வாரா வாரம் மறுஆய்வு செய்யப்பட்டு வந்த மொத்த விற்பனைக் குறியீட்டு எண், இனி மாதம் ஒருமுறை மறுஆய்வுக்கு உட்படுத்த மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்தது. இதனால், இனி பணவீக்க விவரங்கள், மாதம் ஒரு முறை மட்டுமே வெளியிடப்படும். மேலும் பொதுத்துறை நிறுவனமான என்.டி.பி.சி., நிறுவனத்தின், 5 சதவீத பங்குகளை விற்கவும் மத்திய அரசு தீர்மானித்துள்ளது. விலைவாசி அதிகம் இருந்த போதும், பணவீக்க விகிதம் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே தொடர்ந்து இருக்கிறது. ஆனால் பொருளாதார மந்த நிலையில் இருந்து இன்னமும் நாடு மீளவில்லை.
பணவீக்க சதவீத அளவை வாரந் தோறும் வெளியிடும் நடைமுறை சரி அல்ல, உலக நாடுகள் பலவற்றிலும் மாதம் ஒரு முறை வெளியிடப்படும் வழக்கம் இருக்கிறது என்று, திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா சமீபத்தில் கூறியிருந்தார். பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் ஆனந்த்சர்மா கூறியதாவது: நாட்டின் பணவீக்கம் குறைவாக காணப்பட்டாலும், பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதை கருத்திற்கொண்டு,'ஹோல்சேல் பிரைஸ் இன்டெக்ஸ்' எனப்படும் மொத்த விற்பனைக் குறியீட்டு எண் மாதத்திற்கு ஒருமுறை மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும். தற்போது ஒவ்வொரு வாரமும் மறு ஆய்வு செய்யப்பட்டு வரும், மொத்த விற்பனைக் குறியீட்டு எண்ணை, வெளிநாடுகளில் செய்வதை போன்று, இனி மாதம் ஒரு முறை மட்டுமே மறு ஆய்வு செய்யப்படும். எனவே, பணவீக்கம் விவரங்கள், மாதம் ஒரு முறையே வெளியிடப்படும். எனினும், எரிபொருட்கள் குறித்த விவரங்கள் வாராவாரம் வெளியிடப்படும். அதேபோல, பிரதமர் தலைமையில், விலைவாசி ஆய்வுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பொருட்களின் விலைவாசி குறித்து ஆராயப்பட்டது. நாடு முழுவதும் பொருட்களின் விலைவாசி கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும். இதனால் வெளிநாட்டிலிருந்து முக்கிய பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படாது என்றும் முடிவெடுக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு வாரமும் அமைச்சர்களின் குழு கூடி விலைவாசி குறித்து ஆலோசனை நடத்தப்படும். இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 211 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் மத்திய அரசின் மானிய உதவியுடன் ஹஜ் பயணம் மேற் கொள்ளவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை விமானப் போக்குவரத்து அமைச்சகம் செய்து வருகிறது.
என்.டி.பி.சி., பங்குகள் விற்பனை: பொதுத்துறை நிறுவனமான என்.டி.பி.சி., யின் பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி அந்நிறுவனத்தின் 5 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்படும். இதன்மூலம் என்.டி.பி.சி., நிறுவனத்தில் அரசாங்கத்தின் பங்குகளின் சதவீதம் 84.50 ஆக குறையும். தவிர 'சட்லஜ் ஜல் வித்யூத் நிகாம்' என்ற பொது துறை நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்யவும் மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இவ்வாறு அமைச்சர் ஆனந்த்சர்மா கூறினார்.
நன்றி : தினமலர்
Tuesday, October 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment