Sunday, July 20, 2008

பங்குச் சந்தை தலைவிதியை நிர்ணயிக்கப் போகிறது ஓட்டெடுப்பு முடிவு


கோடையில் ஒரு வசந்தம் போல, இந்த இறக்கத்திலும் வியாழனும், வெள்ளியும் பங்குச் சந்தைக்கு வசந்த நாட்கள் தான். இரண்டு நாட்களில் 1,050 புள்ளிகளுக்கு மேல் மும்பை பங்குச் சந்தையில் ஏற்றம் என்பது சும்மாவா? அது, உலகத்திற்கே ஒரு வசந்த நாட்க ளாக இருந்திருக்கக் கூடும். ஏனெனில், கச்சா எண்ணெய் விலை புதனன்று பேரலுக்கு ஆறு டாலரும், வியாழனன்று நான்கு டாலரும் குறைந்து, எல்லார் வயிற்றிலும் எண்ணெயை (பாலை) வார்த்தது எனக் கூறலாம். புதனன்று குறைந்த ஆறு டாலர் (அதாவது ஒரே நாளில்) என்பது கடந்த 17 ஆண்டுகளில் அதிகபட்சம். ஏன் புதனன்று அவ்வளவு குறைந்தது? அமெரிக்காவின் ஒரு அறிக்கை தான். அதாவது தங்களிடம் தேவைக்கு அதிகமான கச்சா எண்ணெய் இருப்பதாக வெளிவந்த ஒரு அறிக்கை தான் காரணம். மேலும், அமெரிக்காவில் சில வங்கிகள், நல்ல காலாண்டு முடிவுகளை கொண்டு வந்துள்ள செய்திகளும் சந்தைக்கு இனிப்பு சேர்த்தன. இந்த செய்திகள், வியாழனன்று இந்திய பங் குச் சந்தைகளை தூக்கிச் சென்றது. அரசியல் நிலைமை இன்னும் நிலையற்றதாக இருப்பினும், அதை சந்தை சிறிது மறந்து மேலே உயரப் பறந்து சென்றது. மும்பை பங்குச் சந்தை 536 புள்ளிகள் மேலே சென்று முடிவடைந்தது.
பணவீக்கம் எங்குள்ளது?: இந்த வார பணவீக்கம் 11.91 சதவீதத் தில் உள்ளது. இது, சென்ற வார அளவை விட மிகச்சிறிய அளவே கூடுதல். சென்ற வாரம் 11.89 சதவீதமாக இருந்தது. இது, ஒரு நிம்மதியளிக்கக் கூடிய விஷயம். நிம்மதிகள் சந்தையில் அதிகப்படியான புள்ளிகளாக மாறியது, இன்னும் நிம்மதியளிக்கக்கூடியது. ஒவ்வொரு வாரமும் வெள்ளியன்று கணக்கிடப்பட்டு வந்த பணவீக்க அளவு, இந்த வாரம் முதல் வியாழன் அன்று வெளியிடப்படும். இனி, ஒரு நாள் முன்னதாகவே வந்து பயமுறுத்தாமல் இருந்தால் சரி தான். பணவீக்க சதவீதம் 12க்கு மேலாக இருக்கும் என்று எல்லாரும் எதிர்பார்த்தனர். ஆனால், 12 சதவீதத்துக்கு கீழேயே இந்த வாரமும் இருந்தது, வங்கிப் பங்குகளுக்கு கொண்டாட்டமாக இருந்தது. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் பங்குகள் சமீபகாலமாக மிகவும் பந்தாடப்பட்டு கீழே விழுந்து கொண்டே இருந்தன. அந்த வங்கியின் பங்குகள் 10 சதவீதம் வெள்ளியன்று கூடின. வங்கிப் பங்குகளும், ரிலையன்ஸ் பங்குகளும் சந்தை உயர்வதற்கு காரணமாக இருந்தன. வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 525 புள்ளிகள் கூடி 13,635 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 145 புள்ளிகள் கூடி 4,092 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. முன் பெல்லாம் தேசிய பங்குச் சந்தை 5,000க்கு கீழே வந்தாலே பயப்படும் முதலீட்டாளர்கள், இப்போதெல்லாம் 4,000க்கு கீழே செல்லாமல் இருந்தால் சரிதான் என்ற நிலைக்கு வந்துவிட்டனர். குறைந்து வரும் ஓட்டல் வாடகைகள்:சென்ற ஆண்டு வரை இந்திய ஓட்டல்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது. அவர்கள் வைத்தது தான் தினசரி வாடகை என்ற நிலைமை இருந்தது. தற் போது கூடி வரும் பணவீக்கத்தால், பல கம்பெனிகள் தங்கள் ஓட்டல் செலவுகளை குறைத்து விட்டன அல்லது காலை சென்று, மாலை திரும்புமாறு அமைத் துக் கொண்டுள்ளன. ஆதலால், ஓட்டல் கள் தங்கள் தினசரி வாடகைகளை 30 முதல் 40 சதவீதம் குறைத்துள்ளன. இது, ஓட்டல் பங்குகளின் வருங்கால லாபங்களை குறைக்கும்.
புதிய வெளியீடுகள்: இந்த சந்தையிலும் புதிய வெளியீடுகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. விஷால் இன்போடெக் என்ற கம்பெனி, தனது புதிய வெளியீடைக் கொண்டு வந் துள்ளது. ரூ.140 முதல் ரூ.150 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் போடலாம். சமீபத்தில் வெளிவந்த ஆர்கிட் பிளை என்ற கம்பெனியின் வெளியீடு ரூ.70 முதல் 80 ரூபாய் வரை வந்தது. அதன் பங்குகள் தற்போது 37 ரூபாய் அளவிலே விற்கப்படுகிறது. அதுபோல, அவான் வெயிங் சிஸ்டம்ஸ் கம்பெனி 10 ரூபாய்க்கு வெளியிட்ட பங்குகள், தற்போது ரூபாய் எட்டு அளவில் கிடைக்கிறது. எல்லா பங்குகளும் ஆடித் தள்ளுபடியில் கிடைக்கிறது. வாங்கத்தான் ஆளில்லை.
காலாண்டு முடிவுகள்: ஒம்னிடெக், பவர் பைனான்ஸ், மன்சான்டோ, ஹைக்கல், கோல்கேட், பையோகான் ஆகிய கம்பெனிகள் நல்ல காலாண்டு முடிவுகளை கொடுத்துள்ளன.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்?: முன்பே கூறியபடி அரசியல் நிலைமைகளை வைத்துத் தான் அடுத்த வாரம் துவக்கம் இருக்கும். அரசியலுக்கு ஒவ்வொரு ஓட்டும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் முதலீட்டாளர்களுக்கும்.சந்தை மிகவும் கீழே இறங்கியுள்ளது. சிறிது ரிஸ்க் எடுத்து வாங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சந்தர்ப்பம். உதாரணமாக, ஒரு கம்பெனியின் பங்கை ரூ.100க்கு வாங்க நினைத்தால், 25 பங்குகள் வாங்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இதற்கும் கீழே குறைந்தால் மறுபடி 25 வாங்குங்கள். இது போல நான்கு முறை வாங்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. விலை கூடியிருந்தால் லாபம் தானே.
-சேதுராமன் சாத்தப்பன்-


நன்றி : தினமலர்


1 comment:

கோவை விஜய் said...

பங்கு சந்தை மேலே ஏற ஆரம்பித்து விட்டதே

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/