ஸ்டீல் கம்பி விலை, கடந்த ஆண்டு ஆகஸ்டில் அதிகபட்சமாக கிலோ 53 ரூபாய் வரை விற்பனையானது. சமீபகாலமாக, விலை படிப்படியாக குறைந்து, தற்போது 31- 33 ரூபாயாக குறைந்துள்ளது. ஐ.எஸ்.ஐ., முத்திரையிடப்பட்ட கம்பிகளின் விலை 31 -33 ரூபாய் என்ற அளவில் உள்ளது. 'பிராண்டாட்' கம்பி விலை, 33 ரூபாய் அளவில் விற்பனையாகிறது.
மணல் விலையும் கணிசமான அளவு சரிந்துள்ளது. ஒரு யூனிட் கரூர் மணல் அதிகபட்சமாக 2,400 ரூபாய் வரை விற்றது; இப்போது, 2,000 முதல் 2,100 ரூபாயாக உள்ளது. செங்கல், 'டேபிள் மோல்டேட்' 3,000 எண்ணிக்கை, 9,000 முதல் 9,500 ரூபாய் வரை விற்பனையாகிறது.
செங்கல் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. டீசல் விலை குறைந்தாலும், லாரி வாடகையில் மாற்றம் இல்லாதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோவையின் சுற்றுப்புறங்களில் இருந்து சப்ளையாகும் செங்கல், தரத்தைப் பொறுத்து விலையில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. கருங்கல் (போல்டர்ஸ்) விலை இரண்டு யூனிட் 2,100லிருந்து 1,900 ரூபாயாக குறைந்துள்ளது. ஜல்லி விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 'சைஸ் ஸ்டோன்' எனப்படும் சதுரகல் ஒன்றின் விலை ஏழு ரூபாயில் இருந்து 6.50 ரூபாயாக ஆக குறைந்துள்ளது. டீசல் விலை குறைப்பால், சிறிய அளவில் விலை மாற்றம் இருந்தாலும், கட்டுமான துறையில் ஏற்பட்டுள்ள மந்த நிலை, தன்னிறைவு நிலையால் கட்டட பொருட்களின் விலையில் 10 முதல் 20 சதவீத அளவுக்கு விலை சரிவு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் பல வர்த்தகர்கள், மணல், கல், சப்ளையர்கள் விலையை குறைக்க பெரிதும் தயக்கம் காட்டி வருகின்றனர். மரங்களின் விலையிலும் இதே போன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. தேக்கு மரம் ஒரு சதுர அடி 4,500 ரூபாயிலிருந்து 3,500 ரூபாயாக இறங்கியுள்ளது. நாட்டு மரங்களின் விலையும் 1,500 ரூபாயிலிருந்து 1,250 ரூபாயாக குறைந்துள்ளது. அனைத்து கட்டுமானப் பொருட்களின் விலை குறைந்தாலும், சிமென்ட் விலை மட்டும் இறங்கவே இல்லை. ஓரிரு நாட்களில் சிமென்ட்டும் மூட்டைக்கு 10 ரூபாய் வரை விலை குறைய வாய்ப்புள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர். தற்போது, நல்ல தரமான சிமென்ட் 50 கிலோ மூட்டை, 270 ரூபாய் முதல் 275 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.
டீசல் விலை மீண்டும் குறைக்கப்பட்டிருப்பதால், இன்னும் கட்டுமானப் பொருட்களின் விலையில் சரிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பல முன்னணி கட்டுமான நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை வாங்குவோருக்கு சிறப்பு சலுகை காட்ட ஆரம்பித்துள்ளன; விற்பனையை துரிதப்படுத்தவும் முயன்று வருகின்றன.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment