Friday, July 24, 2009

பொய்யோ, மெய்யோ!

சென்னையைச் சேர்ந்த வி. மாதவ் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்துள்ள சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகம், ""ஏப்ரல் 30 முதல் மே 3-ம் தேதி வரையிலான நான்கு நாட்களிலும் நகரப் பேருந்துகளில் கட்டணங்களைக் குறைக்கவில்லை; மாற்றம் செய்யவுமில்லை'' என்று கூறியுள்ளது. மே 13-ம் தேதி தமிழ்நாட்டில் பொதுத்தேர்தல் நடைபெறவிருந்த நேரத்தில் பஸ் கட்டணம் குறைக்கப்பட்டது குறித்து எல்லா பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகின.

இதுபற்றி நிருபர்களின் கேள்விக்குப் பதில் அளித்த தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா, ""தமிழகம் முழுவதும் அரசு பஸ்களில் கட்டணம் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இது தேர்தல் விதிமுறை மீறல் ஆகும். இது தொடர்பாக, ஃபேக்ஸ், தொலைபேசியில் புகார்கள் வந்துள்ளன'' என்றார். ஆனால், இதுகுறித்து விளக்கம் அளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு, ""மக்களின் வேண்டுகோளை ஏற்று அதிக எண்ணிக்கையில் சாதாரண பஸ்களை இயக்கினோம். கட்டணத்தைக் குறைக்கவில்லை'' என்று பதில் கூறினார். தமிழக அரசின் தலைமைச் செயலர் ஸ்ரீபதி, தேர்தல் ஆணையத்தின் முன்பு மே 3-ம் தேதி ஆஜராகி, விளக்கம் அளித்த பிறகு மே 4-ம் தேதி முதல் "அதிகரிக்கப்பட்ட சாதாரண கட்டணப் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்து, குறைக்கப்பட்ட உயர்கட்டணப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்து'' விட்டார்கள்.

மக்களின் வேண்டுகோளை தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர், தேர்தல் நாள் நெருக்கத்தில் நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன? "சாதாரண பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க' தாழ்தளப் பேருந்துகளையும்கூட பயன்படுத்தியது ஏன்? தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் இத்தகைய திட்டத்தை அமல்படுத்துவதென்பது இலவச டிவி, சேலை வழங்குவதைப் போல தேர்தல் விதிமுறை மீறல்தானே! இதில் தேர்தல் விதிமுறை மீறல் இல்லை என்றால் சாதாரண கட்டணப் பேருந்துகளை அப்படியே அதிக எண்ணிக்கையில் தொடர்ந்து இயக்கி இருக்க வேண்டியதுதானே! தேர்தல்வரை நிறுத்தப்பட்டிருந்தாலும், தேர்தல் முடிவுற்ற பின்னர் இந்த மக்கள் கோரிக்கை இல்லாமல் ஆகிவிட்டதா என்ன? இந்த நான்கு நாட்களில் சென்னை பெருநகரப் பேருந்துக்கு ஏற்பட்ட நஷ்டம் ரூ.4 கோடிக்கும் அதிகம். இதுகுறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை. யாரும் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கவில்லை. அமைச்சர் அப்போதும், சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகம் இப்போதும் அளித்துள்ள விளக்கம் சட்டத்தின் வார்த்தைகளில் சரியாக இருக்கிறது..

ஆனால், போக்குவரத்துக் கழகம் இதை அமல்படுத்திய காலம் தவறு என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்கும் அல்லது குறைந்த லாபத்தில் செயல்படும் என்றால் அதற்குக் காரணம், அந்தப் பேருந்துகளில் மக்கள் ஏறுவதில்லை என்று பொருள் அல்ல. நிர்வாக ஊழல்தான் என்பது மிகத் தெளிவாகத் தெரிந்த ஒன்று. ""சாதாரண கட்டண பஸ்களின்'' எண்ணிக்கையை திடீரென அதிகரித்ததைப் போல, நிறைய விஷயங்கள் போக்குவரத்துக் கழகத்தில் நடைபெற்று வருகின்றன. அதனை முறைகேடு என்று மற்றவர்கள் சொல்லும்போது, முறைகேடே இல்லை என்று ஆட்சியாளர்கள் மறுப்பது வழக்கமாக இருக்கிறது. ஆள்வது எந்தக் கட்சியாக இருந்தாலும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வாகனம் வாங்குதல், உதிரி பாகங்கள் வாங்குதல், பெட்ரோல் பயன்பாடு ஆகியவற்றில் முறைகேட்டுக்கு அதிக இடம் இருக்கிறது.

குறை சொல்வோர் முன்வைக்கும் முக்கியமான இரண்டு குற்றச்சாட்டுகள்: ஒன்று - போக்குவரத்துக் கழகம் ஆயிரக்கணக்கில் பஸ் சேஸிஸ் வாங்கும்போது, சேஸிஸ் தயாரிக்கும் நிறுவனங்கள் ஒவ்வொரு பத்து சேஸிஸ்களுக்கும் ஒரு சேஸிஸ் இலவசமாகத் தர முன்வருகின்றன என்றும் இவை கணக்கில் காட்டப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். இது மெய்யோ பொய்யோ!

இரண்டு - சிறப்பு பேருந்துகள், நெரிசல்நேர கூடுதல் பேருந்துகள், விழாக்கால பேருந்துகள் இயக்கும்போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், எல்லா பஸ் உரிமையாளர்களையும் போல முறையான அனுமதி பெற்றுத்தான் இயக்க வேண்டும். ஆனால் வட்டாரப் போக்குவரத்துத் துறையும் போக்குவரத்துத் துறை அமைச்சரின் கீழ் உள்ளதால், அனுமதி பெறாமலேயே அந்தந்தக் கிளைகள் தங்கள் விருப்பம்போல அதிக எண்ணிக்கையில் பஸ்களை இயக்குகின்றன. அதனால் முறைகேடுகள் நடக்கின்றன என்கிறார்கள்.
இது மெய்யோ பொய்யோ! தமிழக அரசைப் போலவே எங்களது விருப்பமும் இவையெல்லாம் பொய்யாக இருக்க வேண்டும் என்பதுதான்!
கட்டுரையாளர் :இரா. சோமசுந்தரம்
நன்றி : தினமணி

2 comments:

Praveenkumar said...

பொய்யோ, மெய்யோ!
உண்மை என்னவென்று ஆணித்தரமாக குறிப்பிட்டிருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்...!!!
இதனை கட்டுரையாளர்:இரா. சோமசுந்தரம் அவர்களிடம்தான் கேட்கனும் போல.....
பகிர்வுக்கு பாராட்டுகள்....

பாரதி said...

பிரவின்குமார் வருகைக்கு நன்றி

பொய்யோ, மெய்யோ நமக்கு தெரியாத?