2009 ஜூலை மாத நிலவரப்படி, இந்தியாவில் உள்ள தொலைபேசி இணைப்புகளில் 92 சதவீதம் செல்போன், மீதி 8 சதவீதம்தான் லேண்ட் லைன் எனப்படும் நிலையான இணைப்புகள்.
நிலையான இணைப்புகள் இந்தியத் தொலைபேசித் துறையால் மட்டுமே அளிக்கப்பட்ட காலத்தில், அதற்காக முன்பதிவு செய்து பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. உடனடி இணைப்பு தேவைப்பட்டவர்கள் எம்.பி. கோட்டா போன்ற சிறப்பு ஒதுக்கீடுகளுக்காக பணம் செலவழிக்க வேண்டியிருந்தது. ஆனால் இன்று அதே தொலைபேசித் துறை, பி.எஸ்.என்.எல் என்ற நிறுவனமாக மாறியபிறகு, கேட்ட அதே நாளில் இணைப்பு வழங்கினாலும்கூட, இணைப்புகளைத் துண்டிப்போர் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது. சரி, செல்போனிலாவது பிஎஸ்என்எல் சாதனை நிகழ்த்துகிறதா என்றால், அதிலும் நான்காவது இடத்தில்தான் இருக்கிறது.
இந்தியாவில் இணைப்பு வழங்கப்பட்டுள்ள 44.10 கோடி செல்போன்களில், 23.81 விழுக்காடு வாடிக்கையாளர்களைப் பெற்று முதலிடத்தில் உள்ளது பாரத் ஏர்டெல். அடுத்ததாக ரிலையன்ஸ் 18.57, வோடாபோன் 17.81, பிஎஸ்என்எல் 12.67, ஐடியா 8.91, ஏர்செல் 5.23, எம்டிஎன்எல் 1.05, ஸ்பைஸ் 0.99, லூப் டெலிகாம் 0.53, சிஸ்டமா ஷியாம் 0.33, எச்எப்சிஎல் இன்போடெல் 0.09 சதவீத இணைப்புகளை அளித்துள்ளன.
பரவலாக அனைத்து ஊர்கள் மற்றும் நகரங்களிலும் பிஎஸ்என்எல் அலுவலகம் உள்ளன. இது அரசு நிறுவனம். எங்கு வேண்டுமானாலும் செல்போன் டவர்கள் எழுப்ப முடியும். அலுவலர்கள் எண்ணிக்கையோ தனியார் தொலைபேசி நிறுவனங்களைக் காட்டிலும் பல மடங்கு அதிகம். ஆனாலும், பிஎஸ்என்எஸ் நிறுவனம் நான்காம் இடத்தில், அதுவும் 12 சதவீத செல்போன் இணைப்புகளை மட்டுமே பெற்றுள்ளது என்றால் இதற்கு யார் காரணம்?
÷தொலைபேசித் துறை தனியார் மயமான பின்னர் அனைவருக்கும் பொதுவான சந்தை வாய்ப்புகள் திறந்துவிடப்பட்டுள்ளன. ஆனாலும் பிஎஸ்என்எஸ் பின்னடைவுக்குக் காரணம், அந்தத் துறையின் அமைச்சர்கள் தங்கள் சுயலாபத்துக்காக தனியார் செல்போன் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு பிஎஸ்என்எல் நிறுவனத்தை அடக்கி வாசிக்கும்படி செய்வதும், பிஎஸ்என்எல் அதிகாரிகள் இந்தத் தனியார் நிறுவனங்களுக்கு ஆலோசகர்களாக இருப்பதும்தான் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், பி.எஸ்என்எல் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் குல்தீப் கோயல் இந்த மாதத் தொடக்கத்தில் அனைத்து தலைமை பொது மேலாளர்களுக்கும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். தகவல் தொழில்நுட்ப நிலைக் குழுக் கூட்டம் அக்டோபர் 30ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய குழு உறுப்பினர்கள் பிஎஸ்என்எல் செல்போனில் அழைப்புகள் சரிவரக் கிடைப்பதில்லை என்று குறை கூறினார்கள். டிராய்}ன் செயல்பாட்டு அறிக்கை படி நாம் தனியாருக்கு குறைவில்லாமல் செயல்படுவதை எடுத்துக் கூறியும் திருப்தி அடையவில்லை.......வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அவர்கள் பிரச்னை எழுப்பும் முன்பாக அந்தந்த பகுதி எம்பி}க்களை அதிகாரிகள் சந்தித்துப் பேசுங்கள். நாம் செய்துவரும் வளர்ச்சிப் பணிகளைச் சொல்லுங்கள்' என்று கடிதம் எழுதியுள்ளார். அவர் கேட்டுக்கொண்டதைப் போலவே, சில அதிகாரிகள் தங்கள் பகுதி எம்பி}க்களை சந்தித்துப் பேசியும் இருக்கிறார்கள்.
அமைச்சர்கள் சொன்னபடி நடந்ததால்தான் இந்தநிலைமை என்றால், ஏன் நாடாளுமன்றத்தில் யாரேனும் கேள்விகேட்டு அம்பலப்படுத்தி விடுவார்களோ என்று அஞ்ச வேண்டும்? எதற்காக எம்பி}க்களைப் பார்த்துச் சமாதானம் செய்ய வேண்டும்? அமைச்சரே இதைச் சரிகட்டிவிட மாட்டாரா? ஏன் பயப்பட வேண்டும்?
அமைச்சர்கள் இன்று வந்து நாளை போகப் போகிறவர்கள் என்பதையும், பிஎஸ்என்எல் நிறுவனம் காலகாலத்துக்கும் இருக்கப்போகும் இந்திய அரசின் சொத்து என்பதையும் இந்த அதிகாரிகளும் அதன் ஊழியர்களும் புரிந்துகொண்டிருந்தால் இன்றைக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா? அமைச்சர்கள் கட்டாயப்படுத்தினால் செய்ய முடியாது என்று சொல்வதற்கும், அவர்தம் ஊழலை ஊடகங்கள் வாயிலாக அம்பலப்படுத்தவும் இந்த அதிகாரிகள் தயாராக இருந்திருந்தால், இப்போது பி.எஸ்.என்.எல். நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்குமா?
இந்த நிலைக்கு இன்னொரு காரணம், பிஎஸ்என்எல் தன்னை அரசின் அங்கமாகவே நினைத்து மெத்தனமாகச் செயல்படுவதுதான். இந்தியா முழுவதிலும் அலுவலகமும், தனியார் நிறுவனங்களைக் காட்டிலும் கூடுதல் உள்கட்டமைப்பும், பல மடங்கு ஊழியர்களையும் கொண்டிருக்கும் பிஎஸ்என்எல், வெறும் 1 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே பெற்றிருந்தாலும், இத்தனை ஊழியர்களுக்கும் சம்பளமும், உள்கட்டமைப்புபராமரிப்புச் செலவும் ஒரு சதவீதம்கூட குறையப்போவதில்லை. இருக்கவே இருக்கிறது மக்கள் வரிப் பணம். ஒரு பக்கம் பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பு. இன்னொரு பக்கம் மக்கள் பணம் செலவாகிறது.
வாய்ப்புகள் அனைத்து தொலைபேசி நிறுவனங்களுக்கும் பொதுவாகிவிட்டன என்பதைப் புரிந்துகொள்ளவில்லை. திறமையான அதிகாரிகளை சரியான பதவியில் சரியான இடத்தில் அமர்த்தாததால், திறமையற்ற ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க தைரியம் இல்லை. பிஎஸ்என்எல் செய்யும் விளம்பரங்கள்கூட, தனியார் விளம்பரங்களுக்கு நிகராக, வாடிக்கையாளர்களை ஈர்ப்பதாக இல்லை என்றால், அதனால் என்ன பயன்? பதிவு செய்து, பல ஆண்டுகள் காத்திருந்த காலம் போய்விட்டது. இப்போது தனியாருக்கு நிகராக களத்தில் இறங்கியாக வேண்டும். இன்னமும்கூட, கோடானுகோடி இந்தியர்களின் மனங்களில் நமது அரசு நிறுவனம்' என்ற மதிப்பு இருக்கிறது என்கிற உண்மையைப் புரிந்துகொண்டு அவர்களை வாடிக்கையாளர்களாக மாற்ற முயல வேண்டும். யானை படுத்தால் குதிரைதான் உயரம். எனவே, யானை எழுந்து நிற்க வேண்டும்.
நன்றி : தினமணி
Tuesday, December 1, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
very correct as u said, good move about bsnl...
மகா வருகைக்கு நன்றி
Post a Comment