வட்டி வீதம் அதிகரிப்பு, ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட மந்தநிலை போன்ற காரணங்களால் குர்கானில் ஒரு கோடி ரூபாய்க்கு விலை கூறப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் எல்லாம் தற்போது 55 லட்சம் ரூபாய்க்கு கூவி, கூவி விற்கப்படுகின்றன.டில்லி அருகே குர்கானில், செக்டார் 37 பகுதியில் மூன்று மாதங்களுக்கு முன், மூன்று படுக்கை அறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் எல்லாம், 80 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டன. ஆனால், சர்வதேச அளவில் பல நாடுகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடி, வட்டி வீதம் அதிகரிப்பு மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் உருவாகியுள்ள மந்தநிலை போன்ற காரணங்களால், தற்போது அதுபோன்ற அடுக்குமாடி குடியிருப்புகள் எல்லாம், 38 முதல் 40 லட்சம் ரூபாய்க்குத்தான் விற்பனையாகின்றன.அதேபோல், முன்னர் ஒரு கோடி ரூபாய்க்கு விலை பேசப்பட்ட, நான்கு படுக்கை அறை மற்றும் வேலையாட்கள் தங்கும் வசதியுடன் கூடிய குடியிருப்புகள் எல்லாம் தற்போது 55 லட்சம் ரூபாய்க்குத்தான் விற்பனையாகின்றன. அதுவும் கூவி, கூவி விற்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.'சில மாதங்களுக்கு முன், நான்கு படுக்கை அறை கொண்ட அடுக்கு மாடி குடியிருப்புகளை எல்லாம் பில்டர்கள் ஒரு கோடி ரூபாய்க்கு விற்று வந்தனர். தற்போது, அவற்றை வாங்குவோரும் இல்லை. அவற்றில் முதலீடு செய்வோரும் இல்லை. 'ரியல் எஸ்டேட் புரோக்கர்களுக்கான கமிஷன் இரு மடங்காக அதிகரிக்கப் பட்டும் பயனில்லை. அவர்களால் ஆட் களை கொண்டு வர முடியவில்லை. அடுக்குமாடி குடியிருப்புகளை விற்க, பில்டர்கள் படாதபாடு படுகின்றனர்' என்கிறார் கவுரவ் மோசஸ் என்ற ரியல் எஸ்டேட் டீலர்.
'கட்டிய அடுக்குமாடி குடியிருப்புகளை விற்க பில்டர்கள் ஆர்வமாக உள்ளனர். வீட்டை வாங்க நினைப்பவர், அவற்றைப் பார்த்த உடனேயே, பில்டர்கள் எங்களை பல முறை தொடர்பு கொண்டு பேசுகின்றனர். ஏராளமான பில்டர்கள் தற்போது நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். இதே நிலை தொடர்ந்தால், பல பில்டர்களின் நிலைமை கேள்விக் குறியாகி விடும்.'புதிதாக வீடு கட்டும் திட்டத்தை, பல பில்டர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். கடந்த ஜூலை மாதங்களில் வீடு கட்டும் திட்டங்களை துவக்கிய பலர், தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கின்றனர். அடுத்த சில மாதங்களிலாவது நிலைமை மேம்படும் என எதிர்பார்க்கிறோம். மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளின் சதுர அடி விலையும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது' என்கிறார் ரியல் எஸ்டேட் ஏஜென்ட் ஒருவர்.
நன்றி : தினமலர்
Saturday, November 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment