Sunday, November 23, 2008

அமெரிக்க பங்குச் சந்தை வீழ்ச்சி இந்தியாவிலும் எதிரொலி -சேதுராமன் சாத்தப்பன்

அமெரிக்காவில் வியாழனன்று பங்குச் சந்தையில் ஏற் பட்ட சரிவு உலகளவில் எதிரொலித்தது. அடுத்தாண்டு அமெரிக்காவில் பொருளாதாரம் ஏற்றம் காண வாய்ப் பில்லை என்ற அறிக்கையும், கார் கம்பெனிகளான போர்டு, ஜெனரல் மோட்டார், கிரிஸலர் ஆகியவை மூழ்கும் நிலைமையில் உள்ளன (அரசாங்கம் ஏதும் நடவடிக்கைகள் எடுத்து காப் பாற்றவில்லை என்றால்) என்பதும், வேலையில்லாதவர்கள் உதவித் தொகைக்காக விண்ணப்பிப்பவர்கள் கடந்த 16 வருடங்களில் தற்போது தான் மிகவும் அதிகம் என்ற செய்திகளும் வந்து அங்கு பங்குச் சந்தையை தாக்கின.
அந்த சுனாமி, உலகின் பல இடங்களிலும் அடித்தது. இந் திய பங்குச் சந்தையையும் விட்டு வைக்கவில்லை. மும்பை பங்குச் சந்தை 322 புள்ளிகள் சரிந்தது. குறிப்பாக ரிலையன்ஸ் பங்குகள் 6.8 சதவீதமும், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் பங்குகள் 8.3 சதவீதமும் சரிந்தன.பணவீக்கம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்த வாரம் 8.90 சதவீதம் அளவிற்கு வந்துள்ளது. இது சென்ற வாரத்தை விட சிறிது குறைவு. இருந்தாலும் சந்தை மேலே எழும்பவில்லை.பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருவதால், ரிசர்வ் வங்கி இன்னும் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற நம்பிக்கையும், அடுத்த வாரம் டிரைவேடிவ் கான்டிராக்ட்களின் முடிவுத் தேதி வருவதால் பங்குச் சந்தையில் சிறிது முன்னேற்றமும் வெள்ளியன்று தெரிந்தது.வெள்ளியன்று மும்பை பங்குச் சந்தை 464 புள்ளிகள் கூடியது. சமீப காலத்தில் இறக்கத்தையே சந்தித்து வந்த முதலீட்டாளர்களுக்கு வெள்ளி விடிவெள்ளியாகவே இருந்தது. இறுதியாக மும்பை பங்குச் சந்தை 8,915 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 2,693 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.
பணவீக்கம் இன்னும் குறையுமா?: கட்டாயம் குறைய வேண்டும். கச்சா எண்ணெய் விலை குறைந்தும் அரசாங்கம் இன்னும் பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைக்கவில்லை. இது குறைக்கப்படுமானால் பணவீக்கம் இன்னும் குறையும். ஏனெனில் பல பொருட்கள், போக்குவரத்துக் கட்டணங்கள் அதைத் தொடர்ந்து குறைக்கப்படலாம். அது பணவீக்கத்தைக் குறைக்கும்.
ஒவ்வொரு தினமும் எண்ணெய் கவனி என்ற வாசகம் போய்விட்டது. ஏனெனில் கச்சா எண்ணெய் அவ்வளவு குறைந்து விட்டது. வாங்க ஆள் இல்லை. இனி டாலரை கவனி என்று வந்து விடும் போலிருக்கிறது. அவ்வளவு வேகமாக சென்று கொண்டிருக்கிறது.டாலரின் மதிப்பு 50 ரூபாயையும் தாண்டி சென்றுள்ளது. ஏன் இப்படி பந்தயக் குதிரை போல ஓடுகிறது? வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் விற்று பணம் எடுத்துச் செல்கின்றன. அதனால், டாலருக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. இறக்குமதியாளர்கள் கூடிவரும் டாலரைப் பார்த்து பயந்து பார்வேட் கான்டிராக்ட் போட ஓடுகிறனர். அது டாலரின் மதிப்பைக் கூட்டுகிறது. ஏற்றுமதியாளர்கள் தங்களுக்கு ஏற்றுமதி மூலம் வரும் டாலரை மாற்றாமல் அப்படியே வைத்துக் கொள்கின்றனர், இன்னும் கூடும் என்ற நம்பிக்கையில். இதனால், நாளுக்கு நாள் டாலர் மதிப்பு கூடிக் கொண்டே செல்கிறது.தங்கமே, தங்கமே: என்.எஸ். கிருஷ்ணன் ஒரு படத்தில் பாடுவாரே, அது போல தங்கத்தைப் பார்த்து பாடத் தோன்றுகிறது. நாளுக்கு நாள் ஏறி வருகிறது. ஏன்? பங்குச் சந்தை சரிந்து கொண்டு வருகிறது, அதே சமயம் டாலர் மதிப்பும் கூடிவருகிறது. இருக்கும் பணத்தை பத்திரமாக முதலீடு செய்ய வேண்டும். இடம் வேண்டுமே? அதற்கு தான் தங்கத்தில் முதலீடு செய்ய எல்லாம் ஓடுகின்றனர். சமீப வருடங்களில் தங்கம் நல்ல முதலீட்டு சாதனமாக இருந்து வருகிறது.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்?: ஒரே ஒரு ஆறுதல். இந்தியாவில் மட்டும் விழவில்லை; எல்லா நாடுகளிலும் சந்தை நிலமை இது தான். விழுந்து கொண்டே இருக்கிறது. அமெரிக்க சந்தைகள் எப்படி பரிணமிக்கப் போகிறதோ என்பதைப் பொறுத்தே அடுத்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளின் போக்கும் இருக்கும். ரிசர்வ் வங்கியின் அறிக்கைகளையும் பொறுத்து சந்தையின் போக்கு அமையும்.
நன்றி : தினமலர்


சலுகைகளை அள்ளி விடும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்

'ஓசூர் ரோட்டில், ஒரு படுக்கை அறை கொண்ட குடியிருப்பு 10 லட்சம் ரூபாய். இரண்டு படுக்கை அறை கொண்ட குடியிருப்பு 15 லட்சம் ரூபாய். வரிகள், பதிவு கட்டணம் இலவசம். 100 சதவீத வீட்டுக் கடன் வாங்கித் தரப்படும்!''பேனர் ஹட்டா ரோட்டில், இரண்டு படுக்கை அறை கொண்ட குடியிருப்பு 25 லட்சம் ரூபாய். முழுவதும் பர்னிஷிங் செய்யப் பட்டது. அத்துடன் 30க்கு40 அளவுள்ள வீட்டு மனையும் இலவசம்!'இப்படிப்பட்ட அறிவிப்புகள் சமீப நாட்களாக பெங்களூரில் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளன. வீடு வாங்க நினைப்போர், விலை குறையட்டும், கொஞ்ச காலம் பொறுத்திருப்போம் என நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்கும் நிறுவனங்களும், ஏற்கனவே ஒருவர் குடியிருந்த வீட்டை, இரண்டாவது முறையாக விற்க நினைப்பவர்களும், வாங்குவோரை கவர்ந்திழுக்கும் வகையில் இப்படிப்பட்ட அறிவிப்புகளை நாள்தோறும் வெளியிட்டபடி உள்ளனர்.இதற்கெல்லாம் காரணம், ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட மந்த நிலைமையே. கட்டி வைத்த வீடுகள் விலை போகாததால், பல சலுகை அறிவிப்புகளை வெளியிட்டு, வீடு வாங்குவோரை கவர நினைக்கின்றன ரியல் எஸ்டேட் நிறுவனங்கள். இருந்தாலும், எதிர்பார்த்த பலன் இல்லை.இது தொடர்பாக, 'சில்வர் லைன்' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பரூக் முகமது கூறுகையில், 'வீடு வாங்குவோருக்கு வீட்டுக் கடன்களுக்கான வட்டியில் குறிப்பிட்ட அளவு தருவதாகக் கூறி கூட வீடுகளை விற்க தயாராக உள்ளோம். ஆனாலும், விற்பனை சரிவர இல்லை. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், குடியிருப்புகளின் விற்பனை 30 முதல் 60 சதவீதம் குறைந்துள்ளது' என்றார். இதேபோன்ற நிலைமை மும்பை, டில்லி, குர்கான் என, பல நகரங்களிலும் காணப்படுகிறது.
நன்றி : தினமலர்


சான்யோவை வாங்குகிறது: பானாசோனிக் நிறுவனம்

ஜப்பானின் பிரபல எலக்ட்ரானிக் நிறுவனம் பானாசோனிக், கார் பேட் டரி தயாரிப்பில் பிரபல சான்யோ எலக்ட்ரிக் நிறுவனத்தை வாங்க உள்ளது.இந்த இரு நிறுவனங்களும் அதனதன் தயாரிப்பில் பிரபலமாக உள்ளன. ஆனால், சர்வதேச அள வில் ஏற்பட்டுள்ள பொரு ளாதார நெருக்கடியில், ஒன்றாக இணைந்துவிட் டால், சந்தையில் கொடிகட்டிப்பறக்கலாம் என்று பானாசோனிக் நினைக்கிறது.இதற்காக, சான்யோ நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்களாக உள்ள மூன்று நிதி நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருகிறது.'டிவி', டிஜிட்டல் கேமரா உட்பட பல எலக்ட்ரானிக் பொருட் களை தயாரிக்கும் பானாசோனிக் நிறுவனம், சான் யோவின் பங்குகளை கூடுதல் விலைக்கு வாங்கி அந்த நிறுவனத்தை நடத்த தீவிரமாக உள்ளது.டொயோடா கார் தயாரிப்பு நிறுவனத்துடன் பானாசோனிக் நிறுவனம் தொழில்நுட்ப ஒப்பந்தம் செய்துள்ளது. டொயோடா கார் களுக்கு ரேடியோக்களை பானாசோனிக் நிறுவனம் தான் சப்ளை செய்து வருகிறது; அது மட்டுமின்றி, கார் பேட்டரிகளையும் அது சப்ளை செய்து வருகிறது.போர்டு, ஹோண்டா, வோக்ஸ்வேகன் ஆகிய நிறுவனங்களின் கார் களுக்கு கார் பேட்டரிகளை சான்யோ நிறுவனம் சப்ளை செய்து வருகிறது.இதனால், சான்யோ நிறுவனத்தை வாங்கி விட் டால், டொயோடா நிறுவன கார்களுக்கு மட்டுமின்றி, மற்ற பிரபல கார் நிறுவனங்களுக்கும் கார் பேட்டரி சப்ளை செய்யும் ஆர்டரும் தனக்கு கிடைக் கும் என்று பானாசோனிக் எதிர்பார்க்கிறது.அதுபோல, சான்யோ தயாரிக்கும் பேட்டரிகளை தான் பல மொபைல் போன் நிறுவனங்கள் தங் கள் போன்களுக்கு பயன் படுத்துகின்றன. அந்த வகையிலும் தனக்கு வர்த்தகம் அதிகரிக்கும் என்று பானாசோனிக் எதிர்பார்க் கிறது.
நன்றி : தினமலர்

Saturday, November 22, 2008

2010ல் சிறிய கார் : போர்டு இந்தியா திட்டம்

அமெரிக்காவின் போர்டு கார் நிறுவனம், 2010ல் அதன் சிறிய காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தி திட்டமிட்டிருக்கிறது. அத்துடன் பல புதிய மாடல்களையும் இங்கு அறிமுகப்படத்த திட்டமிட்டிருப்பதாக, போர்டு இந்தியாவின் எக்ஸிகூடிவ் டைரக்டர் ( மார்க்கெட்டிங், சேல்ஸ் அண்ட் சர்வீஸ் ) நிகல் வார்க் தெரிவித்தார். சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் கடும் நிதி நெருக்கடிலும் கூட, இந்திய கார் சந்தை எப்போதுமே எங்களுக்கு ஒரு சாதகமான சந்தையாகவே இருந்து வருகிறது. சர்வதேச அளவில் கார் விற்பனை சரிந்திருந்தாலும் இந்திய சந்தையில் பெரிய சரிவு ஏதும் ஏற்படவில்லை என்று சொன்ன அவர், 2010ல் நாங்கள் சிறிய காரைத்தான் அறிமுகப்படுத்த இருக்கிறோம். மினி காரை அல்ல என்றும் சொன்னார். 2010 முதல் காலாண்டில் எங்களது சிறிய கார் இந்திய சந்தைக்கு வரும். அதன் பின் பல புதிய மாடல்களையும் இங்கு அறிமுகப்படுத்த இருக்கிறோம் என்றார்.
நன்றி : தினமலர்


துபாய் செயற்கை தீவில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ரிசார்ட் நேற்று திறப்பு

ஐக்கிய அரபு குடியரசில் உள்ள வளைகுடா கடற்கரையில், செயற்கையாக பனைமர ஓலை வடிவில் அமைக்கப்பட்டுள்ள தீவில் கட்டப்பட்டுள்ள உலகின் அதிக காஸ்ட்லியான பிரமாண்ட ரிசார்ட் அட்லாண்டிஸ், நேற்று திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழா நிகழ்ச்சிக்காக 20 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டிருக்கிறது. திறப்பு விழா நிகழ்ச்சியில் உலகின் முன்னணி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோ உள்பட பல முன்னணி பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர். அப்போது நடத்தப்பட்ட பிரமாண்ட வானவேடிக்கை, வேறு கிரகத்தில் இருப்பவர்களுக்குகூட தெரிந்திருக்கும் என்று சொல்லும் அளவுக்கு நடத்தப்பட்டது. பெய்ஜிங் ஒலிம்பிக் துவக்க விழாவில் நடத்தப்பட்ட வாணவேடிக்கையை காட்டிலும் ஆறு மடங்கு அதிகமாக இங்கு நடத்தப்பட்டது. துவக்கவிழா நிகழ்ச்சியில் பாட்டு பாடிய ஆஸ்திரேலிய பாப் பாடகி கைலி மினோகுவுக்கு, அதற்காக 4 மில்லியன் டாலர் கொடுக்கப்பட்டதாம். 1.5 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்டிருக்கும் இந்த பிரமாண்ட ரிசார்ட்டில் 1539 ரூம்களும், 150 சூட்களும், 35 அதி நவீன சூட்களும் இருக்கின்றன. இதில் உள்ள சாதாரன ரூமில் ஒரு நாள் தங்குவதற்கான, குறைந்த பட்ச வாடகையே 1,675 பவுண்ட் ( சுமார் ரூ.1,24,000 ) என்று சொல்லப்படுகிறது. ஒரு நாள் இரவு தங்குவதற்கு ரூ.18 லட்சம் வாங்கும் ஸ்பெஷல் சூட்டும் அங்கு இருக்கிறது. இந்த ஹோட்டலின் இரு மெயின் பில்டிங்களுக்கு மத்தியில் கட்டப்பட்டிருக்கும் ஸ்பெஷல் சூட்டில் நேற்று ஆரம்ப நாளில், அமெரிக்காவின் டி.வி. ஷோ பிரபலலம் ஓபரா வின்ட்ஃபிரே தங்கியிருந்தார். கொஞ்சம் நேரத்தில் அவர் அங்கிருந்து கிளம்பி விட்டதால் அந்த சூட்டில், பின்னர் நம் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தங்கியிருக்கிறார்.
நன்றி : தினமலர்

அடுக்கு மாடி குடியிருப்புகள் விலை கடும் சரிவு: கூவி, கூவி விற்கின்றனர் குர்கான் பில்டர்கள்

வட்டி வீதம் அதிகரிப்பு, ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட மந்தநிலை போன்ற காரணங்களால் குர்கானில் ஒரு கோடி ரூபாய்க்கு விலை கூறப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் எல்லாம் தற்போது 55 லட்சம் ரூபாய்க்கு கூவி, கூவி விற்கப்படுகின்றன.டில்லி அருகே குர்கானில், செக்டார் 37 பகுதியில் மூன்று மாதங்களுக்கு முன், மூன்று படுக்கை அறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் எல்லாம், 80 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டன. ஆனால், சர்வதேச அளவில் பல நாடுகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடி, வட்டி வீதம் அதிகரிப்பு மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் உருவாகியுள்ள மந்தநிலை போன்ற காரணங்களால், தற்போது அதுபோன்ற அடுக்குமாடி குடியிருப்புகள் எல்லாம், 38 முதல் 40 லட்சம் ரூபாய்க்குத்தான் விற்பனையாகின்றன.அதேபோல், முன்னர் ஒரு கோடி ரூபாய்க்கு விலை பேசப்பட்ட, நான்கு படுக்கை அறை மற்றும் வேலையாட்கள் தங்கும் வசதியுடன் கூடிய குடியிருப்புகள் எல்லாம் தற்போது 55 லட்சம் ரூபாய்க்குத்தான் விற்பனையாகின்றன. அதுவும் கூவி, கூவி விற்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.'சில மாதங்களுக்கு முன், நான்கு படுக்கை அறை கொண்ட அடுக்கு மாடி குடியிருப்புகளை எல்லாம் பில்டர்கள் ஒரு கோடி ரூபாய்க்கு விற்று வந்தனர். தற்போது, அவற்றை வாங்குவோரும் இல்லை. அவற்றில் முதலீடு செய்வோரும் இல்லை. 'ரியல் எஸ்டேட் புரோக்கர்களுக்கான கமிஷன் இரு மடங்காக அதிகரிக்கப் பட்டும் பயனில்லை. அவர்களால் ஆட் களை கொண்டு வர முடியவில்லை. அடுக்குமாடி குடியிருப்புகளை விற்க, பில்டர்கள் படாதபாடு படுகின்றனர்' என்கிறார் கவுரவ் மோசஸ் என்ற ரியல் எஸ்டேட் டீலர்.
'கட்டிய அடுக்குமாடி குடியிருப்புகளை விற்க பில்டர்கள் ஆர்வமாக உள்ளனர். வீட்டை வாங்க நினைப்பவர், அவற்றைப் பார்த்த உடனேயே, பில்டர்கள் எங்களை பல முறை தொடர்பு கொண்டு பேசுகின்றனர். ஏராளமான பில்டர்கள் தற்போது நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். இதே நிலை தொடர்ந்தால், பல பில்டர்களின் நிலைமை கேள்விக் குறியாகி விடும்.'புதிதாக வீடு கட்டும் திட்டத்தை, பல பில்டர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். கடந்த ஜூலை மாதங்களில் வீடு கட்டும் திட்டங்களை துவக்கிய பலர், தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கின்றனர். அடுத்த சில மாதங்களிலாவது நிலைமை மேம்படும் என எதிர்பார்க்கிறோம். மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளின் சதுர அடி விலையும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது' என்கிறார் ரியல் எஸ்டேட் ஏஜென்ட் ஒருவர்.
நன்றி : தினமலர்

யாகூ நிறுவனத்துக்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரி

யாகூ இன்கார்பரேஷன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் ஜெர்ரி யாங், புதியவர் பணியமர்த்தப் பட்டதும், பதவி விலக உள்ளார்.யாகூ நிறுவனத்தின் துணை நிறுவனர் ஜெர்ரி யாங், 2007 ஜூன் மாதம் இந்நிறுனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப் பேற்றார். இவர் மீண்டும் தலைவர் பதவிக்கு திரும்ப உள்ளார். இதனால், புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமிக்க, யாகூ இயக்குனர்கள் குழு முடிவு செய்துள்ளது.'யாகூ நிறுவனத்தை துவக்கியதில் இருந்து, நம்பிக்கைக்குரிய சர்வதேச நிறுவனமாக வளர்ச்சிப்பாதையை சென்றடைந்துள்ளது. கோடிக்கணக்கான மக்களுக்கும், எங்களது வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பானதை அளிப்பதே எனது நோக்கம்' என்று, யாங் கூறியுள்ளார்.'சர்வதேச வியூகத்தில் கவனம் செலுத்துவதே எனது நோக்கமாக உள்ளது. யாகூ நிறுவனத்துக்கு சிறப்பானதை செய்வதையே விரும்புகிறேன்' என்றும், அவர் கூறியுள்ளார்.நிர்வாகிகள் தேர்வு நிறுவனமான, ஹெய்டிரிக் அண்ட் ஸ்டிரகுள்ஸ், யாகூ நிறுவனத்துக்கு தலைமை நிர்வாக அதிகாரியை உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் தேடி வருகிறது.
யாகூவின் தலைமை மாற்றத்தால், சீனாவில் அலிபாபா குழுமத்தில் இந்நிறுவனம் செய் துள்ள 400 கோடி ரூபாய் முதலீட்டில் எந்த மாற்றமும் வராது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
நன்றி : தினமலர்