Tuesday, November 25, 2008

வெளிநாட்டு பைலட்களை வெளியேற்றுவது பற்றி விரைவில் முடிவு : ஜெட் ஏர்வேஸ் சி.இ.ஓ.

ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பது பற்றி, கடந்த ஞாயிறு அன்று ஜெட் ஏர்வேஸின் நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்களிடையே நடந்த பேச்சுவார்த்தையின் போது, அதிகம் சம்பளம் வாங்கும் ஊழியர்களின் சம்பளத்தில் 5 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை குறைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதை ஊழியர்களும் ஒத்துக்கொண்டனர். ஆனால் பைலட்களில் சம்பளத்தை குறைக்க மட்டும் பைலட்கள் ஒத்துக்கொள்ளவில்லை. வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து, இங்குள்ள பைலட்களை விட 50 சதவீதம் கூடுதல் சம்பளம் மற்றும் சலுகைகளை பெற்று, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அத்தனை வெளிநாட்டு பைலட்களையும் ஜெட் ஏர்வேஸில் இருந்து வெளியேற்றினால் தான் சம்பள குறைப்பு குறித்து பரிசீலிப்போம் என்று இந்திய பைலட்கள் போர்க்கொடி தூக்கினர். இது குறித்து நேற்று பதிலளித்த ஜெட் ஏர்வேஸின் சி.இ.ஓ., வோல்பங்க் புரோசாவர், வெளிநாட்டு பைலட்களை முழுவதுமாக வெளியேற்றுவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றார். ஆனால் இப்போதைக்கு நாங்கள் இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார். இது கொஞ்சம் நிதானமாக யோசித்து முடிவு செய்யக்கூடிய விஷயமாக இருக்கிறது. எனவே இப்போதைக்கு ஒரு முடிவுக்கு எங்களால் வர முடியவில்லை. எனினும் கூடிய விரைவில் அவர்களை குறைப்பது பற்றிய அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்றார். அநேகமாக வெளிநாட்டு பைலட்களில் 15 சதவீதத்தினரை ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் விரைவில் குறைக்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்திய பைலட்களோ அத்தனை வெளிநாட்டு பைலட்களையும் வெளியேற்றற வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். ஜெட் ஏர்வேஸில் இருக்கும் 1,000 பைலட்களில் 240 பேர் வெளிநாட்டு பைலட்கள். அவர்கள் ஜெட் ஏர்வேஸின் பெரிய விமானங்களை மட்டும் ஓட்டுகிறார்கள். அவர்கள் இந்திய பைலட்களை விட 40 முதல் 50 சதவீதம் வரை கூடுதலாக சம்பளம் பெறுகிறார்கள். எனவே நிர்வாகம் செலவை குறைக்க வேண்டும் என்று விரும்பினால் அவர்களிடமிருந்து அதை ஆரம்பிக்கலாமே என்று இந்திய பைலட்கள் சொல்கிறார்கள்.
நன்றி : தினமலர்


No comments: