காசு கொடுத்தால்தான் செய்தி கிடைக்கும் என்கிற நிலை இப்போது இல்லை. இணையம் வந்த பிறகு செய்திகளை இலவசமாகத் தெரிந்துகொள்ள முடிவதுடன் செய்திகளை பல்வேறு ஊடகங்கள் எந்தெந்தக் கோணத்தில் வெளியிடுகின்றன என்பதை ஒப்பிட்டுப் பார்க்கவும் வழி இருக்கிறது. செய்திகள் திரட்டப்பட்டு திறந்தவெளியில் கொட்டப்படுகின்றன. யாருக்கு என்ன விருப்பமோ அதை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
பெரும்பாலான செய்தி இணைய தளங்களில் உலவுவதற்கு எந்தக் கட்டணமும் கிடையாது. அச்சில் வரும் செய்தித்தாள்கள் இதுபோன்ற இணைய தளங்களை நடத்தும்போது, விளம்பர வருவாய் என்பது யானைப் பசிக்குச் சோளப்பொறி போன்றதுதான். இதனால் சில இணைய தளங்கள் செய்திகளைப் படிப்பதற்கு சந்தா வசூலிக்கின்றன. சில இணைய தளங்களில் பிரத்யேகச் செய்திகளுக்கு மட்டும் சந்தா செலுத்தினால் போதும். ஆனால், இணையச் செய்தித் திரட்டிகள் இதற்கெல்லாம் வெடி வைக்கின்றன. செய்தி இணைய தளங்களில் உள்ள செய்திகளைத் திரட்டிகள் இலவசமாக வெளியிட்டுவிடுவதால், சந்தா வசூலிப்பது என்பதே அர்த்தமில்லாததாகிவிடுகிறது.
பெரும்பாலான இணையச் சேவைகளைப் போன்றே, செய்தித் திரட்டிகளிலும் முதலிடத்தில் இருப்பது கூகுள் நிறுவனம்தான். செய்திகளைத் தேடுவதற்காக இணையத்தில் மேய்பவர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவது கூகுள் நியூஸ் எனப்படும் கூகுளின் செய்தித் திரட்டி சேவைதான். இந்தச் சேவையில் இணைத்துக் கொள்ளும்படி செய்தி இணைய தளங்கள் விண்ணப்பித்துவிட்டால், முக்கியச் செய்திகளின் பட்டியலில் அந்தக் குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும் செய்தியும் பட்டியலிடப்படும். அதன் மூலம் இணையதளத்தைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அது விளம்பர வருவாய்க்கு உதவும். பொதுவாக, இந்தத் திரட்டிகள் வழியாக இணைய தளங்களுக்கு வருவோரின் விகிதம் கிட்டத்தட்ட பாதி அளவுக்கு இருப்பதால், இவற்றில் இணைத்துக் கொள்ளாத செய்தி இணைய தளங்களே இல்லை எனலாம்.
÷அதேபோல், எல்லா இணைய தளங்களிலுமுள்ள செய்திகளையும் ஒரே இடத்தில் பார்க்க முடியும் என்பதால் நேரடியாக இணைய தளங்களுக்குச் செல்வதைவிட திரட்டிகளைப் பார்வையிடுவதையே இன்றைய இணைய வாசகர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதனால், திரட்டிகளும் வருவாய் ஈட்டிக்கொள்கின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், செய்தி இணைய தளங்களும் செய்தித் திரட்டிகளும் ஒன்றையொன்று சார்ந்தவை. இந்தச் சார்புத் தன்மையில் சமநிலை எப்போதெல்லாம் தவறிப்போகிறதோ, அப்போதெல்லாம் இரு தரப்புக்கும் இடையே மோதல்கள் ஏற்படுகின்றன.
ஊடக பெரும்புள்ளியான ரூபர்ட் முர்டாக் அண்மையில் கூகுள் நிறுவனத்துடன் மோதியதால், விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. அவருக்குச் சொந்தமான சில இணைய தளங்களிலுள்ள சந்தா செலுத்திப் பார்க்க வேண்டிய பங்கங்களை கூகுள் இலவசமாக வெளியிட்டு வந்ததால் இந்தப் பிரச்னை உருவானது. முர்டாக்கின் கோரிக்கைகளை கூகுள் கண்டுகொள்ளவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவர், தனது முக்கிய செய்தி இணைய தளங்களை கூகுள் செய்தித் திரட்டியின் பட்டியலிலிருந்து எடுத்துவிடப்போவதாக அறிவித்தார். ஆனாலும் கூகுள் அசைந்து கொடுக்கவில்லை. எங்கள் வளர்ச்சிக்கு யாரும் தேவையில்லை என இருதரப்புமே பிடிவாதமாக இருந்து வந்தன.
இப்படியொரு சூழ்நிலையைப் பயன்படுத்தி, கூகுளில் இருந்து இணைய தளச் செய்தி வெளியீட்டாளர்களைப் பிரிப்பதற்கு வியூகம் வகுத்தது மைக்ரோசாஃப்ட். கூகுளில் இருந்து வெளியேறி தனது பிங் திரட்டியில் இணைத்துக் கொள்வதற்காக செய்தி வெளியீட்டாளர்களுடன் அந்த நிறுவனம் பேரம் பேசி வருவதாகவும் செய்தி வெளியானது. முக்கியச் செய்தி இணைய தளங்களிலிருந்து பிரத்யேகச் செய்திகளைப் பெற்று அவற்றை பிங் திரட்டியில் இணைத்துக் கொள்ள மைக்ரோசாஃப்ட் முயன்று வருவதாகக் கூறப்பட்டது. பிங் தேடுபொறியை அறிமுகம் செய்த பிறகு தேடல் மற்றும் விளம்பரச் சந்தையில் மைக்ரோசாஃப்ட் வேகமாக முன்னேறியிருப்பதாகவும் புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டன.
மைக்ரோசாஃப்டின் காய் நகர்த்தல்கள் கூகுள் செய்தித் திரட்டியை பெருமளவு பாதிக்கச் செய்யும் என்று கருதப்பட்டது.
இதற்கு மேல் பிடிவாதமாக இருந்தால், வருவாயை இழக்க வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்த கூகுள், தற்போது புதிய திட்டத்தை வெளியிட்டிருக்கிறது. இதன்படி, சந்தா செலுத்திப் பார்க்கவேண்டிய இணைய தளங்களில் 5 பக்கங்களை மட்டுமே இலவசமாகப் பார்க்க அனுமதிக்கும் வகையில் திரட்டியை மாற்றி அமைத்திருக்கிறது. அதற்கு மேல் பார்க்க முயன்றால் சம்பந்தப்பட்ட இணைய தளத்தின் சந்தா செலுத்துவதற்கான பக்கம் காட்டப்படும். இதற்காக "ஃபர்ஸ்ட் க்ளிக் ஃப்ரீ' என்கிற சேவையை கூகுள் தொடங்கியிருக்கிறது.
ஆயினும் இதெல்லாம் இணைய தளச் செய்தி வெளியீட்டாளர்களைச் திருப்தியடைச் செய்யாது என்றே கருதப்படுகிறது. ஒருவர் ஓர் இணைய தளத்தில் 5 பக்கங்களுக்கு மேல் பார்ப்பது என்பதே அரிதுதான்.
அப்படிப் பார்க்க வேண்டிய தேவை ஏற்பட்டால், வேறு இணைய தளத்துக்குச் சென்று அங்கு இலவசமாகக் கிடைக்கக்கூடிய 5 பக்கங்களைப் பார்க்க முடியும். இதனால், இலவசமாக 5 பங்கங்களை அனுமதிப்பதென்பது இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்ததாகிவிடாது.
ஊடகங்களுக்கு எதிரான மோதலில் தனது நிலையிலிருந்து கூகுள் இறங்கி வந்திருப்பதற்கு முக்கியக் காரணம், இந்தப் போட்டியில் மைக்ரோசாஃப்ட் நுழைந்துவிடக்கூடாது என்பதுதான். அதன் நோக்கமும் கிட்டத்தட்ட நிறைவேறிவிட்டது. ஆனால், சண்டை முடிந்துவிடவில்லை; சமாதானம் பேசவும் ஆளில்லை.
கட்டுரையாளர் : எம். மணிகண்டன்
நன்றி : தினமணி
Thursday, December 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment