Thursday, April 23, 2009

புழக்கத்திற்கு வருகிறது பத்து ரூபாய் நாணயம்

பத்து ரூபாய் நாணயங்களை, அடுத்த வாரம் முதல் சென்னையில் புழக்கத்தில் விட இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. மும்பை, டில்லி மற்றும் ஐதராபாத் ஆகிய ஊர்களில், 10 ரூபாய் நாணயங்கள் ஏற்கனவே புழக்கத்தில் உள்ளன. இந்நிலையில், அடுத்த வாரம் முதல் சென்னையிலும் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் வரப் போகின்றன. இதை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.,) அதிகாரிகளும் உறுதி செய்தனர். இந்திய ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயத்தை அறிமுகப் படுத்தியதன் மூலம், அதே மதிப்பிலான நோட்டுக்களை, புழக்கத்தில் இருந்து அகற்ற திட்டமிட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த 10 ரூபாய் நாணயங்கள் மூன்றாண்டுக்கு முன்பே வெளியிட்டிருக்க வேண்டியது. ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால், தாமதமாகியது. நாணய அறிமுகத்தின் முக்கிய நோக்கம், கள்ளநோட்டுக்களை தவிர்ப்பது மற்றும் எளிதாக அடையாளம் காணுவது என ஆர்.பி. ஐ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆமதாபாத்தை மையமாக கொண்டு செயல்படும்,
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் என்.ஐ.டி., நிறுவனம், வேற்றுமையில் ஒற்றுமை என்னும் மையக்கருத்தை கொண்டு, 10 ரூபாய் நாணயத்தை வடிவமைத்துள்ளது. இந்த நாணயத்தின் எடை 8 கிராம். இது 28 மி.மீ., விட்டம் கொண்டது. இதன் அளவு இரண்டு ரூபாய் நாணயத்தை விட பெரிது. இந்த நாணயம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது: இந்த நாணயத்தின் முன்பக்கத்தில், மூன்று தலை கொண்ட சிங்கம்,10 என்ற எண் மற்றும் தயாரிக்கப்பட்ட ஆண்டு ஆகியவை இடம்பெற்றுள்ளன. அதன் மறுபக்கத்தில், ஒன்றுக் கொண்டு குறுக்காக அமைந்து இரண்டு இரட்டை கோடுகளும், அதன் ஒவ்வொரு மூலையிலும் ஒரு புள்ளியும் இடம்பெற்றிருக்கும்.
அதை சுற்றி நாணயத்தின் மதிப்பு இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுத்தால் எழுதப்பட்டிருக்கும். இந்த நாணயத்தின் மேல் பக்கம், நிக்கல் மற்றும் பித்தளை கலவையால் உருவாக்கப் பட்டது. உள்பக்கம் பெரஸ் ஸ்டீல் உலோகத்தால் தயாரிக்கப் பட்டது.
என்.ஐ.டி., நிறுவனம், வேற்றுமையில் ஒற்றுமை, பரதநாட்டிய முத்திரைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப இணைப்பு ஆகியவற்றை மையக்கருவாக கொண்டு மூன்று டிசைன்களை வடிவமைத்தது. இவ்வாறு இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறினர்.
நன்றி : தினமலர்


No comments: