பதிவுக்கட்டணம் இருசக்கர வாகனங்களுக்கு 60 ரூபாயும், இலகு ரக போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கு 200 ரூபாயும், போக்குவரத்து வாகனங்கள், ஆட்டோக்களுக்கு 300 ரூபாயும், மத்தியதர வாகனங்களுக்கு 400 ரூபாயும், கனரக வாகனங்களுக்கு 600 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. வாழ்நாள் வரியாக இருசக்கர வாகனங்களில் 50 சி.சி.,க்கு உட்பட்டவற்றிற்கு 1,000 ரூபாயும், 75 சி.சி.,க்கு உட்பட்டவற்றிற்கு 1,500 ரூபாயும், 75 சி.சி.,யிலிருந்து 170 சி.சி., வரை திறனுள்ளவற்றிற்கு 2,500 ரூபாயும், 170 சி.சி.,க்கு மேற்பட்டவற்றிற்கு 3,000 ரூபாயும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இது தவிர போக்குவரத்து வாகனங்களில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப் பட்ட வாகனங்களில் அவற்றின் திறனை பொறுத்து 1,800 ரூபாய் முதல் 3,300 ரூபாய் வரையிலும், இந்திய தயாரிப்பு வாகனங்களுக்கு தனி மனித வாகனமாக இருந்தால் 600 ரூபாய் முதல் 1,250 ரூபாய் வரையிலும், மற்ற வாகனங்களுக்கு 1,200 ரூபாயிலிருந்து 2,500 ரூபாய் வரையிலும் ஆண்டு வரியாக வசூலிக்கப்படுகிறது. போக்குவரத்துத் துறைக்கு இந்த வருவாய் தொடர்ந்து அதிகரித்துவந்த நிலையில் இந்தாண்டு குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு காரணம் வாகன விற்பனை குறைந்துள்ளது தான்.
கடந்தாண்டு ஏப்ரல் முதல் இந்தாண்டு பிப்ரவரி முதல் தேதி வரையிலான 10 மாதங்களில் தமிழகம் முழுவதும் ஏழு லட்சத்து 34 ஆயிரத்து 349 போக்குவரத்தல்லாத வாகனங்களும், 75 ஆயிரத்து 231 போக்குவரத்து வாகனங்களும் என எட்டு லட்சத்து 9,580 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2007-08ம் ஆண்டில் ஒன்பது லட்சத்து 65 ஆயிரத்து 390 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்படி 2007-08ம் ஆண்டை விட 2008-09ம் ஆண்டில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 810 வாகனங்கள் குறைவாக பதிவு செய்யப்பட்டுள் ளன. இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் வாகன பதிவில் அதிக மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது. மேலும், அரசுக்கு வாகன பதிவு, வரி தவிர வாகன விற்பனையாளர்கள் தரப்பில் கிடைக்கும் 12 சதவீத வாட் வரி வசூல் மூலம் கிடைக்கும் வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரி கூறியதாவது: வாகன விற்பனை மூலம் அரசுக்கு கிடைக்கும் வரி தவிர அரசுத்துறையான போக்குவரத்துத் துறைக்கு வரி மற்றும் பதிவுக் கட்டணம் மூலம் அதிக வருவாய் கிடைத்து வருகிறது.
வாகன விற்பனை தொடர்ந்து உயர்ந்து, அதாவது தினசரி 2,500 முதல் 4,000 வாகனங்கள் வரையில் ஒவ்வொரு பகுதியிலும் பதிவு செய்யப் பட்டு வந்தது. தற்போது, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஐ.டி., நிறுவனங்களில் ஏற்பட்ட பிரச்னை, பொருளாதார நிலையில் ஏற்பட்ட மாற்றம் இவற்றினால் வாகனங்கள் வாங்குவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த டிசம்பர் மாதம் முதல் தற்போது வரையில் 35 சதவீதம் அளவிற்கு வாகன பதிவு பாதிக்கப் பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறையின் வருவாயும் 40 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு போக்குவரத்துத் துறை அதிகாரி கூறினார்.
சரிவுக்கு காரணம் என்ன?: வாகனங்களின் விற்பனை குறைந்ததற்கு ஐ.டி.,நிறுவனங்களில் ஏற்பட்ட பிரச்னையால், பணியாளர்களுக்கு ஏற் பட்டுள்ள பாதிப்பை மட்டும் காரணங்களாக கூறமுடியாது. பெரும் பான்மையான மக்கள், வாகனங்களை வங்கிகளின் நிதிஉதவி மூலமே வாங்குகின்றனர். தற்போது வாகனக் கடன் கொடுத்துவந்த வங்கிகள் பல, இத்திட்டத்தை நிறுத்திவிட்டன. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி உள்ளிட்ட சில வங்கிகள் வாகன விற்பனையகங்களில் இருந்த தங்கள் பணியாளர்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டன. வாகனங்களை நிதிஉதவி மூலம் பெறுவோர், கடன் தொகையை திருப்பி செலுத்துவதில் ஏற்பட்ட பிரச்னையால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழலில் எச்.டி.எப்.சி., வங்கி உள்ளிட்ட சில வங்கிகளே அதிகளவில் வாகனக்கடனை வழங்கி வருகின்றன. அப்படி வழங்கினாலும், கடன் தருவதற்கான விதிமுறையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பொருளாதார நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டு, வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு அனைவருக்கும் எளிதாகும் பட்சத்தில் இந்த வருவாய் இழப்பை தவிர்க்கலாம்.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment