Monday, April 27, 2009

ஐசிஐசிஐ பேங்க்கின் நிகர லாபம் 35 சதவீதம் குறைந்தது

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ பேங்கின் நான்காவது காலாண்டு நிகர லாபம், அதற்கு முந்தைய வருடத்தை விட 35.30 சதவீதம் குறைந்திருக்கிறது. மார்ச் 31, 2009 உடன் முடிந்த நான்காவது காலாண்டில் அது பெற்றிருக்கும் நிகர லாபம் ரூ.744 கோடி மட்டுமே. இது, இதற்கு முந்தைய வருடத்தில் ரூ.1,150 கோடியாக இருந்தது. ஐசிஐசிஐ பேங்க்கின் மொத்த வருமானமும் கடந்த வருடத்தில் ரூ.10,391 கோடியாக இருந்தது இந்த வருடத்தில் ரூ.9,203 கோடியாக குறைந்திருக்கிறது. ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸின் மேலாண் இயக்குனர் மற்றும் சி.இ.ஓ.,வாக இருந்த ஷிகா சர்மா கடந்த வாரத்தில் ராஜினாமா செய்ததை அடுத்து, அந்த பதவிக்கு, அதன் எக்ஸிகூடிவ் டைரக்டராக இருந்த வைத்யநாதன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இது தவிர சந்தீப் பக்ஷி என்பவர் அதன் எக்ஸிகூடிவ் டைரக்டராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஐசிஐசிஐ லம்பார்ட் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மற்றும் சி.இ.ஓ.,வாக பார்கவ் தாஸ்குப்தா நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர்களது நியமனம் மே ஒன்றாம் தேதியில் இருந்து அமலில் இருக்கும் என்று அந்த வங்கி தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


வெளிநாட்டில் வேலைபார்க்கும் இந்தியாவுக்கு வரவழைக்கும் டி.சி.எஸ்.

இந்தியாவின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் ( டி.சி.எஸ்.,), வெளிநாடுகளில் இருக்கும் அதன் நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களில் பெரும்பாலானவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருகிறது. செலவை குறைக்கும்விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவிக்கிறது. நாங்கள் ஆன்சைட் - ஆஃப்ஷோர் மாடலில் வேலை செய்ய திட்டமிட்டிருக்கிறோம். எனவே பெரும்பாலான வேலைகளை இந்தியாவிலேயே செய்ய தீர்மானித்திருக்கிறோம். இது எங்களுக்கு ஆகும் செலவை கணிசமாக குறைக்கிறது என்கிறார் டி.சி.எஸ்.,ஸின் சி.ஓ.ஓ. சந்திரசேகரன். இருந்தாலும் இந்த நடவடிக்கையால் நாங்கள் வெளிநாடுகளில் இருந்து முழுவதுமாக வெளியேறி விடுவோம் என்ற அர்த்தமில்லை என்றார் அவர். வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை இந்தியாவுக்கு அழைத்ததை அடுத்து, 2008 - 09 நான்காவது காலாண்டில் அதன் வருமானம் அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவில் இருந்த அவர்களது ஊழியர்களை இந்தியா அழைத்ததன் மூலம் அது, ரூ.121 கோடி யை செலவில் மிச்சப்படுத்தியிருக்கிறது. இருந்தாலும் எவ்வளவு ஊழியர்கள் இதுவரை இந்தியாவுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லவில்லை. இருந்தாலும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இங்கு அழைக்கப்பட்டிருப்பார்கள் என்று தெரிகிறது.
நன்றி : தினமலர்


பங்குச் சந்தையில் நித்யகண்டம் பூர்ண ஆயுசு தான்

ஐந்து வாரங்கள் தொடர்ந்து மேலேயே சென்று கொண்டிருந்த பங்குச் சந்தை, திங்களின் துவக்கத்திலிருந்து தினமும் கீழேயே சென்றது. அதை மாற்றும் வகையில் வியாழனன்று சந்தைகள் ஒரேயடியாக மேலே சென்றன. வியாழனன்று துவக்கத் தில் கீழேயே இருந்த பங்குச்சந்தை நஷ்டத்தையும் சரிக்கட்டி பின் 300 புள்ளிகளுக்கும் மேலாக லாபத்திலும் முடிவடைந்தது. வியாழனன்று சாப்ட்வேர் துறைப்பங்குகளும், மெட்டல் துறைப் பங்குகளும் கொடிகட்டிப் பறந்தன. வியாழனைத் தொடர்ந்த வெள்ளியும் நல்ல வெள்ளியாகவே முடிவடைந்தது. சந்தையும் 11 ஆயிரத்தைத் தாண்டி நிலைத்து நின்றது. அதானி என்டர்பிரைசஸ் தனது அதானி பவர் கம்பெனியின் புதிய வெளியீட்டைக் கொண்டுவருவதாக அறிவித்தவுடன் அந்தக் கம்பெனியின் பங்குகள் மேலே சென்றன. இதுபோன்ற ஏற்றத் தாழ்வுகள் அடுத்த வாரம் வரை இருக்கலாம். மும்பையில் 30ம் தேதி ஓட்டுப்பதிவு இருப்பதால், அன்று பங்குச்சந்தைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே, 'எப் அண்ட் ஓ' குளோசிங் புதன்கிழமை என்பதால், வரும் வாரம் சற்று சிக்கல் தான். நேற்று முன்தினம் இறுதியாக மும்பை பங்குச் சந்தை 194 புள்ளிகள் மேலே சென்று 11 ஆயிரத்து 329 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை 57 புள்ளிகள் மேலே சென்று 3,480 புள்ளிகளுடனும் முடிவடைந்தன. இந்த வார பணவீக்கம் 0.26 சதவீதமாகக் கூடியுள்ளது. குறைந்து கொண்டே வந்த பணவீக்கம் கூடியுள்ளது என்பது ஒரு விதத்தில் ஆறுதலான விஷயம் தான். அடுத்த ஆண்டு பணவீக்கம் 4 சதவீதத்தில் வந்து நிற்கும் என அரசு கணித்துள்ளது. ரிலையன்சின் லாபம் சென்ற ஆண்டு இதே காலாண்டை விட 9 சதவீதம் குறைந்துள்ளது. ரிபைனரி லாபம் குறைந்து வருவதாலும், எண்ணெய் தேவைகள் மக்களிடையே குறைந்து வருவதாலும் காலாண்டு லாபங்கள் குறைந்ததாகக் கூறப்படுகிறது. ஹெச்.டி.எப்.சி., வங்கியின் லாபம் சென்ற ஆண்டு இதே காலாண்டை விட 34 சதவீதம் கூடியுள்ளது. ஐடியா செல்லுலரின் லாபம் சென்ற ஆண்டு இதே காலாண்டை விட 18 சதவீதம் கூடியுள்ளது. வங்கிகளின் லாபங்கள் இந்தக் காலாண்டில் கூடிவருகிறது. இது தொடருமா என்பது கேள்விக்குறி தான். ஏனெனில், வட்டி விகிதங்கள் குறைந்து வருவதாலும், வங்கிகளின் மார்ஜின்கள் குறைந்து வருவதாலும் இந்த லாபங்கள் இன்னும் ஓரிரண்டு காலாண்டுகளுக்கு நீடிக்கலாம். அதற்கு மேலும் நீடிக்குமா என்பது யோசிக்கவேண்டிய விஷயம் தான். பொதுவாகப் பார்க்கப் போனால், கம்பெனிகள் தாங்கள் வாங்கிய கடன்களுக்காகச் செலுத்திய வட்டி கூடியுள்ளது. வங்கிகளின் வராக்கடன்கள் கூடியுள்ளன. வருங்காலங்களில் வராக்கடன்கள் 5 சதவீதம் அளவிற்குச் செல்லும் என்றும் ஐயப்படுகின்றனர். மறுபடி புதிய வெளியீடுகளின் காலம்: சந்தை நிமிருவதால் பல கம்பெனிகள் இது தான் சமயம் என்று தங்களது புதிய வெளியீடுகளைக் கொண்டுவரலாம் என முடிவு செய்துள்ளன. வருங்காலங்களில் பல கம்பெனிகளின் புதிய வெளியீடுகள் வரலாம். சரியான விலை வைத்து வரும் கம்பெனிகள் ஜெயிக்கும். வீட்டு வசதிக் கடன் கம்பெனிகளின் காலாண்டு முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது அந்தக் கம்பெனிகள் வழங்கிய கடன்கள் இந்தக் காலாண்டில் கூடியுள்ளன. அது போல லாபங்களும் கூடியுள்ளன. இது என்ன செய்தியைத் தெரிவிக்கிறது... வீட்டுக் கடன்களுக்கான தேவை கூடி வருகிறது என்பதை இதை வைத்துப் பார்க்கும் போது மறுபடி கட்டுமானத்துறை கம்பெனிகள் சிறிது சிறிதாக (செங்கல் செங்கலாக) நிமிரும் வாய்ப்புக்கள் உள்ளன. வெளிநாட்டுக் கம்பெனிகள் இந்தியாவில் கம்பெனிகளில் முதலீடு செய்வது பொல, இந்தியக் கம்பெனிகளும் வெளிநாட்டுக் கம்பெனிகளில் முதலீடு செய்து வருகின்றன. அதிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதுமே பொருளாதார மந்தம் ஏற்பட்டுள்ள நிலையில் அதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஒரு காலத்தில் இந்தியாவில் யார் வந்து முதலீடு செய்வர் என்று காத்துக் கொண்டிருந்த நிலை போய், நாம் வெளிநாடுகளில் சென்று கம்பெனிகளில் முதலீடு செய்வதும், கம்பெனிகளையை வாங்குவதும் பெரிய அளவில் நடப்பது நல்ல விஷயம் தானே?
தேர்தலின் இரண்டாவது கட்ட ஓட்டுப்பதிவு சதவீதங்கள் குறைவாக இருப்பதாகப் பலருக்குக் கிலியை ஏற்படுத்தியுள்ளது. முதல் கட்ட ஓட்டுப் பதிவில் இருந்த விறுவிறுப்பு தற்போது இல்லையோ என்ற எண்ணங்களைத் தோற்றுவித்துள்ளது. பாதி தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ள நிலையில் எல்லாரும் அடுத்த மாதம் முடிவுகள் எப்படி இருக்குமோ என்ற கவலையில் உள்ளனர். பங்குச்சந்தையில் தற்போது காணும் ஏற்றம், ஓட்டுப்பதிவு முடிந்து தேர்தல் முடிவுக்குப் பின் சரிவில் செல்லவே அதிக வாய்ப்பு உள்ளது. இதற்கு முன் நடந்த தேர்தல்களை அடுத்து சந்தை சரிவையே சந்தித்துள்ளது. தேர்தல் முடிவு மே மாதம் 16ம் தேதி (சனிக்கிழமை) வருவதால் பங்குச்சந்தை தப்பித்தது. இருப்பினும், மே மாதம் 18ம் தேதி முதல் 29ம் தேதி வரை நித்ய கண்டம் பூர்ண ஆயுசாகத் தான் சந்தை இருக்கும். சர்வ ஜாக்கிரதை.


-சேதுராமன் சாத்தப்பன்-
நன்றி : தினமலர்


Friday, April 24, 2009

மைக்ரோசாப்ட்டின் விற்பனை 6 சதவீதம் குறைந்திருக்கிறது

இந்த ஆண்டின் முதல் மூன்று மாத காலாண்டில், உலகின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் விற்பனை, கடந்த வருடத்துடன் ஒப்பிட்டால் 6 சதவீதம் குறைந்திருக்கிறது.கடந்த 23 வருடங்களில் இதுவரை வேறு எந்த காலாண்டிலும், விற்பனை இந்தளவுக்கு குறைந்ததில்லை என்கிறது அது. மைக்ரோசாப்ட்டின் லாபமும் 32 சதவீதம் குறைந்து 2.98 பில்லியன் டாலராகி இருக்கிறது. விற்பனை 13.65 பில்லியன் டாலராக குறைந்திருக்கிறது. மைக்ரோசாப்ட் ஆபீஸ் மற்றும் வின்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் விற்பனை மூலமாகத்தான மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு பெருமளவு லாபம் வருகிறது. ஆனால் சமீப காலமாக நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக மக்களின் வாங்கும் சக்தி குறைந்து போனதால் பெர்சனல் கம்ப்யூட்டர் விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே மைக்ரோசாப்ட்டின் சாப்ட்வேர் விற்பனையும் குறைந்து விட்டது என்கிறார்கள். இந்த நிலை அடுத்த காலாண்டிலும் தொடரத்தான் செய்யும் என்கிறார் மைக்ரோசாப்ட்டின் தலைமை நிதி அதிகாரி கிரிஸ் லிட்டல். 1986 ம் ஆண்டு பப்ளிக் கம்பெனி யாக மாறிய மைக்ரோசாப்ட், செலவை குறைக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. இதன் ஒரு கட்டமாக அதன் ஊழியர்கள் எண்ணிக்கையில் 1,400 பேரை உடனடியாகவும், 3,600 பேரை இன்னும் 18 மாதங்களிலும் குறைக்க இருப்பதாக கடந்த ஜனவரி மாதம் மைக்ரோசாப்ட் அறிவித்தது.
நன்றி : தினமலர்


அணு உலை அமைக்கும் தொழிலில் தீவிரமாக இறங்குகிறது எல் அண்ட் டி

இந்தியாவின் மிகப்பெரிய இஞ்சினியரிங் மற்றும் கன்ஸ்டரக்ஸன் கம்பெனியான எல் அண்ட் டி, அணுஉலை அமைக்கும் தொழிலில் தீவிரமாக இறங்குகிறது. இதற்காக, இன்னும் மூன்று முதல் நான்கு வாரங்களுக்குள் அணுஉலை தொழிலில் பிரபலமாக இருக்கும் அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் ஹிட்டாச்சி என்ற நிறுவனத்துடனுன், பிரான்சின் அரேவா நிறுவனத்துடனும் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ள இருக்கிறது. ஏற்கனவே எல் அண்ட் டி நிறுவனம், ரஷ்யாவை சேர்ந்த ஆட்டம்ஸ்டிராய்எக்ஸ்போர்ட் நிறுவனத்து டனும், அமெரிக்காவை சேர்ந்த டோஷிபா வெஸ்டிங்ஹவுஸ் என்ற நிறுவனத்துடனும், கனடாவை சேர்ந்த ஆட்டோமிக் எனர்ஜி ஆஃப் கனடா என்ற நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்திருக்கிறது. எல் அண்ட் டி யின் உயர் அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்தார். மற்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர்வதன் மூலமாக, சர்வதேச அளவில் அணுஉலை அமைக்கும் தொழிலில் வேகமாக வளர முடியும் என்று எல் அண்ட் டி கருதுகிறது. நியூக்கிளியர் சப்ளையர்ஸ் குரூப்பில் இந்தியா சேர்ந்ததில் இருந்து, சிவில் வேலைக்காக, அணு உலை அமைக்க, தேவையான மூலப் பொருட்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு கடந்த முப்பது ஆண்டுகளாக இருந்து வந்த தடை நீங்கி யிருக்கிறது. வரும் 2032ம் வருடத்திற்குள் இந்தியா, அணுசக்தி மூலம் 60,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிட்டிருக்கிறது. எனவே இதன் மூலம் சர்வதேச அளவில் அணுஉலை அமைக்கும் நிறுவனங்களுக்கு 60 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆர்டர்கள் வர இருக்கின்றன.

நன்றி : தினமலர்


Thursday, April 23, 2009

புழக்கத்திற்கு வருகிறது பத்து ரூபாய் நாணயம்

பத்து ரூபாய் நாணயங்களை, அடுத்த வாரம் முதல் சென்னையில் புழக்கத்தில் விட இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. மும்பை, டில்லி மற்றும் ஐதராபாத் ஆகிய ஊர்களில், 10 ரூபாய் நாணயங்கள் ஏற்கனவே புழக்கத்தில் உள்ளன. இந்நிலையில், அடுத்த வாரம் முதல் சென்னையிலும் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் வரப் போகின்றன. இதை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.,) அதிகாரிகளும் உறுதி செய்தனர். இந்திய ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயத்தை அறிமுகப் படுத்தியதன் மூலம், அதே மதிப்பிலான நோட்டுக்களை, புழக்கத்தில் இருந்து அகற்ற திட்டமிட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த 10 ரூபாய் நாணயங்கள் மூன்றாண்டுக்கு முன்பே வெளியிட்டிருக்க வேண்டியது. ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால், தாமதமாகியது. நாணய அறிமுகத்தின் முக்கிய நோக்கம், கள்ளநோட்டுக்களை தவிர்ப்பது மற்றும் எளிதாக அடையாளம் காணுவது என ஆர்.பி. ஐ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆமதாபாத்தை மையமாக கொண்டு செயல்படும்,
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் என்.ஐ.டி., நிறுவனம், வேற்றுமையில் ஒற்றுமை என்னும் மையக்கருத்தை கொண்டு, 10 ரூபாய் நாணயத்தை வடிவமைத்துள்ளது. இந்த நாணயத்தின் எடை 8 கிராம். இது 28 மி.மீ., விட்டம் கொண்டது. இதன் அளவு இரண்டு ரூபாய் நாணயத்தை விட பெரிது. இந்த நாணயம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது: இந்த நாணயத்தின் முன்பக்கத்தில், மூன்று தலை கொண்ட சிங்கம்,10 என்ற எண் மற்றும் தயாரிக்கப்பட்ட ஆண்டு ஆகியவை இடம்பெற்றுள்ளன. அதன் மறுபக்கத்தில், ஒன்றுக் கொண்டு குறுக்காக அமைந்து இரண்டு இரட்டை கோடுகளும், அதன் ஒவ்வொரு மூலையிலும் ஒரு புள்ளியும் இடம்பெற்றிருக்கும்.
அதை சுற்றி நாணயத்தின் மதிப்பு இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுத்தால் எழுதப்பட்டிருக்கும். இந்த நாணயத்தின் மேல் பக்கம், நிக்கல் மற்றும் பித்தளை கலவையால் உருவாக்கப் பட்டது. உள்பக்கம் பெரஸ் ஸ்டீல் உலோகத்தால் தயாரிக்கப் பட்டது.
என்.ஐ.டி., நிறுவனம், வேற்றுமையில் ஒற்றுமை, பரதநாட்டிய முத்திரைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப இணைப்பு ஆகியவற்றை மையக்கருவாக கொண்டு மூன்று டிசைன்களை வடிவமைத்தது. இவ்வாறு இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறினர்.
நன்றி : தினமலர்


Wednesday, April 22, 2009

லாபம் குறைந்து போனதால் 5 சதவீத ஊழியர்களை குறைக்கிறது யாகூ

உலகம் முழுவதும் இருக்கும் அதன் ஊழியர்கள் என்ணிக்கையில் 5 சதவீதத்தை குறைக்க யாகூ முடிவு செய்திருக்கிறது. செலவை குறைக்கும் நடவடிக்கையை எடுத்த பின்பும் அதன் நிகர லாபம் குறைந்திருப்பதால், மேலும் ஊழியர்களை குறைக்க அந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. பொருளாதார நிலை இன்னும் மோசமாகத்தான் இருக்கிறது. எங்கள் வெப்சைட்களில் வெளியிடப்படும் டிஸ்ப்ளே விளம்பரம் மற்றும் தேடுதல் மூலம் பார்க்கப்படும் விளம்பரங்கள் மூலம் வந்து கொண்டிருந்த வருமானம், இந்த முதல் காலாண்டில் குறைந்திருக்கிறது. எனவே லாபமும் குறைந்து போனது என்கிறது யாகூ. கடந்த வருடத்தின் மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 537 மில்லியன் டாலர் லாபம் சம்பாதித்திருந்த யாகூ, இந்த வருடத்தில் 118 மில்லியன் டாலர் லாபம் தான் சம்பாதித்திருக்கிறது. அதன் மொத்த வருவாயும் 13 சதவீதம் குறைந்து 1.58 பில்லியன் டாலராகி இருக்கிறது. எனவே குறைந்திருக்கும் லாபத்தை சரிக்கட்ட, உலகம் முழுவதிலும் இருக்கும் அதன் ஊழியர்கள் எண்ணிக்கையில் 600 முதல் 700 வரை ( அதாவது 5 சதவீதம் ) குறைக்கிறது. கடந்த வருடம் அக்டோபரில் தான் யாகூ, அதன் ஊழியர்கள் எண்ணிக்கையில் ஒரு சதவீதத்தை குறைத்தது.
நன்றி : தினமலர்