எந்த ஒரு செயலும் சட்டப்படி சரியாக இருந்துவிட்டால் மட்டும் போதாது. தார்மிக ரீதியாகவும் அந்தச் செயல் ஏற்புடையதாக இருக்க வேண்டும். கொலை செய்வது, கற்பழிப்பது போன்ற செய்கைகள் சட்டப்படி சரி என்று பெரும்பான்மை பலத்தின் அடிப்படையில் ஒரு அரசு சட்டம் இயற்றுவதாலேயே, அந்தச் செயல்கள் சரியான செயல்கள் ஆகிவிடாது. அதேபோலத்தான், நமது அரசியல்வாதிகள் தங்கள் இஷ்டத்துக்குச் செலவு செய்து கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்தத் தொகுதி மேம்பாட்டு நிதி என்கிற தார்மிக வரம்பு மீறலும்!
1994-ம் ஆண்டு பி.வி. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, அப்போது நிதியமைச்சராக இருந்த இன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கால் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை விவரம் தெரிந்த யாருமே ஆரம்பம் முதலே அங்கீகரிக்கவோ, ஆமோதிக்கவோ இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதி என்பதை மக்கள் நலனில் அக்கறை உள்ள பலரும் எதிர்த்துப் பேசியும் எழுதியும் வந்தாலும், "பணம்' என்று வரும்போது கட்சி மாச்சரியங்களை மறந்து அனைத்துக் கட்சியினரும் கைகோர்த்துக் கொள்வதால் ஏற்படும் மக்களவைப் பெரும்பான்மை அதற்கு சட்ட அங்கீகாரம் அளித்து விட்டிருக்கிறது.
நாடாளுமன்றக் குழு ஒன்று கடந்த டிசம்பர் மாதம் இந்த நிதியை ஆண்டொன்றுக்கு ரூ.2 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக அதிகரிக்கப் பரிந்துரை செய்திருக்கிறது. ரூ.5 கோடியாக இந்த நிதி அதிகரிக்கப்பட்டாலே, இப்போதைய ரூ.1,600 கோடியிலிருந்து வருட நிதி ஒதுக்கீடு ரூ.4,000 கோடியாக அதிகரிக்கப்பட்டுவிடும். ரூ.10 கோடி என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தைப் பின்பற்றி, எல்லா மாநிலங்களிலும் சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்களுக்கும் இதுபோன்ற திட்டம் அறிவிக்கப்பட்டு விட்டது.
இப்போது, ஒன்றன்பின் ஒன்றாக, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அமைப்புகளையும் இந்த வியாதி தொற்றிக் கொள்ளத் தொடங்கி இருக்கிறது.
2002-ம் ஆண்டுக்கான மத்திய தணிக்கை மற்றும் வரவு - செலவு மேற்பார்வை இயக்குநரின் அறிக்கை பல மாநிலங்களிலும், ஏன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஷயத்திலும் முறைகேடுகளும், குளறுபடிகளும் காணப்படுவதைக் கண்டுபிடித்துள்ளது. எதற்காக நிதி ஒதுக்கப்பட்டதோ அதற்கு அந்த நிதி சென்றடையவில்லை என்றும், நிதி ஒதுக்கீடு முறைகேடாகப் பயன்பட்டது என்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளை விமர்சித்திருக்கிறது அந்த அறிக்கை.
ஒரு சில அரசியல் கட்சிகள், தங்களது உறுப்பினர்கள் இந்தத் தொகுதி மேம்பாட்டு நிதியை கட்சி வளர்ச்சிக்குப் பயன்படுத்த ஊக்குவித்திருப்பதும், இந்த நிதியின் மூலம் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றும் ஒப்பந்ததாரர்கள் கட்சிக்கு நன்கொடை என்கிற பெயரில் இந்த நிதியின் ஒரு பகுதியை அளிக்க வற்புறுத்தப்படுவதாகவும்கூட குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
2005-ல் புலனாய்வு முயற்சியில் ஈடுபட்ட ஒரு தொலைக்காட்சி அலைவரிசை, சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கித் தர கையூட்டுப் பெறுவதைப் படம்பிடித்து அம்பலப்படுத்தியது.
அரசு, தவறுகளைத் திருத்த என்ன வழி என்று ஆராய முற்பட்டதே தவிர ஊழலின் ஊற்றுக் கண்ணாக விளங்கும் திட்டத்தைக் கைவிடத் தயாராகவில்லை.
நமது அரசியல் சட்டம், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சட்டங்களையும் திட்டங்களையும் முன்வைப்பதற்கும் நிர்வாக இயந்திரம் அதை நிறைவேற்றுவதற்கும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களே என்னென்ன தேவை என்பதைப் பட்டியலிட்டு, அவர்களே அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வார்களானால் பிறகு நிர்வாக இயந்திரமும், அரசு அதிகாரிகளும் எதற்கு?
2005 ஏப்ரல் மாதத்தில் நடந்த தேசிய ஆலோசனைக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டம் கைவிடப்பட வேண்டும் என்றும், அதற்குச் செலவிடப்படும் நிதி ஒதுக்கீடு உள்ளாட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகளின் தேவையைக் கேட்டறிந்து நேரடியாக அந்த அமைப்புகளுக்குத் தரப்பட வேண்டும் என்றும் ஒரு கருத்தை முன்வைத்தார் சோனியா காந்தி.
2007-ல் வீரப்ப மொய்லி தலைமையில் அமைக்கப்பட்ட இரண்டாவது நிர்வாக சீர்திருத்தக் கமிஷனும் ""தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் - நாடாளுமன்றமோ, சட்டப்பேரவையோ எதுவாக இருந்தாலும் - தானே தனது தொகுதியின் மேம்பாட்டுக்கான பணியைத் தீர்மானித்துத் தமது நேரடி ஒதுக்கீட்டின் மூலம் நிறைவேற்றுவது ஊழலுக்கு உத்தரவாதம் அளிக்கும், அதிகாரப் பகிர்ந்தளிப்பு என்பதன் அடிப்படையையே இந்தத் திட்டம் தகர்த்து விடுகிறது'' என்று கருத்துத் தெரிவித்தது.
இடதுசாரிகளையும், காஷ்மீரத்தைச் சேர்ந்த சிறுத்தைகள் கட்சியினரையும் தவிர, ஏனைய கட்சியின் உறுப்பினர்கள் எல்லோருமே, தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.5 கோடியாகவோ, ரூ.10 கோடியாகவோ அதிகரிக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார்கள். கடந்த 14 ஆண்டுகளாக ஒதுக்கப்படும் இந்த மேம்பாட்டு நிதியால் உறுப்பினர்கள் வேண்டுமானால் மேம்பாடு அடைந்திருக்கலாம், ஆனால் அவர்களது தொகுதி மேம்பாடு அடைந்ததாகத் தெரியவில்லை. ஊழலில் ஊற்றுக் கண் என்று தெரிந்தும் இந்தத் திட்டம் தொடர்வது நல்லதல்ல!
நன்றி : தினமணி
Monday, July 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment