே நுழையவிடாமல் அப்பாவிப் பொதுமக்களை முன்னிறுத்தி முதலில் போராடிய மாவோயிஸ்டுகள் முழுமையான அதிரடிப்படையினரின் பதிலடியில் சுருண்டுவிட்டனர்.

பொதுமக்களும் எங்கு பலம் இருக்கிறதோ அங்குதான் சாய்வார்கள். பயங்கரவாதிகள் ஆதிக்கம் அதிகமாக இருந்தால் பயத்தில் காவல்துறையோடு ஒத்துழைக்க அஞ்சுவார்கள். வலிமையான நிர்வாகம் பாதுகாப்புப் படையின் மூலம் பயங்கரவாதிகளை எதிர்த்தால் பொதுமக்கள் நிர்வாகத்தோடு இணைந்து அமைதி ஏற்பட ஒத்துழைப்பார்கள். பஞ்சாப், அஸôம், மேற்கு வங்கம் போன்ற பல மாநிலங்களில் இந்நிலையைக் காண முடியும்.

பலநூதன முறைகளில் பயங்கரவாதிகளால் வெடிமருந்து கையாளப்பட்டு பெருத்த சேதம் விளைவிக்கப்படுகிறது. கடிகாரமுள் மூலம் மின்இணைப்பைக் குறித்த நேரத்தில் ஏற்படுத்தி அதனால் உண்டாகும் பொறி மூலம் வெடிக்க வைப்பது, அழுத்தம் மூலமாகவும் தொலைவில் இருந்து கதிர் அலைகள் மூலமாகவும், செல்போன் மூலமாகவும் கண்ணி வெடிகளை இயக்க முடியும். 1867-ம் ஆண்டு வெடிமருந்தைக் கண்டுபிடித்த சுவீடன் நாட்டைச் சார்ந்த ஆல்பிரட் நோபல் இந்த அளவுக்கு உலகுக்கும் மனித சமுதாயத்துக்கும் அவரது கண்டுபிடிப்பு கேடு விளைவிக்கும் என்று எண்ணியிருக்க மாட்டார். அதனால்தானோ என்னவோ அவரது பெயரில் பலதுறைகளில் கண்டுபிடிப்புகளுக்குக் கொடுக்கப்படும் நோபல் பரிசு உலக அமைதிக்காகவும் அளிக்கப்படுகிறது.

சுதந்திரத்துக்கும் ஒற்றுமைக்கும் ஊறு விளைவிக்கும் பயங்கரவாதத்தை முறியடிக்க ஒருங்கிணைந்த முயற்சி எடுக்க வேண்டும். நிரந்தர விழிப்புணர்வே நமது சுதந்திரம் நிலைப்பதற்கும் நாட்டின் பாதுகாப்புக்கும் நாம் அளிக்கக்கூடிய அர்ப்பணிப்பு.
கட்டுரையாளர் : ஆர். நடராஜ்
நன்றி : தினமணி