சமீபகாலமாகத் தமிழகத்தில் இடைத்தேர்தல் என்ற "பண மழை' பெய்துவருவதால் அதில் சந்தோஷமாக நனையும் வாக்காளர்கள் தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்வதுடன், மழை பொழிவித்தவர்களின் மனதைக் குளிர்வித்து, நன்றிக்கடன் செலுத்தி வருவதை அத்தேர்தல் முடிவுகள் மூலம் நாம் காண்கிறோம்.
இதுபோன்ற "முன் விதைத்து பின் அறுவடை செய்' என்ற பார்முலா ஒருபுறம் இருந்தாலும், நாட்டுக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகள் மக்களிடையே வலுக்கட்டாயமாகத் திணிக்கும் இடைத்தேர்தல்களில் அரசின் வருவாய் இரையாகிறதே என்று கவலைகொள்ளும் சமூக ஆர்வலர்களின் வேதனை "தண்ணீருக்குள் அழுகும் மீன்களின்' கதையாகவே உள்ளது.
ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சார்ந்த எம்.எல்.ஏ.வின் செயல்பாட்டில் அக் கட்சியின் தலைமைக்குத் திருப்தியில்லை என்றாலோ, சந்தேகம் ஏற்பட்டாலோ அந்த எம்.எல்.ஏ. "கட்டம்' கட்டப்படுகிறார். சில தினங்களில் நேற்று வரை தமது பரம எதிரியாகப் பாவித்துவந்த மாற்றுக் கட்சிக்குத் தூதுவிட்டு, தனது ஆதரவாளர்களுடன் அங்கு ஐக்கியமாகி, தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவிக்கிறார்.
எதிரிக் கட்சியில் இணைந்த அவருக்கே எம்.எல்.ஏ. சீட்டு கிடைத்து, தான் ராஜிநாமா செய்த அதே தொகுதியில் போட்டியிட்டு, மீண்டும் மக்களைச் சந்தித்து ஓட்டுக் கேட்டு வெற்றிபெற்று, தனது பதவியைத் தக்கவைத்துக் கொள்கிறார்.
இதைச் சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் ஒரு கேலிக்கூத்தான விஷயமாகத்தான் தோன்றுகிறது. "ஒரு தனிப்பட்ட நபரின் சுயநலம் மற்றும் அரசியல் லாபநோக்கில் எடுக்கப்படும் இதுபோன்ற முடிவால் எத்தனை கோடி ரூபாய்களை அரசும், அரசியல் கட்சிகளும் செலவிட வேண்டியுள்ளது' .மக்களின் வரிப்பணம் இப்படியெல்லாம் வீணாகிறதே என்பதை உற்றுநோக்கினால் சமுதாய மேம்பாட்டில் அக்கறை கொண்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் மனதில் கோபம் எழத்தான் செய்யும்.
÷தமிழகத்தில் கடந்த 1997 முதல் 2009 வரை சுமார் 25 சட்டப்பேரவைகளுக்கு இடைத்தேர்தல்கள் நடந்துள்ளன. இவற்றில் 7 தொகுதிகளில் இதுபோன்ற கேலிக்கூத்துகளை எம்.எல்.ஏ.க்கள் அரங்கேற்றியதால் இடைத்தேர்தல்கள் திணிக்கப்பட்டு, மக்களின் வரிப்பணம் பல கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது.
÷2000}வது ஆண்டில் அறந்தாங்கி தொகுதியில் திருநாவுக்கரசர் ராஜிநாமா செய்ததால் அங்கு இடைத்தேர்தலைச் சந்திக்க வேண்டியிருந்தது. இதையடுத்து, முதல்வர் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக 2002}ல் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த தங்க தமிழ்ச்செல்வனை வலுக்கட்டாயமாக ராஜிநாமா செய்யவைத்து, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அத் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.
2001-ல் மங்களூர் தொகுதியில் ராஜிநாமா செய்த தொல். திருமாவளவனால், 2004-ல் மக்களவைத் தேர்தலுடன் அத்தொகுதியில் சட்டப்பேரவைக்கு ஒரு இடைத்தேர்தலைச் சந்திக்க வேண்டியிருந்தது.
2006-ல் கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், இளையான்குடி போன்ற தொகுதிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், கண்ணப்பன், தம்பிதுரை, ராஜகண்ணப்பன் ஆகியோர் ராஜிநாமா செய்வதாக அறிவித்தனர்.
இதில், ராமகிருஷ்ணன், கண்ணப்பன் ஆகிய இருவரும் மதிமுகவிலிருந்து திமுகவுக்கும், ராஜகண்ணப்பன் திமுகவிலிருந்து அதிமுகவுக்கும், தம்பிதுரை மக்களவைத் தேர்தலில் நிற்பதற்காக தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்ததால் வாக்காளர்களிடையே இடைத்தேர்தல்கள் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டது.
இதுபோன்று 12 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் தேவையில்லாமல் திணிக்கப்பட்ட 11 இடைத்தேர்தல்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. வன்முறைச் சம்பவங்களில் தாக்கப்பட்டு, பலர் காயமடைந்துள்ளனர். கட்சித் தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒரு தொகுதிக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை முடியும் வரையில் பல்வேறு அரசியல் கட்சியினரால் அத்தொகுதிக்குள் வலம் வரும் வாகனங்களுக்கு ஆகும் "பெட்ரோல் செலவு' குறித்து கணக்கிட்டால் நமக்குத் தலையே சுற்றும்.
எனவே, சுயநலம், அரசியல் லாபம் கருதி ஒரு தொகுதியில் ராஜிநாமா செய்யும் எம்.எல்.ஏ.வால் இதுபோன்ற வீண் செலவு, பணப்பட்டுவாடா, பதற்றம், வன்முறைச் சம்பவங்கள் போன்றவற்றைத் தவிர்க்கத் தேர்தல் ஆணையமும், அரசும் தகுந்த சட்டத்திருத்தங்களைக் கொண்டு வரவேண்டியது அவசியமாகும்.
சமீபகாலமாக நடைபெற்று வரும் "இடைத்தேர்தல்கள் பார்முலா' அதிகாரம் மற்றும் பணபலம் கொண்டவர்கள்தான் வெற்றி பெறமுடியும் என்பதாகவும், ஊழலுக்கு வழிகோலுபவையாகவுமே உள்ளது. வாக்காளர்களுக்குப் பணத்தாசையைக் காட்டி அவர்களைச் சிந்திக்கவிடாமல் அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் "சிந்தனைச் சுரண்டலும்' ஓர் குற்றமே.
எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு வேறு கட்சியில் சேர்ந்தால், அந்த நபர் 5 ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்கத் தடைவிதிக்க வேண்டும். அல்லது அதுபோன்ற சூழ்நிலையில் இடைத்தேர்தலால் அரசுக்கு ஏற்படும் நிதிச் செலவை 50 சதம் வரை அந்த நபரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட சில விதிமுறைகளை நடைமுறைப்படுத்த தேர்தல் ஆணையம் யோசிக்க வேண்டிய தருணம் இது.
கட்டுரையாளர் : கொ.காளீஸ்வரன்
நன்றி : தினமணி
Tuesday, January 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment