Tuesday, January 5, 2010

கொடிகட்டி பறக்குது 'ஸ்டெம் செல்' வர்த்தகம்: ஒரே ஆண்டில் 100 கோடி ரூபாயை எட்டியது

சமீபகாலமாக பிரபலம் அடைந்து வரும், 'ஸ்டெம் செல்' சிகிச்சைக்காக தொப்புள் கொடி, 'செல்'கள் சேமிக்கப்படுகின்றன. இதற்கான சேமிப்பு வங்கிகளின் வர்த்தகம், 100 கோடி ரூபாயையும் தாண்டியுள்ளது. தொப்புள் கொடி ரத்தத்தின் மூலம் வளரும், 'செல்'களை பயன்படுத்தி, உடலில் செயலிழந்த பகுதிகளில் காணப்படும் பழுதடைந்த செல்களை நீக்கிவிட்டு, புது செல்களை புகுத்தும், 'ஸ்டெம் செல்' சிகிச்சை முறைக்கு தற்போது பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே, 'ஸ்டெம் செல்' சிகிச்சை முறை வெகுவாக பிரபலமடைந்துள்ளது. இதனால், 'ஸ்டெம் செல்' சேமிப்பு வங்கிகளின் வர்த்தகமும் அதிகரிக்க துவங்கியது. அதிக விலைக்கு இந்த, 'செல்'கள் விற்பனை செய்யப்படுவதால், பெரும்பாலானோர் தங்கள் குழந்தைகளின் தொப்புள் கொடி ரத்தத்தை சேமிப்பு வங்கிகளின் மூலம் சேமிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். நரம்பியல் பிரச்னை உள்ளிட்ட அதிகமான குடும்ப வியாதிகளுக்கு இது ஒரு மாற்று சிகிச்சை முறை. இதனால், இந்த தொப்புள் கொடி ரத்தம் சேமிப்பு விரைவான வளர்ச்சி கண்டுள்ளது. 'ஸ்டெம் செல்' சிகிச்சை முறையில், உடலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பழுதடைந்த செல்களை அப்புறப்படுத்திவிட்டு, புதிய செல்களை உடலுக்குள் செலுத்த வேண்டும். இந்த செல்கள் வேண்டி வங்கிகளை நாடும் தனியாருக்கு பொருத்தமான செல்கள், 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

'ஸ்டெம் செல்' தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், பல நிறுவனங்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக செல் உற்பத்தி செய் யும், 'கார்டு பிளட்' சேமிப்பு மற்றும் விற்பனையில் இறங்கிவிட்டன. டில்லியைச் சேர்ந்த, 'ஸ்டெம் செல்' குளோபல் பவுண்டேஷன் என்ற அமைப்பின் ஆய்வுப்படி, 'ஸ்டெம் செல்' சேமிப்பு வங்கிகளில் 100 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்து வருவது தெரியவந்துள்ளது. இது ஆண்டு வளர்ச்சியில் 35 சதவீதமாகும். இந்த ஆண்டில் இதன் வர்த்தகம் 140 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடுமையான நோயால் பாதிக்கப் பட்ட பல லட்சம் நோயாளிகளுக்கு, 'ஸ்டெம் செல்' சிகிச்சை முறை ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதே இந்த வளர்ச்சிக்கு காரணம் என்று, 'ஸ்டெம் செல்' ஆராய்ச்சி பவுண்டேஷன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
நன்றி : தினமலர்


இடைத்தேர்தல்கள்-இரையாகும் அரசு நிதி

சமீபகாலமாகத் தமிழகத்தில் இடைத்தேர்தல் என்ற "பண மழை' பெய்துவருவதால் அதில் சந்தோஷமாக நனையும் வாக்காளர்கள் தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்வதுடன், மழை பொழிவித்தவர்களின் மனதைக் குளிர்வித்து, நன்றிக்கடன் செலுத்தி வருவதை அத்தேர்தல் முடிவுகள் மூலம் நாம் காண்கிறோம்.

இதுபோன்ற "முன் விதைத்து பின் அறுவடை செய்' என்ற பார்முலா ஒருபுறம் இருந்தாலும், நாட்டுக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகள் மக்களிடையே வலுக்கட்டாயமாகத் திணிக்கும் இடைத்தேர்தல்களில் அரசின் வருவாய் இரையாகிறதே என்று கவலைகொள்ளும் சமூக ஆர்வலர்களின் வேதனை "தண்ணீருக்குள் அழுகும் மீன்களின்' கதையாகவே உள்ளது.

ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சார்ந்த எம்.எல்.ஏ.வின் செயல்பாட்டில் அக் கட்சியின் தலைமைக்குத் திருப்தியில்லை என்றாலோ, சந்தேகம் ஏற்பட்டாலோ அந்த எம்.எல்.ஏ. "கட்டம்' கட்டப்படுகிறார். சில தினங்களில் நேற்று வரை தமது பரம எதிரியாகப் பாவித்துவந்த மாற்றுக் கட்சிக்குத் தூதுவிட்டு, தனது ஆதரவாளர்களுடன் அங்கு ஐக்கியமாகி, தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவிக்கிறார்.

எதிரிக் கட்சியில் இணைந்த அவருக்கே எம்.எல்.ஏ. சீட்டு கிடைத்து, தான் ராஜிநாமா செய்த அதே தொகுதியில் போட்டியிட்டு, மீண்டும் மக்களைச் சந்தித்து ஓட்டுக் கேட்டு வெற்றிபெற்று, தனது பதவியைத் தக்கவைத்துக் கொள்கிறார்.

இதைச் சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் ஒரு கேலிக்கூத்தான விஷயமாகத்தான் தோன்றுகிறது. "ஒரு தனிப்பட்ட நபரின் சுயநலம் மற்றும் அரசியல் லாபநோக்கில் எடுக்கப்படும் இதுபோன்ற முடிவால் எத்தனை கோடி ரூபாய்களை அரசும், அரசியல் கட்சிகளும் செலவிட வேண்டியுள்ளது' .மக்களின் வரிப்பணம் இப்படியெல்லாம் வீணாகிறதே என்பதை உற்றுநோக்கினால் சமுதாய மேம்பாட்டில் அக்கறை கொண்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் மனதில் கோபம் எழத்தான் செய்யும்.

÷தமிழகத்தில் கடந்த 1997 முதல் 2009 வரை சுமார் 25 சட்டப்பேரவைகளுக்கு இடைத்தேர்தல்கள் நடந்துள்ளன. இவற்றில் 7 தொகுதிகளில் இதுபோன்ற கேலிக்கூத்துகளை எம்.எல்.ஏ.க்கள் அரங்கேற்றியதால் இடைத்தேர்தல்கள் திணிக்கப்பட்டு, மக்களின் வரிப்பணம் பல கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது.

÷2000}வது ஆண்டில் அறந்தாங்கி தொகுதியில் திருநாவுக்கரசர் ராஜிநாமா செய்ததால் அங்கு இடைத்தேர்தலைச் சந்திக்க வேண்டியிருந்தது. இதையடுத்து, முதல்வர் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக 2002}ல் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த தங்க தமிழ்ச்செல்வனை வலுக்கட்டாயமாக ராஜிநாமா செய்யவைத்து, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அத் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.

2001-ல் மங்களூர் தொகுதியில் ராஜிநாமா செய்த தொல். திருமாவளவனால், 2004-ல் மக்களவைத் தேர்தலுடன் அத்தொகுதியில் சட்டப்பேரவைக்கு ஒரு இடைத்தேர்தலைச் சந்திக்க வேண்டியிருந்தது.

2006-ல் கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், இளையான்குடி போன்ற தொகுதிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், கண்ணப்பன், தம்பிதுரை, ராஜகண்ணப்பன் ஆகியோர் ராஜிநாமா செய்வதாக அறிவித்தனர்.

இதில், ராமகிருஷ்ணன், கண்ணப்பன் ஆகிய இருவரும் மதிமுகவிலிருந்து திமுகவுக்கும், ராஜகண்ணப்பன் திமுகவிலிருந்து அதிமுகவுக்கும், தம்பிதுரை மக்களவைத் தேர்தலில் நிற்பதற்காக தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்ததால் வாக்காளர்களிடையே இடைத்தேர்தல்கள் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டது.

இதுபோன்று 12 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் தேவையில்லாமல் திணிக்கப்பட்ட 11 இடைத்தேர்தல்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. வன்முறைச் சம்பவங்களில் தாக்கப்பட்டு, பலர் காயமடைந்துள்ளனர். கட்சித் தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஒரு தொகுதிக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை முடியும் வரையில் பல்வேறு அரசியல் கட்சியினரால் அத்தொகுதிக்குள் வலம் வரும் வாகனங்களுக்கு ஆகும் "பெட்ரோல் செலவு' குறித்து கணக்கிட்டால் நமக்குத் தலையே சுற்றும்.

எனவே, சுயநலம், அரசியல் லாபம் கருதி ஒரு தொகுதியில் ராஜிநாமா செய்யும் எம்.எல்.ஏ.வால் இதுபோன்ற வீண் செலவு, பணப்பட்டுவாடா, பதற்றம், வன்முறைச் சம்பவங்கள் போன்றவற்றைத் தவிர்க்கத் தேர்தல் ஆணையமும், அரசும் தகுந்த சட்டத்திருத்தங்களைக் கொண்டு வரவேண்டியது அவசியமாகும்.

சமீபகாலமாக நடைபெற்று வரும் "இடைத்தேர்தல்கள் பார்முலா' அதிகாரம் மற்றும் பணபலம் கொண்டவர்கள்தான் வெற்றி பெறமுடியும் என்பதாகவும், ஊழலுக்கு வழிகோலுபவையாகவுமே உள்ளது. வாக்காளர்களுக்குப் பணத்தாசையைக் காட்டி அவர்களைச் சிந்திக்கவிடாமல் அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் "சிந்தனைச் சுரண்டலும்' ஓர் குற்றமே.

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு வேறு கட்சியில் சேர்ந்தால், அந்த நபர் 5 ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்கத் தடைவிதிக்க வேண்டும். அல்லது அதுபோன்ற சூழ்நிலையில் இடைத்தேர்தலால் அரசுக்கு ஏற்படும் நிதிச் செலவை 50 சதம் வரை அந்த நபரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட சில விதிமுறைகளை நடைமுறைப்படுத்த தேர்தல் ஆணையம் யோசிக்க வேண்டிய தருணம் இது.

கட்டுரையாளர் : கொ.காளீஸ்வரன்
நன்றி : தினமணி

Monday, January 4, 2010

காலம் கடந்துவிடவில்லை

நீர்நிலைகள், நீர்வரத்து வாய்க்கால்களைப் பாதுகாப்பதா? அல்லது அங்கு ஏழைகள் கட்டியுள்ள வீடுகளை அகற்றுவதா, கூடாதா? என்ற சங்கடமான கேள்விக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அளித்துள்ள பதில் மிகத் தெளிவானது. "இரண்டுமே சமூகப் பிரச்னைதான். ஆனால், நீர்நிலைகளையும் நீர்வரத்துப் பகுதிகளையும் பாதுகாப்பதுதான் இதில் முக்கியமானது' என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பழனி நகராட்சிப் பகுதி சிறுநாயக்கன்குளத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்துள்ள 500 குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையைத் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ள நீதிமன்றம், அதோடு நில்லாமல், 1998-ம் ஆண்டில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்காமல், ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைக்கு மாறாக, அந்தப் பகுதியில் சாலை அமைத்து, மின்இணைப்பு வழங்கி, குடிநீர்க் குழாய்கள் அமைத்துக் கொடுத்துள்ள மாவட்ட நிர்வாகத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளது.

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய நிர்வாகம் இவ்வாறு மின்இணைப்பு, சாலைவசதி, தெருவிளக்கு எல்லாமும் அளித்து அதனை முறைப்படுத்துவதும் பட்டா வழங்கப் பரிந்துரைப்பதுமான இத்தகைய முரண்பாடுகள்தான் தமிழ்நாட்டின் அனைத்து ஏரி, குளங்களும் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட முக்கிய காரணம்.

தமிழ்நாடு முழுவதிலும் 5000-க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான ஏரிகள் உள்ளன. மழைக்காலத்தில் ஆறுகள், ஓடைகள் மூலம் மிகையாக வரும் தண்ணீரைத் தேக்கி வைக்கும் ஏரிகளும் மழைநீரை மட்டுமே தேக்கி வைக்கும் குளங்களுமாக இரு வகை நீர் ஆதாரங்கள் பன்னெடுங்காலமாக இருந்துவருகின்றன. ஆனால் அவை யாவற்றையும் கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் பாழ்படுத்திவிட்டோம். இதற்கு முக்கியமான காரணம்-அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஏரிகளிலும் நீரை நிரப்பினால், 300 டிஎம்சி தண்ணீரைச் சேமிக்க முடியும் என்று சட்டப்பேரவையில் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். ஆனாலும்கூட, தமிழ்நாடு ஏரிகுளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டம் -2007 இன்னமும் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது விவசாயிகளின் ஆதங்கமாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு கடலூரில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் இச்சட்டத்தை முறையாக அமல்படுத்துவது மட்டுமன்றி ஏரிகள் குளங்கள் பராமரிப்பைப் பொதுப்பணித் துறையிடமிருந்து நீக்கி, அந்தந்தப் பகுதி விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.

இந்த ஏரிகள் பலவற்றில் தொழிற்கூடங்கள், நீரைப் பயன்படுத்திக் கொள்வதுடன், கழிவு நீரையும் கலக்கின்றன. இதைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் கீழ் வருவதால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு இதில் ஓரளவுக்குமேல் தலையிட முடியாத சிக்கல்களும் இருக்கின்றன. இத்தகைய குறைபாடுகளையும் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் போக்க முடியும்.

ஏரிகளைப் பாதுகாப்பதில் அரசியல் பாகுபாடு இல்லாமல் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதைத் தவிர வேறு வழியே இல்லை. ஆக்கிரமிப்பு செய்த ஏழை மக்களுக்கு வேறு இடத்தில் இடம் கொடுத்த பிறகும்கூட, அதே இடத்தில்தான் பட்டா வேண்டும் என்று கோருவதும் அவர்களுக்காக அரசியல் கட்சிகளும் களத்தில் இறங்குவதும் அரசியல் கட்சிகளின் பொறுப்பின்மையைத்தான் காட்டுகின்றன.

நகர்ப்புறத்தில் ஏரிகள் மற்றும் வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் நேரிட்டபோது உடனுக்குடன் அவை அகற்றப்பட்டிருந்தால், அங்கே நிலையான குடியிருப்புகள் உருவாகியிருக்காது. இன்று இத்தனை சிக்கல்களையும் நீதிமன்ற வழக்குகளையும் அரசு சந்தித்திருக்க வேண்டியதும் இல்லை. அரசியல்வாதிகளுக்குப் பயந்துகொண்டு, அல்லது அவர்களிடம் ஊழலில் பங்குகொண்டு இத்தகைய ஆக்கிரமிப்புகளை கண்டும் காணாமல் இருந்ததன் விளைவுதான் இன்றைய தினம் நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து ஏரி குளங்களும் ஏழை மக்களால், தொழிற்கூடங்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. நச்சுக் கழிவுகள் ஏரிகளில் கலக்கப்படுகின்றன.

நகரத்தை விட்டுத் தள்ளுவோம். ஏரி, குளங்கள் அழியும்படியான நிலை ஊரகப் பகுதியில் எப்படி ஏற்பட்டது? விவசாயியின் அடிப்படையே நீர்ஆதாரம்தானே! எப்படி நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அனுமதித்தார்கள்? என்கிற பின்னணி காரணங்கள், சமூக ஆராய்ச்சி மாணவர்களின் முனைவர் பட்ட ஆய்வுக்குரியவை.

கிராமங்களில் பல தலைமுறைகளாகக் கோலோச்சிக் கொண்டிருந்த நிலஉடைமையாளர்கள் மீதான வெறுப்பும், அவர்களது பயிர்களுக்குத் தண்ணீர் கிடைக்காமல் நஷ்டமடைந்தால் நமக்கென்ன என்கிற அலட்சியமும்தான், அந்தப் பண்ணையாளர்களால் பாதிப்படைந்த கிராமத்தினர் சும்மா இருக்கக் காரணமாக இருந்தது. பின்னாளில் நீர் வரத்து இல்லாமல் அத்தகைய ஏரி, குளம் மேடுற்றபோது, அதையே காரணம் காட்டி அங்கு பஸ் நிலையம், மின்சார அலுவலகம்,பஸ் பணிமனை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள் உருவாக அரசியல்வாதிகள் வகை செய்தனர்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அரசியல்வாதிகள் அல்லர். மாறாக, அப்போது ஆக்கிரமிப்புகளை எதிர்க்காமல் வேடிக்கை பார்த்த, அந்த மண்ணில் தொடர்ந்து வாழ நேர்ந்த சிறு விவசாயிகளும் விவசாயக் கூலிகளும், இடம்பெயர முடியாத அப்பகுதியின் பிற குடிகளும்தான். இப்போது அவர்களுக்குத்தான் குடிக்கவும் தண்ணீர் இல்லை. விவசாயத்துக்கும் தண்ணீர் இல்லை. மழைபெய்தாலும் ஏரிக்கு தண்ணீர் வருவதே இல்லை.

இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. இத்தவறுகளை திருத்திவிட முடியும். கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் அரசியல் சமூக, பொருளாதார மாற்றங்கள் பல வேறுபாடுகளைக் களைந்துவிட்டது. இப்போது பாசன நீர் என்பது அனைத்து விவசாயிகளுக்கான சொத்து. நீர்ஆதாரம்தான் ஊரக மக்களின் ஒரே வாழ்வாதாரம். ஆகையால், அரசியல் பாகுபாடு இல்லாமல் நீர்நிலை மற்றும் நீர்வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தமிழகத்தின் நிலத்தடி நீரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு வழங்கும் பெரும்நிதியம் இந்த நீர்நிலைகளாக மட்டுமே இருக்க முடியும்.
நன்றி : தினமணி

நண்பனாக மாறுங்கள்

காவல் நிலையங்களில் பொதுமக்கள் தரும் புகார்களை முதல் தகவல் அறிக்கையாகப் (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. இந்த உத்தரவும்கூட, காவல்துறை முன்னாள் தலைவர் ரத்தோர், டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை ருசிகாவிடம் முறைகேடாக நடந்துகொண்ட சம்பவத்தில், புகாரை உடனே பதிவு செய்யாததும், காவல்துறை அதிகாரிகளின் குறுக்கீடும்தான் தீர்ப்புக் கிடைக்க 19 ஆண்டுகள் ஆனதற்குக் காரணம் என்று பல்வேறு தரப்பினர் நாடுமுழுவதும் கண்டித்துப் பேசிக் கொண்டிருப்பதால் மத்திய அரசு இத்தகைய முடிவுக்கு வந்துள்ளது.

பொதுமக்கள் தரும் புகாரை ஏற்று, முதல் தகவல் அறிக்கையாகப் பதிவு செய்ய மறுக்கும் காவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும், அதே வேளையில், தவறான புகார் கொடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் என்பதும் உள்துறை அமைச்சகத்தின் தற்போதைய புதிய அணுகுமுறை.

ஆனால், நடைமுறையில் தற்போது உள்ள சட்டத்திலேயே, பொய்ப் புகார் கொடுப்பவர் மீது நடவடிக்கை எடுத்து இரண்டு ஆண்டுவரை தண்டனை கொடுக்கவும், புகாரைப் பதிவு செய்யாத காவலர் மீது இந்திய குற்றவியல் சட்ட விதி 154-ன் படி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்ய முடியும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்குட்பட்ட புகாரைப் பதிவு செய்ய மறுத்தால் தண்டனை நிச்சயம். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படுவதே இல்லை என்பதுதான் பிரச்னையே. இந்த நடவடிக்கை பெரும்பாலும் துறை நடவடிக்கையாக அமைந்துவிடுவதால், எல்லா காவலர்களையும் காவல்துறை காலம்காலமாக காப்பாற்றிக்கொண்டே இருக்கிறது. காவல்கைதி மரணத்துக்குக் காரணமானவர்களையும் காவல்நிலையத்திலேயே கற்பழித்தவர்களையும்கூட துறை நடவடிக்கை மிக சாமர்த்தியமாகக் காப்பாற்றிவிடுவதால்தான், காவல்துறையில் தொடர்ந்து தவறுகள் நடக்கின்றன. உங்கள் நண்பன் என்று சொன்ன போதிலும் பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுவதில்லை.

இருக்கின்ற சட்டமே பயன்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், இப்போது உள்துறை அமைச்சகத்தின் புதிய உத்தரவால் காவல்துறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுவிடும் என்று நம்புவதற்கு சிரமமாகத்தான் இருக்கிறது. பாதிக்கப்பட்ட பொதுமனிதரின் புகாரை, காவல்துறை ஏற்க மறுப்பதற்கும் அல்லது வழக்கைப் பதிவு செய்யக் காலதாமதம் செய்வதற்கும் முக்கியமான இரண்டு காரணங்கள்- ஒன்று ஊழல், இரண்டாவது பணிச்சுமை.

காவல்துறையினரின் ஒடுக்குமுறைக்கும் அதிகாரத்துக்கும் முதலில் பலியாகிறவர் காவல்நிலையத்தைத் தேடிப்போய் புகார் கொடுக்கும் பொதுமனிதர்தான். புகார் கொடுப்பவரையே ஒரு குற்றவாளியைப் போல நடத்தும் மனோபாவம் காவல்துறையின் நாள்பட்ட வியாதி. இந்த வியாதியின் தீவிரம் எந்த அளவுக்கு இருக்கிறதென்றால், ஒரு பெண் காவலர் வீடு திரும்பவில்லை என்று புகார் கொடுக்கச் சென்ற கணவரை எல்லையைக் காரணம் காட்டி அலைக்கழிக்கிற அளவுக்கு நோய் முற்றிக்கிடக்கிறது. பாதுகாப்புப் பணிக்காக பல்லடம் சென்ற பெண் காவலர், பாலியல் வன்முறைக்குப்பின் கொல்லப்பட்டுக் கிடந்தது தெரிந்த பிறகுதான், இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கணவரை அலைக்கழித்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் மீது துறை நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஒரு பெண்-காவலர் தன்னை ஏமாற்றிவிட்டதாக ஆண்-காவலர் மீது வழக்குத் தொடரவும் நீதிமன்றம் செல்ல வேண்டியிருக்கிறது என்றால், இந்தக் காவல் நிலையங்கள் பொதுமக்களை என்ன பாடுபடுத்திக் கொண்டிருக்கின்றன என்பதை யூகித்துக் கொள்ளலாம்.

காவல்நிலையத்தைத் தேடி வருபவர், தாங்கொணா துயரத்துக்கு ஆளாகி, கையறு நிலையில் நம்மிடம் வருகிறார் என்ற எண்ணமே இல்லாமல், "நம் கடைக்கு இன்று லாபம் தரப்போகும் நுகர்வோர் வருகிறார்' என்று பார்க்கும் ஒரு வியாபாரியின் மனநிலை மாறாமல், வெறும் சட்டத்தால் மட்டும் இதை மாற்றிவிட முடியும் என்று தோன்றவில்லை.

ரெüடித்தனம், முறைகேடு, பாலியல் புகார், கொலை எதுவென்றாலும் உடனடியாக விசாரணை நடத்துகிறார்கள். என்ன விசாரணை? குற்றம் சாட்டப்படும் நபர் யார், எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவர், அவரது பின்புலம் என்ன என்பதுதான். அதன் பிறகுதான் புகார் கொடுப்பவர் யார் என்ற பேச்சு எழுகிறது. அரசியல்வாதியின் பலத்துக்கு ஏற்ப முதல் தகவல் அறிக்கை பலம் குறைக்கப்படுகிறது. வீட்டில் திருட்டு, வாகனத் திருட்டு, ஜேப்படி போன்ற அன்றாடத் துயரங்களுடன் வருபவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். அந்தந்தக் காவல்நிலைய எல்லைக்குள் ஆண்டுதோறும் எவ்வளவு மதிப்புள்ள பொருள்கள் திருடு போயின, எவ்வளவு மீட்கப்பட்டன என்ற புள்ளிவிவரங்கள் அவர்களது செயலின்மையை அம்பலப்படுத்துவதால், அத்தகைய புகார்கள் வருவதை அவர்கள் விரும்புவதில்லை. பொதுமக்கள் இந்த அவமானங்களை "பொருள்'படுத்தாமல் தவிர்ப்பது சிரமம்.

காவல்நிலையங்கள் ஆர்வமுடன் எடுத்துக்கொள்ளும் புகார்கள் சாலை விபத்துகள்தான். அவர்கள் சொல்கிற வழக்கறிஞரிடம் வழக்கை நடத்தி, இழப்பீட்டில் 40 சதவீதம் வரை வழக்கறிஞர் கட்டணமாகக் கொடுக்கச் சம்மதிக்காவிட்டால், சாலையில் முன்சக்கரத்தில் இறந்தவர்கூட முதல் தகவல் அறிக்கையில் பின் சக்கரத்தில் மாட்டிக்கொண்டு செத்துவிடுவார்.

கணினி வந்த பிறகும் காவல்துறையில் இன்னமும் கட்டுக்கட்டாக காகித வேலைகள் குவிந்துகொண்டே இருக்கின்றன. பணிப்பளுவின் காரணமாக பல புகார்களை காவல்நிலைய தலைமைக் காவலர்கள் தட்டிக் கழிக்கப் பார்ப்பதும் நடக்கிறது. முதல் தகவல் அறிக்கை எழுத ஆளில்லை என்பதற்காகப் புகார்களைத் திருப்பி அனுப்பும் காவல்நிலையங்கள் உள்ளன. தங்கள் சொந்தச் செலவில் (வசூல்தான்) ஆட்களை நியமித்து, பணிப்பளுவைக் குறைத்துக் கொள்ளும் காவல்நிலையங்களும் உள்ளன.

புகார் கொடுக்க வருபவரை பாதிக்கப்பட்ட மனிதராக மதித்து, அவரைப் பரிவுடன் நடத்தவும், புகாரை எந்த எல்லை வேறுபாடும் சொல்லாமல் கணினியில் பதிவு செய்து நகல் தருவதற்கு, தனிஅறையை, நல்ல இருக்கை வசதிகளுடன் அமைக்கும் குறைந்தபட்ச நடவடிக்கைகூட காவல்துறையை நண்பனாகக் கருதச் செய்யும். புகார்களின் தன்மைக்கேற்ப, விசாரணை நடத்தும் பொறுப்பை அந்தந்தப் பகுதியின் காவலர்களுக்கு, கோட்ட அளவிலான காவல்துறை அதிகாரி பிரித்தளிக்கும் நடைமுறையைக் கைக்கொள்ளலாம். "மாதவர் நோன்பும் மாதரார் கற்பும் காவலன் காவல் இன்றெனில் இன்றாம்' என்கிறது தமிழ் இலக்கியம். இன்றைக்கு அந்தக் காவலன் - காவல்துறைதான்!
நன்றி : தினமணி

அதிக லாபத்தை அள்ளி தரும் இந்திய பங்குச்சந்தை: கணக்கெடுப்பில் தகவல்

உலகிலேயே வளரும் நாடுகளில் உள்ள பங்குச்சந்தைகளில் அதிக லாபத்தை அள்ளி தரும் பங்குச்சந்தையாக இந்திய பங்குச்சந்தை விளங்குவதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது. வளரும் நாடுகளின் பங்குச்சந்தையில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு கிடைக்கும் லாபத்தின் அடிப்படையில் மார்கன் ஸ்டான்லி காம்போசிட் பாரா குறியீட்டெண்கள் கணக்கிடப் படுகின்றன. அந்தக் குறியீட்டெண்கள் அடிப்படையில் இந்த லாப சதவீதம் கணக்கிடப்பட்டுள்ளது.
இதன் படி, அதிக லாபத்தை தரும் பங்குச்சந்தைகளில் இந்திய பங்குச்சந்தை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.இவற்றில் பிரேசில் 121 சதவீத லாபத்துடன் முதல் இடத்தில் உள்ளது. இந்திய பங்குச் சந்தை தந்த லாபம் 100.50 சதவீதம். . ரஷிய பங்குச்சந்தைகள் தந்த லாபம் 100.30 சதவீதம். சீன பங்குச்சந்தைகள் தந்த லாபம் 58 சதவீதம்தான்.
நன்றி : தினமலர்


Sunday, January 3, 2010

நாளை முதல் 9 மணிக்கு தொடங்குது இந்திய பங்குச்சந்தை

இந்த புது வருடம்(2010) முதல் இந்திய பங்குச்சந்தை காலை 9 மணிக்கு தொடங்க உள்ளது. டிசம்பர் 18ம் தேதி முதல் காலை 9 மணிக்கு வர்த்தக நேரம் மாற்றப்படுவதாக இருந்தது. ஆனால், இதற்கு புரோக்கர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் செபி அமைப்பிற்கு கடிதம் அனுப்ப போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனால், வர்த்தக நேரம் மாற்றம் ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது. <ணீ>இந்நிலையில், இந்திய பங்குச்சந்தை, 2010ம் ஆண்டின் முதல் பங்குவர்த்தக நாளான ஜனவரி 4ம் தேதி முதல் காலை 9மணிக்கு தொடங்க உள்ளது. இதற்கு முன்னதாக பங்குச்சந்தை காலை 9.55 மணிக்கு தொடங்கும். நாளை முதல் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 3.30 மணிக்கு முடியும்.
நன்றி : தினமலர்


காளை பாய்ச்சலுக்கு பங்குச் சந்தை தயார்

சந்தையில் நல்ல முன்னேற்றங்களை காட்டி 2009ம் ஆண்டு முடிந்து விட்டது. 2008ம் ஆண்டு விட்டுப் போன அழியாத தடங்களால், எப்படி இருக்குமோ என்ற பயத்துடனே, 2009ம் ஆண்டு ஆரம்பித்தது. ஆனால், 2009ம் ஆண்டும் அழியாத தடத்துடனே முடிந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் அதிக லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த பெருமையுடன் முடிந்துள்ளது. ஆண்டின் கடைசி தினமான வியாழனன்று, மும்பை பங்குச் சந்தை 120 புள்ளிகள் அதிகமாகி, 17,464 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்குச் சந்தை 'நிப்டி', 31 புள்ளிகள் அதிகமாகி, 5,201 புள்ளிகளில் முடிந்தது. நிப்டி 5,000க்கும் மேல், அதே சமயம் மும்பை பங்குச் சந்தையும் 17,000க்கும் மேல் சென்று நின்றிருக்கிறது. சென்டிமென்டாக ஒரு நல்ல விஷயம். அதே லட்சக்கணக்கான முதலீட்டாளர்களை, 2008 நஷ்டங்களில் இருந்து காப்பாற்றி இருக்கிறது. பல புதிய முதலீட்டாளர்களுக்கு, அபரிமிதமான லாபத்தை தந்து சென்றிருக்கிறது. சந்தை, 81 சதவீத லாபத்துடன் முடிந்திருக்கிறது. இதை விட அதிக லாபம் பெற்ற சந்தை என்றால், அது இலங்கை, இந்தோனேசியா மற்றும் பிரேசில் தான். சந்தையில் அதிக லாபம் சம்பாதித்து கொடுத்த பங்குகள்: சந்தையில், 2009ம் ஆண்டு அதிகம் லாபம் சம்பாதித்து கொடுத்த பங்குகள், ஆரக்கிள் (405 சதவீதம்), டாடா மோட்டார்ஸ் (398 சதவீதம்), சீசா கோவா (379 சதவீதம்), ஜிண்டால் ஸ்டீல், பவர் (363 சதவீதம்), எம்பசிஸ் (363 சதவீதம்).
சந்தையில் அதிகம் லாபமடைந்த துறைகள்: மெட்டல் (233 சதவீதம்), ஆட்டோ (204 சதவீதம்), சாப்ட்வேர் (132 சதவீதம்), கேபிடல் குட்ஸ் (104 சதவீதம்)


சந்தை இந்தளவு கூடியது எப்படி? அதிகமாக வந்த வெளிநாட்டு முதலீடுளே சந்தை கூடியதற்கு காரணம். வெளிநாட்டு நிறுவனங்கள், 83,000 கோடி ரூபாயை, இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளன. அதுவே, சந்தையை இந்த அளவு தூக்கிச் செல்ல காரணம்.

2010ம், புதிய வெளியீடுகளும்: 2010ம் ஆண்டு, புதிய வெளியீடுகளின் ஆண்டாக இருக்கும். அதாவது, இரண்டு வாரத்திற்கு ஒரு புதிய வெளியீடு என்ற வகையில், பல வெளியீடுகள் வரவிருக்கின்றன. அவற்றில் பல அரசு வெளியீடுகள். தயாராக இருங்கள். புதிய வெளியீடுகளில் பணம் பார்க்கும் வாய்ப்புகள் இருக்கும்.

2010 எப்படி இருக்கும்? ஜன., 1 முதல் 3ம் தேதி வரை, சந்தை விடுமுறை. 4ம் தேதி(நாளை) முதல் நீங்கள், 'டிவி' பெட்டிக்கு முன் 9 மணிக்கே உட்கார வேண்டியிருக்கும். ஆமாம், சந்தை 9 மணிக்கே தொடங்கிவிடுகிறது. வாக்கிங் செல்பவர்கள் இன்னும் அதிகாலையிலேயே சென்று விடுவது உடலுக்கும் நல்லது, சந்தைக்கும் நல்லது. இதே காளை பாய்ச்சல் இருக்கும் என்று எல்லாரும் ஒருமித்து நம்புகின்றனர்.

அரசும் ஜி.டி.பி., வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறது. அதனால், சந்தை 20,000 முதல் 23,000 புள்ளிக்குள் முடியும் வாய்ப்பு அதிகம்.

எங்கு முதலீடு செய்வது? சந்தை இப்படி தாறுமாறாக போய் கொண்டிருப்பதால், எந்த பங்கில் முதலீடு செய்வது என்ற குழப்பம் பலருக்கும் வரும். நடுத்தர மற்றும் சிறிய பங்குகளுக்கு, மவுசு இன்னும் அதிகம் இருக்கிறது. அவை, சிறப்பாக பரிணமிக்க வாய்ப்புகள் அதிகம். இது தவிர, சாப்ட்வேர், மெட்டல், கட்டுமானத்துறை, மின்சாரம், வங்கித்துறை ஆகியவை பிரகாசிக்க வாய்ப்பு அதிகம் உண்டு. சில மருந்து கம்பெனிகள் நன்கு பிரகாசிக்கும். அதே சமயம், ஏற்ற இறக்கங்கள் நிறைய இருக்கும். ஆதலால், முதலீடுகளை ஒவ்வொரு சரிவிலும் தொடர்ந்து செய்து வாருங்கள். லாபம் பெருகும்.

- சேதுராமன் சாத்தப்பன் -
நன்றி : தினமலர்