அதிக எண்ணிக்கையில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வேன்களின் பர்மிட் ரத்து செய்யப்படும் என்று தமிழகப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. சில இடங்களில் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது.
இது ஏதோ புதிய நடவடிக்கை அல்லது புதிய அரசாணை போல தோற்றம் தந்தாலும், அழுகிற குழந்தைக்குப் பழைய கிலுகிலுப்பையைக் காட்டி சமாதானம் செய்வதைப் போன்று, வேதாரண்யம் விபத்தில் பள்ளிக் குழந்தைகள் பலியான சம்பவத்தால் கொதித்துப் போயிருக்கும் சமூக மனஇறுக்கத்தைத் தளர்த்தும் உத்தியாக இந்த அறிவிப்பைச் செய்துள்ளார்கள். அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லும் எந்தவொரு வாகனத்தின் பர்மிட்டையும் ரத்து செய்து, வாகன ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கச் சட்டத்தில் ஏற்கெனவே இடமிருந்தாலும் இத்தனை காலமாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழும் முன்பாகவே, இதுபோன்ற ஓர் அறிவிப்பின் மூலம், இனிமேல் எல்லாம் சரியாகிவிடும் என்ற எண்ணத்தைத் தோற்றுவிப்பதுதான் இந்த அறிவிப்பின் நோக்கம்.
பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பள்ளி பஸ்கள், தனியார் வேன்கள், ஆட்டோக்கள் எல்லாமும் இத்தனை நாளும் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் குழந்தைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்தாலும், போக்குவரத்துத் துறையோ அல்லது காவல்துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்காததற்குக் காரணம் எல்லாரும் அறிந்ததுதான்.
இத்தகைய நிகழ்வுகளில் மிகப்பெரும் மெüனக் குற்றவாளிகள் பெற்றோர்கள்தான் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். பூக்களை கூடையில் அள்ளிப்போடுவதைப் போல ஆட்டோக்களிலும் வேன்களிலும் ஏற்றிவிட்டு வரும் பெற்றோரை எந்த வகையில் குற்றவாளிகள் அல்ல என்று சொல்ல முடியும்? ஆட்டோ அல்லது வேன் சாதாரணமாக சாய்ந்தாலும்கூட எத்தனை குழந்தைகள் நெரிசலில் சிக்கி எலும்பு முறியும், உயிரை இழக்கும் என்பது தெரிந்திருந்தும்கூட, அந்த வாகனங்களில் ஏற்றி அனுப்பும் பெற்றோரின் அறியாமையை எப்படிப் பொறுத்துக்கொள்வது?
"பள்ளி வெகுதொலைவில் உள்ளது, எங்களால் குழந்தைகளைக் கொண்டுபோய் விட்டுவிட்டு வேலைக்குச் செல்ல இயலாது' என்பதும், "அளவான எண்ணிக்கையில் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ அல்லது வேன்களில் மாதக் கட்டணம் அதிகம்' என்பதும்தான் அவர்கள் கூறும் காரணம். தனியார் பள்ளிகளுக்கு கொட்டியழும் கல்விக் கட்டணத்தில் ஒப்பிடும்போது, குழந்தைகளின் பாதுகாப்புக்காகச் செலவிடும் கூடுதல் தொகை மிகச் சிறிதுதான் என்பதைப் பெற்றோர்கள் உணர்வதில்லை.
இதுபோன்ற வாகனங்களில் மட்டுமல்ல, தங்கள் குழந்தைகளை ஸ்கூட்டரிலும், மோட்டார் சைக்கிளிலும் ஏற்றிக்கொண்டு பள்ளிக் கதவை மூடும்முன்பாகப் போய்ச் சேருவதற்காக சாலை விதிகளை மீறும் பெற்றோரும் இருக்கிறார்கள். இவர்கள் விபத்துக்குள்ளாகிறபோது, பள்ளிக் குழந்தை விபத்தில் சாவு என்கிற பச்சாதாபச் செய்தியாக மாறுகிறதே தவிர, பள்ளிக்கு நேரமாகிவிட்டதால் சாலை விதிகளை காற்றில் பறக்கவிட்ட ஒரு தந்தையின் அறியாமை பேசப்படுவதில்லை. அண்மையில், சாலை விபத்தில் சிக்கியும் ஸ்டிரெச்சரில் வந்து, சிறப்பு அனுமதியுடன் தேர்வு எழுதிய மாணவி படத்துடன் செய்தியாக்கப்பட்டார். ஆனால், அந்த விபத்தின் தன்மை குறித்து யாருமே பேசவில்லை.
கல்விக் கூடத்தின் அருகிலேயே குழந்தைகள் வசிக்க வேண்டும் என்பது நகர்ப்புறங்களில் சாத்தியமில்லை. ஆனால், இத்தகைய சிக்கலைத் தீர்க்க வெறுமனே வாகனச் சோதனை என்கிற கண்துடைப்பைக் காட்டிலும் வேறு நல்ல நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளலாம்.
தனியார் பள்ளிகளில் பஸ் வசதி இருந்தும்கூட, வேன்களிலும் ஆட்டோக்களிலும் குழந்தைகளை அனுப்பக் காரணம் பள்ளி பஸ்களின் கட்டணம் மிகஅதிகமாக இருப்பதுதான். மாதம் ரூ.300, ரூ.400 மிச்சம்பிடித்துவிடலாம் என்ற நடுத்தரக் குடும்ப மனநிலைதான் இத்தகைய பாதுகாப்பாற்ற சூழலுக்கு உடன்பட வைக்கிறது.
தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை, வெகு தொலைவிலிருந்து வரும் மாணவர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை கல்வித் துறை கணக்கெடுத்து, ஒவ்வொரு தனியார் பள்ளிகளும் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய பஸ்களின் எண்ணிக்கையைத் தீர்மானிப்பதும், அரசுப் போக்குவரத்துக் கழக பஸ்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அதே கட்டணத்தை இக் குழந்தைகளிடம் வசூலிக்க வேண்டும் என்று கட்டாயமாக்குவதும்தான் இப்பிரச்னைக்கு குறைந்தபட்சத் தீர்வாக அமையும்.
அரசு போக்குவரத்துக் கழகங்களே இந்தப் பள்ளி வாகனச் சேவையில் ஈடுபடலாம் என்று பரிந்துரைக்கத் தோன்றினாலும், இலவச பஸ் பாஸ் பெற்ற பள்ளி மாணவர்களை, அரசுப் போக்குவரத்துக் கழக பஸ் நடத்துநர்களும் ஓட்டுநர்களும் அலைக்கழிப்பதைப் பார்த்தால் அத்தகைய பரிந்துரைகளைச் சொல்ல மனம் வருவதில்லை. இந்தப் பள்ளிக் குழந்தைகளை இந்த நடத்துநர்களும் ஓட்டுநர்களும் ஓசியில் ஏற்றிச் செல்லப் போவதில்லை. இவர்களுக்கான முழு கட்டணத்தையும் மானியமாக பல கோடி ரூபாயை அரசு செலுத்துகிறது. ஆனாலும், இந்தக் குழந்தைகளைக் கண்டவுடன் பஸ்ûஸ நிறுத்தாமல் கடந்துசெல்வதும், தள்ளிப்போய் நிறுத்துவதும், குழந்தைகள் தங்கள் பாடப்புத்தக மூட்டையுடன் ஓடிப்போய் ஏறுவதும் எல்லா நகரங்களிலும் வெட்கமில்லாமல் நடந்துகொண்டே இருக்கிறது. ஒரு பெற்றோர்கூட தட்டிக் கேட்பதில்லை. இந்த ஓட்டுநர் நடத்துநர்களும், தங்களுக்கும் ஒரு குழந்தை இருக்கிறது என்பதை நினைப்பதில்லை.
நன்றி : தினமணி
Thursday, December 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment