Monday, July 27, 2009

இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் எச் 1 பி விசாவுக்கு போட்டியில்லை

இந்தியாவில் மிகப் பெரிய அளவில் தகவல் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனமான இன்போசிஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம், 2009-10ம் நிதியாண்டிற்கு இதுவரை குறைந்த அளவாக 405 எச் 1பி விசாக்களுக்கு மட்டுமே விண்ணப்பித்துள்ளது. உலகளவில் நிலவும் பொருளாதார மந்தநிலை உட்பட பல காரணங்களால் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், டி.சி.எஸ்., விப்ரோ மற்றும் இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் விண்ணப்பிக்கும் எச் 1பி விசாக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இன்போசிஸ் நிறுவனம் 2009-10ம் நிதியாண்டிற்காக இதுவரை 405 எச் 1பி விசாக்களுக்கு மட்டுமே விண்ணப்பித்துள்ளது.
இதுகுறித்து இன்போசிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மோகன்தாஸ் பாய் என்பவர் கூறுகையில், 'வெளிநாடுகளில் வேலை மற்றும் பணியாளர்களின் தேவை குறைந்துள்ளதால், இந்தாண்டு குறைவான எண்ணிக்கையிலேயே எச் 1பி விசாக்களுக்கு விண்ணப்பித்துள்ளோம். முன்னதாக, 2008ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை மொத்தமாக 8,700 எச் 1பி விசாக்கள் பெறப்பட்டன. கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 8,200 ஆக குறைந்தது. கடந்த காலங்களை விட தற்போது வெளிநாடுகளில் உள்ள கிளைகளுக்கு குறைவான பணியாளர்களே தேவைப்படுகின்றனர்' என்றார். அமெரிக்காவில் எச் 1பி விசா மூலம் பணியாற்றும் பணியாளர்களின் ஊதியம் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை தொடர்பாக அந்நாட்டு அரசு கடுமையான சட்டதிட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த காரணத்தாலும், இந்தாண்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் விண்ணப் பித்துள்ள எச் 1பி விசாக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி : தினமலர்


No comments: