சர்வதேச அரங்கில் அரசியல் சாராநிலையையும் மதச்சார்பின்மையையும் கட்டிக்காக்கும் நாடுகளுள் ஒன்றாகக் கருதப்படுவது சுவிட்சர்லாந்து. கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளாக எந்த நாட்டுடனும் சண்டையிட்டுக் கொண்டதில்லை. இரு உலகப்போர்களின்போதும் தாக்குதல்களிலிருந்து தப்பித்துக் கொண்டது. ஆதரவு தேடிவந்த அச்சு நாடுகளுடனும் நேச நாடுகளுடனும் வெறுப்பைச் சம்பாதித்தபோதும், நடுநிலைமை தவறவில்லை என சுவிட்சர்லாந்தைப் பற்றி வரலாறு சொல்கிறது. கூட்டாட்சி ஜனநாயகத்தை அமைத்த இரண்டாவது நாடு என்கிற பெருமையும் சுவிட்சர்லாந்துக்கு உண்டு. அரசு இயற்றும் சட்டங்களை கருத்தறியும் தேர்தல்கள் மூலமாக மக்கள் எப்போது வேண்டுமானாலும் எதிர்க்க முடியும். அந்த அளவுக்கு மேம்பட்ட மக்களாட்சியைச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் நாடாகவும் சுவிட்சர்லாந்து கருதப்படுகிறது. இப்படிப்பட்ட தனித் தன்மைகளைக் கொண்டிருக்கும் சுவிட்சர்லாந்து, தனது அடையாளங்களை இழக்கும் அபாயத்தில் இப்போது சிக்கியிருக்கிறது.
சுமார் 78 லட்சம் மக்கள்தொகை கொண்ட சுவிட்சர்லாந்தில் கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் முஸ்லிம்கள். யுகோஸ்லாவியா போன்ற பால்கன் நாடுகளிலிருந்தும் துருக்கியப் பிரதேசங்களில் இருந்தும் இவர்கள் வந்திருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் இருந்தபோதும், இதுவரையில் பெரிய அளவிலான மத வன்முறைகள் ஏதும் நிகழ்ந்திருப்பதாகத் தகவல் இல்லை. வெளிநாடுகளிடம் எப்படி நல்லபேர் எடுத்திருக்கிறதோ, அதே போல் உள்நாட்டிலும் சர்ச்சைகள் எழாவண்ணம் அடுத்தடுத்து வரும் அரசுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆயினும் கடந்த சில ஆண்டுகளாக அங்கு மதங்களுக்கு இடையே கசப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.
சில காலம் முன்பு தனது பணியாளர்கள் தொப்பி வைத்து வருவதற்கு சூப்பர் மார்க்கெட் ஒன்றின் நிர்வாகிகள் தடை விதித்ததையடுத்து சர்ச்சை கிளம்பியது. சிறிய அளவிலான போராட்டத்திலேயே இந்தத் தடை உடைக்கப்பட்டது. இதேபோல், பள்ளிகளில் நீச்சல் பயிற்சியின்போது உடல் முழுவதும் மறைக்கும் ஆடைகளை மாணவிகள் அணிவதற்கும் போராட்டத்தின் மூலமாக அனுமதி பெறப்பட்டது. அப்போதெல்லாம் பெரிய அளவிலான விமர்சனங்கள் எழவில்லை. நாட்டின் பெயருக்கு எந்தக் களங்கமும் ஏற்பட்டுவிடவில்லை. ஆனால், முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே கசப்பு ஏற்படுவதற்கு இதுபோன்ற சம்பவங்கள் காரணமாக அமைந்ததாகக் கருதப்படுகிறது.
நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 5 சதவீதம் வரை இருக்கும் முஸ்லிம்களுக்கு சுமார் 150 மசூதிகளே இருப்பதாக அறியப்படுகிறது. அவற்றிலும் நான்கில் மட்டுமே சிறிய வகையிலான மினார்கள் எனப்படும் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சில இடங்களில் மசூதிகள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத தொழுகை நடத்துவதற்கான அறைகளும், கட்டங்களும் இருக்கின்றன. அங்கெல்லாம் மினார்கள் அமைக்க அனுமதி கோரினால், உள்ளாட்சி நிர்வாகத்தினர் அனுமதி தருவதில்லை என்கிற புகார் தொடர்ந்து எழுந்து வந்தது. மினார்கள் என்பது மதம் பரவுவதற்கான மூலமாகவும் அடையாளமாகவும் கருதப்பட்டதே
இதற்குக் காரணம்.
இந்த நிலையில், 2004}ம் ஆண்டில் மசூதி ஒன்றில் மினார் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டபோதுதான் புதிய வடிவிலான பிரச்னை தலைதூக்கியது. மத அடையாளங்களை வலுப்படுத்துவதற்காகவே மினார்கள் அமைக்க திட்டமிடப்படுவதாக அந்த மசூதியைச் சுற்றியிருந்தவர்கள் சிலர் கூறியதால் விஷயம் விவகாரமானது. அரசியல் ரீதியாகவும் மத அடிப்படையிலும் மினார் அமைப்பதற்கு நெருக்கடி தரப்பட்டது.
ஒருவழியாக குறிப்பிட்ட அந்த மசூதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் மினார் அமைக்கும் பணி முடிக்கப்பட்டது. ஆனால், அதனால் எழுந்த பிரச்னையின் தீவிரம் குறையவேயில்லை. இதுவே தேசிய அளவிலான பிரச்னையாக உருவெடுத்தது. மினார்கள் அமைப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என சில மத அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. மினார் கட்ட அனுமதிப்பது ஷரியத் போன்ற பிரத்யேகமான சட்டத்தை பின்பற்றச் சொல்வதற்கு முன்னோட்டமாக அமையும் என்று கூறப்பட்டது. கொஞ்ச காலத்தில் மக்களுக்கான போராட்டம் என்பது போன்ற தோற்றம் இதற்கு ஏற்பட்டது.
இதன்பிறகுதான் சுவிட்சர்லாந்து அரசு விழித்துக் கொண்டு நாடாளுமன்ற அவைகளில் விவாதிக்க முடிவெடுத்தது. வெவ்வேறு தருணங்களில் கூடிய இரு அவைகளும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன. மினார்கள் தடை செய்யப்படுவதை நாட்டு மக்கள் விரும்பவில்லை என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் மூலம் சுவிட்சர்லாந்தின் நடுநிலைமை காக்கப்பட்டதாகக் கருதப்பட்டது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே, சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டினர் குடியேற்றத்தை எதிர்த்து வரும் சவிட்சர்லாந்து மக்கள் கட்சி, மினார்களுக்கு எதிரான பிரசாரத்தை முடுக்கிவிட்டது. அவ்வளவுதான், மினார்கள் பிரச்னை அரசியல் பிரச்னையானது. தெருக்களிலிருந்து இணையம் வரையிலும் பிரசாரம் செய்யப்பட்டது. மினார்கள் கட்டுவது உலகப் பிரச்னையானது.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை முன்பே கூறியதுபோல், மக்கள்தான் பிரதானம். மற்ற நாடுகளுடனான அரசியல் உறவுகள், பன்னாட்டு நிறுவனங்களுடனான உறவுகள், ஒப்பந்தங்கள் போன்றவற்றிலும் மக்கள் கருத்தறியப்படுகிறது. அந்த வகையில் மினார்கள் கட்டுமானத்தைத் தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுப்பப்பட்டதால், இதையும் மக்கள் முடிவுக்கே விட்டுவிட சுவிட்சர்லாந்து அரசு தீர்மானித்தது. அதன்படி, மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை (29.11.2009) நடந்து முடிந்திருக்கிறது.
இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே, இஸ்லாமிய நாடுகளுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையேயான உறவில் அதிர்வு ஏற்பட்டது. தடை விதிப்பதற்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துவிட்டால், உலக அரங்கில் சுவிட்சர்லாந்தின் மரியாதை சரிந்துபோகும் என்பதை உணர்ந்த அரசு, மினார்களுக்குத் தடை விதிக்கும் கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம் எனப் பிரசாரம் செய்தது. கருத்தறியும் வாக்கெடுப்புக்கு முந்தைய கணிப்புகளில், மினார் அமைக்கத் தடை கோருவதை நிராகரித்து பெரும்பான்மையான மக்கள் வாக்களிப்பாளர்கள் என்று கூறப்பட்டது.
ஆனால், முடிவுகள் எதிர்பார்க்காத வகையில் அமைந்திருக்கின்றன. மினார்கள் கட்டுவ தற்குத் தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை ஆதரித்து 57% மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.
இந்த முடிவுக்கு மொத்தமுள்ள 26 பிரதேசங்களில் 22 பிரதேசங்களின் ஆதரவும் கிடைத்திருக்கிறது. இதனால் இந்தத் தடை சட்டமாக்கப்படுவது உறுதியாகியிருக்கிறது.
சுவிட்சர்லாந்தின் அரசியலிலும் வெளியுறவுக் கொள்கையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் நிகழ்வாகவே இந்தத் தேர்தல் முடிவு கவனிக்கப்படுகிறது. இந்தத் தேர்தல் முடிவுகளாலும், மினார் கட்டுவதற்கு விதிக்கப்படும் தடைகளாலும் இஸ்லாம் இன்னும் வீரியமாகப் பரவும் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
கட்டுரையாளர் : பூலியன்
நன்றி : தினமணி
Tuesday, December 1, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment