Friday, July 17, 2009

மேலும் 1,000 பேரை வேலை நீக்கம் செய்கிறது ஹார்லி - டேவிட்சன்

உலக அளவில் புகழ்பெற்ற பைக் தயாரிப்பாளரான அமெரிக்காவின் ஹார்லி - டேவிட்சன், விற்பனை மற்றும் லாபத்தில் பெரும் சரிவை சந்தித்திருக்கிறது. பெரும் செல்வந்தர்களால் மட்டுமே வாங்க கூடிய ஹார்லி - டேவிட்சன் பைக்கின் விற்பனை சமீப காலமாக குறைந்து விட்டது. அமெரிக்க மக்களிடையே வாங்கும் சக்தி குறைந்து போனதே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டில் 222.8 மில்லியன் டாலரில் இருந்த அதன் நிகர லாபம், இந்த நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 19.8 மில்லியன் டாலராக குறைந்து விட்டது. கடந்த வருடத்தில் 1.57 பில்லியன் டாலருக்கு நடந்திருந்த அதன் அதன் மொத்த விற்பனையும், இந்த வருடத்தில் 1.15 பில்லியன் டாலராக குறைந்து விட்டது. இதன் காரணமாக அந்த நிறுவனம் அதன் ஊழியர்கள் எண்ணிக்கையில் மேலும் 1,000 பேரை குறைக்கிறது.

நன்றி : தினமலர்



முதல் வாடிக்கையாளருக்கு இன்று நானோ கார் சப்ளை செய்யப்படுகிறது

இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ், அது தயாரித்த உலகின் மிக மலிவு விலை காரான நானோவை, அதன் முதல் வாடிக்கையாளருக்கு இன்று சப்ளை செய்கிறது. கடந்த வருடம் ஜனவரி மாதத்திலேயே புதுடில்லியில் நடந்த விழாவில் நானோ காரை டாடாவின் சேர்மன் ரத்தன் டாடா அறிமுகப்படுத்தி விட்டாலும், அதற்கான புக்கிங் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் தான் துவங்கியது. மேற்கு வங்கத்தில் உள்ள சிங்கூரில் தொழிற்சாலை அமைப்பதற்காக டாடா மோட்டார்ஸ் கையகப்படுத்தியிருந்த விவசாய நிலத்தை, விவசாயிகளிடமே திருப்பி கொடுக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி, அதன் மூலம் தொழிற்சாலையை இயங்க விடாமல் தடுத்ததால் கார் தயாரிப்பு நின்றது. பின்னர் அங்குள்ள தொழிற்சாலை குஜராத்துக்கு மாற்றப்பட்டது. இருந்தாலும் அங்கு தயாரிப்பை துவக்கி, காரை வெளியே கொண்டு வர காலதாமதம் ஆகும் என்பதால், டாடா மோட்டார்ஸூக்கு உத்தரகான்ட் மாநிலத்தில் உள்ள பான்ட்நகரில் இருக்கும் தொழிற்சாலையில் இருந்து நானோ காரை தயாரித்து இப்போது சப்ளை செய்கிறது. நானோ காரை புக் செய்த முதல் ஒரு லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் நானோ கார் ரூ.ஒரு லட்சம் விலையில் ( வரிகள் தனி ) கொடுக்கப்படுகிறது.
நன்றி : தினமலர்


எல் அண்ட் டி,யின் முதல் காலாண்டு நிகர லாபம் மூன்று மடங்கு உயர்வு

இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில், இந்தியாவின் மிகப்பெரிய இஞ்சினியரிங் கம்பெனியான லார்சன் அண்ட் டியூப்ரோ பெற்ற நிகர லாபம், கடந்த ஆண்டு இதே காலாண்டில் பெற்ற நிகர லாபத்தை விட மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது. ஆதித்யா குரூப்பை சேர்ந்த யூனிடெக் சிமென்ட் நிறுவனத்தில் லார்சன் அண்ட் டியூப்ரோவுக்கு இருந்த 11.5 சதவீத பங்குகள் முழுவதையும் அது விற்று விட்டதால் தான் இந்த அளவுக்கு லாபம் சம்பாதிக்க முடிந்திருக்கிறது. கடந்த வருடம் முதல் காலாண்டில் எல் அண்ட் டி பெற்ற நிகர லாபம் ரூ.502 கோடி தான். அது இந்த ஆண்டில் ரூ.1,598 கோடியாக உயர்ந்ததற்கு முக்கிய காரணம், யூனிடெக்கின் பங்குகளை விற்றதன் மூலம் கிடைத்த ரூ.1,020 கோடி தான் என்கிறார்கள். இந்த அதிகப்படியான வருமானம் இல்லாமல்,ற அதன் நிகர லாபம் 15 சதவீதம் மட்டுமே அதிகரித்திருக்கிறது. அதற்கு காரணம் சர்வதேச அளவில் இருக்கும் பொருளாதார மந்த நிலையால் எல் அண்ட் டி க்கு வரவேண்டிய ஆர்டர்களில் 22 சதவீதம் குறைந்து போனதுதான்.
நன்றி : தினமலர்


Thursday, July 16, 2009

கிராமங்களுக்காக 'ரிலையன்ஸ்' மொபைல்போன்

'ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்' தமிழக தலைமை செயல் அலுவலர் அஜய் அவஸ்தி கூறியதாவது: ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் அதிகளவில் கிராமங்களில் உள்ளனர். போதிய தொழில் நுட்பம், மொழியறிவு இல்லாததால் ஐ.வி.ஆர்.,- எஸ்.எம்.எஸ்., மற்றும் கால் சென்டர் சேவையை பயன்படுத்த தயங்குகின்றனர். வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ள பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. கிராமங்களில் உலகத்தரமிக்க மொபைல்போன் சேவை பெற, மதுரை மண்டலத்தில் ஆண்டிபட்டி, போடி, சின்னமனூர், திருப்புவனம், கமுதி, திருத் தங்கல், சாத்தூரில் 'கிராமப்புற வாடிக்கையாளர் சேவை மையங்'களை துவங்கியுள்ளோம். கிராமங் களில் 'டெலி- டென்ஸிட்டி' என்ற தொலைத் தொடர்பு வசதியை அதிகரிக்கும் நோக்கில் இசட்.டி.இ., ஹேண்ட் செட் 799, எல்.ஜி.,கலர் ஹேண்ட் செட் 1099 ரூபாய்க்கு இன்று அறிமுகப்படுத்துகிறோம் என்றார். மதுரை மண்டல மேலாளர் ஆன்டனிராஜ் உடனிருந்தார்.
நன்றி : தினமலர்


ஹாலிவுட்டில் நுழைந்தார் அனில் அம்பானி

சமீப காலத்தில் இதுவரை யாரும் செய்துகொள்ளாத மிகப்பெரிய ஒப்பந்தம் ஒன்றை, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பிக் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும் ஹாலிவுட் பட தயாரிப்பாளரான ஸ்டீவன் ஸ்பீல்பர்க்கின் டிரீம்ஒர்க்ஸ் ஸ்டூடியோஸூம் செய்திருக்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸ்சை சேர்ந்த டிரீம்ஒர்க்ஸ் ஸ்டூடியோ மூலம் வருடத்திற்கு ஆறு படங்களை தயாரிக்க இந்த இருவரும் 825 மில்லியன் டாலருக்கு ( சுமார் 3,960 கோடி ரூபாய் ) ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இது குறித்து அனில் அம்பானி மற்றும் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் ஆகியோர் கூட்டாக நியுயார்க்கில் அளித்த பேட்டியில், டிரீம்ஒர்க்ஸ் ஸ்டூடியோவில் தயாரிக்கும் படங்களை உலக அளவில் வினியோகம் செய்யும் உரிமையை வால்ட் டிஸ்னி பெற்றிருக்கும் என்றும், இந்தியாவில் அதன் உரிமையை ரிலையன்ஸ் பிக் என்டர்டெய்ன் மென்ட் நிறுவனம் கொண்டிருக்கும் என்றனர்.
நன்றி : தினமலர்


நாய், பூனைகளுக்கு பிரத்யேக விமான சேவை : அமெரிக்காவில் துவக்கப்பட்டது

இப்போது உள்ள பொருளாதார சீரழிவில், மனிதர்களை ஏற்றி செல்லும் விமான சேவையே கடும் சிக்கலில் இருக்கும்போது, அமெரிக்காவில் நாய் பூனைகளுக்காக தனியாக விமான சேவை துவங்கப்பட்டிருக்கிறது. 'பெட் ஏர்வேஸ்' என்ற பெயரில் துவங்கப்பட்டிருக்கும் இந்த புதிய விமான சேவை செவ்வாய் அன்று நியுயார்க்கில் துவங்கப்பட்டது. இந்த விமானம் வாஷிங்டன், சிகாகோ, டென்வர் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களுக்கு செல்லும்.செல்லப்பிராணிகளுக்காக பிரத்யேகமாக துவங்கப்பட்ட இந்த விமான சேவை முதலில் நாய் மற்றும் பூனைகளை மட்டுமே ஏற்றி செல்லும் என்று அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. பொதுவாக எல்லா நாடுகளிலுமே பயணிகள் விமானங்களில் நமது செல்லப்பிராணிகளை ஏற்றுவது இல்லை. அவைகளை கார்கோவில் தான் ஏற்றி கொண்டு செல்ல வேண்டும். கார்கோவுக்கான இடம் விமானங்களின் அடிப்பாகத்தில் அமைந்திருப்பதால் அந்த இடம் ஒன்று அதிக வெப்பமாக இருக்கும். அல்லது அதிக குளிராக இருக்கும். இந்த சூழ்நிலை செல்லப்பிராணிகளுக்கு ஒத்துக்கொள்வதில்லை. எனவே அவைகளில் சில கடுமையான பாதிப்பிற்குள்ளாவதுண்டு. சில விமான கம்பெனிகள் மட்டும், நமது இருக்கைகளுக்கு கீழே வைத்துக்கொள்ளக்கூடிய வகையில் இருக்கும் சிறிய பிராணிகளை மட்டும் கொண்டு செல்ல அனுமதிக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு தான் அமெரிக்காவில் செல்லப்பிராணிகளான நாய் மற்றும் பூனைகளுக்காக பிரத்யேக விமான சேவையை அல்சா பின்டர் மற்றும் டான் வீசல் என்பவர்களால் துவங்கப்பட்டிருக்கிறது. இந்த விமான சேவைக்கு அங்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இன்னும் மூன்று மாதங்களுக்கு விமானம் புக் ஆகி விட்டது என்கிறார் விமான கம்பெனி அதிகாரிகளில் ஒருவரான அய் தோக்னோட்டி. இப்போது ஒரு சில நகரங்களுக்கு மட்டுமே இயக்கப்படும் இந்த விமான சேவை இன்னும் இரு வருடங்களில் 25 நகரங்களுக்கு விரிவு படுத்தப்படுகிறது. இந்த விஷேச விமானத்தில் இருக்கைகளுக்கு பதிலாக ஷெல்ஃப் கள் தான் இருக்கும். அவைகளில், கூண்டுகளில் அடைக்கப்பட்ட செல்லப்பிராணிகள் வைக்கப்பட்டிருக்கும். இந்த விமானத்தில் பைலட் மற்றும் சிப்பந்திகள் மட்டுமே மனிதர்களாக இருப்பார்கள். சிப்பந்திகளும் கூட, பிராணிகளுடன் அன்பாக பழக கூடியவர்களாக இருப்பார்கள். ஒரு நகரத்தில் இருந்து இன்னொரு நகரத்திற்கு செல்லப்பிராணிகளை அனுப்ப டிக்கெட் கட்டணம் 149 டாலரில் ( சுமார் 7,150 ரூபாய் ) இருந்து துவங்குகிறது.
நன்றி : தினமலர்


Wednesday, July 15, 2009

மீண்டும் உயர்ந்தது பங்கு சந்தை

சர்வதேச அளவில் பங்கு சந்தையில் ஏற்பட்ட வளர்ச்சியை அடுத்து இந்திய பங்கு சந்தையிலும் இன்று நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. சென்சென்ஸ் 14,200 புள்ளிகளுக்கு மேலும் நிப்டி 4,200 புள்ளிகளுக்கு மேலும் சென்று முடிந்திருக்கிறது. இன்ஃப்ராஸ்டிரக்சர், மெட்டல், ஆயில் அண்ட் கேஸ் பங்குகள் 2.5 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் வரை உயர்ந்திருந்தது. இன்போசிஸ் மற்றும் அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனங்களை தவிர மற்ற எல்லா நிறுவனங்களுமே வளர்ந்திருந்தன. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 399.54 புள்ளிகள் ( 2.88 சதவீதம் ) உயர்ந்து 14,253.24 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 122.10 புள்ளிகள் ( 2.97 சதவீதம் ) உயர்ந்து 4,233.50 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் ஹின்டல்கோ, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், டிஎல்எஃப், ஹீரோ ஹோண்டா, பிஹெச்இஎல், ரிலையன்ஸ் பவர், மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவன பங்குகள் 6 முதல் 8.5 சதவீத வளர்ச்சியை அடைந்திருந்தது.
நன்றி : தினமலர்