Sunday, August 9, 2009

பழமையைப் பாதுகாப்போம்!

அன்னைத் தமிழில் தோன்றிய பழம்பெரும் இலக்கியங்களில் பல கடற்கோள்களாலும், கவனக் குறைவாலும் செல்லறித்து, சிதைந்து போயிருக்கின்றன. நமது வரலாற்றுத் தடயங்கள் பல அழிந்து போயிருக்கின்றன. பாதுகாத்துச் சேகரித்து வைக்காத பெரும் பிழையால், நேற்றைய தலைமுறையின் புகழையும், புலமையையும் முற்றாகத் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லா தலைமுறையினராய் இருப்பது வேதனையைத் தருகிறது.

தொல்லியல் துறை சார்ந்த ஆய்வாளர்களது இன்றைய பதிவுகளிலிருந்து பல செய்திகளையும், இழந்துபோன தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள் பலவற்றைப் பற்றியும் ஓரளவு தெரிந்து கொள்ள முடிகிறது.

கல்வெட்டுகளில் சில நூல்களின் பெயர்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் அப்பெயர்களுக்குரிய நூல்களின் முழுமையான தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. நூலின் பெயர் தெரிந்த அளவுக்கு நூலாசிரியரது பெயரும், அவரைப் பற்றிய குறிப்பும் காணப்பெறவில்லை. ஆனால் கல்வெட்டுகளில் பதிவு செய்திருக்கின்ற பாங்கினைப் பார்த்தால், அந்நூல் அன்றைய நாளில் மக்களால், சான்றோர்களால், அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பற்ற உயரிய நூல் எனத் தெரிகிறது.

சோழப் பேரரசின் பெருமையையும் புகழையும் உலகுக்கு உணர்த்தியவர்களில் முதலாம் ராஜராஜன் முதன்மையானவன். சோழப் பேரரசின் பரம்பரையில் ஈடு இணை இல்லாத பேரரசன். தமிழையும் சைவத்தையும் தம் இரு கண்களாய்ப் போற்றி உயர்த்திய பெருமகன். இத்தகைய மாமன்னனைப் பற்றி அன்றைய நாளில் இயற்றப்பட்ட நூல்களில் அறிஞர்களால் வெகுவாய்ப் புகழப்பட்ட நூல்கள் இரண்டு. ஒன்று "இராஜராஜேஸ்வர நாடகம்', மற்றொன்று "இராஜராஜ விஜயம்' என்ற காவியம்.
இராஜராஜ நாடகம் என்ற நூல் அன்றைய நாளில் தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலில் திருவிழாக்களின் போது அரங்கமைத்து நடிப்பதற்காகவே எழுதப்பட்டதாகத் தெரிகிறது. இரண்டாவது நூலான "இராஜராஜ விஜயம்' இவனது புகழ் பரப்பும் காவியம். இது திருப்பூந்துருத்தித் திருக்கோயிலில் சான்றோர் பேரவையில் வாசிப்பதற்காக எழுதப்பட்டதாகத் தெரிகிறது.

இவ்விரு நூல்களும் தமிழில் அல்லது வடமொழியில் எழுதப்பட்டனவா என்பது அறியமுடியவில்லை. திருவிழாக் காலங்களில் நடிப்பதற்கும், படிப்பதற்கும் அறக்கட்டளைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இந்நூல்கள் இரண்டுமே தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயில் வரலாற்றை மையக் கருவாய் அமைத்து எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது ஆய்வாளர் கே.எ.நீலகண்ட சாஸ்திரிகளது கருத்து.

நாராயண பட்டர் எனப்படும் கவிஞர் குமுதசந்திடுமரன் என்பவர், திருபுவனியில் மாணிகுவாசனிச் சேகரியைச் சேர்ந்தவர்; பண்டிதர். இவர் "குலோத்துங்க சரிதை' என்ற நூல் ஒன்றை எழுதியுள்ளார். முதலாம் குலோத்துங்கன் புகழ்பாடும் நூல். இந்நூலை இயற்றியதற்காக அந்த ஊர்ச் சபையார் அரைநிலமும், இரண்டு மாவும் கொண்ட (இன்றைய மதிப்பு 4 ஏக்கர் பரப்பளவு) நஞ்சை நிலத்தை வழங்கியுள்ளார்.

இந்நிலத்திற்குக் குறைந்த அளவே வரி விதித்திட வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், இது அரசனது ஆணையாகும் என செதுக்கப்பட்டுள்ள கல்வெட்டுச் செய்தி நம்மை வியக்க வைக்கிறது.

கடலூரில் கி.பி.1111-1119-ஆம் ஆண்டு கல்வெட்டுகள் நிறையவே உள்ளன. அதில் ஒரு கல்வெட்டில் ஒரு செய்தி. கமலாலயபட்டன் என்ற ஒருவர் கன்னிவன புராணம், பூம்புலியூர் நாடகம் என இரண்டு நூல்கள் எழுதியதாகவும், இதற்குச் சன்மானமாக அரசனால் முற்றூட்டாக நிலம் வழங்கிய செய்தியைக் கடலூர் கல்வெட்டில் காணமுடிகிறது.

கி.பி.1210-ஆம் ஆண்டில் திருவாலங்காட்டுத் திருக்கோயிலில் தினந்தோறும் நெய்விளக்கு ஏற்றுவதற்காக, அரும்பாக்கத்தைச் சேர்ந்த அறநிலை விசாகன் திரைலோக்கியமல்லன் வத்ஸராஜன் என்பவன் நன்கொடை கொடுத்து ஒரு கட்டளையை நிறுவியுள்ளான். இவன் வடமொழியில் உள்ள பாரதத்தைத் தமிழில் மொழிபெயர்த்த பெருமகன். பைந்தமிழால் பல பாக்கள் பாடி சிவபெருமானுடைய பொற்பாதத்தைக் கண்டேன் என திருவாலங்காட்டுக் கல்வெட்டில் ஒரு செய்தியைப் பதிவு செய்துள்ளான். ஆனால், அவனது மொழிபெயர்க்கப்பட்ட பாரதமும் கவிதைகளும் கிடைக்கப்பெறவில்லை.

திருவாரூர் திருக்கோயிலின் இரவுப் பொழுதில் ஆண்டவனை மகிழ்விக்க நடன மண்டபத்தில் பூங்கோயில் நாயகத் தலைக்கோலி என்ற ஆடலரசி நடனமாடி மகிழ்விப்பதைத் திருப்பணியாய்க் கருதிச் செய்த பெருமாட்டி. இவளுடைய ஆசான் பூங்கோயில் நம்பி. எனவே அரசன் இவளுக்கு வாயாற்றூர் என்ற பிரமதேய கிராமத்தில் "வீரணுக்க விஜயம்' என்ற காவியத்தை அரச அரன் புகழ்பாடி படைத்துக் கொடுத்த செய்தியை இன்றைக்கும் திருவாரூர் திருக்கோயில் கல்வெட்டு ஒன்றில் காணமுடிகிறது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள வல்லம் என்ற திருத்தலத்துத் திருக்கோயில் நாயகர் மீது "வல்லை அந்தாதி' என்ற நூலை, குறத்தி என்ற ஊரைச் சேர்ந்த வரதய்ய புலவர் என்பவர் இயற்றியதாகவும், அதற்கு அரசன் சன்மானமாக நூறு குழி நிலத்தை வழங்கிய கல்வெட்டுச் செய்தி இன்றைக்கும் அழியாது உள்ளது. ஆனால் வல்லை அந்தாதி அழிந்து போனது. தமிழகத் திருக்கோயில்களில் உள்ள கல்வெட்டுகள் வாயிலாக இது போன்ற அழிந்துபட்ட இலக்கியங்களின் செய்திகளையாவது தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இலக்கியங்கள் பாதுகாக்கப்படவில்லையே என்ற உறுத்தல் இருக்கத்தான் செய்கிறது. தமிழர்கள் நல்லவர்கள்தான்; ஆனால் வல்லவர்களாக வாழாது போன காரணத்தால், நமது முந்தைய கால வாழ்வியல் சுவடுகள் பல சிதைந்து போயின. இனியாவது அரசும், சமுதாயமும் விழித்தெழுந்து பழமையைப் பாதுகாத்துத் தந்தால் நாளைய சமுதாயம் வாழ்த்தி, வணங்கும்.

கட்டுரையாளர் : ப.முத்துக்குமாரசுவாமி
நன்றி : தினமணி

No comments: