Friday, September 26, 2008

கார்கள் விற்பனை சரிவு : டூ வீலர்கள் அதிகரிப்பு


புதுடில்லி: கார்கள் விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் குறைந்துள்ளது. அதேநேரத்தில், இரு சக்கர வாகனங்கள் விற்பனை 14 சதவீதம் அதிகரித்துள்ளது. வட்டி வீதம் அதிகரிப்பு, பணவீக்கம் உயர்வு போன்ற காரணங்களால், மக்களில் பலர், கார் வாங்க வேண்டும் என்ற தங்களின் எண்ணத்தை தள்ளிப் போட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதனால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கார்கள் விற்பனை 4.35 சதவீதம் குறைந்துள்ளது. 2008 ஆகஸ்டில் 94 ஆயிரத்து 584 கார்கள் விற்பனையாகியுள்ளன. முந்தைய ஆண்டில் இதே மாதத்தில், 98 ஆயிரத்து 893 கார்கள் விற்பனையாயின. அதேபோல், வர்த்தக வாகனங்கள் விற்பனையும் 6.33 சதவீதம் சரிந்துள்ளது. 2008 ஆகஸ்டில் வர்த்தக வாகனங்கள் விற்பனை 34 ஆயிரத்து 294. ஆனால், 2007 ஆகஸ்டில் 36 ஆயிரத்து 615 வாகனங்கள் விற்றன. மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3.19 சதவீதம் குறைந்துள்ளது. 2007 ஆகஸ்டில் 32 ஆயிரத்து 973 மூன்று சக்கர வாகனங்கள் விற்றன. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 31 ஆயிரத்து 920 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இருந்தாலும், இரு சக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2007 ஆகஸ்டில் 5 லட்சத்து 43 ஆயிரத்து 504 இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகின. இந்த ஆண்டு அதே மாதத்தில், 6 லட்சத்து 20 ஆயிரத்து 927 வாகனங்கள் விற்றுள்ளன. அதாவது, 14 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.

நன்றி : தினமலர்

ஏ.டி.எம்., மையங்கள் மூலமாக தினமும் ரூ.1,000 கோடி பரிமாற்றம்


புதுடில்லி: 'நாடு முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளின் ஏ.டி.எம்., மையங்களில் இருந்து, தினமும் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு பண பரிமாற்றம் நிகழ்கிறது' என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி, கடந்த ஏப்ரலில் இருந்து ஜூன் வரையிலான காலத்தில் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. இவற்றில், 22,500 மையங்கள் பொதுத்துறை வங்கிகளுக்கு சொந்தமானவை. 10,500 மையங்கள் தனியார் வங்கிகளுக்கு சொந்தமானவை. 1,050 மையங்கள் வெளிநாட்டு வங்கிகளால் அமைக்கப் பட்டுள்ளன. பழைய பொதுத்துறை வங்கிகள் 2,190 மையங்களை அமைத்துள் ளன. இந்த மையங்களில் இருந்து சராசரியாக தினமும் 1,000 கோடி ரூபாய் அளவிற்கு பணம் எடுக்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளின் ஏ.டி.எம்.,களில் இருந்து சராசரியாக தினமும் 760 கோடி ரூபாயும், தனியார் வங்கிகளின் மையங்களில் இருந்து தினமும் 355 கோடி ரூபாயும் வாடிக்கையாளர்களால் எடுக்கப்படுகின்றன. 2008-09ம் ஆண்டு இறுதியில் நாட்டில் மேலும் 10,500 ஏ.டி.எம்., மையங்கள் அமைக்கப்படலாம். இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர்

ரூ.10 ஆயிரம் கோடி மானநஷ்டம் கோரி முகேஷ் மீது அனில் அம்பானி அவதூறு வழக்கு



மும்பை: முகேஷ் அம்பானி மீது, அவரது தம்பி அனில் அம்பானி குழுமம், 10 ஆயிரம் கோடி ரூபாய் கோரி அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, முகேஷ் - அம்பானி மோதல், மேலும் தீவிரம் அடைந்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனங்களை பிரித்துக் கொள்வது தொடர்பாக, முகேஷ் மற்றும் அனில் இடையே 2004ம் ஆண்டு, கடும் மோதல் ஏற்பட்டது. குடும்பத்தாரின் சமரசத்தை தொடர்ந்து, 2005ம் ஆண்டு நிறுவனங்கள் பிரித்துக் கொள்ளப் பட்டாலும், இன்னும் பிரச்னைகள் தொடர்கின்றன. பல்வேறு விஷயங்கள் தொடர்பாக கோர்ட்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமீபத்தில், காஸ் சப்ளை ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில், வழக்கு தொடரப்பட்டது. இதை பேசித் தீர்த்துக் கொள்ளவும், தாயின் உதவியை நாடவும் கோர்ட் அறிவுரை கூறியது. ஆனால், முகேஷ் தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனம், காஸ் சப்ளை ஒப்பந்தத்தை மறுப்பதாக, அனில் அம்பானி குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து, 'இப் பிரச்னையில் கோர்ட்டில் தீர்வு காண்பதைத் தவிர வேறு வழியில்லை' என்று, முகேஷ் அம்பானி திட்டவட்டமாக கூறினார். இதற்கிடையே, அமெரிக்காவில் வெளியாகும் முன்னணி பத்திரிகை, 'நியூயார்க் டைம்ஸ்' இதழுக்கு அளித்த பேட்டி தொடர்பாக, முகேஷ் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார் அனில். அந்தப் பேட்டியில், பாகப் பிரிவினைக்கு முன்பாக, அனில் அம்பானியின் நண்பர்களும், கூட்டாளிகளும், உளவு பார்த்ததாகவும், இது அனிலின் மேற்பார்வையில் நடந்ததாகவும் முகேஷ் குறிப்பிட்டு இருந்தார். இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனக் கூறி, முகேஷ் மீது 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார் அனில் அம்பானி. மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட 200 பக்க மனுவில் கூறியிருப்பது என்ன என்பது தெரியவில்லை. இது குறித்து கேட்ட போது, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், பதில் அளிக்க மறுத்துவிட்டார். பல முறை முயன்றும், அனில் தரப்பு தகவலை அறியமுடியவில்லை.

நன்றி : தினமலர்

Wednesday, September 24, 2008

இரண்டு மாத மவுனத்துக்கு பின் மீண்டும் சிமென்ட் விலை உயருது


மும்பை: இரண்டு மாத இழு பறிக்கு பின், சிமென்ட் விலை மீண்டும் வரும் 1 தேதி முதல் உயருகிறது; மூட்டைக்கு ஐந்து ரூபாய் வரை அதிகரிக்கிறது. ரியல் எஸ்டேட் வர்த்தகம் கொடிகட்டிப்பறப் பதை அடுத்து, கட்டுமானப் பணிகள் அதிகரித்து வருகின்றன. மும்பை, டில்லி மற்றும் தென் மாநிலங்களில் அதிகளவில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. மாநில அளவில் விற்பனை செய்யப்படும் சிமென்ட் மூட்டைகளுக்கு விலை அதிகரிக்கவில்லை என்றாலும், ஏ.சி.சி., அம்புஜா, ஜே.கே., லட்சுமி மற்றும் பினானி போன்ற பிராண்டு சிமென்ட் மூட்டை விலை வரும் 1ம் தேதி முதல் உயருகிறது. கடந்த ஓராண்டில், சிமென்ட் விலை, 4 சதவீதம் அதிகரித்துள்ளது. 50 கிலோ மூட்டை 245 முதல் 275க்கும் இழுத்தடித்தபடி உள்ளது. போக்குவரத்து செலவு தான் இந்த விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. 'சிமென்ட் உற்பத்திக்கு முக்கியமான மூலப் பொருளான நிலக்கரி விலை 60 சதவீதம் உயர்ந்து விட்டது. அதனால் தான் சிமென்ட் விலையை கட்டுப்படுத்த முடியவில்லை' என்று, சிமென்ட் உற்பத்தியாளர் கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்தியாவில் 70 சிமென்ட் கம்பெனிகள் உள்ளன; ஆண்டுக்கு 17 கோடி டன் சிமென்ட் உற்பத்தி செய்கின்றன.

நன்றி : தினமலர்

சிங்கூரில் இருந்து வெளியேறுகிறது டாடா ; பான்ட்நகரில் இருந்து நானோ கார் அக்டோபரில் வெளியீடு


பூனே : சிங்கூரில் இருந்து வெளியேறுவது என்று டாடா மோட்டார்ஸ் முடிவு செய்து விட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உத்தரகாண்ட் மாநிலத்தில் பான்ட் நகரில் இருக்கும் அதன் தொழிற்சாலையில் இருந்து நாள் ஒன்றுக்கு 100 நானோ கார்கள் வீதம் தயாரிக்கப்பட்டு, அக்டோபர் மத்தியில் 1000 கார்களை வெளியிட டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கான நானோ இஞ்சின் மற்றும் கியர்பார்ஸ் பூனே அருகில் இருக்கும் சிக்லி தொழிற்சாலையில் இருந்து பான்ட் நகர் தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகிறது. ஆரம்பத்தில் ஜூலை அல்லது ஆகஸ்டில் நானோ காரை வெளியிட்டு விட வேண்டும் என்று டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டிருந்தது. சிங்கூரில் இருக்கும் அதன் தொழிற்சாலையால் ஏற்பட்ட பிரச்னையால் இப்போது அது அக்டோபருக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த நிதி ஆண்டிற்குள் ஒரு லட்சம் நானோ கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்த டாடா மோட்டார்ஸ், இப்போது அதை 50 ஆயிரமாக குறைத்திருக்கிறது. நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. மும்பை பங்கு சந்தையில் இதுவரை இது குறித்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

