Monday, August 24, 2009

அவலை நினைத்து...

குடிசைப் பகுதிகளே இல்லாத இந்திய நகரங்கள் என்கிற கனவு இன்று நேற்று எழுந்ததல்ல. சுதந்திரம் அடைந்த நாள் முதல், ஆட்சியில் அமர்ந்த அத்தனை மத்திய, மாநில அரசுகளும் தங்களது லட்சியமாகத் தொடர்ந்து அறிவித்து வரும் விஷயம்தான் இது.

குறிப்பாக, 1991-ல் பொருளாதாரச் சீர்திருத்தம், தாராளமயம் என்றெல்லாம் மத்திய அரசு முனைப்புடன் செயல்படத் தொடங்கிய பிறகு குடிசைப் பகுதிகள் அசுர வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கினவே தவிர குறையவில்லை. தெருவோரம் பலர் பட்டினியில் மடியும்போது, உணவுக் கிடங்குகள் நிரம்பி வழிவதால் உணவுத் தன்னிறைவு பெற்றிருக்கிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் போலித்தனம் போன்றதுதான், குடிசைப்பகுதிகள் நிறைந்த ஒரு நாடு உலக வல்லரசு என்று அறிவித்துக் கொள்வதும்.

சமீபத்திய நிதிநிலை அறிக்கையில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் குடிசைப் பகுதிகளே இல்லாத இந்தியாவை உருவாக்க ரூ. 3,973 கோடியை ஒதுக்கி இருப்பது என்பது இல்லாத ஊருக்குப் போகாத வழியைத் தேடும் முயற்சி என்று அவருக்கே தெரியும். பண ஒதுக்கீடு மட்டுமே இந்தப் பிரச்னைக்கு தீர்வாக அமையாது என்பதும் அவருக்குத் தெரியாததல்ல.

குடிசைமாற்றுத் திட்டங்கள் மத்திய அரசால் 1956 முதலே அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு இந்த விஷயத்தில் இந்தியாவுக்கே முன்மாதிரியாகத் திகழ்ந்து 1970-ல் இராம. அரங்கண்ணலைத் தலைவராகக் கொண்டு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தை உருவாக்கிக் குடிசையில் வாழ்ந்தவர்களை அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழ வழி செய்தது. தமிழக அரசின் முயற்சி நிவாரணமாக அமைந்ததே தவிர இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.

2007-ல் வெளியிடப்பட்ட ஒரு புள்ளிவிவரப்படி, சுமார் இரண்டரைக் கோடி குடும்பங்கள் குடிசைகளில் வாழ்கின்றன. குடும்பத்துக்கு நான்கு பேர் என்று எடுத்துக் கொண்டாலும் குடிசையில் வாழ்வோரின் எண்ணிக்கை குறைந்தது 10 கோடிக்கும் அதிகம். ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் தனது அறிக்கையில், பெரு நகரங்களிலும், மாநிலத் தலைநகரங்களிலும் குடிசைப் பகுதிகளில் வாழ்பவர்களின் எண்ணிக்கை மட்டுமே 12 கோடி என்று கூறுகிறது. கிராமப்புறங்களில், குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர், இப்போதும் அதிக அளவில் குடிசைகளில்தான் வாழ்கிறார்கள்.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறையின் அமைச்சர் குமாரி ஷெல்ஜா, ராஜீவ் ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ், நகர்ப்புறக் குடிசைப் பகுதி வாழ் மக்களுக்கு அவர்கள் தற்போது வசிக்கும் இடத்தில் சொத்துரிமை அளிக்கப்பட்டு, அவர்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் தரப்பட்டு அங்கே வீடு கட்டிக்கொள்ள வழிகோலப்போவதாக அறிவித்திருக்கிறார். இந்த விஷயத்தில், மாநகராட்சி, மாநில அரசு, தனியார் வீட்டு வசதி நிறுவனங்கள் இணைந்து செயல்பட முயற்சிக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்கள் அந்தப் பகுதியின் தாதாக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் தனி உரிமையாக உள்ள இடங்களில் குடியிருக்கிறார்கள் என்ற உண்மை, பாவம் அமைச்சருக்குத் தெரியாது. சென்னை மாநகரத்தில் மட்டும் குடிசைப் பகுதிகளில் வசிப்போரின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகம். நகரத்தின் மையப் பகுதிகளான நுங்கம்பாக்கம், தியாகராய நகர், கலைஞர் நகர் பகுதிகளில் குடிசைகளின் வாடகை சுமார் ரூ. 1,000 முதல் ரூ. 2,000 வரை என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

மாநில அரசு, குடிசைப் பகுதிகளில் வாழ்வோருக்கு அவர்கள் வாழும் இடத்திற்கு சொத்துரிமை தருவதாக இருந்தால் மத்திய அரசு அதற்கு உதவி செய்யும் என்றும் சிறுபிள்ளைத்தனமாகக் கூறி இருக்கிறார் அமைச்சர். அப்படி ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டால் குடிசைப் பகுதிகள் அரசியல் தலைவர்களின் பினாமிகளாகச் செயல்படும் தாதாக்களின் தனிச்சொத்தாகித் தனியார் ரியல் எஸ்டேட்காரர்களிடம் விலைபேசப்படும். அங்கே குடியிருக்கும் அப்பாவி தினக்கூலிகள் வேறு இடத்தில் குடிசை போடவோ, தெருவோரம் குடும்பம் நடத்தவோ நேரிடும்.

நகர்ப்புறக் குடிசைப் பகுதிகளின் பெருக்கத்துக்கு அடிப்படைக் காரணம், கிராமப்புற வேலையின்மைதான். கிராமப்புறங்களில் விவசாயம் செழிப்பாக இருந்து, மக்கள் வாழ வழி கிடைத்தபோது நகர்ப்புறங்களில் குடிசைப் பகுதிகள் குறைவாகத்தான் இருந்தன. மேலும், நகர்ப்புற வீட்டு வாடகை குறைந்தது ரூ. 3,000, ரூ. 4,000 என்று உயரும்போது, ரூ. 5,000 வருமானம் உள்ள கீழ் மத்தியதரக் குடும்பங்களேகூடக் குடிசைகளுக்கு மாற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிடுகிறது.

11-வது ஐந்தாண்டுத் திட்டத்தின்படி, 2012-க்குள் இந்தியாவில் இப்போதிருக்கும் குடிசைகளை "கச்சா' வீடுகளாக மாற்ற வேண்டுமானால் அதற்கே ரூ. 3,60,000 கோடி வேண்டும் என்று அரசுக் குறிப்பு கூறுகிறது. வீட்டு வாடகை கட்டுப்படுத்தப்பட்டு, விலைவாசி நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பத்தினரின் சக்திக்கு உள்பட்டு இருந்தால் மட்டுமே நகர்ப்புறங்களில் குடிசைப் பகுதிகள் பரவலாக உருவாவது தடுக்கப்படும். கிராமப்புற முன்னேற்றத்துக்கும், விவசாயத்துக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டால் மட்டுமே நகர்ப்புறம் நோக்கி மக்கள் குடிபெயர்வது தடுக்கப்படும்.

"குடிசைப் பகுதிகள் இல்லாத இந்தியா' என்று கோஷத்தை எழுப்பி விட்டுப் பணத்தை வாரி இறைப்பதால் பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட்டுவிடாது. பிரச்னையின் கௌரவமும், ஆபத்தும் தெரியாமல் நுனிப்புல் மேய்கிறோம் என்பதை அமைச்சர் குமாரி ஷெல்ஜா உணர வேண்டும்!

நன்றி : தினமணி

No comments: