Monday, November 24, 2008

ஜெட் ஏர்வேஸின் சம்பள குறைப்பிற்கு பைலட்கள் கடும் எதிர்ப்பு

கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக சொல்லப்படும் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், அதன் ஊழியர்களில் சம்பளத்தை குறைக்க முடிவு செய்தது. இதற்கு அதில் பணியாற்றி வரும் இந்திய பைலட்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு பைலட்களை இங்கிருந்து முழுமையாக வெளியேற்றும் வரை நாங்கள் சம்பள குறைப்பை ஒத்துக்கொள்ள முடியாது என்று அவர்கள் திட்டவட்டமாக சொல்லி விட்டனர். கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் ஜெட் ஏர்வேஸ், அதன் ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கும் திட்டத்துடன், நேற்று சேர்மன் நரேஷ் கோயல் தலைமையில் ஊழியர்களின் கூட்டத்தை மும்பை ரமதா ஹோட்டலில் நடத்தியது. இதில் அதன் ஊழியர்களின் சம்பளத்தை, 5 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை குறைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மாதம் ரூ.75,000 முதல் ரூ.2,00,000 வரை சம்பளம் பெறுபவர்களுக்கு 5 சதவீதம் சம்பளத்தை குறைப்பது என்றும், ரூ.2 - 5 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்களுக்கு 10 சதவீதமும், ரூ.5 - 10 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்களுக்கு 20 சதவீதமும், அதை விட அதிகம் சம்பளம் பெறும் உயர் அதிகாரிகளுக்கு 25 சதவீதமும் சம்பளத்தை குறைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதனை அதன் ஊழியர்களும் ஒத்துக்கொண்டனர். ஆனால் அதன் பைலட்களுக்கும் 20 சதவீதம் வரை சம்பளத்தை குறைக்க வேண்டும் என்ற நிர்வாகத்தின் முடிவுற்கு இந்திய பைலட்கள் ஒத்துக்கொள்ளவில்லை. காரணம் அந்த நிறுவனத்தில் 750 இந்திய பைலட்களும் 240 வெளிநாட்டு பைலட்களும் பணியாற்றுகிறார்கள். இதில் வெளிநாட்டு பைலட்களுக்கோ, இந்திய பைலட்களை விட 50 சதவீதம் கூடுதலாக சம்பளம் கொடுக்கப்படுகிறது. இது தவிர வேறு பல சலுகைகளும் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஜெட் ஏர்வேஸிடம் இருக்கும் பெரிய விமானங்களை ஓட்டுவதும் அவர்கள்தான். இந்திய பைலட்கள் சிறிய விமானங்களைத்தான் ஓட்டுகிறார்கள். இதனால் இரு தரப்பினருக்குமிடையே கடும் பணிப்போர் நடந்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம், வெளிநாட்டு பைலட்கள் 27 பேரை வேலையில் இருந்து நீக்கியது. இருந்தாலும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் எல்லா வெளிநாட்டு பைலட்களையும் நீக்கி விட வேண்டும் என்று இந்திய பைலட்கள் கோரி வருகிறார்கள். எல்லா வெளிநாட்டு பைலட்களையும் நீக்கியபின்தான் நாங்கள் சம்பள குறைப்பு பற்றி முடிவு செய்யவோம் என்றும் அவர்கள் சொல்லி விட்டனர். நிர்வாக செலவு கூடி விட்டதாலும், பயணிகள் எண்ணிக்கை குறைந்து விட்டதாலும் இந்த நிதிஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஜெட் ஏர்வேஸ், ரூ384.53 கோடி நஷ்டமடைந்திருக்கிறது. இதன் காரணமாக அதன் ஊழியர்களில் 1,000 பேரை நீக்கிய ஜெட் ஏர்வேஸ்,பின்னர் அரசியல் நெருக்கடி காரணமாக இரண்டே நாளில் மீண்டும் வேலையில் சேர்த்துக்கொண்டது நினைவிருக்கலாம்.
நன்றி : தினமலர்


No comments: