Tuesday, September 23, 2008

139க்கு டயல் செய்தால் : தேடி வரும் ரயில் டிக்கெட்


புதுடில்லி: கிரெடிட் கார்டு வைத்திருப்போர் ரயில் டிக்கெட் புக்கிங் செய்வது மிகவும் எளிமையாகிறது. 139 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பேசினால் போதும், இ-மெயில் மூலமாகவோ அல்லது பேக்ஸ் மூலமாகவோ அல்லது கூரியர் மூலமாகவோ ரயில் டிக்கெட் உங்களை தேடிவரும். இந்த புதிய முறை அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது.இந்தியன் ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.,) இயக்குனர் நளின்சிங்கால் கூறியதாவது:ரயில் பயணத்தை எளிமையானதாகவும், வசதியானதாகவும் மாற்ற நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அடுத்த மாதம் முதல் புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளோம்.

இதன் மூலம் கிரெடிட் கார்டு வைத்திருப்போர் எளிதில் ரயில் டிக்கெட் பெறலாம். "டயல் ஏடிக்கெட்' என்ற இந்த வசதியை பெற, ஒருவர் சாதாரண தொலைபேசி மூலமாகவோ அல்லது மொபைல் போன் மூலமாகவோ 139 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். அதில் பயணம் செய்ய விரும்பும் ரயிலின் எண்ணையும், மற்ற விவரங்களையும், கிரெடிட் கார்டு நம்பரையும் தெரிவிக்க வேண்டும்.

இதைச் செய்து முடித்து விட்டால், நீங்கள் புக்கிங் செய்த ரயில் டிக்கெட் இ-மெயில் மூலமாகவோ அல்லது பேக்ஸ் மூலமாகவோ அல்லது கூரியர் மூலமாகவோ உங்களை வந்து சேரும்.இந்த ஆன்லைன் டிக்கெட்டிங் வசதியை மட்டுமின்றி, ரயில்களில் வருகை, புறப்பாடு, டிக்கெட்டுகளின் தற்போதைய நிலை உட்பட பல விவரங்களையும் இந்த 139 எண்ணை சுழற்றி அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு நளின் சிங்கால் கூறினார்.

நன்றி : தினமலர்

No comments: