Saturday, August 22, 2009

ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க கட்டுப்பாடு கொண்டு வரப்படுமா?

வங்கிக் கணக்கு இல்லாத, மற்ற வங்கி ஏ.டி.எம்.,களில், மாதத்திற்கு ஐந்து முறைக்கு மேல்,வாடிக்கையாளர்கள், பணம் எடுத்தால், அதற்கு கட்டணம் செலுத்தும் முறை மீண்டும் அறிமுகப்படுத்த உள்ளதாக, வங்கி அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன. இச்செய்தியை, இந்திய ரிசர்வ் வங்கி செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து, இந்திய வங்கிகள் கூட்டமைப்பு தரப்பில் கூறப்பட்டதாவது:
மற்ற வங்கி ஏ.டி.எம்.,களில், ஐந்து முறைகளுக்கு மேல், பணம் எடுப்பவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை, உத்தரவாக வெளியிடவில்லை. கடந்த சில மாதங்களாக இந்த நடைமுறை உள்ளது. இது குறித்து அந்தந்த
வங்கிகளே தீர்மானித்துக் கொள்ளலாம். பிற வங்கி ஏ.டி.எம்.,களில், ஒரு தடவைக்கு 10 ஆயிரம்
ரூபாய் வரை மட்டுமே எடுக்கும் திட்டம் கொண்டு வரவும், தற்போது பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 40 ஆயிரம் ஏ.டி.எம்.,கள் உள்ளன. இவற்றில், 30 ஆயிரம் ஏ.டி.எம்.,கள், நகர்ப்புற மற்றும் மெட்ரோ நகரங்களில் உள்ளன. 10 ஆயிரம் ஏ.டி.எம்.,கள் மட்டுமே, புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் அமைந்துள்ளன. நாடு முழுவதிலும், 80 பொதுத் துறை, தனியார், கூட்டுறவு மற்றும் வெளிநாட்டு வங்கிகள், ஏ.டி.எம்., சேவையை வழங்கி வருகின்றன. இந்த ஏ.டி.எம்.,களில், நடைபெற்ற பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்த போது, 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக பணம் எடுப்பவர்கள் 90 சதவீதம் பேர். அதே சமயம், ஒரு தடவைக்கு, 1,000 ரூபாய்க்கு குறைவாக பணம் எடுப்பவர்களை, அனுமதிக்கக் கூடாது என்ற யோசனையை, ரிசர்வ் வங்கி ஏற்றுக் கொள்ளவில்லை. பெரியளவிலான தொகை எடுப்பவர்கள், மிகக்குறைவாக உள்ளனர். சிறிய தொகையை மற்ற ஏ.டி.எம்.,களில் இருந்து எடுப்பதால், சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு கணக்கு வைப்பதில், சில பிரச்னைகள் மற்றும் தவிர்க்க முடியாத செலவு ஏற்படுகிறது. பிற வங்கி வாடிக்கையாளர்கள், கணக்கில் உள்ள பணத்தை தெரிந்து கொள்ள, பணம் எடுக்க, மீண்டும் கணக்கில் மீதம் உள்ள பணத்தை அறிய, அடிக்கடி ஏ.டி.எம்., இயந்திரத்தை பயன்படுத்துகின்றனர். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே, நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு, கட்டணம் வசூலிக்கும் திட்டம், ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இதை இன்னமும் அமல்படுத்தவில்லை. இத்திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன், அது குறித்து வாடிக்கையாளர்களுக்கு முறையாகத் தகவல் தெரிவிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
நன்றி : தினமலர்


No comments: