சில தினங்களுக்கு முன்பு, செக்யூரிடிஸ் ஆண்டு எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (செபி) ஒரு முக்கியமான அறிவிப்பு செய்திருக்கிறது. சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு என்று தனியாகப் பங்குச் சந்தை ஏதும் தேவையில்லை. தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையிலேயே அவற்றையும் இனி பட்டியல் செய்யலாம். பங்குகள் பரிவர்த்தனையும் செய்யலாம் என்பதுதான் அந்த அறிவிப்பின் சாரம்.
சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தலையாய பிரச்னை என்பது தங்களுக்குத் தேவையான மூலதனத்தைத் திரட்டுவதுதான்.
பெரிய நிறுவனங்கள் மூலதனம் திரட்டுவதற்கு பங்குச் சந்தைகளுக்கு வருகின்றன. அப்படிப்பட்ட வாய்ப்பு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு இதுவரை எட்டாக்கனியாகவே இருக்கிறது. காரணம், இதுதொடர்பான நடைமுறைகளும், அதற்காக மேற்கொள்ள வேண்டிய அபரிமிதமான செலவுகளும் ஆகும்.
உதாரணமாக, ஒரு நிறுவனம் முதல்முறையாக தங்கள் பங்குகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்து மூலதனம் திரட்டுகிறது என்று வைத்துக் கொள்வோம். (இது இனிஷியல் பப்ளிக் ஆஃபர் எனப்
படுகிறது). ஒரு கோடி ரூபாய் மூலதனம் திரட்டுவதாக இருந்தாலும் சரி, அல்லது நூறு கோடி ரூபாய் மூலதனம் திரட்டுவதாக இருந்தாலும் சரி, அதற்கு ஆகும் செலவு ஏறக்குறைய ஒன்றுதான். விளம்
பரச் செலவு, படிவங்கள் அச்சடித்து வினியோகம் செய்தல், பிரதிநிதிகளின் சுற்றுப்பயணச் செலவு ஆகியவை ஒரே மாதிரிதான் அமைகிறது.
இந்த அதீதமான செலவே, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பங்குச் சந்தையில் நுழைவதற்குத் தடைக் கற்களாக உள்ளன.
பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்ட சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்குகளைப் பணமாக்குவதற்கு பெரும்பாலும் "மெர்ச்சன்ட் பேங்கர்ஸ்' எனப்படும் சிறப்பு நிதி அமைப்புகளின் உதவி தேவைப்படும். அவர்கள் சிறு தொழில் நிறுவனங்களின் பங்கு பரிவர்த்தனையில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களுக்குப் பெரிய நிறுவனங்களிடமிருந்து கிடைக்கக்கூடிய அளவு அதிக ஊதியம் சிறு நிறுவனங்களிடமிருந்து கிடைப்பதில்லை.
இவற்றையெல்லாம் அறிந்துள்ள "செபி' என்னும் கண்காணிப்பு வாரியம், சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்து கொண்டு பரிவர்த்தனை செய்வதற்கும், மூலதனம் திரட்டுவதற்கும் வசதியாக, விதிமுறைகளை எளிமைப்படுத்தியுள்ளது. பத்து கோடி ரூபாய்க்குக் குறையாமலும், இருபத்தி ஐந்து கோடி ரூபாய்க்கு மிகாமலும் மூலதனம் பெற்றுள்ள சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே இப்புதிய, எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகள் பொருந்தும்.
புதிய ஏற்பாட்டின் முக்கியத்துவம் என்ன? நம் நாட்டில் 1995 முதல் கணினி மூலம் பங்கு வர்த்தகம் செய்யும் முறை வந்துவிட்டது. அதற்கு முன்பு பெரிய நகரங்களில் மட்டும் அல்லாமல், சிறிய, சிறிய நகரங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டு வந்த பிராந்திய பங்குச் சந்தைகளின் பயன்பாடு திடீரென குறைந்துவிட்டது. அந்த காலகட்டத்தில் வேகமாக வளர்ந்த பங்கு வர்த்தகத்தை தேசிய பங்குச் சந்தையும், மும்பை பங்குச் சந்தையும் பகிர்ந்து கொண்டன.
அதேபோல், எல்லா நிறுவனங்களும் அவற்றின் பங்குகளை தேசியப் பங்குச் சந்தையிலும், மும்பை பங்குச் சந்தையிலும் பட்டியல் இட்டுக் கொள்ள முடியாது. அதற்குச் சில குறைந்தபட்ச தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தேசியப் பங்குச் சந்தையில் ரூ. 10 கோடி மூலதனம் அல்லது சில நிபந்தனைகளுடன் ரூ. 5 கோடி மூலதனம் உள்ள நிறுவனங்கள்தான் பட்டியலிட முடியும். அதேபோல், மும்பை
பங்குச் சந்தையில் ரூ. 3 கோடி மூலதனம் கொண்ட நிறுவனங்கள் மட்டுமே பட்டியலிட முடியும்.
விரைவில், இந்தத் தொகைகள் மேலும் அதிகரிக்கப்பட உள்ளன. இந்நிலையில்தான் செபியின் புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. தேசியப் பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையில் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஒரு தனி தளம் (பிளாட்ஃபார்ம்) கொடுத்துவிட வேண்டும் என்பது செபியின் யோசனையாகும். ரூ. 10 கோடி முதல் 25 கோடி ரூபாய் வரை மூலதனம் உள்ள நிறுவனங்களை புதிய ஏற்பாட்டின்படி பட்டியலிடலாம். அதன்பிறகு அந்த நிறுவனப் பங்குகளை பொதுமக்களும், முதலீட்டாளர்களும் வாங்கலாம், விற்கலாம்.
நம் நாட்டில் 3 கோடி சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் லட்சக்கணக்கான சிறு தொழில் நிறுவனங்களின் மூலதனம் ரூ. 10 கோடிக்கும் குறைவாகவே இருக்கிறது. ஆகவே செபியின் புதிய ஏற்பாடு அவர்களுக்கு எந்தவிதத்திலும் பயன் அளிக்காது என்பது வெளிப்படை.
அதேபோல், பத்து கோடி ரூபாய்க்கு மேல் மூலதனம் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், புதிய ஏற்பாட்டினால் பெரிய நன்மை கிடைக்க வழியில்லை. காரணம், குறைந்தபட்சம் ஒரு லட்ச ரூபாய்க்கு பங்குகள் வாங்க விரும்புபவர்கள் மட்டுமே இந்நிறுவனப் பங்குகளுக்கு விண்ணப்பிக்க முடியும். சிறு முதலீட்டாளர்களைப் பொருத்தவரை இது போகாத ஊருக்கு வழி சொல்லுவதுபோல்தான்!
ஆக, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறைக்கு உண்மையிலேயே ஊட்டச்சத்து அளிப்பது அவசியம். காரணம் இந்திய பொருளாதாரத்துக்கு அவர்களது பங்கு கணிசமானது. உதாரணமாக, ஒட்டுமொத்த தொழில் உற்பத்தியில் இத்துறையின் பங்களிப்பு 40 சதவீதம்; அதுமட்டுமல்ல, சிறிய மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் 30 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன.
அரசும் பாரத ரிசர்வ் வங்கியும் செய்ய வேண்டியது இதுதான்: அந் நிறுவனங்கள் பலகாலமாக கோரி வரும் உதவியை வழங்கினாலே போதும்.
வங்கிக் கடன் வழங்குவதில் காலதாமதத்தைத் தவிர்க்க வேண்டும். இந்நிறுவனங்களுக்கு வழங்கும் கடனுதவி வாராக்கடனாக மாறிவிடுமோ என்ற தவறான அச்சத்தைப் போக்க வேண்டும். சிறுதொழில் கடன்களுக்கு ஏட்டில் முன்னுரிமை உண்டு. அது நடைமுறையில் இருக்க வேண்டும். உரிய நேரத்தில், உரிய அளவில் வழங்கப்படும் கடனுதவி போன்ற ஒரு "டானிக்' வேறு எதுவும் இல்லை.
மாநில அரசுகளின் சிறு தொழில் துறை, வழக்கமான சிகப்பு நாடா அணுகுமுறையை கைவிட்டு, புதிய சூழலுக்கு ஏற்ப, துரித அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும். இவ் விஷயத்தில் குஜராத் மாநில அரசின் சிறு தொழில் துறை ஒரு நல்ல எடுத்துக்காட்டு எனலாம்.
சிறு தொழில் உற்பத்திப் பொருள்களை மத்திய, மாநில அரசுகள் கூடுமானவரை கொள்முதல் செய்வதை ஒரு கொள்கையாக ஏற்க வேண்டும்.
பெரிய நிறுவனங்கள் சிறு தொழில் பிரிவுகளிலிருந்து கொள்முதல் செய்திடும் பொருள்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வதில் மிகுந்த தாமதம் ஏற்படுகிறது. இது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். இத்தகைய பெரிய நிறுவனங்கள் வங்கிகளில் கடன் கேட்கும்போது, சிறு தொழில் "பில்'களை நிலுவையில் இல்லை என்ற உறுதிமொழி கொடுக்க வேண்டும். இந்த நடைமுறை சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. நாளடைவில் இது நீர்த்துப் போய்விட்டது.
சிறு தொழில் கூடங்களை சர்வதேசத் தரத்துக்குச் சமமாக நவீனமாயமாக்க வேண்டும். அதற்கு உதவி புரியும் வகையில், தொழில் நுட்ப மேம்பாடு நிதி ஒன்றை உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும். ஏற்கெனவே, இந்த நடைமுறை ஜவுளித்துறையில் சிறப்பாகச் செயல்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில் ஜவுளித்துறை "டெக்னாலஜி அப்கிரடேஷன் ஃபண்டு' திட்டத்தின் மூலம் மத்திய அரசு 66,275 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. ஏனோ இதுபோன்ற ஒரு திட்டத்தை சிறு தொழில் துறைக்கு மத்திய அரசு இதுவரை அறிமுகம் செய்யவில்லை.
செபியின் புதிய ஏற்பாடு ஒரு நல்ல தொடக்கம். ஆனால் அது முழுமையான பயன் அளிக்குமா என்பது கேள்விக்குறியே. எனவே, மேற்கூறிய ஆக்கபூர்வமான செயல்பாடுகளின் மூலமே சிறு தொழில் துறைக்கு பிராண வாயு அளிக்க முடியும்.
கட்டுரையாளர் : எஸ். கோபாலகிருஷ்ணன்
நன்றி : தினமணி
Tuesday, December 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment