பங்குச் சந்தை என்பது நியாயமான முதலீட்டு நடவடிக்கைகளுக்கானது என்ற எண்ணம் முதலீட்டாளர்களுக்கு வந்துவிடக் கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டு அரசு செயல்படுகிறதோ என்கிற எண்ணம் சமீபகாலமாக நமக்கு ஏற்பட்டு வருகிறது.
1996 முதல் மும்பை பங்குச் சந்தையிலும் தேசியப் பங்குச் சந்தையிலும் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 1,450. இந்த நிறுவனங்களில் முதலீட்டாளர்களின் பணம் சுமார் 58,000 கோடி ரூபாய் முடங்கிக் கிடக்கிறது என்பது சமீபத்தில் வந்திருக்கும் அதிர்ச்சி அளிக்கும் செய்தி.
பங்குச் சந்தைகளில் நிறுவனங்கள் தங்களைப் பதிவு செய்துகொள்ளவும், வியாபாரம் செய்யவும் சில ஒழுங்காற்று விதிகளை "செபி' எனப்படும் இந்தியப் பங்குச் சந்தை ஆணையம் ஏற்படுத்தி உள்ளது. அவற்றை உறுப்பு நிறுவனங்கள் கடைப்பிடிக்கத் தவறினால் அந்த நிறுவனங்களைச் சந்தையில் பட்டியிலிடக்கூடாது என்று தடை விதிக்கப்படுகிறது. அதாவது, அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதும் விற்பதும் தடை செய்யப்படும்.
இந்தியப் பங்குச் சந்தை ஆணையத்தைப் பொறுத்தவரை தவறு செய்த நிறுவனங்கள் மீது தடை விதித்தவுடன் தனது கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகிறது. அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவரின் நிலையை அது சற்றேனும் எண்ணிப் பார்க்க வேண்டாமா? முறையாகச் செயல்படாமல், பொதுமக்கள் பணத்தை ஊதாரித்தனமாக விரயம் செய்யும் இந்த நிறுவனங்களுக்கு என்ன தண்டனை? முதலீட்டாளர்களுக்கு ஏற்படக்கூடிய இன்னல்களை முன்கூட்டியே எச்சரித்திருக்கலாம் அல்லவா? அப்படிச் செய்திருந்தால் முதலீட்டாளர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு அந்த நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தைத் திரும்பப் பெற்றிருக்க முடியுமே, ஏன் செய்யவில்லை?
1,450 நிறுவனங்களில் 1,325 நிறுவனங்களுக்கு மும்பை பங்குச் சந்தையும் 125 நிறுவனங்களுக்குத் தேசியப் பங்குச் சந்தையும் தடை விதித்துள்ளன. ஆனால் இப்படி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்று முன்கூட்டியே தெரிந்துகொண்ட அந்த நிறுவனங்களின் ஊக்குனர்கள் (புரமோட்டர்கள்) தங்கள் கைவசம் இருந்த பங்குகளைச் சந்தையில் விற்றுப் பணமாக்கிக் கொண்டுவிட்டனர். இந்த 1,450 நிறுவனங்களிலும் இப்போது புரமோட்டர்களின் பங்கு மதிப்பு அதிகபட்சம் 5% ஆகவும் குறைந்தபட்சம் 1% ஆகவும் இருக்கிறது.
தவறுகளைச் செய்து தண்டனை அனுபவிக்க வேண்டிய புரமோட்டர்கள் தங்களுடைய பங்குகளை விற்று நஷ்டப்படாமல் தப்பிவிட்டனர். நடப்பது எதுவுமே தெரியாத அப்பாவி முதலீட்டாளர்கள் வசமாக மாட்டிக்கொண்டுவிட்டனர். இந்த முதலீட்டாளர்களில் பெரும்பாலானவர்கள் தனி நபர் முதலீட்டாளர்கள்தான் என்று பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசுடைமை வங்கிகளில் சேமிப்புக்கு மிகக் குறைந்த வட்டியே தரப்பட்டு, அப்பாவிப் பொதுமக்களைச் சூதாட்டச் சிந்தனையுடைய பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தூண்டுகிறது நமது அரசு. தங்களுடைய ஊதியத்துக்கும் சேமிப்புக்கும் நல்ல லாபம் கிடைக்கட்டும் என்கிற நியாயமான ஆசையில் பங்குச் சந்தையில் முதலீடு செய்து ஏமாறுகிறார்கள் சாமானிய மக்கள். இப்படியொரு நிலைமை ஏற்பட இருப்பதையும், ஏற்பட்டிருப்பதையும் கம்பெனிகள் விவகாரத்துறை, சட்டத்துறை, நிதித்துறை அதிகாரிகள் லட்சியம் செய்ததாகவே தெரியவில்லையே?
பொருளாதார மந்தநிலை காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட தொழில்வள நாடுகள் தடுமாறியபோதும் இந்தியத் தொழில்துறைக்குத் தேவைப்பட்ட நிதியைக் கொண்டுவந்து சேர்த்த குருவிகள், இந்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்கள்தான். அதிலும் பணியிலிருந்து ஓய்வுபெற்ற முதியவர்களும், தனியார் நிறுவன ஊழியர்களும்தான் கணிசமாக இருக்கின்றனர்.
தாராளமயமாக்கல் என்கிற பெயரில் பங்குச் சந்தை சார்ந்த பொருளாதாரத்தை ஏற்படுத்தி இருப்பதே, தனியார் நிறுவனங்கள் எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றிச் செயல்படவும், பொதுமக்கள் பணத்தைக் கொள்ளை அடிக்கவும் தானோ? ஆட்டுக்கு ஓநாய் காவலிருந்த கதைதான்!
நன்றி : தினமணி
Tuesday, December 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment