தமிழகத்தில் மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல், கல்வியியல் என ஆயிரக்கணக்கான கல்லூரிகள் உள்ளன. இதில், பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர் பேரவைத் தேர்தல் நடத்தப்படுவதில்லை. இதனால் மாணவர்கள் தங்கள் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ள முடியாத சூழ்நிலைக்கு உள்ளாகி வருகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன் வரை, அரசுக் கல்லூரிகளில் மாணவர் பேரவைத் தேர்தல்களும், தமிழ் மன்றம், துறைவாரியான மன்றங்களுக்குத் தேர்தல்களும் நடத்தப்பட்டு வந்தன.
தேர்தல் தொடர்பாக மாணவர்களிடையே ஏற்பட்ட பிரச்னைகள், பூசல்களைக் காரணம் காட்டி பல கல்லூரிகளில் தேர்தல் நடத்தப்படுவது நிறுத்தப்பட்டு விட்டது.
அரசு நிதியுதவி, சுயநிதிக் கல்லூரிகளில் சிலவற்றில் மட்டும் இத்தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. பல கல்லூரிகளில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர் அல்லது கல்லூரி நிர்வாகத்துக்கு நெருக்கமானவர்களின் வாரிசுகளை பேரவை நிர்வாகிகளாக அறிவித்து விடுகின்றனர்.
மாணவர்களைத் தலைமைப் பண்புக்குத் தகுதி அடையச் செய்தல், அவர்களின் தனித் திறன்களை வெளிப்படுத்துதல், கல்விசாராப் பணிகளில் ஆர்வத்தை உண்டாக்குதல், அவர்களின் பிரச்னைகளை அவர்களுக்குள்ளாகவே தீர்த்துக் கொள்ளுதல் போன்றவற்றுக்காகவேதான் கல்லூரிகளில் மாணவர் பேரவைகள் உருவாக்கப்பட்டன.
இவை இன்று புறக்கணிக்கப்பட்டு, மாணவர் பேரவைத் தேர்தல் நடத்தப்படாமலும், கண்துடைப்புக்காக பேரவை நிர்வாகிகளை நியமித்தும் கல்லூரி நிர்வாகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக கல்வித் துறையோ அல்லது அரசோ கண்டும் காணாமலும் இருந்து வருகின்றன. தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட மாணவர் சக்தியே காரணமாக அமைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்து வீழ்ந்து, 1967-ம் ஆண்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்க இந்தி எதிர்ப்புப் போராட்டமும், அதற்கு மாணவர்களும், இளைஞர்களும் அளித்த ஆதரவும் ஒரு காரணம் என்பது அனைவரும் அறிந்ததே.
அக்காலக்கட்டத்தின்போது, திமுகவைச் சேர்ந்தவர்கள் பல கல்லூரிகளில் மாணவர் பேரவைகளிலும், தமிழ் மன்றம் உள்ளிட்டவைகளிலும் தேர்தல்களின் மூலம் பொறுப்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களின் மூலமாக கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் நடந்த விழாக்களில் கலந்துகொண்ட திமுக முன்னணித் தலைவர்கள் தங்களது கருத்துகளை மாணவர்கள் மத்தியில் பரப்பி, இயக்கத்தை வளர்த்தனர். அன்று திமுக ஆட்சிப் பொறுப்பேற்க மாணவர் சக்தியைத் திரட்டக் காரணமாக அமைந்தது கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் அமைந்த மாணவர் பேரவைகளே.
இன்றோ தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் முறையாக மாணவர் பேரவைத் தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் கட்சியினரும், மாணவர் அமைப்புகளும் விடுக்கும் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் தமிழக அரசு உள்ளது.
வட மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆண்டுதோறும் முறையாக மாணவர் பேரவைக்குத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இத்தேர்தல்களில் காங்கிரஸ் சார்பு மாணவர் அமைப்பான என்எஸ்யூஐ, பாஜக சார்பு மாணவர் அமைப்பான ஏபிவிபி, கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த மாணவர் அமைப்புகளான எஸ்எப்ஐ, ஏஐஎஸ்எப் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் அமைப்புகளின் சார்பில் பிரதிநிதிகளை நிறுத்துவர்.
பொதுத்தேர்தல்போல இத்தேர்தல்களுக்கும் பல்கலைக்கழகம், கல்லூரி வளாகங்களில் பிரசாரம் நடக்கும். ஆரோக்கியமான போட்டிகளுக்கு இடையே தேர்ந்தெடுக்கப்படும் மாணவர் பேரவைகள், நற்பணிகள் பலவற்றை ஆற்றி வருகின்றன. இதோடு, பல்கலைக்கழகம், கல்லூரி நிர்வாகங்கள் திறம்படச் செயல்படவும், மாணவர் பிரச்னைகளை உடனுக்குடன் களையவும் அவை உதவி புரிகின்றன.
தமிழகத்திலோ ஒரு சில கல்லூரிகளில் மட்டுமே இத்தேர்தல் நடத்தப்படுகிறது. இச்சூழ்நிலை மாற வேண்டும். அனைத்துக் கல்லூரிகளிலும் தேர்தல்கள் முறையாக, ஜனநாயக முறைப்படி நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.
கல்லூரிகளில் அமைக்கப்பட்ட மாணவர் பேரவைகள் மூலம், பல்கலைக்கழக அளவில் மாணவர் பேரவைகளை உருவாக்கவும் வேண்டும்.
இப்பேரவைகளில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் சிலரை பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுக்களிலும் இடம்பெறச் செய்ய வேண்டும்.
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு செய்யும் மசோதா விரைவில் நிறைவேற்றப்படும் சூழ்நிலை தென்படுகிறது.
இந்நிலையில், ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவியர் மன்றங்களும் உருவாக்கப்பட வேண்டும்.
அனைத்துக் கல்லூரிகளிலும் மாணவர் பேரவைத் தேர்தல் முறையாக நடைபெறவும், பல்கலைக்கழகங்களில் மாணவர் பேரவை உருவாக்கப்பட வேண்டும் என்பதே மாணவர்களின் கோரிக்கை.
இந்த மாணவர் அமைப்புகள் அரசுக்கு எதிரான ஆதரவைப் பெற்றுவிடும் என்று ஆட்சியில் இருப்பவர்களும் இருந்தவர்களும் பயப்படுவதாலோ என்னவோ, கோரிக்கையை நமது ஆட்சியாளர்கள் காதில் போட்டுக் கொள்வதே இல்லை. அதற்கு பயம்தான் காரணமாக இருக்க முடியும்!
கட்டுரையாளர் :தி.நந்தகுமார்
நன்றி : தினமணி
Monday, July 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment