Thursday, December 10, 2009

'டல்' அடிக்குது பங்குச் சந்தை: டபாய்க்குமா, பறக்குமா?

உலகளவில் பிரச்னைகள் இல்லாததால் சந்தையிலும் பெரிய மாற்றம் இல்லை. சரிவில் வாங்கியவர்கள் லாபமடைந்தனர்; விற்றவர்களும் மறுபடி ஒரு சரிவுக்காக காத்திருக்கின்றனர். திங்களும், நேற்றும் சிறிய சரிவைச் சந்தித்தன. ஆனால், நேற்று முன்தினம் சந்தை, 'ஜம்'மென பயணித்தது. பெரிய துபாய் புயலுக்கு பிறகும், சந்தை 17,000 புள்ளிகளுக்கும் மேலே தான் இருக்கிறது. திங்களன்று ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, நேற்று முன் தினம், பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிக்கை தான், சந்தை யை 244 புள்ளிகளுக்கு மேல் தூக்கிச் சென்றது. அதாவது, 'வரும் மார்ச் மாதம், அரசு, 25 ஆயிரம் கோடி ரூபாய் அதிகப்படியாக செலவழிக்கும். அதற்காக பார்லிமென் டின் அனுமதியை கோரும். சில மாதங்களுக்குள் அரசு நிறுவன பங்குகள் விற்பனை நடக்கும்' எனக் கூறினார். இது, சந்தையை மேலே தூக்கிச் சென்றது. நேற்று முன்தினம், 'நிப்டி' 18 மாத உச்சத்திற்கு போனது ஒரு சாதனை. கடந்த ஆண்டு சோதனை படைத்த சந்தை, தற்போது சாதனை படைப்பது, ஆறுதல். நேற்று சந்தை மதிப்பு உலகளவில் குறைந்திருந்ததால், இங்கும் குறைந்தது. மெட்டல் மற்றும் வங்கிப் பங்குகள், சரிவுக்கு காரணமாக இருந்தன. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 102 புள்ளிகள் குறைந்து 17,125 புள்ளிகளுடனும், தேசியப் பங்குச் சந்தை 35 புள்ளிகள் குறந்து 5,112 புள்ளிகளுடனும் முடிந்தது.

புதிய வெளியீடுகள் : ஜே.எஸ்.டபிள்யூ., எனர்ஜி (ஜே.எஸ்.டபிள்யூ., ஸ்டீல் கம் பெனியின் ஒரு அங்கம்) தனது புதிய வெளியீட்டை டிச., 7ம் தேதி முதல் கொண்டு வந் தது. நேற்றைய இறுதியில் 1.67 தடவை செலுத்தப்பட்டிருந்தது. வெளியீடு முடிந்தது.கோத்ரெஜ் பிராபர்டீசின் புதிய வெளியீடு நேற்று வரை 1.23 தடவை வரை செலுத்தப்பட்டிருந்தது. வெளியீடு நாளை வரை திறந்திருக்கும்.

மியூச்சுவல் பண்ட்கள் : கடந்த ஆண்டு சந்தை குறைவாக இருந்த போது, மியூச்சுவல் பண்ட்களின் மொத்த மதிப்பு ஐந்து லட்சம் கோடிகளுக்கும் கீழே சென்றிந்தது. தற்போது, மியூச்சுவல் பண்ட்களின் மொத்த மதிப்பு எட்டு லட்சம் கோடிகளுக்கும் மேலே சென் றிருக்கிறது.

இதிலிருந்து என்ன தெரிகிறது? மியூச்சுவல் பண்ட்களின் மொத்த மதிப்பு கூடியுள்ளது; அதே சமயம் முதலீட்டாளர் களும் அதிகளவில் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்துள்ளனர்.

தற்போது, பங்குச் சந்தைகள் டெர்மினல்கள் மூலமாகவே, மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை ஆகியவைகள் மூலமாக மியூச்சுவல் பண்ட்களின் யூனிட்டுகளை வாங்கலாம். சில மியூச்சுல் பண்ட்கள் தங்களை பங்குச் சந்தைகள் இணைத்துக் கொண்டுள்ளன. இன்னும் பல மியூச்சுவல் பண்ட்கள் சேரவும் உள்ளன. மதியம் 3 மணி வரை அன்றைய விலையிலேயே வாங்கலாம் என்பது தான் இதில் விசேஷம். தற்சமயம் மறுபடி பல மியூச்சுவல் பண்ட்கள் தங்களது புதிய வெளியீடுகளைக் கொண்டு வந்துள்ளன. காற் றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டுமே?

வீட்டுக் கடன் சந்தையில் பணப்புழக்கம் அதிகமாக உள்ளது. ஆதலால், வீட்டுக்கடன் 8 சதவீதத்தை தொட்டு விட்டது. கடன் கொடுப்பதில் ஒருவருக்கொருவர் போட்டி வேறு. கடன் வாங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல நேரம். ஆனால், வீடு விலை குறைய வேண்டுமே? கனவு இல்லத்தை நனவு இல்லமாக ஆக்க வாருங்கள் என்று, கூவிக் கூவி வீட்டுக் கடன் கம்பெனிகள் அழைக் கின்றன. பணப் புழக்கம் அதிகமாக இருப்பதால், ரிசர்வ் வங்கி அதைக் குறைப்பதற்காக சி.ஆர்.ஆர்., சதவீதத்தை கூட்டி விடுமா என்ற பேச்சு வேறு அடிபடுகிறது.

நவம்பர் கார் விற்பனைகார் விற்பனை சூடு பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இதே சமயம் விற்பனையை விட, 46 சதவீதம் கூடியுள்ளது. கார் கம்பெனிகளின் பங்குகளுக்கு கொண்டாட்டம் தான். கடந்த ஆண்டு அதிகம் அடிபட்ட பங்குகள் கார் கம்பெனிகள். தற்போது ஜம்மென சுகமான சாலையில் வழுக்கிக் கொண்டு செல்லும் கார் போல அந்தக் கம்பெனிகளின் பங்குகள் பயணிக்கின்றன.

வரும் நாட்கள் எப்படி இருக்கும்? : சந்தை சிறிய ஏற்ற, இறக்கங்களுடன் தான் இருக்கும். நல்ல வாய்ப்புகளுக்கு காத்திருங்கள். தற்போது வாங்குவதாக இருந்தால் ப்ளூ சிப் பங்குகளாக பார்த்து வாங்குகள். குறுகிய காலத்தில் நஷ்டம் இருந்தாலும் நீண்டகாலத்தில் லாபம் இருக்கும். இந்த வாரத்தில் பொதுவாக பார்த்தால், மேலேயும் போகமால் கீழேயும் வராமல், 'டல்' அடித்து கொண்டிருக்கிறது. மேலே பறக்குமா அல்லது டபாயக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 5,200க்கு மேல் நிப்டி நான்கு நாட்களுக்கு நிலை பெற்றால், பலரும் உள்ளே வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. லாபம் இருந்தால் கையில் காசு பார்ப்பதே உத்தமம்.
- சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : தினமலர்


No comments: