Monday, July 21, 2008

ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை சிறிது உயர்ந்தது


சிங்கப்பூர் : ஆசிய சந்தையில் இன்று காலை கச்சா எண்ணெய் விலை சிறிது உயர்ந்திருக்கிறது. அணுசக்தி சோதனையை நிறுத்த சொல்லி ஈரானை கேட்டுக்கொள்ள, வியன்னாவில் நடந்து வரும் பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து கச்சா எண்ணெய் விலை சிறிது உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் சொல்கிறார்கள். இன்று காலை வர்த்தகத்தில் நியுயார்க் சந்தையின் முக்கிய பொருளான லைட் ஸ்வீட் குரூட் ஆயில் ( ஆகஸ்ட் டெலிவரிக்கானது ) விலை பேரல் ஒன்றுக்கு 82 சென்ட் உயர்ந்து 129.70 டாலராக இருந்தது. பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை ( செப்டம்பர் டெலிவரிக்கானது ) ஒரு சென்ட் உயர்ந்து 130.20 டாலராக இருந்தது. ஈரானை அணுசக்தி சோதனையை நிறுத்த சொல்லி நடந்து வரும் பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டாலும் இன்னும் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இந்த விஷயத்தில் ஈரான், அமெரிக்காவுடன் ஒத்துப்போனால் அது எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஒத்துப்போகவில்லை என்றால் அது மற்ற நாடுகளில் இருந்து தனிமை படுத்தப்படும் என்று எச்சரிக்கைபடுத்தப்பட்டுள்ளது


நன்றி : தினமலர்


மாதங்களில் பணவீக்கம் குறையும் ரிசர்வ் வங்கி கவர்னர் நம்பிக்கை


புதுடில்லி: 'இன்னும் ஆறு மாதங்களில் பணவீக்கம் 5.5 சதவீதமாக குறையும். இதற்கான நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப் பட்டுள்ளன' என ரிசர்வ் வங்கி உறுதி அளித்துள்ளது. நாட்டின் பணவீக்க அளவு, இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து, ரிசர்வ் வங்கி கவர்னர் ரெட்டி, பார்லிமென்ட் நிலைக் குழுவுடன் சமீபத்தில் விவாதித்தார். அப்போது அவர் பேசியதாவது: பணவீக்கத்தை கட்டுப்படுத்த அதிகபட்ச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்னும் ஆறு மாதங்களுக்குள், பணவீக்கம் 5.5 சதவீதமாக குறைக்கப்படும். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வளர்ந்து வரும் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, நமது நாட்டின் பொருளாதார நிலை சிறப்பாகவே உள்ளது. உலகம் முழுவதும் தற்போது பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கிறது. இந்த சூழ்நிலையில், வளர்ச்சி அடைந்த ஐரோப்பிய நாடுகள் மற்றும், ஜப்பானில் உள்ள பொருளாதார வளர்ச்சியை நமது நாட்டு வளர்ச்சியோடு ஒப்பிட்டு பார்க்க கூடாது. இவ்வாறு ரெட்டி கூறினார். கவர்னர் ரெட்டி தனது பேச்சின் போது, வங்கிகளின் வட்டி வீதத்தை மேலும் அதிகரிப்பது பற்றியோ, தற்போதுள்ள நிலையில் எப்போது மாற்றம் ஏற்படும் என்பது பற்றியோ தெளிவாக கூறவில்லை.


நன்றி : தினமலர்


Sunday, July 20, 2008

பங்குச் சந்தை தலைவிதியை நிர்ணயிக்கப் போகிறது ஓட்டெடுப்பு முடிவு


கோடையில் ஒரு வசந்தம் போல, இந்த இறக்கத்திலும் வியாழனும், வெள்ளியும் பங்குச் சந்தைக்கு வசந்த நாட்கள் தான். இரண்டு நாட்களில் 1,050 புள்ளிகளுக்கு மேல் மும்பை பங்குச் சந்தையில் ஏற்றம் என்பது சும்மாவா? அது, உலகத்திற்கே ஒரு வசந்த நாட்க ளாக இருந்திருக்கக் கூடும். ஏனெனில், கச்சா எண்ணெய் விலை புதனன்று பேரலுக்கு ஆறு டாலரும், வியாழனன்று நான்கு டாலரும் குறைந்து, எல்லார் வயிற்றிலும் எண்ணெயை (பாலை) வார்த்தது எனக் கூறலாம். புதனன்று குறைந்த ஆறு டாலர் (அதாவது ஒரே நாளில்) என்பது கடந்த 17 ஆண்டுகளில் அதிகபட்சம். ஏன் புதனன்று அவ்வளவு குறைந்தது? அமெரிக்காவின் ஒரு அறிக்கை தான். அதாவது தங்களிடம் தேவைக்கு அதிகமான கச்சா எண்ணெய் இருப்பதாக வெளிவந்த ஒரு அறிக்கை தான் காரணம். மேலும், அமெரிக்காவில் சில வங்கிகள், நல்ல காலாண்டு முடிவுகளை கொண்டு வந்துள்ள செய்திகளும் சந்தைக்கு இனிப்பு சேர்த்தன. இந்த செய்திகள், வியாழனன்று இந்திய பங் குச் சந்தைகளை தூக்கிச் சென்றது. அரசியல் நிலைமை இன்னும் நிலையற்றதாக இருப்பினும், அதை சந்தை சிறிது மறந்து மேலே உயரப் பறந்து சென்றது. மும்பை பங்குச் சந்தை 536 புள்ளிகள் மேலே சென்று முடிவடைந்தது.
பணவீக்கம் எங்குள்ளது?: இந்த வார பணவீக்கம் 11.91 சதவீதத் தில் உள்ளது. இது, சென்ற வார அளவை விட மிகச்சிறிய அளவே கூடுதல். சென்ற வாரம் 11.89 சதவீதமாக இருந்தது. இது, ஒரு நிம்மதியளிக்கக் கூடிய விஷயம். நிம்மதிகள் சந்தையில் அதிகப்படியான புள்ளிகளாக மாறியது, இன்னும் நிம்மதியளிக்கக்கூடியது. ஒவ்வொரு வாரமும் வெள்ளியன்று கணக்கிடப்பட்டு வந்த பணவீக்க அளவு, இந்த வாரம் முதல் வியாழன் அன்று வெளியிடப்படும். இனி, ஒரு நாள் முன்னதாகவே வந்து பயமுறுத்தாமல் இருந்தால் சரி தான். பணவீக்க சதவீதம் 12க்கு மேலாக இருக்கும் என்று எல்லாரும் எதிர்பார்த்தனர். ஆனால், 12 சதவீதத்துக்கு கீழேயே இந்த வாரமும் இருந்தது, வங்கிப் பங்குகளுக்கு கொண்டாட்டமாக இருந்தது. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் பங்குகள் சமீபகாலமாக மிகவும் பந்தாடப்பட்டு கீழே விழுந்து கொண்டே இருந்தன. அந்த வங்கியின் பங்குகள் 10 சதவீதம் வெள்ளியன்று கூடின. வங்கிப் பங்குகளும், ரிலையன்ஸ் பங்குகளும் சந்தை உயர்வதற்கு காரணமாக இருந்தன. வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 525 புள்ளிகள் கூடி 13,635 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 145 புள்ளிகள் கூடி 4,092 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. முன் பெல்லாம் தேசிய பங்குச் சந்தை 5,000க்கு கீழே வந்தாலே பயப்படும் முதலீட்டாளர்கள், இப்போதெல்லாம் 4,000க்கு கீழே செல்லாமல் இருந்தால் சரிதான் என்ற நிலைக்கு வந்துவிட்டனர். குறைந்து வரும் ஓட்டல் வாடகைகள்:சென்ற ஆண்டு வரை இந்திய ஓட்டல்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது. அவர்கள் வைத்தது தான் தினசரி வாடகை என்ற நிலைமை இருந்தது. தற் போது கூடி வரும் பணவீக்கத்தால், பல கம்பெனிகள் தங்கள் ஓட்டல் செலவுகளை குறைத்து விட்டன அல்லது காலை சென்று, மாலை திரும்புமாறு அமைத் துக் கொண்டுள்ளன. ஆதலால், ஓட்டல் கள் தங்கள் தினசரி வாடகைகளை 30 முதல் 40 சதவீதம் குறைத்துள்ளன. இது, ஓட்டல் பங்குகளின் வருங்கால லாபங்களை குறைக்கும்.
புதிய வெளியீடுகள்: இந்த சந்தையிலும் புதிய வெளியீடுகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. விஷால் இன்போடெக் என்ற கம்பெனி, தனது புதிய வெளியீடைக் கொண்டு வந் துள்ளது. ரூ.140 முதல் ரூ.150 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் போடலாம். சமீபத்தில் வெளிவந்த ஆர்கிட் பிளை என்ற கம்பெனியின் வெளியீடு ரூ.70 முதல் 80 ரூபாய் வரை வந்தது. அதன் பங்குகள் தற்போது 37 ரூபாய் அளவிலே விற்கப்படுகிறது. அதுபோல, அவான் வெயிங் சிஸ்டம்ஸ் கம்பெனி 10 ரூபாய்க்கு வெளியிட்ட பங்குகள், தற்போது ரூபாய் எட்டு அளவில் கிடைக்கிறது. எல்லா பங்குகளும் ஆடித் தள்ளுபடியில் கிடைக்கிறது. வாங்கத்தான் ஆளில்லை.
காலாண்டு முடிவுகள்: ஒம்னிடெக், பவர் பைனான்ஸ், மன்சான்டோ, ஹைக்கல், கோல்கேட், பையோகான் ஆகிய கம்பெனிகள் நல்ல காலாண்டு முடிவுகளை கொடுத்துள்ளன.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்?: முன்பே கூறியபடி அரசியல் நிலைமைகளை வைத்துத் தான் அடுத்த வாரம் துவக்கம் இருக்கும். அரசியலுக்கு ஒவ்வொரு ஓட்டும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் முதலீட்டாளர்களுக்கும்.சந்தை மிகவும் கீழே இறங்கியுள்ளது. சிறிது ரிஸ்க் எடுத்து வாங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சந்தர்ப்பம். உதாரணமாக, ஒரு கம்பெனியின் பங்கை ரூ.100க்கு வாங்க நினைத்தால், 25 பங்குகள் வாங்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இதற்கும் கீழே குறைந்தால் மறுபடி 25 வாங்குங்கள். இது போல நான்கு முறை வாங்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. விலை கூடியிருந்தால் லாபம் தானே.
-சேதுராமன் சாத்தப்பன்-


நன்றி : தினமலர்


Thursday, July 17, 2008

தகிக்கிறது தங்கம்: சவரன் விலை 10 ஆயிரம் ரூபாயை தாண்டியது * மேலும் உயரும் வாய்ப்பு


சென்னை: தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் 10 ஆயிரம் ரூபாயை தாண்டி விட்டது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்வதால், உள்ளூர் சந்தையிலும் மேலும் விலை உயரும் நிலை உள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதலே தங்கத்தின் விலை உயரத் துவங்கியது. புத்தாண்டு தினத்தன்று தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.ஏழாயிரத்து 960க்கு விற்கப்பட்டது. அடுத்த நாள் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.ஏழாயிரத்து 904 ஆக குறைந்தது. அதன் பிறகு தங்கத்தின் விலை படு வேகமாக உயர்ந்து கடந்த மார்ச் மாதம் 17ம் தேதி ரூ.10 ஆயிரத்து 40 ஐ எட்டியது. இதுவே அதிக பட்ச விலையாக கருதப்பட்டது. தற்போது, கடந்த 7ம் தேதி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.ஆயிரத்து 189 என இருந்தது அடுத்தடுத்த நாட்களில் ரூ.ஆயிரத்து 201, ரூ.ஆயிரத்து 192 என படிப்படியாக அதிகரித்தது. அதன் பிறகும் 10 மற்றும் 11ம் தேதிகளில் ரூ.ஆயிரத்து 204, ரூ.ஆயிரத்து 218 என உயர்ந்தது. 12ம் தேதி ரூ.ஆயிரத்து 232 என உயர்ந்து சவரனுக்கு ரூ.ஒன்பதாயிரத்து 856 என இருந்தது. கடந்த 15ம் தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.ஆயிரத்து 267 என உயர்ந்து, சவரனுக்கு ரூ.10 ஆயிரத்தை தாண்டியது. நேற்றைய தங்கம் ஒரு கிராமுக்கு ரூ. ஆயிரத்து 259 என, சவரனுக்கு ரூ.10 ஆயிரத்து 72 ஆக உள்ளது. கச்சா எண்ணெய்க்கு ஈடாக தங்கத்தை முதலீடு வைப்பதால், கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கம் ஏற்படும்போதெல்லாம் தங்கத்தின் விலை பாதிக்கிறது. கடந்த வருடத்தில் இருந்து தங்கத்தின் விலை உயரத் துவங்கியது. சர்வதேச சந்தையில் உள்ள மதிப்பீட்டை வைத்தே தங்கம் விலை நிர்ணயிக்கப்படுவதும் விலை ஏற்றத்திற்கு காரணம். இந்த விலையேற்றம் குறித்து தமிழ்நாடு நகை வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைமை ஆலோசகர் எல்.கே.எஸ்.அகமது கூறுகையில், 'வெளிநாட்டில் பங்குச் சந்தையில் ஸ்திரத்தன்மையற்ற நிலை காரணமாக தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. தவிர, கச்சா எண்ணெய் விலை உயர்வும் காரணம். அமெரிக்க டாலர் வீழ்ச்சி காரணமாக, அமெரிக்க மக்கள், தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். கடந்த ஒரு வார விலையுடன் ஒப்பிடும் போது தங்கம் விலை சவரனுக்கு சராசரியாக ரூ.480 வரை அதிகரித்துள்ளது. அதாவது 7 சதவீதம் வரை விலை உயர்வடைந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 983 டாலர் என உள்ளது. இது ஆயிரம் டாலரை எட்டும் என நிபுணர்கள் கருதுகின்றனர். எனவே, தங்கத்தின் விலை மேலும் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது' என்றார்.

