Tuesday, December 1, 2009

அறிவார்ந்த முடிவெடுக்க பல்கலை. உதவுமா?

பி.டி. கத்தரி அனுமதி மீதான முடிவு மக்களைக் கேட்டபின் இறுதி செய்யப்படும்; டிசம்பர் மாதம் முடிய ஆதரவு, எதிர் கருத்துகளைத் தெரிவிக்கலாம். ஜனவரி அல்லது பிப்ரவரியில் நாடு தழுவிய அளவில் பொதுக்கருத்து கேட்கப்பட்ட பின்னரே அனுமதி குறித்த முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழக முதல்வரும், நுகர்வோர், விவசாயிகளின் கருத்தைக் கேட்டபின் முடிவெடுங்கள் என்று பிரதமரைக் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பி.டி. கத்தரி நல்லதே; விளைச்சல் கூடும்; மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ஆபத்து இல்லாதது என்று எழுதியும் பேசியும் வருகிறார்.

மறுபக்கம் பரவலாக பி.டி. கத்தரி பற்றி கடுமையான விமர்சனங்கள் நெடுங்காலமாகவே வைக்கப்பட்டு வருகிறது. இரு தரப்பு விவரங்களையும் மக்கள் அறிந்தால்தான் அவர்கள் தெளிவுடன் பி.டி. கத்தரி தேவையா இல்லையா என முடிவெடுப்பார்கள். பல்கலை. விஞ்ஞானிகள் எல்லாமே நன்றாக உள்ளது, பி.டி. கத்தரி வந்துவிட்டால் கத்தரி விளைவிப்பதில் உள்ள பிரச்னைகள் பறந்தோடும் என்கிறார்கள்.
உண்மை தான் என்ன?

இங்கே நடப்பது மரபணு மாற்றம் அல்ல; திணிப்பு. மரபணு வலிந்து திணிக்கப்படுகிறது. திணிக்கப்படுவது மண்ணில் வாழும் நுண்ணுயிரியின் ஒரே ஒரு மரபணு மட்டுமல்ல, அதனுடன் ஆண்டிபயாடிக்கைத் தாங்கிடும் மரபணுவும், ஒரு வைரசின் மரபணுவும், ஏஏடி என்ற மரபணுவும் (மொத்தம் 4 மரபணுக்கள்) சேர்த்துக் கூட்டாக ஜீன் துப்பாக்கி என்ற கருவியால் வேகமாகச் சுடப்படுகிறது. அப்போது அத் தாவரத்திற்கேயுரிய மரபணுக் கூட்டத்தில் சிதைவுகள், மாற்றங்கள் ஏதேனும் ஏற்படுகிறதா, அந்த மரபணுக்கள் முன்போலவே இயல்பாக உள்ளதா அல்லது அதனால் தூங்க வைக்கப்பட்டிருக்கும் அல்லது செயல்பட்டுக் கொண்டிருக்கும் மரபணுக்களின் செயல்பாடுகள் மாறி உள்ளதா போன்ற ஆய்வுகள் செய்யப்பட்டதா என்று கேட்டால் அதற்குப் பதில் இல்லை. தமிழ்நாடு வேளாண் பல்கலை விஞ்ஞானிகள் மட்டுமல்ல, ஆதரவு விஞ்ஞானிகள் எவரும் விளக்க மறுக்கிறார்கள்.

விளைச்சலை அதிகப்படுத்தவே இத்திணிப்பு என்று எவராவது கூறினால் அது அப்பட்டமான பொய்யாகும். இத்திணிப்பு பயிரைத் தாக்கும் பல பூச்சிகளில் ஒன்றிரண்டை மட்டும் கொல்லவே. பருத்தியிலும் கத்தரியிலும் காய்ப்புழுக்களைக் கொல்லவே. இவைகளை பூச்சிக்கொல்லிகள் கொண்டு கட்டுப்படுத்த முடியவில்லை. ஆகவே தான் மரபணுத் திணிப்பு என்கிறார்கள். மற்ற பூச்சிகளைக் கட்டுப்படுத்த அவைகளுக்கு பூச்சிக்கொல்லிகள் தான் வழி என்கிறார்கள்.

பருத்தி,கத்தரி,நெல்,ராகி,கம்பு,சோளம்,மக்காச்சோளம், பப்பாளி,தக்காளி,கோதுமை,முட்டைகோசு,காலிபிளவர்,நிலக்கடலை, சுண்டல்கடலை, மாதுளை, ஆப்பிள் உள்ளிட்ட தற்போது மரபணு திணிப்புக்கு ஆளாக்கப்பட்டுள்ள 56 வகை உணவுப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை பூச்சிக்கொல்லிகள் இல்லாமலேயே ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறை மூலம் காப்பாற்றலாம் என்று இந்திய வேளாண் அறிவியல் கழகம் கூறுகிறது.

நெல்,பருத்தி,கத்தரியில் வரும் பூச்சி மற்றும் நோய்களை ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறை மூலம் கட்டுப்படுத்த முடியும். ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளால் பூச்சிக் கொல்லியின் எஞ்சிய நஞ்சு குறைகிறது. பூச்சிக்கொல்லிகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை பூச்சிகள் பெறுவதைத் தடுக்கிறது - மீண்டும் உச்சநிலை அடைவதைத் தடுக்கிறது. மேலும் பூச்சித் தாக்குதல் தன்மை, பாதிப்பின் அளவு, சரியான காலத்தில் பயன்படுத்துவது ஆகியவற்றால் ஒருங்கிணைந்த பயிர்ப்பாதுகாப்பு முறை மூலம் 20 முதல் 30 சதம் அதிக விளைச்சல் கிடைக்கிறது.

இது தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்திடமிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற விவரம்.

இருப்பினும் துணைவேந்தரும் விஞ்ஞானிகளும் மரபணுத் திணிப்பு முறை தான் உள்ள ஒரே வழி என்கிற தொனியில் கருத்துத் தெரிவிக்கிறார்கள். எது உண்மை? துணைவேந்தரும் விஞ்ஞானிகளும் இப்போது சொல்வதா அல்லது முன்பு பல்கலை தெரிவித்ததா?

ஒரு விவசாயி பி.டி. கத்தரி பயிரிட்டால் அதிலிருக்கும் மகரந்தம் பக்கத்து விவசாயியின் கத்தரிச்செடிக்கு காற்று, தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள் மூலம் சேராதா? அப்படி மரபணுக் கலப்படம் நடப்பதை எப்படித் தடுப்பது? ஒரு வேளை மரபணுக் கலப்படம் நடந்துவிட்டால் பாதிக்கப்பட்ட விவசாயியின் பாதிப்பைச் சரிசெய்ய என்ன வழிகளை விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். பிற ரகத்தைப் பயிரிடுபவர்கள் 50-60 மீட்டர் தள்ளிப் பயிரிட்டுக் கொள்ள வேண்டுமாம்.

இதுபோன்ற மரபணுக் கலப்படத்தால் அமெரிக்காவிலும், கனடாவிலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மீது மான்சான்டோ திருட்டுப் பட்டம் சுமத்தி பல லட்சம் டாலர்கள் ஈடு கேட்கும் வழக்குச் சம்பவங்கள் அவ்விரு நாடுகளிலும் பரவலான ஒன்று.

பதப்படுத்திய மரபணுத் திணிப்பு உணவுப்பண்டங்கள் (எ.கா-சிப்ஸ்) அனுமதிக்கப்பட்ட பின், அமெரிக்காவில் உணவு சார்ந்த அலர்ஜியும், பிற நோய்களும் 50 சதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வகை அலர்ஜிக்கெனவே இப்போது மருந்துகளும் உள்ளன. அமெரிக்க சுற்றுச்சூழல் மருத்துவக் கல்வியகம், தங்களிடம் வரும் நோயாளிகளை மரபணுத் திணிப்பற்ற உணவுப் பண்டங்களை உண்ண அறிவுரைக்கும்படி பரிந்துரைத்துடன் அவைகளைத் தடை செய்யவும் கேட்டுள்ளது.

பதப்படுத்தப்பட்டவைகளிலேயே இப்படிப்பட்ட பிரச்னைகள். இந்த நிலையில் நேரடியாக உண்ணப்படும் கத்தரி போன்றவை மனிதரைப் பாதிக்காது என்றும் மனித இரைப்பையில் உள்ள நுண்ணுயிரிகளுக்கு அந்த நஞ்சு உற்பத்தி செய்யும் மரபணு இடம்பெயராது என்றும் எந்த ஆய்வுகளின் அடிப்படையில் கூறுகிறார்கள் என்பது சிறிதும் புரியவில்லை. இவர்கள் கூறுவதில் உண்மை எவ்வளவு என்று ஆராயலாம் எனில் அதிலும் வில்லங்கம்.

மரபணுத் திணிப்பு பயிர்கள், கம்பெனிகளால் காப்புரிமை செய்யப்பட்டவை. அக் கம்பெனிகளின் அனுமதியின்றி எவரும் ஆராய முடியாது. இரு வகை பி.டி. பருத்தியை ஒப்பிட்டு ஆராயக்கூட முடியாது.

காப்புரிமைக் கட்டுப்பாடுகள் காரணமாக மரபணுத் திணிப்பு பயிர்களில் பூச்சித்தாக்குதல் பற்றிய ஆராய்ச்சிகளைச் சுதந்திரமாகச் செய்ய முடிவதில்லை, தங்களுக்கு எதிர்ப்பாக எழுதாதவர்களுக்கு அல்லது தங்களிடம் நிதி உதவி பெறும் ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டுமே கம்பெனிகள் அனுமதி தருகின்றன. கம்பெனிகள் ஆராய்ச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றன, ஆய்வுகளைத் தடை செய்கின்றன என அமெரிக்காவின் பூச்சியியல் ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்க அரசிடம் புகார் செய்துள்ளனர்.

பி.டி. பருத்தி, பி.டி. கத்தரி மற்றும் சாதா ரகப் பயிர்கள் கொண்டு ரசாயன வழி, இயற்கை வழி, ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறை என பல வகைகளை ஒப்பீட்டு ஆய்வு செய்வது மிக முக்கியம். இந்த ஆய்வுகளை வேளாண்மைப் பல்கலை ஏன் செய்யவில்லை? இயலாமையா? முடியுமெனில் இத்தகைய ஆய்வுகளை பல்கலை உடனே செய்யட்டும். வெளிப்படையான ஆய்வாகச் செய்யட்டும். உண்மை அப்போது தெரியும். ஆனால் செய்யாது, செய்ய முடியாது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை இவ்வகையில் ஓர் அடிமை.

இதுவரை உலகில் நடந்த ஓரிரு சுதந்திரமான ஆய்வுகள், அனுமதிக்காக அமெரிக்க விவசாயத்துறையிடம் கம்பெனிகள் சமர்ப்பித்த ஆய்வுக்குறிப்புகள்,கம்பெனிகள் அனுமதியளித்து பாதிப்பு தெரிந்ததும் நிறுத்தப்பட்ட ஆய்வுகள் ஆகியவற்றால் அறியப்பட்ட பாதிப்புகளை ஜெனிடிக் ரெüலெட் என்ற பெயரில் நூலாகவே வெளியிட்டார் ஜெப்ரே சிமித் என்ற பத்திரிகையாளர்.

அனுமதிக்கப்பட்டு நடந்த கொஞ்ச நஞ்ச ஆய்வுகள் மரபணுத் திணிப்புப் பயிர்களால் ஆய்வு விலங்குகளுக்கு ஏற்பட்ட 65 உடற்பாதிப்புகளை இந்நூலில் பட்டியலிட்டுள்ளார்.

இத்தகு பாதிப்புகள் திணிக்கப்பட்ட மரபணுவால், அது சுரக்கும் நஞ்சால் மட்டுமல்ல. பயிரின், ஆய்வு விலங்கின் உடலில் இந்த மரபணுக்கள் ஏற்படுத்திய விளைவுகளாலும் இருக்கலாம். எதனால் என்பதை அறிய நீண்ட கால ஆய்வுகள் தேவை என்கின்றனர் நடுநிலை விஞ்ஞானிகள். மிகக் குறைந்தபட்சம் 2-3 ஆண்டு கால ஆய்வுகள் தேவை என்கிறார்கள். ஆனால் மகிகோ நிறுவனம் 90 நாள்கள் ஆய்வையே செய்துள்ளது.

மகிகோ அனுமதிக்காக சமர்ப்பித்த ஆய்வறிக்கை மீது இத்துறையில் சிறந்த வல்லுநரான பேரா.செராலினி மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளனர். முடிவுகள் நன்றாக இருப்பதற்காக பல புள்ளிவிவரங்கள் மாற்றி மாற்றி எழுதப்பட்டுள்ளன. ஆய்வு விலங்குகளில் ரத்தம் உறைவதற்கு நீண்ட நேரமாவது, ஈரல் கெட்டுப்போய் இருப்பதும், எலிகளில் வயிற்றுப் போக்கு, ஈரல் எடை குறைந்திருப்பது போன்றவற்றை அந்த ஆய்வு அறிக்கை வெளிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு விஞ்ஞானியான ஜீடி கார்மன் இத்தகு பரிசோதனைகளில் பொதுவாக 18-20 வகையான ரத்த சோதனைகள் செய்வது வழக்கம். ஆனால் இங்கோ வெறும் 7 சோதனைகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது என்கிறார்.
மேலும் பல ஆய்வுகளில் மரபணுத் திணிப்புக் கத்தரியில் அந்த மரபணு உருவாக்கிய நஞ்சைப் பயன்படுத்தவில்லை. மாறாக செயற்கை நஞ்சையே பயன்படுத்தியுள்ளதைச் சுட்டியுள்ளார். இவ்விருவரும் தத்தமது அரசுகளுக்கு (பிரான்சு, ஆஸ்திரேலியா) திணிப்புப் பயிர்கள் குறித்து ஆலோசனைகளை வழங்குபவர்கள். இவர்களின் கருத்துகளுக்கு நம் பல்கலை விஞ்ஞானிகள் பதில் சொல்ல மாட்டார்கள். நாங்கள் அதையெல்லாம் ஆராயத் தேவையில்லை என்பார்கள்.

8-4-2008-ல் ஈரோட்டில் தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய விவாத அரங்கிற்கிற்காக அன்றைய துணை வேந்தர் முனைவர் இராமசாமி தலைமையில் வந்த விஞ்ஞானிகள் அப்படித்தான் கூறினர். அவ்விஞ்ஞானிகளின் ஆய்வுக்கருத்தை மரபணு அங்கீகாரக்குழு சொன்னதுபோல உப்புச்சப்பில்லாதவை என ஒதுக்கிக்கூடத் தள்ளுவர்.
÷ஆறு கோடி தமிழர்களின் உடல் நலன் குறித்த பிரச்னையை ஒட்டி எழுந்துள்ள சந்தேகங்கள், கேள்விகளைத் துணிச்சலுடன் விளக்க நம் விஞ்ஞானிகள் முன்வர வேண்டும். அப்போது தான் தமிழக மக்களும், விவசாயிகளும் பி.டி. கத்தரி தேவையா தேவையில்லையா தடை செய்ய வேண்டுமா என்கிற முடிவைப் பகுத்தறிந்து அறிவார்ந்து சீர்தூக்கி முடிவெடுக்க முடியும்.

அதற்கு உதவும் பெரும் பொறுப்பு எதிர்க்கின்ற, ஆதரிக்கின்ற இரு தரப்புக்கும் உள்ளது. எதிர் தரப்புடன் சேர்ந்து விளக்கம் தர பல்கலைக்கழகம் முன்வர வேண்டும்.
கட்டுரையாளர் : செல்வம்
நன்றி : தினமணி

No comments: