Sunday, August 9, 2009

இறங்கு முகத்தில் உள்ள சந்தை நிலவரம் அடுத்த வாரம் எப்படி?

இந்த வாரம் வியாழன், வெள்ளிக் கிழமைகளில், சந்தை 700 புள்ளிகளுக்கு மேல் இழந்து களையிழந்து காணப்பட்டது.

ஏன் குறைந்தது? : லாப நோக்கில் எல்லாரும் விற்றதால் சந்தை குறைந்தது. மேலும், சமீப நாட்களில் ஏறி வந்த ஆட்டோ பங்குகள் வியாழனன்று மிகவும் குறைந்ததாலும், பருவ மழை குறைவாலும் சந்தை கீழ் நோக்கி சென்றது. வியாழனன்று 389 புள்ளிகளும், வெள்ளியன்று 353 புள்ளிகளும் மும்பை பங்குச் சந்தை இழந்தது. வெள்ளி-யன்று, இறுதியாக மும்பை பங்குச் சந்தை 15,160 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 4,481 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. 14 மாத உச்சமான 16,000 புள்ளிகளைத் தொட்டு இறங்கிய சந்தை, அதே வாரத்தில், 15,160 புள்ளிகளைத் தொட்டு முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. எல் அண்ட் டி விற்கும் மகிந்திரா சத்யத்தின் பங்குகள்: சத்யம் கம்பெனியை எல் அண்ட் டி கம்பெனி வாங்க முயற்சி செய்தது மறக்க முடியுமா? சத்யம் கம்பெனியின் பங்குகளை மார்க்கெட்டில் வாங்க ஆரம்பித்தது; 8.34 சதவீதம் பங்குகளை கைவசம் வைத்திருந்தது. ஆனால், சத்யத்தை மகிந்திரா வாங்கிவிட்டதால், தற்போது, அந்த பங்குகளை செபியின் ஒப்புதல் பெற்று விற்க நினைக்கிறது. விற்றால் தற்போதைய விலையில், 800 கோடி ரூபாய் கிடைக்கும். 600 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய பங்குகள் அவை. மியூச்சுவல் பண்டுகள் எண்டிரி லோடு: மியூச்சுவல் பண்டுகளில் எண்டிரி லோடு இல்லாததால், பலர் மியூச்சுவல் பண்டுகளை விற்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. தபால் அலுவலகங்கள் மியூச்சுவல் பண்டு விற்பனையை தற்சமயம் நிறுத்தி வைத்திருக்கிறது.


வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள்: வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு இந்திய சந்தையில் பங்குகளை வாங்கியுள்ளன.


என்.ஹெச்.பி.சி., புதிய வெளியீடு சப்ஸ்கிரிப்ஷன்: முதல் நாளே 3.54 தடவை செலுத்தப் பட்டுள்ளது. அதாவது கிட்டத் தட்ட 22,000 கோடி ரூபாய்க்கு மேல் செலுத்தப்பட்டுள்ளது. இது போல, புதிய வெளியீடுகளுக்கு அப்ளை செய்ய செகண்டரி மார்க்கெட்டில் இருந்து பணத்தை எடுப்பதாலும் சந்தைகள் குறைகின்றன.


பணவீக்கம்: பணவீக்கம் இன்னும் மைனசில் தான் இருக்கிறது. இந்த வாரம் 1.58 சதவீதம் மைனசில் இருந்தது. இது, சென்ற வாரத்தை விட சிறிது அதிகம்.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்? : சந்தை அடுத்த வாரமும் சிறிது தள்ளாட்டத்தில் தான் இருக்கும்.


சேதுராமன் சாத்தப்பன்-


நன்றி : தினமலர்


No comments: