Monday, August 10, 2009

இந்திய ஹோட்டல் தொழில் கடும் நெருக்கடியில் இருக்கிறது : ரத்தன் டாடா

இந்த வருடம் இந்திய ஹோட்டல் தொழிலுக்கு கடும் நெருக்கடியான வருடமாக இருப்பதாக இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் சேர்மன் ரத்தன் டாடா தெரிவித்திருக்கிறார். தாஜ் ஹோட்டல்களை நிர்வகிக்கும் இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் கூட்டத்தில் பேசிய ரத்தன் டாடா இதனை தெரிவித்தார். இதையே தான் ஈஸ்ட் இந்தியா ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் தலைவர் பி.ஆர்.எஸ்.ஒபராயும் சில நாட்களுக்கு முன் சொல்லியிருந்தார். ஈஸ்ட் இந்தியா ஹோட்டல்ஸின் 59 வருட சரித்திரத்தில் இம்மாதிரியான மோசமான பாதிப்பு இதற்கு முன் வந்ததில்லை என்றார் அவர். ஓபராய் ஹோட்டல்களை நிர்வகித்து வரும் ஈஸ்ட் இந்தியா ஹோட்டல்ஸ் நிறுவனம் இனி வரும் காலாண்டுகளிலும் மோசமான ரிசல்ட்டை தான் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இரண்டு மிகப்பெரிய ஹோட்டல் குரூப்களான இந்தியன் ஹோட்டல்ஸ் மற்றும் ஈஸ்ட் இந்தியா ஹோட்டல்ஸ் ஆகியவை, அவர்களின் முதல் காலாண்டு நிதி அறிக்கையை வெளியிட்டிருக்கின்றன. அதில் ஈஸ்ட் இந்தியா ஹோட்டல்ஸின் நிகர லாபம் 22 சதவீதம் குறைந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்தியன் ஹோட்டல்ஸின் நிகர லாபம் 73 சதவீதம் குறைந்திருக்கிறது. அதன் மொத்த வருமானமும் 24 சதவீதம் குறைந்திருக்கிறது. வருமானமும் நிகர லாபமும் குறைந்ததற்கு முக்கிய காரணம், கடந்த வருடம் மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், தாஜ் பேலஸ் ஹோட்டல் மற்றும் டவர் ஹோட்டலில் 287 ரூம்களை மூட வேண்டியதாகி விட்டது. மும்பையில் தாஜ், ஓபராய் தவிர மொத்தமாக வட மும்பையில் 36 சதவீதமும் தெற்கு மும்பையில் 35 சதவீதமும் ஹோட்டல் தொழிலில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. மும்பை தவிர பெங்களுருவில் ஹோட்டல் தொழில் 40 சதவீதம்,பூனேயில் 49 சதவீதம், ஐதராபாத்தில் 37 சதவீதம், சென்னையில் 32 சதவீதம், டில்லி, கோல்கட்டாவில் 27 சதவீதம், அகமதாபாத்தில் 25 சதவீதம் சரிவு ஏற்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: