தமிழகம் முழுவதும் 6,700 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றின் மூலம், அரசுக்கு கிடைக்கும் வருமானம் 10 ஆயிரம் கோடி. இந்த வருமானத்தைக் கொண்டே அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக 'டாஸ்மாக்' விற்பனையை அதிகரிக்க, அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. மாவட்ட வாரியாக சரக்கு விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்து, மாதந்தோறும் விற்பனையை பெருக்கி வருகிறது.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது, சாதனை அளவாக, ஒரே நாளில் 60 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்பனை நடந்தது. சாதாரண நாட்களில் விற்பனை செய்யப்படும் மது வகைகளை விட, இரு மடங்கு மதுபான வகைகளும், மூன்று மடங்கு பீர் வகைகளும் விற்பனையாகின. சென்னையில் மட்டும் நான்கு கோடி ரூபாய்க்கு விற்பனையானது.
இந்த ஆண்டு தீபாவளியை யொட்டி, குடிமகன்களுக்கு தட்டுப்பாடின்றி சரக்கு கிடைக்க அனைத்து கடைகளிலும்
கூடுதலாக சரக்குகள் டெலிவரி செய்யப்பட்டன. தீபாவளிக்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை (26ம் தேதி) முதலே டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது. விடுமுறை நாளையொட்டி தீபாவளி வந்ததால், இரு நாட்களிலும் விற்பனை களை கட்டியது.
சாதாரண நாட்களில் அயல்நாட்டு மது வகைகள், ஒரு லட்சத்து 20 ஆயிரம் பெட்டிகள் முதல் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பெட்டிகள் வரை நாள் ஒன்றுக்கு விற்பனையாகி வந்தது. தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை (26ம் தேதி) ஆகிய இரு நாட்களிலுமே இந்த விற்பனை இரு மடங்கானது.
இதன்படி, இரு நாட்களிலும் சேர்த்து நான்கு லட்சம் பெட்டிகள் அயல்நாட்டு மது விற்பனையாகி, புதிய சாதனை படைக்கப் பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 45 கோடி ரூபாய் முதல் 60 கோடி ரூபாய் வரை டாஸ்மாக் மூலம் விற்பனை நடந்து வருகிறது. இது, தீபாவளியன்றும், முந்தைய தினமான ஞாயிற்றுக்கிழமையும் தலா 100 கோடி ரூபாயை தாண்டி சாதனை படைத்துள்ளது.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment