Tuesday, November 25, 2008

ரூ.3 கோடி விலையுளள பென்ஸ் கார் இந்த மாதம் இந்தியா வருகிறது

பிரபல ஜெர்மன் கார் கம்பெனியான மெர்சிடஸ் பென்ஸ், அதன் ஏ.எம்.ஜி. வரிசை கார்களில் 6 மாடல்களை இந்த மாத இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. சர்வதேச அளவில் கார் மார்க்கெட் சரிந்திருந்தபோதும் உலகின் மிக காஸ்ட்லியான கார்களை தயாரிக்கும் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் அதன் ஏ.எம்.ஜி., மாடல் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. அதன் விலை ரூ.1.25 கோடியில் இருந்து ரூ.3 கோடி வரை இருக்கும் என்று அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. மெரிசிடஸ் பென்ஸ் கார்களிலேயே அதிக காஸ்ட்லியான கார்கள் என்று சொல்லப்படும் இந்த வகை கார்களுக்கு இந்தியாவில் ஆர்டர்கள் மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும். கார்கள் ஜெர்மனியில் இருந்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். கார்கள் இங்கு வந்து சேர இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகலாம். மெர்சிடஸ் பென்ஸின் ரேஸ் கார்கள் தயாரிக்கும் பிரிவு ஏ.எம்.ஜி., என்று அழைக்கப்படுகிறது. கார் மார்க்கெட்டை பொருத்தவரை, மிட்சைஸ் கார் விற்பனைதான் 5 சதவீதம் குறைந்திருக்கிறது. ரூ.25 லட்சத்துக்கு மேல் ரூ.ஒரு கோடி வரை விலையில் இருக்கும் சொகுசு கார்கள் விற்பனை சரியவில்லை. மாறாக உயர்ந்துதான் இருக்கிறது. ஜெர்மனியின் மிகப்பெரிய மூன்று சொகுசு கார் தயாரிப்பாளர்களான பென்ஸ், பி.எம்.டபிள்யூ.,மற்றும் ஆடி ஆகியவையின் சொகுசு கார் விற்பனை, கடந்த வருடத்தை விட இந்த வருடத்தில் இரட்டிப்பாக உயர்ந்து தான் இருக்கிறது. இந்திய சந்தையில் சொகுசு கார்களான லம்போர்கினி, பென்ட்லி, ரால்ஸ் ராய்ஸ், போர்ச் ஆகியவற்றின் விற்பனை கணிசமாக உயர்ந்திருக்கிறது. ரால்ஸ் ராய்ஸ் நிறுவனம், இந்த வருடத்தில் விற்க எண்ணியிருந்த கார்களை இப்போதே விற்றுவிட்டதாக சொல்கிறது.போர்ச் கார்களின் விற்பனை இரட்டிப்பாகி இருக்கிறது. லம்பார்கினி, இந்த வருட இலக்கை இப்போதே அடைந்து விட்டதாக சொல்கிறது. ஏப்ரல் - அக்டோபரில் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் 1,936 கார்களை இந்தியாவில் விற்றிருக்கிறது. இது கடந்த வருடத்தை விட 46 சதவீதம் அதிகம். இந்த மாத இறுதிக்குள் வர இருக்கும் சொகுசு கார்கள் உட்பட மெர்சிடஸ் பென்ஸ் கார்களின் எல்லா மாடல்களையும் எளிய முறையில் வாங்க இனிமேல் நாம் ஐசிஐசிஐ பேங்க்கை அனுகலாம். அதற்கான ஏற்பாட்டை ஐசிஐசிஐ பேங்க்குடன் பென்ஸ் நிறுவனம் ஏற்படுத்தி கொடுக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: