மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்த கருத்துக்கள்:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி, கடந்த ஐந்தாண்டுகளில் மொத்த வளர்ச்சி அதிகரிக்க சிறந்த பணியாற்றியிருக்கிறது. இந்த ஆண்டு சிரமமான காலம். இருந்தாலும் மொத்த வளர்ச்சி 7 சதவீதம் என்று ஏற்படும் போது நிச்சயம் வளர்ச்சி பாதிப்பு இருக்காது. அதற்கு நிதி ஆதாரங்கள், ஊக்கம் தரும் அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும். தற்போது வங்கிகள் சற்று பணப்புழக்கத்துடன் செயல்படுவதைக் காண்கிறீர்கள், பொதுத்துறை வங்கிகள் கடன் மீதான வட்டி சதவீதத்தைக் குறைத்திருக்கின்றன. உருக்கு விலை சற்று இறங்கி வருகிறது. கச்சா எண்ணெய் விலை சர்வ தேச அளவில் இறங்கியிருக்கிறது. அதனால் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றி அந்தத்துறை அமைச்சர் முடிவு கூறுவார்.இன்னமும் சில துறைகள் வளர்ச்சிக்காக அரசு உதவி செய்யும். ஆனால் அதற்கேற்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு செயல்படும். இப்படி அதிக அளவில் செலவானால் நிதிப்பற்றாக்குறை வருமே என்றால், கடந்த 50 ஆண்டுகளாக இருக்கும் பிரச்னை இன்னும் ஓராண்டிற்கு நீடிப்பதால் என்ன தவறு.இன்றைய நெருக்கடியான பொருளாதார சூழ்நிலையை அரசு அணுகும் விதத்தில் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா தன் யோசனைகளைக் கூறினால் அதை ஏற்க அரசு தயார். முந்தைய தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தை விட சிறந்த பொருளாதார அணுகுமுறையை இந்த அரசு தந்து, வெற்றியும் கண்டிருக்கிறது. அதேபோல கடந்த இரு மாதங்களுக்கு முன் இருந்த நிலை இன்று இல்லை.பங்குச் சந்தையிலிருந்து அன்னிய மூலதன முதலீட்டாளர் டாலராக எடுத்துச் சென்றது உண்டு. அதனால், நம் ரூபாய் மீது நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களாக அன்னிய முதலீட்டாளர் சந்தையில் முதலீடு செய்ய முன்வந்திருக்கின்றனர்.அடிப்படைக் கட்டமைப்பு தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தர பல்வேறு முன்னுரிமைகளை மேற்கொண்டிருக்கிறோம். அதே போல பணவீக்கம் குறைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், வித்தியாசமாக நம்நாட்டில் கச்சா எண்ணெய் விலை உயர்வை விட காய்கறிகள், பழங்கள் விலை உயருகின்றன. அதற்கு தேவை, சப்ளை, ஒழுங்காகப் பாதுகாத்து வினியோகிக்கும் நடைமுறை தேவை. இந்த ஆட்சியில் விவசாயம், உணவு தானிய உற்பத்தி, சர்வ சிக்ஷா அபியான் திட்டம், சுகாதார அபிவிருத்தி ஆகியவற்றிற்கு, கடந்த முறை இருந்த தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியை விட இருமடங்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.இன்றுள்ள நிலையை உணர்ந்து நாம் சந்தித்த பிரச்னைகளில் இருந்து மீள வழி காணப்பட்டிருப்பதால், தற்போது உள்ள சூழ்நிலையை 'பொருளாதார தேக்கம், அதனால் பாதிப்பு' என்று மீடியா வர்ணிக்க வேண்டாம், மாறாக தனிநபர் நுகர்வு, மூலதன முதலீடு அதிகரித்திருக்கிறது என்பது ஏற்கப்பட வேண்டிய விஷயம். அதனால் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அதற்கான புள்ளிவிவரம் இனி மேல் தான் வெளிவரும்.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.உடன், நிதித்துறைச் செயலர் அருண் ராமநாதன் மற்றும் அதிகாரிகளும், பி.ஐ.பி., தலைமை அதிகாரி தீபக்சந்து ஆகியோர் இருந்தனர்.
எம்.ஆர்.இராமலிங்கம்
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment