ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. எதிர்பாராத அதிர்ச்சி எதுவும் இல்லைதான் என்றாலும், இந்த இடைத்தேர்தல் முடிவுகள் சில எச்சரிக்கைகளையும், வாக்காளர்களின் மன ஓட்டத்தையும் படம்பிடித்துக் காட்டாமல் இல்லை.
இடைத்தேர்தலில் பணம் விளையாடியது, அதிகார துஷ்பிரயோகம் நடந்தது, ஆளும்கட்சித் தரப்பு தேர்தல் தில்லுமுல்லுகளிலும், கள்ள வாக்குகளைப் பதிவு செய்வதிலும் முனைப்புக் காட்டியது - இப்படிப்பட்ட விமர்சனங்கள் எழுவது புதியதொன்றும் அல்ல. அதிமுக ஆட்சியில் திமுகவும், திமுக ஆட்சியில் அதிமுகவும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளும் குற்றச்சாட்டுகள்தான் இவை என்பதால், அதற்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது.
இயல்பாகவே இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிக்குச் சாதகமான ஒரு சூழ்நிலை இருப்பது இயல்பு. இடைத்தேர்தல்களால் ஆட்சி மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடாது என்பதால், வாக்காளர்களில் பெரும்பாலானோர் ஆளும் கட்சி வேட்பாளருக்குச் சாதகமாக வாக்களிப்பதைத் தான் விரும்புவார்கள். தங்களது சட்டப்பேரவை அல்லது மக்களவைப் பிரதிநிதி ஆளும் கட்சி உறுப்பினராக இருந்தால் தங்களது தொகுதிக்கு நல்ல சில திட்டங்கள் வந்து விடாதா என்கிற எதிர்பார்ப்புதான் இதற்குக் காரணம். அதனால், நடந்து முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் ஐந்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
ஆளும் கட்சியின்மீது அளவுக்கு அதிகமான அதிருப்தி ஏற்பட்டிருந்தால் ஒழிய இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிக்குச் சாதகமாக அமைந்ததாகச் சரித்திரம் இல்லை. அதனால் அதிகார துஷ்பிரயோகம், பணம் விளையாடியது போன்ற விமர்சனங்களுக்கு அர்த்தமில்லை என்பதுதான் நமது கருத்து. ஆளும் கட்சியின் செயல்பாடுகளில் பல குறைகள் இருப்பது உண்மைதான் என்றாலும், மிகப்பெரிய அதிருப்தி எதுவும் மக்கள் மத்தியில் இல்லை என்பதை இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்துகின்றன என்று சொன்னாலும் தவறில்லை.
இந்த இடைத்தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை, ஆளும் திமுக-காங்கிரஸ் கூட்டணியின் வெற்றியைவிட, போட்டியில் கலந்து கொள்ளாமல் விலகிவிட்ட அதிமுக கூட்டணியின் தவறான முடிவுதான் பளிச்சிடுகிறது. வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் மக்கள் பிரச்னைகளை முன்வைத்துப் போராடத் தயங்கும் எந்தவொரு கட்சியோ அல்லது அணியோ அரசியல் அரங்கத்தில் தாக்குப்பிடித்ததாகச் சரித்திரம் இல்லை. இந்த விஷயத்தில், திமுகவிடமிருந்து ஒரு முக்கியமான பாடத்தை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கற்றுக்கொள்ளத் தவறி விட்டது என்றுதான் கூற வேண்டும்.
1972-ல் திமுகவில் பிளவு ஏற்பட்ட பிறகு நடந்த திண்டுக்கல் மக்களவைக்கான இடைத்தேர்தலில், எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக வெற்றி பெற்றது என்பதுடன், இரண்டாவது இடத்தை பழைய காங்கிரஸ் பிடித்து ஆளும் திமுக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. அப்போது தொடங்கி, இடையில் 1980 மக்களவைத் தேர்தல், மயிலாடுதுறை மற்றும் அண்ணாநகர் சட்டப்பேரவை இடைத்தேர்தல்கள் தவிர ஏனைய தேர்தல்களில் எல்லாம் திமுக தோல்வியைத்தான் தழுவியது.
1972-ல் தொடங்கி 1989-ல் மீண்டும் திமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமரும்வரை தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டபோதும், திமுக தலைவர் கருணாநிதி துவளவில்லை என்பது மட்டுமல்ல, தொடர்ந்து கட்சிப் பணி, மக்கள் பிரச்னைகளுக்காகப் போராட்டம் என்று களத்தில் இருந்தார் என்பதை எப்படி மறந்துவிட முடியும்? ஏதாவது ஒரு கட்டத்தில் அவர் சோர்ந்து போயிருந்தால், ஐந்து முறை முதல்வரான பெருமை அவருக்குக் கிடைத்திருக்குமா என்ன?
அதிமுகவிடமும் அதன் கூட்டணிக் கட்சிகளிடமும் இல்லாத துணிவும் சுறுசுறுப்பும் தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் காணப்படுவதை மக்கள் அங்கீகரிக்கத் தொடங்கிவிட்டார்களோ என்று தோன்றுகிறது. போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் சுமார் 20,000-க்கும் அதிகமான வாக்குகளை தேமுதிக பெற்றிருக்கிறது என்பதும் மூன்று தொகுதிகளில் வைப்புத் தொகையைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பதும், அதிமுகவுக்கு மக்கள் விடுத்திருக்கும் எச்சரிக்கை அறிவிப்பு.
அதிமுக அணியின் தேர்தல் புறக்கணிப்பை வாக்காளர்கள் புறக்கணித்திருப்பதில் அதிசயம் இல்லை. மக்களாட்சியில் எந்த ஓர் ஆளும் கட்சிக்கும் ஓர் எதிர்க்கட்சியோ, எதிர்க்கட்சிக் கூட்டணியோ இயற்கையாகவே ஏற்பட்டுவிடும். அது தவிர்க்க முடியாதது. எதிர்க்கட்சியே இல்லாமல் நாங்கள் ஆட்சி செய்வோம் என்று ஓர் ஆளும் கட்சியோ, இந்த ஆளும் கட்சியின்மீது அதிருப்தி ஏற்பட்டால் மாற்றாக இருக்கும் எதிர்க்கட்சி தாங்கள் மட்டும் தான் என்று எந்த ஒரு எதிர்க்கட்சியோ மக்களாட்சியில் இறுமாப்புடன் இருந்துவிட முடியாது. அதிமுக அணியின் தேர்தல் புறக்கணிப்பு தேமுதிகவின் வளர்ச்சிக்குப் பெரிய அளவில் உதவி இருக்கிறது என்பதும், அந்தக் கட்சி பெற்ற வாக்குகளில் பெரும்பகுதி அதிமுக அணியின் வாக்குகள்தான் என்பதும் தெளிவு.
அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி அரசியல் நடத்துவது என்றும், தோல்வி பயத்தில் ஒதுங்கி நிற்பது என்றும் அதிமுக தொடர்ந்து நினைத்தால், மக்கள் அந்தக் கட்சியை ஓரம்கட்டிவிடுவார்கள் என்பதைத்தான் இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது யார் என்பது அல்ல கேள்வி. தோல்வி அடைந்தது என்னவோ, தேர்தலில் பங்கு பெறாமல் ஒதுங்கி இருந்த அதிமுகவின் ராஜதந்திரம்தான், சந்தேகம் இல்லை!
நன்றி : தினமணி
Saturday, August 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment