Wednesday, October 29, 2008

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை : மத்திய அரசு அதிகாரிகள்


இப்போதைக்கு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் எண்ணம் இல்லை என்றும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் போக்கை தொடர்ந்து கொஞ்சம் நாட்களுக்கு கண்காணித்தபின்பே அது பற்றி முடிவு எடுக்கப்படும் என்றும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் சுந்தரேசன் தெரிவித்தார். இன்னும் சில வாரங்களுக்கு கச்சா எண்ணெய் விலையின் போக்கை நாங்கள் கண்காணிக்க இருக்கிறோம். அதன் பின்னரே விலை குறைப்பு பற்றி முடிவு செய்ய வேண்டும் என்றார் அவர். கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 57 டாலருக்கும் குறைவாக வந்தால்தால் பெட்ரோல் விலை குறைப்பது பற்றி முடிவு செய்ய முடியும் என்று ஏற்கனவே மத்திய அரசு சொல்லி வந்துள்ளது. இந்தியா வாங்கும் பேஸ்கட் குரூட் ஆயில் விலை கடந்த வாரத்தில் பேரலுக்கு 64 டாலராக இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று புதன் கிழமை பேரலுக்கு 1.99 டாலர் உயர்ந்து 64.72 டாலராக இருக்கிறது.

நன்றி : தினமலர்


தீபாவளியன்று ரூ.100 கோடி சரக்கு விற்பனை : முதல்நாளும் 'டாஸ்மாக்' சாதனை

தமிழக டாஸ்மாக் கடைகளில் தீபாவளியன்று சரக்கு விற்பனை இரு மடங்கு அதிகரித்தது. தீபாவளி தினத்தன்று மட்டும் 'டாஸ்மாக்'கில் மது விற்பனை 100 கோடி ரூபாய்க்கு எகிறியுள்ளது. முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமையும் 100 கோடி ரூபாய்க்கு விற்பனை எட்டியதால், மது விற்பனை வரலாற்றில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 6,700 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றின் மூலம், அரசுக்கு கிடைக்கும் வருமானம் 10 ஆயிரம் கோடி. இந்த வருமானத்தைக் கொண்டே அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக 'டாஸ்மாக்' விற்பனையை அதிகரிக்க, அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. மாவட்ட வாரியாக சரக்கு விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்து, மாதந்தோறும் விற்பனையை பெருக்கி வருகிறது.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது, சாதனை அளவாக, ஒரே நாளில் 60 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்பனை நடந்தது. சாதாரண நாட்களில் விற்பனை செய்யப்படும் மது வகைகளை விட, இரு மடங்கு மதுபான வகைகளும், மூன்று மடங்கு பீர் வகைகளும் விற்பனையாகின. சென்னையில் மட்டும் நான்கு கோடி ரூபாய்க்கு விற்பனையானது.
இந்த ஆண்டு தீபாவளியை யொட்டி, குடிமகன்களுக்கு தட்டுப்பாடின்றி சரக்கு கிடைக்க அனைத்து கடைகளிலும்
கூடுதலாக சரக்குகள் டெலிவரி செய்யப்பட்டன. தீபாவளிக்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை (26ம் தேதி) முதலே டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது. விடுமுறை நாளையொட்டி தீபாவளி வந்ததால், இரு நாட்களிலும் விற்பனை களை கட்டியது.
சாதாரண நாட்களில் அயல்நாட்டு மது வகைகள், ஒரு லட்சத்து 20 ஆயிரம் பெட்டிகள் முதல் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பெட்டிகள் வரை நாள் ஒன்றுக்கு விற்பனையாகி வந்தது. தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை (26ம் தேதி) ஆகிய இரு நாட்களிலுமே இந்த விற்பனை இரு மடங்கானது.
இதன்படி, இரு நாட்களிலும் சேர்த்து நான்கு லட்சம் பெட்டிகள் அயல்நாட்டு மது விற்பனையாகி, புதிய சாதனை படைக்கப் பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 45 கோடி ரூபாய் முதல் 60 கோடி ரூபாய் வரை டாஸ்மாக் மூலம் விற்பனை நடந்து வருகிறது. இது, தீபாவளியன்றும், முந்தைய தினமான ஞாயிற்றுக்கிழமையும் தலா 100 கோடி ரூபாயை தாண்டி சாதனை படைத்துள்ளது.

நன்றி : தினமலர்



அடிமட்டத்திற்கு போனது ஏன்? : சேதுராமன் சாத்தப்பன்

நேற்று முன்தினம் சந்தை இன்னுமொரு பெரிய சரிவை சந்தித்தது. 1,000 புள்ளிகள் வரை சரிந்து 7,700 புள்ளிகளுக்கு வந்து நின்றது. பார்த்தவர்களில் பலருக்கு நிச்சியமாக அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும். காரணம், அமெரிக்க சந்தையில் வெள்ளியன்று ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, ஆசிய சந்தைகள் அனைத்தும், நேற்று முன்தினம் காலை கீழேயே துவங்கின. பல ஆசிய சந்தைகள் கடந்த ஐந்து வருட இறக்க அளவில் உள்ளன. இந்தியாவிலும் அதே நிலை நீடித்தது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் விற்பது நிற்கவில்லை. ஆதலால், அடிமட்டத்தை தொட்டு வருகிறது. நல்ல ப்ளூ சிப் பங்குகள் அடிமாட்டு விலைக்கு கிடைத்தாலும் வாங்க யாரும் தயாராக இல்லை. மியூச்சுவல் பண்டுகளும், சிறிய முதலீட்டாளர்களும் ஒதுங்கியே இருக்கின்றனர். எப்.ஐ.ஐ.,க்கள் (வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள்) விற்பதை நிறுத்தினால் மற்றவர்கள் பயமில்லாமல் உள்ளே வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசும் நிலைமையை சரிசெய்ய பெரிய அளவில் கட்டுமானத்திட்டங்களை கொண்டு வரலாம். அதன் மூலம் அரசு திட்டங்கள் கம்பெனிகளுக்கு கிடைக்கலாம். இது, வேலை வாய்ப்பையும், தொழில் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். அதே சமயம் சந்தையையும் ஊக்குவிக்கும். ரிசர்வ் வங்கி ரெப்போ கட் மறுபடி செய்யப்படலாம். உலக அளவில் உள்ள மத்திய வங்கிகள் அனைத்தும் ஒன்று கூடி சந்தைகளை நிலைநிறுத்த முயற்சிகள் எடுத்து வருகின்றன. அது பலனளித்தால் சரிதான். இல்லாவிடில் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். முடிவாக மும்பை பங்குச் சந்தை 191 புள்ளிகள் குறைந்து 8,509 புள்ளிகளில் முடிவடைந்தது. டிரைவேடிங்க் டிரேடிங் நாளை முடிவடைவதால், ஷார்ட் கவரிங் பொசிஷன்களை பலரும் கவர் செய்ததால் சந்தை தப்பியது.
நன்றி : தினமலர்


Tuesday, October 28, 2008

ஆசிய, அமெரிக்க பங்கு சந்தைகளில் இன்றும் கடும் வீழ்ச்சிதான்

கடந்த ஒரு வார காலமாக சரிவை மட்டுமே சந்தித்து வரும் ஆசிய பங்கு சந்தைகளில் இன்றும் சரிவுதான் காணப்படுகிறது.சிங்கப்பூரின் ஸ்டெயிட் டைம்ஸ் 7.20 சதவீதத்தை இழந்திருக்கிறது. சீனாவின் ஷாங்கை 2.87 சதவீதம், தைவானின் இன்டக்ஸ் 2.59 சதவீதம் குறைந்திருக்கிறது. ஆசிய சந்தைகளைப்போனவே அமெரிக்க சந்தையிலும் சரிவுதான் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள டவ்ஜோன்ஸ் 2.42 சதவீதத்தை இழந்திருக்கிறது. நாஸ்டாக் 2.97 சதவீதம் குறைந்திருக்கிறது. ஜப்பானை பொருத்தவரை வர்த்தக ஆரம்பத்தில் நிக்கி 2 சதவீதத்தை இழந்திருந்தது. இது கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி. பின்னர் மதிய வேளையில் கொஞ்சம் முன்னேறி 0.95 சதவீத இழப்புடன் இருந்தது. அங்குள்ள பங்கு சந்தை அதிகமாக சரிந்து வருவதை அடுத்து, ஷாட் ஷெல்லிங் முறையை நிறுத்தி விடலாமா என்றும் ஜப்பான் யோசித்து வருகிறது. ஜப்பானை போலவே இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவிலும் ஷாட் ஷெல்லிங் முறையை நிறுத்தி விட ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இந்தியாவை பொருத்த வரை நேற்றைய வர்த்தகத்தில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 191.51 புள்ளிகள் குறைந்து 8,509.56 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 59.80 புள்ளிகள் குறைந்து 2,524.20 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்று இந்திய பங்கு சந்தைக்கு விடுமுறை. ஆனால் முகுராத் வர்த்தகம் மட்டும் நடக்கும். அது மாலை 5.15 க்கு தான் துவங்குகிறது. கடந்த வருட தீபாவளிக்கு 19,997 புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ், இந்த வருட தீபாவளிக்கு வெறும் 8,509 புள்ளிகளாகத்தான் இருக்கிறது. ஒரு வருடத்தில் 57 சதவீத புள்ளிகளை சந்தை இழந்திருக்கிறது.
நன்றி : தினமலர்

ஐசிஐசிஐ வங்கியின் பிரிட்டிஷ் கிளைக்கு ரூ.160 கோடி நஷ்டம்

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ பேங்க் இன் பிரிட்டிஷ் கிளை ரூ.160 கோடி நஷ்டமடைந்திருக்கிறது. கடந்த சில காலமாகவே ஐசிஐசிஐ பேங்க், பல சர்ச்சைகளில் சிக்கி மீண்டு வந்திருக்கிறது. பெருமளவில் கடனை கொடுத்து அது திரும்ப வராததால் கடும் நிதி சிக்கலில் இருப்பதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகி, பின்னர் அந்த வங்கி கொடுத்த விளக்கத்தை அடுத்து அது சரியாகிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்காவின் நலிவடைந்த நிதி வங்கியான லேமன் பிரதர்ஸூக்கு பிரிட்டனின் ஐசிஐசிஐ பேங்க் கடன் கொடுக்கப்போய், ஒரு பெரும் தொகையை இழந்தது. அதன் பின்னரும் ஒரிரு முறை சர்ச்சையில் சிக்கியது.கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாக அடிக்கடி வெளிவரும் தகவலை அடுத்து,அந்த வங்கியில் டெபாசிட் செய்தவர்களில் பலர் பணத்தை திரும்ப எடுத்துக்கொள்வது நடந்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிந்த இரண்டாவது காலாண்டின் நிதி நிலை அறிக்கை வெளியாகி இருக்கிறது. அதில் பிரிட்டனின் ஐசிஐசிஐ பேங்க் கிளை 35 மில்லியன் ( சுமார் 160 கோடி ரூபாய் ) நிகர நஷ்டமடைந்திருப்பது ( நெட் லாஸ் ) வெளியாகி இருக்கிறது.இந்த தகவலை அந்த வங்கியில் ஜாயின்ட் மேனேஜிங் டைரக்டர் சந்தா கோச்சர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் பிரிட்டிஷ் ஐசிஐசிஐ வங்கி கிளையில் 4.9 பில்லியன் டாலர் டெபாசிட் இருப்பதாகவும் அதில் 39 சதவீதம் டர்ம் டெபாசிட் என்றும், அந்த கிளையின் கடன் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருவதாகவும் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்

Sunday, October 26, 2008

பயிற்சி பைலட்டுகளின் சம்பளம் குறைகிறது : கிங் பிஷர் நிறுவனம் அதிரடி

கிங் பிஷர் விமான நிறுவனம், தனது பயிற்சி பைலட்டுகளுக்கான சம்பளத்தை குறைக்க முடிவு செய்துள்ளது.
விமான எரிபொருள் விலை உயர்வால் விமான நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. விமான போக்குவரத்து கட் டணங்கள் அதிகரிக்கப் பட்டதால், பல்வேறு வழித்தடங்களுக்கு செல்லும் விமானங்கள் பயணிகள் இன்றி காத்தாடத் துவங்கியுள்ளன. இந்நிறுவனங்கள், எண் ணெய் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய பாக் கியை குறிப்பிட்ட காலம் முடிந்தும் இன்னும் பாக்கி வைத்துள்ளன. இதன் காரணமாக, விமான நிறுவனங்கள் சிக்கன நடவடிக் கைகளை துவங்கியுள்ளன. இதன் ஒரு கட்டமாக, விஜய் மல்லய்யாவின் கிங் பிஷர் நிறுவனமும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் அதிரடியாக ஒன்றிணைந்தன. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது தற்காலிக ஊழியர்களை அதிரடியாக நீக்கியது. இந்த விவகாரம் சர்ச் சையை ஏற்படுத்தியதை அடுத்து, ஊழியர்கள் மீண் டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அடுத்த கட்டமாக, கிங் பிஷர் நிறுவனம் தனது நிறுவனத்தில் பயிற்சி பைலட் டுகளாக பணிபுரியும் துணை பைலட்டுகள் 50 பேரின் சம்பளத்தை அதிரடியாக குறைக்க முடிவு செய்துள்ளது. இதனால், பயிற்சி பைலட்டுகள் கவலையில் ஆழ்ந் துள்ளனர். அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,'சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது. எந்த அள விற்கு சம்பள குறைவு இருக்கும் என்பது பற்றி தற்போது கூற முடியாது' என்றார். பயிற்சி பைலட் ஒருவர் கூறுகையில்,'தற்போது ரூ.20 ஆயிரம் சம்பளமாக தரப்படுகிறது. இதையும் குறைத்தால் என்ன செய்வது. 'கால் சென்டர்களில்' இதை விட அதிகம் சம்பளம் தரப்படுகிறது' என்றார்.
நன்றி : தினமலர்


ஓடி வருவர் என்ற எதிர்பார்ப்பு வீண்: நார் நாராக கிழிந்தது பங்கு சந்தை : சேதுராமன் சாத்தப்பன்

வெள்ளி பங்குச் சந்தையில் அழியாத முத்திரை பதித்து சென்று விட்டது. ரத்தக்களரி என்றே சொல்ல வேண்டும். சந்தை 22,000 புள்ளிகளில் இருந்த போது 1,000 புள்ளிகள் சரிவு என்றால், அதை பரவாயில்லை என்று எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால், சந்தை 10,000 புள்ளி அளவில் வந்த பின்பும் 1,000 புள்ளிகள் சரிவு என்றால், நிச்சயமாக சந்தை எல்லாருக்கும் ஒரு கிலி கொடுத்து தான் சென்றிருக்கிறது. சரிவுகளே வாழ்க்கை என்று வரும் போது, அதை சமாளிக்க பெரிய தைரியம், மனதிடம் வேண்டும். சேமித்த பணம் முழுவதையும் சந்தையில் போட்டவர்கள், கடன் வாங்கி சந்தையில் முதலீடு செய்தவர்கள் என்ற வகையினர் அதிகம் நஷ்டங்களை சந்தித்து வருகின்றனர். சந்தையில் பரமபதத்தில் பாம்பிடம் மாட்டிக் கொண்டது போல சறுக்கி கீழே விழுகிறது. ஊர், உலகத்தோடு ஒத்து வாழ் என்று நல்ல நாள் பெரிய நாட்களில் வாழ்த்துவர். நாம் பங்குச் சந்தையைப் பொறுத்தவரை ஊர், உலகத்தோடு ஒத்து வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம். கிடைத்த பலன் அவ்வளவும் போய் விட்டது.
ஏன் சந்தை வெள்ளியன்று விழுந்தது? ரிசர்வ் வங்கியின் மானிடரி பாலிசியில் இன்னும் பல அறிவிப்புகளை எதிர்பார்த்தனர்; அது வரவில்லை. அது தவிர, மதியத்திற்கு மேலே துவங்கிய ஐரோப்பிய சந்தைகள் கீழே விழுந்ததால், இந்திய சந்தையிலும் அதன் பாதிப்பு இருந்தது. இவை இரண்டும் சேர்ந்து சந்தையை கீழே இழுத்துப் போட்டு விட்டது. சந்தை நார் நாராகக் கிழிந்து கிடக்கிறது. முன்னேற இன்னும் வெகு நாட்களாகும். இந்த இரண்டு நாட்கள் சந்தை கீழே விழுந்ததுக்கு மேலும் ஒரு காரணம் என்று பார்த்தால் ரிலையன்ஸ் கம்பெனியின் காலாண்டு முடிவுகள். கடந்த 10 காலாண்டு முடிவுகளில், இந்த காலாண்டு முடிவில் தான் லாபங்கள் மிகவும் குறைந்திருக்கிறது. சந்தையில் அந்தக் கம்பெனியின் பங்குகள் மிகவும் அடி வாங்கின. இதே போலத் தான் டி.சி.எஸ்., கம்பெனியின் முடிவுகளும் சந்தை எதிர்பார்த்தது போல இல்லை. மானிடரி பாலிசியில் எந்த அறிவிப்பும் இல்லாததால் வங்கிப் பங்குகள் மிகவும் சரிவைச் சந்தித்தன. வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 1,071 புள்ளிகள் குறைந்து 8,701 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 359 புள்ளிகள் குறைந்து 2,584 புள்ளிகளுடனும் முடிவடைந்தன. ஒவ்வொரு வாரமும் குறைந்து வருவது பீதி கொள்ளச் செய்கிறது.
டாலரும் ரூபாயும்: 50 ரூபாய் தாண்டிய டாலர்; வரலாற்றிலேயே இதுவே முதன்முறை. டாலர் இறக்குமதி லாபமா? கடந்த சில மாதங்களாக டாலர் எல்லா கரன்சிகளுக்கும் எதிராக மேலே சென்று கொண்டிருக்கிறது.இதனால், இறக்குமதியாளர்கள் பீதியடைந்துள்ளனர். இறக்குமதியாளர்கள் கனடியன் டாலர், யூரோ ஆகியவை மூலம் இறக்குமதி செய்வது சிறந்ததாகும்.
வரும் நாட்கள் எப்படி இருக்கும்? யாரும் கணிக்க முடியாத படி சந்தை இருப்பதால், வரும் நாட்கள் சந்தைக்கு சாதகமாக இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. சந்தைக்கு இதுவரை வராதவர்கள் இரண்டு வழிகளில் மகிழ்ச்சி அடையலாம். ஒன்று, சந்தைக்கு வர நல்ல வாய்ப்பு கிடைத்ததற்கு. இன் னொன்று, சந்தையில் இதுவரை ஈடுபடாததை நினைத்து. சந்தை 10,000 புள்ளிகளுக்கு கீழே வரும் பட்சத் தில், முதலீட்டாளர்கள் ஆவலுடன் இது தான் சமயம் என்று ஓடி வருவர் என்று பலரும் எதிர்பார்த்தனர்; அது நடக்கவில்லை.
நன்றி : தினமலர்