Saturday, August 2, 2008

விமான கட்டணங்கள் உயர்வு


விமான எரிபொருள் விலையேற்றத்தையடுத்து, சில விமான நிறுவனங்களின் பயண கட்டணங்கள் நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளன.
சமீபத்தில் விமான எரிபொருள் விலை 3 சதவீதம் அதிகரித்ததையடுத்து, ஜெட் ஏர்-வேஸ்,கிங் பிஷர் ஏர்-லைன்ஸ் ஆகியவை, தங்கள் விமான பயண கட்டணத்தை 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன. சாதா வகுப்பு, உயர் வகுப்புகளுக்கான கட்டணம் முறையே 5 சதவீதம் மற்றும் 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. கிங்பிஷர்-டெக்கான் பயண கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்தியுள்ளது. தற்போது, குறைந்த பயண கட்டணமாக டில்லி-மும்பைக்கு ஆறாயிரத்து 800 ரூபாய் மற்றும் இதர செலவுகள் சேர்த்து ஏழாயிரத்து 200 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. விரைவில் ஏர்-இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் ஆகிய விமான நிறுவனங்களும் தங்கள் விமான பயண கட்டணத்தை உயர்த்த உள்ளன. இந்த ஆண்டில் ஐந்தாவது முறையாக விமான பயண கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன.

நன்றி : தினமலர்


வீட்டுக்கடன் வட்டி விகிதம் இம்மாதம் முதல் உயர்கிறது


இம்மாதம் முதல் வீட்டுக்கடன் வட்டி விகிதம் அதிகரிக்கப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய்க்கு, 20 ஆண்டு தவணை எடுத்தவர்களின் மாதத்தவணை குறைந்தபட்சம் 52 ரூபாய் அதிகரிக்கும்.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்புகளால், பல்வேறு வங்கிகள், கடனுக்கான வட்டி விகிதத்தை மாற்றி அமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. புதிய வட்டி விகிதம் இம்மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இம்மாதத் தவணையை அடுத்த மாதம் செலுத்தும் போது, கூடுதல் தொகையையும் சேர்த்து செலுத்த வேண்டும். இதன்படி, 20 ஆண்டு தவணைக்கு ஒரு லட்சம் கடன் வாங்கியோரின் மாதத்தவணை குறைந்தபட்சம் 52 ரூபாய் அதிகரிக்கும். எச்.டி.எப்.சி., வங்கி, புதிதாக வீடு வாங்க கடன் வாங்குவோருக்கான புளோட்டிங் வட்டி விகிதத்தை ஆண்டுக்கு 11.75 சதவீதமாக மாற்றி அமைத்துள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி 12 சதவீதம் முதல் 12.25 சதவீதம் வரை இந்த வட்டி விகிதத்தை உயர்த்த உள்ளது. எச்.டி.எப்.சி.,யின் பிக்சட் வட்டி விகிதம் குறைந்தபட்சம் 14 சதவீதமாகவும், ஐ.சி.ஐ.சி.ஐ.,யின் வட்டி விகிதம் குறைந்தபட்சம் 15.5 சதவீதமாகவும் உயர்த்தப்பட உள்ளது.
இதேபோல, அனைத்து வங்கிகளும் பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த உள்ளன. இதற்கான அறிவிப்புகள் அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எச்.டி.எப்.சி., மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ.,யில் பிக்சட் வட்டி விகிதத்தின் அடிப்படையில், ஏற்கனவே வீட்டுக்கடன் வாங்கியோருக்கு, வட்டி உயர்த்தப்படவில்லை. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி டிபாசிட்களுக்கான வட்டிவிகிதத்தை 0.75 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. நிறுவனங்களுக்கான வட்டி மற்றும் மொத்தக்கடன் வாங்குவோருக்கான வட்டி விகிதம் 17.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல, எஸ்வங்கி, ராஜஸ்தான் வங்கிகளும் வட்டி விகிதத்தை மாற்றி உள்ளன.


நன்றி : தினமலர்


பாதுகாப்புக்காக கோடிகளை இறைக்கும் தனியார் நிறுவனங்கள்


உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையாலும், அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்து வருவதாலும், பல்வேறு நிறுவனங்களும் பாதுகாப்புக்காக, கோடி கோடியாக செலவிட்டு வருகின்றன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ள தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த குண்டு வெடிப்புச் சம்பவங்களால், நாடே அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ள தொழில்துறை மீது பயங்கரவாதிகள் குறிவைத்து இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே சுதாரித்துக் கொண்ட பல்வேறு நிறுவனங்களும், பாதுகாப்பு மேலாண்மை மற்றும் பயங்கரவாத தாக்குதல் காப்பீடு போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்திவருகின்றன. சமீப ஆண்டுகளில் தனியார் நிறுவனங்கள், பாதுகாப்புக்காக செலவிடும் தொகையை பெரிதும் அதிகரித்தள்ளன. 97 சதவீத நிறுவனங்கள் பாதுகாப்பை மிக முக்கியமானதாக கருதுகின்றன. பாதுகாப்புக்காக தனியார் நிறுவனங்கள் செலவிடும் தொகை பற்றிய புள்ளி விவரங்கள் இல்லாவிட்டாலும், நடுத்தரமான ஒரு நிறுவனம், ஆண்டு ஒன்றுக்கு ஏழு கோடி ரூபாய் வரை செலவிடுவதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதுகாப்பு துறையில் உள்ள நிறுவனங்களுக்கு அதிக வருவாய் கிடைத்து வருகிறது. குருப் 4 செக்யூரிட்டீஸ் நிறுவனம், பயிற்சி பெற்ற ஒரு லட்சத்து 50 ஆயிரம் பாதுகாவலர்களை பணியில் அமர்த்தி உள்ளது. தற்போது நாடு முழுவதும், 50 லட்சம் தனியார் பாதுகாவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்துறையில் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் புரளுகிறது. தனியார் நிறுவனங்கள் மூலம் தங்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தி கொண்டாலும், ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் இல்லாதது பல்வேறு நிறுவனங்களுக்கும் ஒரு குறையாகவே இருக்கிறது. தனியார் நிறுவன பாதுகாவலர்கள் ஆயுதம் ஏந்தி பாதுகாப்பு அளிக்க, இந்திய சட்டம் இடம் கொடுக்கவில்லை. இதனால், பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் போதெல்லாம், போலீஸ் பாதுகாப்பை கோர வேண்டிய நிலை உள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய காரணமாக உள்ள கம்ப்யூட்டர் நிறுவனங்களை கருத்தில் கொண்டு, இவற்றுக்கு விரைவில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நன்றி : தினமலர்



Friday, August 1, 2008

பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் : நிப்டி 4400 புள்ளிகளுக்கு மேல் சென்றது


மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே சென்செக்ஸ் 322.88 புள்ளிகள் குறைந்து போய், பகல் 12.30 வரை சரிவு நிலையிலேயே இருந்தது. பின்னர்தான் லேசாக முன்னேறி வந்தது. பின்னர் வேகமாக உயரத்துவங்கிய சென்செக்ஸ் மாலை வர்த்தக முடிவில் 300.94 புள்ளிகள் ( 2.10 சதவீதம் ) உயர்ந்து 14,656.69 புள்ளிகளில் முடிந்தது. அதேபோல் தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி 80.60 புள்ளிகள் ( 1.86 சதவீதம் ) உயர்ந்து 4,413.55 புள்ளிகளில் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் பங்குகளை வாங்குவது அதிகமாக இருந்தது. கேப்பிட்டல் குட்ஸ், பவர், ஆயில் அண்ட் கேஸ், பேங்கிங், மெட்டல், ரியால்டி மற்றும் டெக்னாலஜி பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன. இன்றைய வர்த்தகத்தக முடிவில் நிப்டி 4,400 புள்ளிகளுக்கு மேலும், சென்செக்ஸ் 14,650 புள்ளிகளுக்கு மேலும் சென்றது வர்த்தகர்களிடையே புதிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. காலை வர்த்தக ஆரம்பத்தில் சர்வதேச அளவில் பங்கு சந்தையில் நிலவிய மந்த நிலை காரணமாக டல் ஆக இருந்த பங்கு சந்தையில் அதன் பின் வேகமாக பங்குகள் வாங்கப்பட்டதால் ( குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதால் ) சென்செக்ஸ் வேகமாக உயர துவங்கி விட்டது. ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் 8.67 சதவீதம், பி.என்.பி.7.07 சதவீதம், சுஸ்லான் எனர்ஜி 7.04 சதவீதம், எஸ்.பி.ஐ.6.05 சதவீதம், ஹெச்.டி.எஃப்.சி. 5.51 சதவீதம், சீமன்ஸ் 5.02 சதவீதம், ரிலையன்ஸ் இன்ஃப்ரா 4.71 சதவீதம் மற்றும் பெல் 4.61 சதவீதம் உயர்ந்திருந்தது. இருந்தாலும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் - 12.65 சதவீதம், டாடா பவர் - 3.76 சதவீதம், மாருதி சுசுகி - 2.50 சதவீதம், டாடா மோட்டார்ஸ் - 2.04 சதவீதம், ஹெச் யு எல் - 1.90 சதவீதம் மற்றும் ஏ.சி.சி. - 1.33 சதவீதம் குறைந்திருந்தது

ஏர் - இந்தியாவும் விமான கட்டணத்தை உயர்த்தியது


தனியார் விமான கம்பெனிகளான கிங்ஃபிஷர், ஜெட் ஏர்வேஸ் ஆகியவை கட்டணத்தை உயர்த்தி இருப்பதை அடுத்து ஏர் - இந்தியாவும் விமான கட்டணத்தை உயர்த்துகிறது. இந்த கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது என்று சொன்ன ஏர் - இந்தியா, எவ்வளவு உயர்த்தப்படுகிறது என்று தெரிவிக்கவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததை அடுத்து, இந்திய எண்ணெய் நிறுவனங்களும் விமானங்கள் பயன்படுத்தும் எரிபொருளின் விலையை 2.8 சதவீதம் உயர்த்தி விட்டது. இதையடுத்து தனியார் விமான கம்பெனிகளான கிங்ஃபிஷர், டெக்கான் மற்றும் ஜெட் ஏர்வேஸ் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்து விட்டது. நாங்களும் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்து விட்டோம் என்று ஏர் - இந்தியாவின் மூத்த அதிகாரி ஒருவர் இன்று மும்பையில் தெரிவித்தார். ஜெட் ஏர்வேஸ், கிங்ஃபிஷர் மற்றும் டெக்கான் வெள்ளிக்கிழமையில் இருந்து கட்டணத்தை உயர்த்துகின்றன. கிங்ஃபிஷரும் டெக்கானும் அதன் எல்லா கிளாஸ்களிலும் 10 சதவீத கட்டணத்தை உயர்த்துகிறது. ஜெட் ஏர்வேஸ், எக்கனாமி கிளாசில் 10 சதவீதமும் பிசினஸ் கிளாசில் 5 சதவீதமும் உள்நாட்டு சர்வீசில் மட்டும் உயர்த்துகிறது.

நன்றி : தினமலர்


வீட்டு கடன் வட்டியை உயர்த்திய தனியார் வங்கிகள்


நாட்டின் மிக பெரிய வீட்டு கடன் வழங்கும் வங்கிகளான எச்.டி.எப்.சி.,மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ.,ஆகிய வங்கிகள் தங்கள் வீட்டு கடனுக்கான மாறுபட்ட வட்டி வீதத்தை 0.75 சதவீதம் உயர்த்தியுள்ளன.இதன் மூலம், வாடிக்கையாளர்கள் திரும்ப செலுத்த வேண்டிய தொகை 12சதவீதமாக அதிகரிக்கும். நாட்டின் மிகப் பெரிய தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ.,வங்கி வைப்பு தொகைக்கான வட்டி வீதத்தை 0.75 லிருந்து ஒரு சதவீதமாக உயர்த்தியுள்ளது.இதை தவிர வீட்டு கடனுக்கான மாறுபட்ட (புளோட்டிங்)வட்டி வீதத்தை நேற்று முதல் அதிகரித்துள்ளது. இந்த உயர்வின் மூலம் எச்.டி.எப்.சி.,வங்கியின் புதிய வாடிக்கையாளர்களுக்கான மாறுபட்ட வீட்டு கடன் குறைந்தபட்சம் 11.75 சதவீதமாக இருக்கும். நிரந்தர வட்டி வீதமான 14 சதவீதத்தில் எந்த மாற்றமும் இல்லை. இந்த உயர்வின் மூலம் வீட்டு கடனுக்கான மாறுபட்ட வட்டி வீதம் தற்போதைய 13.5 சதவீதத்திலிருந்து 14.25 சதவீதமாக உயரும் என ஐ.சி.ஐ.சி.ஐ.,வங்கி தெரிவித்துள்ளது.

நன்றி : தினமலர்


ஜூலை 19ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 11.98 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.இது இதற்கு முந்தைய வாரத்தில் 11.89 சதவீதமாக இருந்தது. சில


ஜூலை 19ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 11.98 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.இது இதற்கு முந்தைய வாரத்தில் 11.89 சதவீதமாக இருந்தது. சில உணவுப்பொருட்கள், உற்பத்தி பொருட்களின் விலை உயர்வால் பணவீக்கம் உயர்ந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் ரிசர்வ் வங்கி அறிவித்தி நிதி கொள்கையும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. பருப்பு வகைகள், பழங்கள், வாசனை பொருட்கள் மற்றும் சில உற்பத்தி பொருட்கள் விலை உயர்ந்துள்ளன. ஜூன் 5ம் தேதி பெட்ரோல் விலையை அரசு உயர்த்தியதை அடுத்து மற்ற பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு இதே வாரத்தில் பணவீக்கம் 4.65 சதவீதமாகத்தான் இருந்திருக்கிறது.

நன்றி : தினமலர்