நன்றி : தினமலர்

Tuesday, September 23, 2008

139க்கு டயல் செய்தால் : தேடி வரும் ரயில் டிக்கெட்


புதுடில்லி: கிரெடிட் கார்டு வைத்திருப்போர் ரயில் டிக்கெட் புக்கிங் செய்வது மிகவும் எளிமையாகிறது. 139 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பேசினால் போதும், இ-மெயில் மூலமாகவோ அல்லது பேக்ஸ் மூலமாகவோ அல்லது கூரியர் மூலமாகவோ ரயில் டிக்கெட் உங்களை தேடிவரும். இந்த புதிய முறை அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது.இந்தியன் ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.,) இயக்குனர் நளின்சிங்கால் கூறியதாவது:ரயில் பயணத்தை எளிமையானதாகவும், வசதியானதாகவும் மாற்ற நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அடுத்த மாதம் முதல் புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளோம்.

இதன் மூலம் கிரெடிட் கார்டு வைத்திருப்போர் எளிதில் ரயில் டிக்கெட் பெறலாம். "டயல் ஏடிக்கெட்' என்ற இந்த வசதியை பெற, ஒருவர் சாதாரண தொலைபேசி மூலமாகவோ அல்லது மொபைல் போன் மூலமாகவோ 139 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். அதில் பயணம் செய்ய விரும்பும் ரயிலின் எண்ணையும், மற்ற விவரங்களையும், கிரெடிட் கார்டு நம்பரையும் தெரிவிக்க வேண்டும்.

இதைச் செய்து முடித்து விட்டால், நீங்கள் புக்கிங் செய்த ரயில் டிக்கெட் இ-மெயில் மூலமாகவோ அல்லது பேக்ஸ் மூலமாகவோ அல்லது கூரியர் மூலமாகவோ உங்களை வந்து சேரும்.இந்த ஆன்லைன் டிக்கெட்டிங் வசதியை மட்டுமின்றி, ரயில்களில் வருகை, புறப்பாடு, டிக்கெட்டுகளின் தற்போதைய நிலை உட்பட பல விவரங்களையும் இந்த 139 எண்ணை சுழற்றி அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு நளின் சிங்கால் கூறினார்.

நன்றி : தினமலர்

Friday, September 19, 2008

அமெரிக்காவின் தலையீட்டால் மீண்டும் எழுந்தது பங்கு சந்தை

கடந்த 10 மாதங்களாக அமெரிக்க பொருளாதாரத்தை ஆட்டம் காண செய்து வரும் நிதி நிறுவனங்களின் நிதி நெருக்கடியை சமாளித்து, சகஜ நிலைக்கு கொண்டு வர அமெரிக்க அரசு திட்டமிட்டிருப்பதாக வந்த செய்தியை அடுத்து, உலகம் முழுதிலும் இன்று பங்கு சந்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. சீனாவும் அதன் பங்கிற்கு, பங்குகளை வாங்குபவர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த ஸ்டாம்ப் டூட்டியை நிறுத்தி விட்டது.இதன் காரணமாக அங்குள்ள ஹாங்செங் 9.61 சதவீதம் உயர்ந்திருந்தது. ஜப்பானின் நிக்கி 3.76 சதவீதம், தைவான் 5.82 சதவீதம், கோஸ்பி 4.55 சதவீதம், ஸ்டெரெயிட்ஸ் டைம்ஸ் 5.78 சதவீதம், ஜகர்தா 5.82 சதவீதம் உயர்ந்திருந்தது. ஐரோப்பிய பங்கு சந்தையிலும் எப்.டி.எப்.சி., 8 சதவீதம், சி.ஏ.சி.,6.4 சதவீதம், டி.ஏ.எக்ஸ்.,4 சதவீதம் உயர்ந்திருந்தது. கடந்த திங்களில் இருந்து நேற்று வரை 21 சதவீத புள்ளிகளை இழந்திருந்த ரஷ்ய பங்கு சந்தைகள் இன்று 20 சதவீத புள்ளிகளை மீட்டன. உலகம் முழுவதிலுமிருந்து வந்த இந்த சாதகமான செய்தியை அடுத்து இந்திய பங்கு சந்தையிலும் நல்ல ஏற்ற நிலை ஏற்பட்டது. மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே உயரத்துவங்கிய சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 726.72 புள்ளிகள் ( 5.46 சதவீதம் ) உயர்ந்து 14,042.32 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 207.10 புள்ளிகள் ( 5.13 சதவீதம் ) உயர்ந்து 4,245.25 புள்ளிகளில் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் பெரும் லாபம் பார்த்தது ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ஐ.சி.ஐ.சி.ஐ.பேங்க், இன்ஃபோசிஸ் டெக்னாலஜிஸ், ஹெச்.டி.எப்.சி., ஓ.என்.ஜி.சி., எல் அண்ட் டி, ஹெச்.டி.எப்.சி.பேங்க், பார்தி ஏர்டெல், சத்யம் மற்றும் பெல் நிறுவனங்கள்.
நன்றி : தினமலர்