நன்றி : தினமலர்


சொல்லவும், மெல்லவும் முடியாத பரிதாப நிலை


பங்குச் சந்தை தினம் தினம் ஏதாவது ஒரு காரணத்திற்காக விழுந்து கொண்டிருக்கிறது. பிரேக் பிடிக்காத கார், சாலையின் இறக்கத்தில் எப்படி இறங்குமோ அப்படி இறங்கிக் கொண்டிருக்கிறது. திங்களன்று ரான்பாக்சி கம்பெனியின் பங்குகள் 10 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்ததால், சந்தையில் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ரான்பாக்சி கம்பெனியில் ஏற்பட்டுள்ள புதிய குழப்பங்கள், அதாவது, அமெரிக்க அரசு, அந்த கம்பெனி மீது தொடரப்போகும் வழக்கு (கலப்படமான மருந்துகளை விற்றதாக) வந்த அறிவிப்புகளை தொடர்ந்து, அந்தக் கம்பெனியின் பங்குகள் திங்களன்று படுபாதாளத்துக்கு சென்றது. மற்றும் சமீபகாலமாக பேசப்பட்டு வந்த ஸ்பைஸ் ஜெட் விமான கம்பெனியின் சேர்மன், தனது வேலையை திங்களன்று ராஜினாமா செய்து விட்டதால், அந்தக் கம்பெனியின் பங்குகள் 14 சதவீதம் அளவு குறைந்தது. மொத்தமாக மும்பை பங்குச் சந்தை 139 புள்ளிகளை அன்றைய தினம் இழந்தது.
நேற்று முன்தினம், 654 புள்ளிகள் குறைந்தது ஏன்? : பிட்ச் ரேட்டிங் என்ற கம்பெனி, இந்தியாவின் உள்நாட்டு கிரெடிட் ரேட்டிங்கை குறைத்துள்ளது. அது, சந்தையை நேற்று முன்தினம் பாதித்தது. சமீபத்தில் தான் ஸ்டாண்டர்டு அண்டு பவர் என்னும் வெளிநாட்டு ரேட்டிங் ஏஜென்சி, இந்தியாவின் சமீப நிலைமைகளை வைத்து பார்க்கும் போது கவலை தெரிவிக்கும் முகமாக இருப்பதாக தெரிவித்திருந்தது. இதனால், வெளிநாட்டு கம்பெனிகளின் முதலீடு இந்தியாவில் குறைய வாய்ப்பு உள்ளது. உலகின் பல நாடுகளில் மறுபடி வங்கிகளில் சப்பிரைம் பிரச்னை வரலாம் என்ற பேச்சு பரவலாக அடிபடுகிறது. இந்த வருடத்துவக்கத்தில் இதே பிரச்னைக்காக சந்தை பல தூக் கமில்லாத இரவுகளைக் கழித்தது, பல ஆயிரம் புள்ளிகளை இழந்தது, பலருக்கு ஞாபகம் இருக்கலாம். மறுபடியும் சப்பிரைம் பிரச்னை வரலாம் என்பதால் வங்கிப் பங்குகள் எல்லாம் கீழே இழுக்கப் பட்டன. இவையெல்லாம் சேர்ந்து நேற்று முன்தினம் சந்தையை 654 புள்ளிகள் கீழே இழுத்தது.
கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும் சந்தை நேற்று மேலே செல்லவில்லை. காரணம் அரசியல் நிலைமை தான். துவக்கம் 250 புள்ளிகள் வரை மேலேயே இருந்தாலும், தொடர்ந்து பலரும் விற்கமுற்பட்டதால் சந்தை முடிவாக கீழே முடிவடைந்தது. கடந்த இரு தினங்கள் இறக்கத்திற்கு பிறகு ரான்பாக்சி கம்பெனியின் பங்குகள் மேலே சென்றன. காரணம், அந்தக் கம்பெனியை வாங்குவதாக அறிவித்திருந்த ஜப்பானைச் சேர்ந்த டாய்ச்சி கம்பெனி, கடந்த சில நாட்களில் ரான்பாக்சி கம்பெனியில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளால் தனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்தது தான். நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 100 புள்ளிகள் கீழே இறங்கி, 12,575 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 45 புள்ளிகள் இறங்கி 3,816 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. சந்தை கடந்த 15 மாதங்களில் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது. இது கவலையளிக்கக் கூடிய விஷயம். புரோக்கரேஜ் கம்பெனிகள்: பங்குச் சந்தை நன்றாக இருந்தால் முதலீட்டாளர்கள் வாங்குவதும், விற்பதும் அதிகமாக இருக்கும். அது சார்ந்த புரோக்கரேஜ் கம்பெனிகளின் லாபங்களும் நன்றாக இருக்கும். ஆனால், சந்தை கீழேயே இருப்பதால், முதலீட்டாளர்கள் சந்தையை விட்டு விலகியே இருப்பதால் புரோக்கரேஜ் கம்பெனிகளின் லாபங் களும் காணாமல் போய்விட்டன. இதனால், சந்தை, அந்த கம்பெனிகளின் பங்குகள் மதிப்பிழந்து காணப் படுகின்றது.
வரும் நாட்கள் எப்படி இருக்கும்?: சந்தையின் சரிவை யாராலும் நிறுத்த முடியாத அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது. பலருக்கு என்ன செய்வது என்ற கவலை. சொல்லவும் முடியாத, மெல்லவும் முடியாத நிலமை. மியூச்சுவல் பண்டுகளில் ரிடம்ஷன் அதிகம் இல்லாதது ஒரு ஆறுதலான விஷயம். அதாவது, போட்ட பணத்தை அவசர அவசரமாக அதிகம் பேர் எடுக்காதது. இரண்டு காரணங்கள் இருக்கலாம். இப்போது எடுத்தால் நிறைய நஷ்டப்பட வேண்டிய வரும் அல்லது மியூச்சுவல் பண்டு என்பது நீண்ட நாள் முதலீடு என்ற எண்ணங் கள் இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தை என்பது நீண்ட நாள் முதலீடு என்ற எண்ணம் வந்தாலே போதும். அதுவே ஒரு பெரிய ஆறுதலான விஷயம். வரும் நாட்களும் கசப்பானவையாகத்தான் இருக்கும். குறிப்பாக, 22ம் தேதி டில்லியில் என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்தே சந்தையின் போக்கு அமையும்.
-சேதுராமன் சாத்தப்பன்-
நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை திடீர் குறைவு ஏன்?


சிங்கப்பூர்: கச்சா எண்ணெய் விலை நேற்று திடீரெனக் குறைந்தது. நேற்று முன்தினம் இருந்த விலையை ஒப்பிடும் போது, சந்தையில் பேரல் ஒன்றுக்கு 10 டாலர் வரை விலை குறைந்தது. கடைசியில், நியூயார்க் சந்தையில் பேரல் ஒன்றுக்கு 138.74 டாலராக விலை போனது.
இனி, எப்போது பேரல் விலை 160 டாலராகும் என்று உலக நாடுகள் அச்சப்பட்டுக் கொண்டிருக்கும் போது, இந்த திடீர் சரிவு அனைவரையும் அதிரவைத்தது. ஆசிய அளவில் எரிசக்தி தகவல் தொடர்பு நிபுணர் இது குறித்து கருத்து கூறும் போது, 'நான் அதிர்ந்து போனேன்' என்றிருக்கிறார். இதற்குக் காரணம் அமெரிக்க பெடரல் வங்கித் தலைவர் பென் பெர்னாகே நேற்று கூறுகையில், 'அமெரிக்க பொருளாதாரம் ஸ்திரமற்ற தன்மையில் இருக்கிறது' என்று கூறியதின் விளைவேயாகும். அதிகளவில் கச்சா எண்ணெய் பயன்படுத்தும் அமெரிக்காவில், பொருளாதாரம் சரியாக இல்லை என்றால் தேவை குறைந்து விடும் என்ற அச்சமே சரிவை ஏற்படுத் தியது என்று தெரிவித்தார். அதே சமயம் அமெரிக்க அதிபர் புஷ், வாஷிங்டனில் நேற்று அளித்த பேட்டியில், 'அமெரிக்க கடல்பகுதியில் எண்ணெய் துரப்பன பணியை மேற்கொள்ளலாம். ஆனால், கச்சா எண்ணெய் உடனே கிடைக்காது. எரிபொருள் விலையைக் குறைக்க உடனடி நிவாரணம் கிடையாது. அதே போல், நாம் வைத்திருக்கும் அவசரத் தேவை கச்சா எண்ணெய் இருப்பை பயன்படுத்தலாம் என்பதும் சரியல்ல' என்றார். மேலும், கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் அமைப்பினர், இந்த விலை வீழ்ச்சி தற்காலிகமானதே, அடுத்த சில வாரங்களில் பேரல் 160 டாலரை தொட்டு விடும்' என்று தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்


தீப்பெட்டி விலை உயர்வதற்கு காரணம் என்ன?


மூலப்பொருள் விலை உயர்வு, சென்வாட் வரி, தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக, தீப்பெட்டி தயாரிப்பு தொழில் நசிவடைந்து வருகிறது.
தென் தமிழகத்தில் உள்ள சிவகாசி, சாத்தூர், கோவில் பட்டி நகரங்களில், தீப்பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. ஒரு காலத்தில், மூன்றாயிரம் கோடி மதிப்பிலான, இந்திய தீப்பெட்டி தயாரிப்பு தொழிலில், 75 சதவீதம் இந்த மூன்று நகரங்களிலேயே நடந்தது. ஆனால், தற்போது, 50 சதவீதமாகக் குறைந்து விட்டதாக, உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மத்திய மதிப்பு கூட்டு வரியான சென்வாட், மூலப்பொருள் விலை உயர்வு மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை போன்றவை தான் தொழில் நசிவுக்கான காரணங்கள் என்று கூறப்படுகிறது.
தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவைப்படும் சிவப்பு பாஸ்பேட், ஒரு கிலோ ரூ. 300லிருந்து ரூ. 650 ஆக உயர்ந்துள்ளது. அதே போல, ஒரு டன் பொட்டாசியம் குளோரைடு, ஐந்தாயிரத்தில் இருந்து ஆறாயிரமாக உயர்ந்துவிட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, மெழுகு விலை, வரலாறு காணாத அளவில் 140 சதவீதம் வரை அதிகரித்துவிட்டது என்று உற்பத்தியாளர்கள் புலம்புகின்றனர். இயந்திரங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு மட்டும் தான் சென்வாட் வரி விதிக்கப்படுகிறது. குடிசை தொழிலாக தீப்பெட்டி உற்பத்தி செய்பவர்களுக்குச் சென்வாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குடிசைத் தொழில் என்று பலர் வரி ஏய்ப்பு செய்வதால், அவர்களுடன் போட்டிப் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அமைப்பு ரீதியிலான தொழிற்சாலை அதிபர்கள் கூறுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன், சிவகாசி நகரில் மட்டும் தீப்பெட்டி தொழிலை சார்ந்து ஒரு லட்சம் தொழிலாளர்கள் இருந்தனர். ஆனால், தற்போது 20 ஆயிரம் பேர் மட்டுமே ஈடுபட்டிருப்பதாக உற்பத்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. எல்லா பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்துவிட்ட நிலையில், தீப்பெட்டி விலை மட்டும் 14 ஆண்டுகளாக 50 பைசாவாகவே இருந்தது. இந்நிலையில், மூலப்பொருள் விலை உயர்வால், தீப்பெட்டி விலையை உயர்த்த, உற்பத்தியாளர்கள் சங்கம் முடிவுசெய்துள்ளது. இதன்படி, செப்டம்பர் 1ம் தேதி முதல், 50 முதல் 70 குச்சிகள் கொண்ட தீப்பெட்டியின் விலை ஒரு ரூபாயாக இருக்கும்.


நன்றி : தினமலர்