Monday, August 10, 2009

துவங்கியாச்சு பண்டிகை காலம்: தங்க நகை விற்பனை ஜொலிக்குமா?

பண்டிகை காலம் துவங்கியுள்ளதை அடுத்து, இந்தியாவில் தங்க நகை விற்பனையாளர்கள் குஷி அடைந்துள்ளனர். இந்தியாவில் பண்டிகை காலம் கோலாகலமாக துவங்கி விட்டது. ரக்ஷா பந்தன் முடிவடைந்துள்ள நிலையில், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை மற்றும் தீபாவளி என, பண்டிகைகள் வரிசை கட்டி வரத் துவங்கி விடும். பண்டிகை காலங்களின் போது, தங்கள் மனம் கவர்ந்தவர்களுக்கு தங்க நகைகளை பரிசளிக்கும் வழக்கம் இந்தியாவில் உள்ளது. மேலும், பண்டிகை காலங்களில் தான் அதிக திருமணங்கள் நடக்கும். எனவே, தங்க நகைகளின் விற்பனை பண்டிகை காலங்களில் அதிகரிக்கும்.
தற்போது, பண்டிகை காலம் துவங்கியுள்ளதை அடுத்து, நகை விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மிக அதிக அளவில் வாடிக்கையாளர்கள் தங்கள் கடைகளில் குவிந்து விடுவர் என, அவர்கள் நினைக்கின்றனர். இதனால், விற்பனையாளர்கள் தங்க நகைகளை அதிகமாக வாங்கி இருப்பு வைத்துள்ளனர். உலகின் மொத்த தங்க நகை தேவையில், இந்தியாவின் பங்கு மட்டும் கடந்தாண்டு 20 சதவீதமாக இருந்தது. இதில், பெருமளவு நகைகள், பண்டிகை காலங்களிலேயே விற்பனையாகியுள்ளன. ஆனால், வட மாநிலங்களில் இந்தாண்டு எதிர் பார்த்த அளவு மழை பெய்யாததாலும், பருவமழை தாமதமாக துவங்கியதாலும், நகை விற்பனையாளர்களில் சிலர் கலக்கம் அடைந்துள்ளனர்.
நன்றி : தினமலர்


No comments: