இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தீவிரவாத அச்சுறுத்தல் அதன் உச்சத்தைத் தொட்டது. இனி இந்த நூற்றாண்டையே ஆக்கிரமித்து அச்சுறுத்தும் பிரச்னையாக இருக்கப் போவது சுற்றுச்சூழல்தான்.
இன்று உலக அளவில் புவி வெப்பம் உயர்வடைதலும் அதனைத் தொடர்ந்து பருவ நிலையில் ஏற்படும் மாற்றமும் அவற்றின் விளைவாக வெள்ளம், வறட்சி, கடல் கொந்தளிப்பு, கடல் உள்வாங்குதல் முதலிய பல பாதிப்புகள் தொடர்கிறதென்றால் உள்ளூர் அளவில் நமது கண் முன்னால் நமது வாழ்வின் ஆதாரமாக விளங்குகின்ற நீர் நிலைகளையும் அது சார்ந்த சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது.
அகில இந்திய அளவில் நீர்வளம் குறைந்த மாநிலமாகத் தமிழகம் இருந்து வருவது ஒருபுறமென்றால், மறுபுறம் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் நீராதாரங்களை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி எடுப்பதும், எஞ்சியுள்ள நீர் நிலைகளில் கழிவுநீரைக் கலந்து நஞ்சாக்குவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் பாலாற்றுப் படுகையும் காவிரிப் படுகையும் மிகக்கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. பாலாறு தோல் தொழிற்சாலைக் கழிவுகளால் பாதிக்கப்படுகிறதென்றால், காவிரிப்படுகை முழுவதும் ஜவுளி உற்பத்தியின் துணைத் தொழிலான சாயத் தொழிலால் மாசுபடுத்தப்பட்டு வருகிறது.
காவிரியின் கிளையாறுகளான பவானி, கோவை மற்றும் ஈரோடு மாவட்ட தொழிற்சாலைக் கழிவுகளாலும், நொய்யலாறு திருப்பூர் சாயக்கழிவுகளாலும், அமராவதி ஆறு கரூர் சாயக் கழிவுகளாலும், கொடகனாறு திண்டுக்கல் தோல் பதனீட்டுக் கழிவுகளாலும், காளிங்கராயன் கால்வாய் ஈரோடு நகர தோல் தொழிற்சாலைக் கழிவுகளாலும் பாதிக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்திலும் வெளியேற்றப்படும் கழிவு நீர் காவிரியில்தான் வந்து சங்கமிக்கின்றன. மேலும் கரூர் மாவட்டத்தில் காவிரிக்கு அருகில் அமைந்துள்ள தமிழ்நாடு காகித ஆலைக்கழிவும், புகளூர் கால்வாய் மூலமாக காவிரியில்தான் வெளியேற்றப்படுகிறது.
இவ்வாறு வெளியேற்றப்படும் கழிவு நீரில் அளவுக்கு அதிகமான நச்சுத்தன்மையும் ரசாயன உப்புத் தன்மையும் கலந்து காணப்படுகின்றன.
சாதாரணமாக குடிப்பதற்கும், பாசனத்துக்கும் பயன்படுத்தப்படும் நீரில் டிடிஎஸ் அளவு அதிகபட்சமாக லிட்டருக்கு 300 மில்லி கிராம் வரை இருக்கக்கூடும். ஆனால் சாயப்பட்டறைகளிலிருந்தும் அதன் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்தும் வெளியேற்றப்படும் கழிவுநீரில் டிடிஎஸ் அளவு லிட்டருக்கு 2400 மி.கி. முதல் 13,000 மி.கி. வரை இருப்பதாக ஆய்வாளர்களும் விவசாயிகளும் கூறுகின்றனர்.
காவிரியிலும் அதன் கிளையாறுகளிலுமாக நாளொன்றுக்கு சுமார் 30 கோடி லிட்டர் சாயக்கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த சாயக்கழிவு கலந்த நதிநீர்தான் டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கும் குடிநீருக்கும் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வீராணம் ஏரி வழியாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லும் குடிநீரிலும், கரூர், திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் முதலிய கூட்டுக் குடிநீர் திட்டங்களின் மூலமாக விநியோகிக்கப்படும் குடிநீரிலும் நச்சுத்தன்மை கொண்ட சாயக்கழிவு நீர் கலந்திருப்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்.
நச்சுக்கழிவு நீர் கலந்த நதிநீரைப் பாசனத்திற்காகப் பயன்படுத்தி விளைவித்த விளைபொருள்களை மக்கள் உட்கொள்வதாலும் அதனையே குடிப்பதற்கும் பயன்படுத்துவதாலும் மிக மோசமான வியாதிகள் உண்டாகின்றன. குறிப்பாக புற்றுநோய், சிறுநீரகக் கோளாறுகள், தோல்நோய், மலட்டுத்தன்மை மற்றும் பிறக்கும் குழந்தைகளுக்கு அங்கஹீனம், புத்தி சுவாதீனம் போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றன.
தமிழக அரசு கடந்த 30-3-1989 அன்று வெளியிட்ட அரசு ஆணை எண் 213-ன் படி நீர்நிலைகளிலிருந்து ஒரு கி.மீ. தொலைவுக்குள் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் நச்சுக்கழிவுகளை வெளியேற்றும் எந்தத் தொழிற்சாலையும் அமைக்கக்கூடாது. ஆனால் இந்த அரசாணையை மீறுகின்ற வகையில் கரூர், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் பெருவாரியான சாய மற்றும் சலவைப்பட்டறைகள் ஆறு மற்றும் கால்வாய்களுக்கு வெகு அருகில் அமைக்கப்பட்டிருப்பது சட்ட விரோதச் செயலாகும்.
இதற்கு அரசு எந்த விதிமுறையின் கீழ் அனுமதியளித்துள்ளது என்பது பொதுமக்களுக்குப் புரியாத புதிராக உள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடந்த 31-5-2005 அன்று 90 நாள்களுக்குள் அனைத்து சாயப்பட்டறைகள் மற்றும் பொது சுத்திகரிப்பு நிலையங்களும் சவ்வூடு பரவல் முறையில் மறுசுழற்சி செய்து பயன்படுத்திக் கொள்ளவும், கழிவு நீரை வெளியேற்றாவண்ணம் நிறுத்திக் கொள்ள உத்தரவிட்டது.
இந்த உத்தரவுகளை இதுவரை சாயப்பட்டறைகள் செயல்படுத்தாமல் இருப்பது மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது.
நொய்யலாற்றுப்பாசன விவசாயிகள் பாதுகாப்பு சபை தொடுத்த வழக்கில் கடந்த 27-7-2009 அன்று உச்ச நீதிமன்றம் சாயப்பட்டறைகள் மற்றும் அவற்றின் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற உத்தரவுகள் இல்லாமல் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கருதியோ அல்லது மக்கள் நலன் கருதியோ தன்னிச்சையாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் மாசுக்கட்டுப்பாடு வாரியம் திறனற்றுக் கிடப்பதையே இத்தகைய உத்தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்களின் எதிர்ப்பையும், சாயக்கழிவு நீரை வெளியேற்றா வண்ணம் நிறுத்திக் கொள்ள பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகளையும் முனை மழுங்கச்செய்யும் நோக்கில் சாயக்கழிவு நீரைக் குழாய் மூலம் கடலில் சேர்க்கும் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
சாயக்கழிவு நீரைக் கடலில் கொண்டு கலப்பதன் மூலம் கழிவு நீரில் உள்ள நச்சுத்தன்மையால் கடலின் பல்லுயிர் சூழல் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுவதோடு மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும்.
மேலும் மத்திய அரசின் கடற்கரை ஒழுங்காற்றுப் பகுதி அறிவிக்கை இத்தகைய நச்சுக்கழிவுகள் கடலில் கொட்டப்படுவதைத் தடை செய்கிறது. ஐந்தாவது முறையாக ஆட்சிப்பொறுப்பேற்றிருக்கும் முதல்வருக்கு இந்த உண்மை புரியாமலிருப்பது வருத்தம் அளிக்கிறது. கடந்த தேர்தலில் ஜவுளி மாவட்டங்களில் ஆளும் கூட்டணி தோல்வியைத் தழுவியதற்கு அடிப்படையான காரணங்களுள் தீர்க்கப்படாத சாயக்கழிவு பிரச்னையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
நீர் நிலைகளை மாசுபடுத்துவது குற்றச்செயல் என்பதனை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு - 277, இந்திய நீர் சட்டம் - 1974 மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் - 1986 உள்ளிட்ட பல்வேறு சட்டங்களும் மாசுக்கட்டுப்பாடு வாரிய விதிமுறைகளும் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.
இருந்தபோதிலும் சாயக்கழிவு பிரச்னை தொடர்பான வழக்குகள் பல ஆண்டுகளாக நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதை சாயப்பட்டறை உரிமையாளர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஆறுகளிலும் வாய்க்கால்களிலும் தொடர்ந்து கழிவுநீரை வெளியேற்றி வருகின்றனர்.
நீதியின் தாமதம் நிலத்தையும் நீரையும் மாசுபடுத்தும் குற்றச்செயலை மறைமுகமாக அனுமதிப்பதாகவே உள்ளது. வாழ்வாதாரமான நிலத்தையும் நீரையும் இழந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் இழப்பீடு கோரி நீதிக்காக பல ஆண்டுகளாகக் காத்திருந்து அவர்களில் பலர் இறந்தும் போய்விட்டனர்.
குறைந்தபட்சம் அவர்களுக்கு இடைக்கால நிவாரணமாவது கிடைக்கச் செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் சம்பந்தமான வழக்குகளை பல ஆண்டுகளுக்கு இழுத்தடிக்கும் போக்கை வழக்கமாகக் கொண்டுள்ள நமது நாட்டின் உயர் நீதிமன்றங்கள் மீதும் உச்ச நீதிமன்றத்தின் மீதும் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் மதிப்பும் நம்பிக்கையும் வெகுவாகக் குறைந்து வருகிறது.
சாமானிய மக்கள் நீதிமன்றத்தின் மீது வைத்திருக்கும் கடைசி நம்பிக்கையை இழப்பதற்கு முன்பு நீதித்துறை தனது நடுநிலைத் தன்மையை நிலைநாட்ட வேண்டியது அவசியம். ஏனெனில் தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்.
(கட்டுரையாளர்: ப. குணசேகரன், மக்கள் வாழ்வுரிமை இயக்கப் பொதுச் செயலர்.)
நன்றி : தினமணி
Tuesday, October 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment