Tuesday, March 10, 2009

பி.எஃப்.,க்கு கட்டாமல் போன ரூ.1.76 கோடியை உடனடியாக கட்ட சுபிக்ஷாவின் எம்.டி.,க்கு உத்தரவு

சுபிக்ஷா டிரேடிங் சர்வீசஸில் மேலாண் இயக்குநராக இருப்பவர் சுப்ரமணியம். இவர் பிராவிடன்ட் ஃபண்ட் நிறுவனத்திற்கு கட்ட வேண்டிய ரூ.1.76 கோடியை கட்டாமல் இருந்திருக்கிறார். எனவே இப்போது உடனடியாக அந்த தொகையை கட்ட வேண்டும் என்று பி.எஃப்.,அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அந்த தொகையை கட்டவில்லை என்றால் அவருக்கு சொந்தமான சொத்துக்களை அபகரிக்கவும் பி.எஃப்., முடிவு செய்திருக்கிறது. ரூ.1.76 கோடி பி.எஃப் பணம் பாக்கி இருப்பது குறித்து 7 - ஏ விசாரணையையும் பி.எஃப்., கமிஷனர் துவக்கியிருக்கிறார். அந்த விசாரணையின் போது, நிறுவனத்தின் நிதி நிலைமை குறித்தும் அதனை சரிசெய்ய எடுக்கப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் குறித்தும் சுபிக்ஷா நிறுவனம் சார்பில் விளக்கப்பட்டது. அப்போது சுப்ரமணியம், கம்பெனி கணக்கில் கட்டாமல் விட்ட பி.எஃப்., பாக்கிக்காக, அவரது சொந்த பி.எஃப்., கணக்கில் இருக்கும் தொகையை எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார். அவரது பி.எஃப்.,கணக்கில் இருந்து கம்பெனி பி.எஃப்., கணக்கிற்கு பணத்தை மாற்றுவதற்கு தேவையான பேப்பர்களையும் அவர் கொடுத்திருக்கிறார். ஏனென்றால் பி.எஃப்., பாக்கிக்காக அவரது சொந்த பி.எஃப்., அக்கவுன்ட் பணம் ' அட்டாச் ' ஆகவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்து சுபிக்ஷா நிறுவனம் கடும் நிதி சிக்கலுக்குள் வந்துள்ளது. இதனையடுத்து, சுபிக்ஷாவில் குறிப்பிடத்தக்க பங்குகளை வைத்திருக்கும் ஐசிஐசிஐ வங்கி, ரிஜிஸ்டரர் ஆஃப் கம்பெனீஸை அணுகி, இந்த நிதி சிக்கல் குறித்து விசாரணை நடத்துமாறும் தனியாக வேறு நபர் மூலம் ஆடிட் செய்ய உத்தரவிடுமாறும் கேட்டுக்கொண்டது. இதனையடுத்து, சுபிக்ஷா நிறுவனம், நிதி சிக்கலில் இருந்து மீள, செலவை குறைக்கும் விதமாக அதன் ஊழியர்களில் சம்பளத்தை அதிகபட்சமாக ரூ.6,500 ஆக குறைத்து, அதற்கு ஊழியர்களில் ஒப்புதலையும் பெற்றது. ஆனால் அந்த சம்பளத்தையும் பல மாதங்களாக கொடுக்காமல் அட்வான்ஸ் தொகையை மட்டும் கொடுத்து வந்தது. கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து அதன் 15,000 ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. இதற்கிடையில் சுபிக்ஷாவை சென்னையை சேர்ந்த புளு கிரீன் கன்ஸ்டரக்ஷன்ஸ் என்ற நிறுவனத்திற்கு விற்கவும் முயற்சி நடந்ததாக தெரிகிறது. இதற்கு சுபிக்ஷாவின் பங்குதாரர்களான ஐசிஐசிஐ வங்கி, மற்றும் விப்ரோ கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த முயற்சி நிறுத்தப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


No comments: